சாக்கடை மண்ணில் வாழ்கிறோம்!

பல நாட்கள் தேங்கி நின்று கொண்டிருந்த கழிவுநீர் அடைப்பை எடுத்துவிட்டதும் விஷவாயு வெளியேறி சிறுவன் பலியானான். குடும்ப‌ வறுமை நிலையை போக்க சென்ற சிறுவனுக்கு வாழ்வே இல்லாமல்போனது.

ங்கம் எங்களுக்கு உடலில் அணிவதற்கு அல்ல ஒருவேளை உணவிற்காக. அதுவும் சாத்தியம் கிடையாது என்பதே உண்மை. கரணம் தப்பினால் மரணம், நாங்கள் தங்க சுரங்கங்களில் இருந்தோ, தங்க நகை கடைகளில் இருந்தோ, நாங்கள் பெறவில்லை. தங்க நகைகள் இருக்கும் வீதிகளிலே ரோட்டோர மண்ணிலும், தேங்கி நின்று துர்நாற்றம் எழுப்பும் சாக்கடை நீரில் இருந்தும்தான் பெறுகிறோம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? எங்கள் வாழ்வில் கழிவுகளின் மத்தியில் எங்களுக்கு எப்போதும் அழிவு என்று தெரியாமல் வாழ்பவர்கள், நாங்கள் இதை வாசிக்கும் வாசகர்கள் எங்கள் கிளைகளில் இளைப்பாரி செல்லுங்கள் நாங்கள் எதிர்கொள்ளும் மரணத்தின் வேதனையில்.

கல்வி பெறும் வயதில் கழிவால் அழிவு:

புத்தக பையை சுமக்கும் வயதில் சாக்கடை மண்ணை சுமக்க வைத்தது இந்தச் சிறுவனின் குடும்ப சூழ்நிலை. நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (43), இவர் உக்கடம் செல்லும் வழியில் செல்வபுரத்தில் தங்கியிருந்து தங்கத் துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணையும் மற்றும் நகைக்கடை ரோட்டோரத்தில் உள்ள மண்ணையும் அள்ளி அள்ளி அதிலிருந்து தங்க துகள்களை பிரித்தெடுத்து சேகரித்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார்.

படிக்க : கோட்டா – நவீன வதைமுகாம்!

இந்த நிலையில் பாலனுக்கு உடல் நிலையும் மனநிலையும் சரியில்லாமல் போனது. குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலன் மகன் விக்னேஷ் (13), தந்தைக்கு பதிலாக குடும்ப கஷ்டத்தை போக்க இந்த தொழிலை செய்து வந்துள்ளான்.

பிப்ரவரி 22 ஆம் தேதி எப்போதும் பணிக்கு செல்லும் ஆட்களுடன் விக்னேஷ்-ம் சென்றுள்ளான். சாக்கடை கால்வாயில் மண் சேகரிக்கும்போது கால்வாய் சிறிதாகவும் பாலத்தின் அடியில் சென்று சாக்கடை மண்ணை அள்ளுவதற்காகவும் சிறுவன் சாக்கடை கால்வாயில் இறங்கி தேங்கி நிற்கும் நீரை எடுத்து விட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது பாலத்தின் உள்ளே சென்று தேங்கிய நீரை எடுத்துவிட சென்றான். பல நாட்கள் தேங்கி நின்று கொண்டிருந்த கழிவுநீர் அடைப்பை எடுத்துவிட்டதும் விஷவாயு வெளியேறி சிறுவன் பலியானான். குடும்ப‌ வறுமை நிலையை போக்க சென்ற சிறுவனுக்கு வாழ்வே இல்லாமல்போனது. இப்படிப்பட்ட வேலையை செய்ய காரணம் என்ன என்று கேட்டால் ஒரே வார்த்தையில் பதில் சொல்லலாம் வறுமை.

