வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரம்: தமிழினமே, இதோ துரோகிகளை இனங்கண்டுகொள்!

எதிரிகளை விட துரோகிகள் அபாயமானவர்கள், தமிழினம் இக்கும்பலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்! அம்பலப்படுத்தி தோலுரிப்போம்! 

டந்த மார்ச் 01 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு, பிகார் மாநிலத் துணை முதல்வரும் ராஷ்டிர ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான ஃபரூக் அப்துல்லா ஆகியோர் வருகைப் புரிந்திருந்தனர். இப்பொதுக்கூட்டத்தில், “பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து தேசிய கட்சிகளும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்துவிட்டு ஓரணியில் திரளவேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

இப்பொதுக்கூட்டத்திற்கு அடுத்தநாள், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களால் விரட்டிவிரட்டி படுகொலை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் போலிச் செய்திகள் பரவின. குறிப்பாக, இந்தியில் பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 12 பேர் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதாகவும் டிவிட்டர், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காட்டுத் தீயாகப் பரவின. இந்தியில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளான தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான், பஞ்சாப் கேசரி போன்றவையும் இப்போலிச் செய்திகளை அப்படியே வெளியிட்டன.

பிகார் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும், பா.ஜ.க. தலைவர்களின் டுவிட்டுகளிலும் நிதிஷ் தலைமையிலான அரசை சாடுவதற்கு, இந்த போலிச் செய்திகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன. பிகார் மாநில சட்டமன்றத்தில் இதையொட்டி பா.ஜ.க. அமளியிலும் ஈடுப்பட்டது.

படிக்க : தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிமாஞ்சி, “தமிழ்நாட்டில் பிகாரைச் சார்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால், லாலுவின் மகனும் பிகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கேக் சாப்பிடுகிறார்; வெட்கக்கேடு” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிகார் மாநிலத்திலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பையும் பீதியையும் ஏற்படுத்திய இப்பிரச்சாரத்தை பா.ஜ.க.வின் இணைய வானரப்படையே திட்டமிட்டு பரப்பியுள்ளது. நிதிஷ் தலைமையிலான பிகார் அரசுக்கு, மக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கும் நோக்கத்தில் இந்த வதந்திப் பரப்பிவிடப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்கட்சிகளின் முகாமை பலவீனப்படுத்தவும்; புல்வாமா போல ஏதேனும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு தேசவெறி, மத, சாதி, இனவெறியைத் தூண்டிவிட்டு, தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. பிகாரில் கிளப்பிவிடப்பட்டுள்ள இப்பிரச்சாரம் அதன் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாட்டின் அரசியல் மரபு, வெறுப்பு பிரச்சாரமாம்!

பிகாரில் தமிழ்நாட்டிற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய பா.ஜ.க., தமிழ்நாட்டில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகிறது. மேலும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்புவது தி.மு.க.தான் என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

“தி.மு.க. ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரச்சாரம், தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் அண்ணாமலை. மேலும், “தி.மு.க. ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போதுவரை ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவை ஏதோ தி.மு.க. என்ற கட்சி மீதான விமர்சனம் அல்ல. தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலைத்தான் அண்ணாமலை ‘வெறுப்புப் பிரச்சாரம்’ என்கிறார். மாபெரும் மொழிப்போராட்ட காலத்தில் கூட இந்தி பேசும் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. எண்ணற்ற பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் நடைபெற்ற இம்மண்ணில், ஒரு பார்ப்பனர்கள்கூட தாக்கப்பட்டதில்லை.

அப்படியிருக்க, இந்து-இந்தி-இந்தியா என்ற பாசிச சித்தாந்தந்திற்கு எதிராக பக்குவப்பட்டு வளர்ந்த தமிழ் மண்ணை, வன்முறை – வெறுப்பரசியலின் அடிப்படையாக சித்தரிக்க அண்ணாமலைக்கு எவ்வளவு கொழுப்பு வேண்டும்!

பாபர் மசூதி இடிப்பு, ரதயாத்திரை படுகொலைகள், குஜராத் இனப்படுகொலை, சிறுபான்மையினர் – தலித்துகளுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் கும்பல் படுகொலைகள், பெண்கள் மீது பாலியல் வெறியாட்டங்கள் என அன்று முதல் இன்றுவரை நாட்டையே வன்முறைக்காடாக ஆக்கிய பாசிசக் கும்பல், தமிழ்நாட்டின் அரசியலைப் பழித்துப் பேசுகிறது.

