ரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமம் சந்தகாளிபாளையம் சாமியார் தோட்டம். கடந்த 2005-ஆம் ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 150-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தற்போது, இப்பகுதியில் 152 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும், அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள்  கணிசமாக உள்ளனர். தங்களது அன்றாடப் பயன்பாட்டிற்கான நீர்த்தேவைக்காக, முக்கியமாக குடிநீர்த் தேவைக்காக அன்றாடம் இரண்டு கி.மீ. தொலைவு அலைந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இன்று நேற்றல்ல, கடந்த 13 ஆண்டுகளாகவே இதுதான் நிலைமை.

பயன்படுத்த இலாயக்கற்ற பாழ்பட்ட கிணறு.

நெரூர் மெயின்ரோட்டில் உள்ள திறந்தவெளிக் கிணற்றிலிருந்து (உப்புநீர் ) நீரை எடுத்து விநியோகித்து வருகிறது, ஊராட்சி நிர்வாகம். திறந்தவெளிக் கிணற்று நீர் பாழ்பட்டு பல காலமாகிவிட்டது. சாக்கடையாகிப் போன இந்த நீரைத்தான் இப்போதுவரை விநியோகித்து வருகிறது. அதுவும், பத்துநாளுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும், இந்த சாக்கடை நீரைப் பிடிப்பதற்குக் கூட போதிய குழாய்களும் ஊரில் இல்லை. ஊரின் முகப்பிலுள்ள ஒரே ஒரு தெருவிளக்கு மட்டுமே எரியும். ஊரிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மற்ற மின்கம்பங்களின் தெருவிளக்குகள் எரிவதில்லை.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தப் பலனுமில்லை. இந்நிலையில்தான் கடந்த, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் உதவியோடு இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வழக்கம்போல, மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக நல்லபடியாக பேசி அனுப்பினார், ஆட்சியர். இதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட துறை அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.செல்வி அவர்களை நேரில் சந்தித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பற்றி அவ்வப்போது நினைவூட்டியும் வந்தனர், இப்பகுதி மக்கள்.

இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக நீண்ட உறக்கத்திலிருந்த அதிகாரிகள் திடீரென்று கிராமத்துக்கு படையெடுத்து வந்தனர். திறந்தவெளிக் கிணற்றையும், ஊரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘’கூட்டு குடிநீர்த் திட்டத்தை நீட்டிப்பு செய்தால்தான் இப்பகுதிக்கு தண்ணீரைத் தரமுடியும். தெருவிளக்கு பொருத்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருக்கிறது’’ என்ற சடங்குத்தனமான வார்த்தைகளைப் போட்டு எல்லாம் சரியாகத்தானிருக்கிறது என்ற ரீதியில் மனுவை நிராகரித்திருக்கிறார் பி.டி.ஓ. செல்வி.

மனுவை நிராகரிக்கப்பட்டதற்கெதிராக மீண்டும் பி.டி.ஓ. செல்வியிடம் முறையிட்டனர், இப்பகுதி மக்கள். திறந்தவெளிக் கிணற்றின் நீரை மாதிரிக்கு எடுத்து, நவ-17ஆம் தேதியன்று ஆய்வுக்காக கரூர் நகராட்சி குடிநீர் பரிசோதனை நிலைய அலுலவக அதிகாரியிடம் வழங்கினர். அவரும் அந்த நீரை ஆய்வு செய்துவிட்டு, நீரில் அமிலத்தன்மை இருக்கிறது, குடிப்பதற்கு உகந்ததல்ல என்று வெற்றுத்தாளில் எழுதிக் கொடுத்துள்ளார். அலுவலக முத்திரைக் கூட அதில் இல்லை. ஆணையரும், பி.டி.ஓ.வும் அந்தத் தண்ணிக்கு என்னக் குறைச்சல், சாக்கடையும் கலக்கல, ஒன்னும் கலக்கல, எல்லாம் குடிக்கலாம், என்று திமிராகப் பேசுகின்றனர்.

இந்த நிலையில், அதிகார வர்க்கத்தின் அலட்சியம் மற்றும் வக்கிரத்தை அம்பலப்படுத்தி, மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன சுவரொட்டிகள் கரூர் நகரெங்கும் ஒட்டப்பட்டன. ஆத்திரமுற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.செல்வி சம்மந்தப்பட்ட சாமியார் தோட்டம் பகுதிக்கே நவ-23 அன்று நேரில் வந்து, ‘’போஸ்டரில் எனது பெயரை எதற்காக போட்டீங்க? மக்கள் அதிகாரம் அமைப்பின் பின்னாடி ஏன் போறீங்க? தேவையில்லாம பிரச்சினையில மாட்டிக்குவீங்க’’ என்று பகுதி மக்களை மிரட்டியிருக்கிறார்.

படிக்க:
கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !
தருமபுரி – குடிநீர் வேண்டுமா இப்படி போராடுங்கள் !

‘’எங்க பிரச்சினையை சரி செஞ்சிருந்தா, நாங்க ஏன் போஸ்டர் ஒட்டப்போறோம்? போஸ்டர் ஒட்டுனதுல என்ன தப்பு?’’னு அவரிடமே  கேள்வியெழுப்பினர். பின்னர், ‘’உங்க பிரச்சினையை சரிசெஞ்சு தாரோம். ஆனா, கொஞ்ச அவகாசம் வேணும்’’ என்று கூறிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பிப் போனார் அந்த அதிகாரி.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் பின்வாங்கப் போவதில்லை என்றும்; மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றனர், இப்பகுதி மக்கள்.

தகவல்:

கரூர், தொடர்புக்கு: 9791301097.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க