சாக்கடையில் எங்கள் வாழ்வு:

“எங்களின் தொழிலே இதுதான். இந்த அபாய வேளையில்தான். எங்களின் அன்றாட வாழ்க்கை நகைக்கடைகள் உள்ள வீதிகளிலும், அதை ஒட்டி அமைந்துள்ள சாக்கடை கால்வாயிலும், நகைக்கடை ஒட்டிய ரோட்டோரத்தில் அமைந்துள்ள மண்களையும், சேகரித்து அதில் கலந்துள்ள தங்கத் துகள்களை பிரித்து எடுப்பதுதான்.

எங்களின் தொழில்,  இந்த தங்கத் துகள்கள் சேகரித்து கால் வயிற்றுக்கு கஞ்சி குடிப்பதுதான். ஆகையால் இது எங்களின் தொழில் அல்ல வாழ்வாதாரம். எங்களின் அடிப்படை தங்கத்தை உருக்கி நகை செய்கின்றபோது காற்றில் பரவி ரோட்டோரத்தில் உள்ள மண்ணிலும், நகை வேலை செய்பவர்கள் அவர்கள் கை கால்கள் கழுவும் போதும் அதில் படிந்துள்ள தங்கத் துகள்கள் சாக்கடை கால்வாயிலும் கலந்துவிடும். அப்படி கலக்கும் துகள்களை சேகரிப்பதுதான் எங்கள் வேலை, இந்த வேதனைகளும் சோதனைகளும் நிறைந்ததுதான் எங்கள் வாழ்க்கை”.

“நாங்கள் சேகரிப்பதுபோல பலரும் இந்த தங்கத் துகள்களை சேகரிக்க இருக்கிறார்கள். அவர்கள் சேகரிக்கும் தெருவிற்கு நாங்கள் சென்றால் எங்களை அங்கிருந்து வெளியேற்றுவார்கள். அப்படி பல பேரிடம் சண்டை போட்டும் சாக்கடை நீரில் மல்லுக்கட்டியும்தான் நாங்கள் இந்த சாக்கடை மண்ணை சேகரித்து வருகிறோம். நள்ளிரவில்தான் நாங்கள் இந்த கழிவுநீரில் இருக்கும் மண்ணையும் ரோட்டோரங்களில் இருக்கும் மண்ணையும சேகரிக்கச்  செல்வோம்.

இவ்வாறு இரவில் சேகரித்த மண்ணை ஒன்றாக சேர்த்து ஒரு இடத்தில், பகலில் சுத்தம் செய்வோம். அவ்வாறு சுத்தம் செய்த சாக்கடை நீரிலிருந்து தங்க துகள்களை பிரித்து எடுக்கின்றோம். இதற்கென்று பிரித்தெடுப்பதற்கு பெட்டிகள் இருக்கின்றன. அப்பெட்டிகளில் சாக்கடை மண்ணை போட்டு அலசி அலசி கடைசியாக எஞ்சி நிற்கும் தங்கத் துகள்களை சேகரித்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இப்படி அலசும்போது அதில் மனித கழிவுகளும், நாய் கோழி அவற்றின் கழிவுகளும் வரும். அதையும் எங்கள் கைகளைக் கொண்டுதான் அலசி எடுக்கிறோம்.” என்கிறார்கள் வேதனையுடன். இப்படி செய்வது எல்லாம் ஏன் எதற்கு என்று கேட்டால், “அதிக வருவாய் கிடைப்பதால் அல்ல; எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காகதான்” என்றார்கள்.

 

ஏதிலியாய் நாங்கள்:

“எங்களின் சொந்த மாவட்டம் நாமக்கல், அங்கே குக்கிராமங்களில் வசித்து வந்தோம். நாங்கள் விவசாயத்தைச் சார்ந்த தொழிலைதான் மேற்கொண்டு வந்தோம். அங்கு பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து புலம்பெயர்ந்து கோவைக்கு வந்தோம். இங்கு இந்த தொழிலில் ஈடுபட்டவர்களிடம் சேர்ந்து நாங்களும் இந்த தொழிலை மேற்கொண்டு வந்தோம்.

அதன் பிறகு இதே தொழிலை நிரந்தரமாக செய்து வருகிறோம். எங்கள் தாத்தா பாட்டி என இத்தொழிலை பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வருகிறோம். எங்கள் வாழ்வியலாகவே இத்தொழில் மாறிவிட்டது. இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு செய்கின்ற இந்த தொழிலில் மூலம் எங்களுக்கென்று தங்குவதற்கு கூட ஒரு இடமில்லை என்பது மிகவும் வருத்தத்தக்கதாகும்.

(இப்படிப்பட்ட கூலி வேலை செய்யும் இவர்களின் வருமானம் ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா? ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கிடைக்கும் என்று தினகரன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவர்களுடன் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் இவர்களின் வலி, வலியின் வேதனை. போலீசு தரும் அறிக்கையை வாசித்து பார்த்தால் தெரியாது).

அலசும் பெட்டிகளும் வாடைகளும்:

“இப்படி நகைக்கடைகள் இருக்கும், வீதிகளிலும் ரோட்டோரங்களிலும் சாக்கடை மண்ணை எடுத்து வந்து அதனை அலசி, பிறகு எஞ்சிய துகள்களை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகிறோம். அப்படி நாங்கள் அலசும் பெட்டிகளுக்கு அந்த நிலத்தில் உரிமையாளராக இருக்கும் செட்டியார் வாடகை வசூலித்துக் கொள்கிறார்.

இது மட்டுமல்லாமல் அந்த நிலத்திற்கு என்று தனியாக வாடகையும் வசூலித்துக் கொள்கிறார். இப்படி வாடகையை கொடுத்துதான் இந்த தொழிலை மேற்கொள்கிறோம். நாங்கள் அப்படி அலசும் பெட்டிகளுக்கு ஒரு பெட்டிக்கு வீதம் ரூ.250 வசூலிக்கிறார் மாதத்திற்கு. நிலத்தின் வாடகையாக 7 ஆயிரம் கிட்டதட்ட வசூலிக்கிறார். மொத்தம் இருபதிலிருந்து முப்பது பெட்டிகள் இருக்கின்றது.

மற்றொரு கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால் இவர்கள் எடுத்து வந்து அலசி தங்கத் துகள்கள் எடுத்து புதிய சாக்கடை மண்ணை வீண்தான் என்று நினைத்து கொட்டி விடுகிறார்கள். ஆனால் அதை அந்த நிலத்தின் உரிமையாளர் செட்டியார் கனரக வாகனங்களில் இந்த மண்ணை ஏற்றிச் சென்று கம்பெனிகளில் கொடுத்து மறுமலர்ச்சியில் ஈடுபடுத்தி மீண்டும் தங்கம் எடுக்கிறார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அப்படி அந்த செட்டியார் ஏற்றி செல்லும் சாக்கடை மண்ணுக்கு எந்தவித விளையும் கொடுப்பது கிடையாது. இத்தனையும் சகித்துக் கொண்டு அந்த சாக்கடை வாசத்திலும் தங்கள் வாழ்க்கையை கழித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஏழைகள் என்றாலே ஏரி மிதிப்பது, இது தானே இந்த அதிகார(ஆதிக்க) வர்க்கங்களின் செயல்கள். இது என்ன அறியாத விஷயமா?.

போலீசின் அராஜகங்கள் / அரசியல்வாதிகளின் மிரட்டல்கள்:

சாக்கடை மண் அல்ல சென்று இறந்த சிறுவனை பற்றி போலீசு தீவிரமாக விசாரிக்கவில்லை. மேலோட்டமாகவே விசாரித்துள்ளனர். போலீசிடம் கேட்டால் எங்களை (இங்கே ஏன்டா வந்தீங்க தா**களா என்று தரை குறைவாக வார்த்தைகளில் திட்டு விரட்டுகின்றனர்). இனிமே இந்த தொழிலை எவருமே செய்யக்கூடாது என்று மிரட்டுகின்றனர்.

இந்நிலையில் இத்தொழியிலே மேற்கொள்ளும் குடும்பங்கள் கிட்டத்தட்ட பத்து நாட்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கின்றனர். பாதுகாப்பு தரும் போலீசுத்துறை பாமர மக்களை பயமுறுத்தி வைத்துள்ளது. பணக்காரர்களுக்கு விசிறி வீசும் இந்த போலீசுத்துறைதான் நாட்டின் கண்கள் என்று கூறுகிறோம்.

போலீசின் ஆதிக்கம் ஒருபக்கம் இருக்க, அரசியல்வாதிகளின் மிரட்டல்கள் மறுபக்கம். தேர்தல் நேரத்தில் மட்டும் படையெடுத்துவரும் வெண்மை கூட்டம். மற்ற நேரங்களில் எட்டிப் பார்ப்பது கூட இல்லை.

அரசியல்வாதிகளின் கட்சி கூட்டங்கள் நடந்தால் இவர்களை அழைத்துச் செல்ல வருகிறார்கள். இவர்களின் துன்பங்களை சரிசெய்ய முயற்சியெடுப்பதில்லை. அரசியல் கட்சி கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றால் (நீங்கள் இங்கே இருக்க முடியாது பார்த்துக்கோங்க வரலனா அவ்வளவுதான் என்று இவர்களை மிரட்டி பயமுறுத்தி கட்டாயப்படுத்துகிறது கறை படிந்த வேட்டிகள்).

படிக்க : வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரம்: தமிழினமே, இதோ துரோகிகளை இனங்கண்டுகொள்!

இதுதான் எங்கள் வீடு:

“அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி,
அதன் அருகே – ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகு என்று பெயருமிட்டால்,
அந்த பூமி சிரிக்கும் இந்த சாமி சிரிக்கும்.”
என்று கவிஞர் கூறுவதுபோல, காற்று அடித்தாலும் அருமையாக மழை பொழிந்தாலும் இவர்கள் வீடு என்ற ஒன்றே கிடையாது இவர்களுக்கு என்று சொந்த வீடு கிடையாது.

எல்லாம் வாடகை வீடுதான் அந்த வீட்டில் இருவருக்கு மேல் தங்க முடியாது. அப்படி அந்த குடிசை வீடுகளுக்கும் அதிக வாடகை வசூலிக்கிறார்கள் நில உரிமையாளர்கள். குடிப்பதற்கு தண்ணீர் கூட விலை கொடுத்துதான் வாங்குகிறார்கள். தாங்கள் சம்பாதிக்கும் குறைந்த வருமானத்தில் வீட்டு வாடகை, உணவிற்கு,  தண்ணீருக்கு, பிள்ளைகளின் செலவுக்கு என்று முக்கால்வாசியை செலவு செய்துவிட்டு செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். இங்கு இவர்களுக்கு என்று எதுவும் சொந்தம் கிடையாது.

வேறு ஏதாவது உள்ளதா இந்த தொழிலை விட்டால் எங்களுக்கு?:

இப்படி கஷ்டப்பட்டு மேற்கொண்டுவரும் இத்தொழிலை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களே, இதை விட்டால் வேறு தொழில் அவர்களுக்கு இல்லை.

“நாங்கள் நாமக்கல்லில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்து இந்த தொழிலை மேற்கொள்கிறோம். அப்படி எங்களை செய்யக்கூடாது என்பவர்கள், எங்கள் வேறு தொழிலுக்கு வழியை காட்டுவார்களா? நாங்கள் ஒன்றும் திருடவில்லையே! யாரிடம் இருந்தும் பறித்து வந்து இந்த தொழிலை செய்யவில்லையே! இப்படி இருந்தும் இந்த தொழிலை செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள் அதிகாரம் படைத்த பணக்கார விசிறிகள். நாங்கள் ஒரு வகையில் இந்த மாநகராட்சியை சுத்தம் செய்யும் பணியைதான் மேற்கொள்கிறோமே தவிர கொள்ளை அடிக்கவில்லை. வறுமை காரணமாகதான் நாங்கள் இந்த சாக்கடை கழிவுகள் மத்தியில் வாழ்வை நடத்துகின்றோம்” என்றார்கள் கண்ணீருடன்.

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க