சீமான் – பா.ஜ.க. கள்ள உறவு அம்பலமானது!

ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் வி.சி.க.வினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகனும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபாட்டார்களாம். இதுபோன்ற பிரச்சாரங்களும் இந்த வதந்திகளுக்கான அடிப்படை என்று அவதூறு சேற்றை அள்ளி வீசுகிறார் அண்ணாமலை. ஆனால், அண்ணாமலையின் ஆட்டுமூளைக்கு சீமானின் திருநாமம் மறந்துவிட்டது.

ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சீமான கக்கிய இனவெறி கொஞ்சமல்ல.

“கஞ்சா வச்சிருக்கான், அபின் வச்சிருக்கான், பெண்களை கைய பிடித்து இழுத்தான், கற்பழித்தான் என்று உள்ளே தூக்கிப்போட்டு சாப்பாடு இல்லாமல் அடி வெளித்துடுவேன். அவனே பெட்டியைத் தூக்கி கிட்டு ஓடிடுவான்” என்று ஈரோட்டில் சீமான் பேசியபோது பொத்திக் கொண்டிருந்த அண்ணாமலை, இப்போது தி.மு.க.வும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு அரசியலும்தான் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வதந்திக்கு காரணம்; திருமாவளவனும் வேல்முருகனும்தான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினர் என்கிறார்.

இன்னொருபக்கம், வடமாநிலத் தொழிலாளர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்று பேசிய சீமானோ, “வெளியாரை வெளியேற்று” என்று முழக்கமிட்டுத் திரியும் சீமானின் அரசியல்பிதா மணியரசனோ, இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை.

தமிழ்தேசிய அரசியலுக்கு பின் ஒளிந்துகொண்டிருக்கும் சீமானும் மணியரசனும் பாசிச பா.ஜ.க.வின் பி டீம்கள்; காவி கும்பலுக்கு எதிராக போராடிவரும் தமிழ்நாட்டைப் பிளவுபடுத்தும் கோடாரிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

துரோகிகள் ஆபத்தானவர்கள்!

பாசிச பா.ஜ.கவின் மதவெறி அரசியலுக்கு தமிழ்நாடு பலியாக மறுக்கிறது. மாணவி லாவண்யா தற்கொலை, கோவை சிலிண்டர் வெடிப்பு ஆகியவற்றை வைத்து பா.ஜ.க. போட்ட திட்டங்களும் ஊத்திவிட்டது. வேல்யாத்திரை, காசி தமிழ்ச் சங்கமம் என என்னென்ன அவதாரங்கள் எடுத்துவந்தாலும் தமிழ் மக்களிடம் அவை எடுபடவில்லை. இந்த வேளையில்தான் சீமான்-மணியரசன் கும்பல், காவிக் கும்பலுக்கு ஐந்தாம் படையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டை வீழ்த்த நினைக்கிறது.

“நான் தான் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிறேன். எனக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜ.க. வந்துவிடும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்று சீமான் ஒவ்வொரு மேடையிலும் குமுறுகிறார். தாங்களும் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம் என்று சீமானும் மணியரசனும் பேசுபவை, “புலி பசுத் தோல் போர்த்திவருவதற்கு ஒப்பானதுதான்”.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணியைத் தடுப்பதற்காக, திருமாவளவனின் அறைகூவலை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். பேரணியை ஆதரித்து பங்கேற்பதாகச் சொன்ன சீமானோ, நாம் தமிழர் கட்சியினரோ ஒரு இடத்தில் கூட பங்கேற்கவில்லை. இதுதான் சீமானின் பா.ஜ.க. எதிர்ப்பு.

திராவிட எதிர்ப்பு அரசியலின் மூலம் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்து, தமிழினப் பெருமிதம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை கடத்திக் கொண்டுவருவதும், அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு சேவைசெய்வதும்தான் சீமான்-மணியரசன் கும்பலின் இலக்கு.

படிக்க : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

“திராவிடர்கள்” என்று சொல்லக்கூடாது, “தமிழ் இந்து” என்று சொல்ல வேண்டும் என்று மணியரசன் வகுத்தளிக்கும் கோட்பாடுகளெல்லாம், காவி பாசிஸ்டுகளுக்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் சித்தாந்த கரசேவையாகும்.

பஞ்சம் பிழைக்கவந்த வடமாநிலத் தொழிலாளிகளால் தமிழர் வேலை பறிபோகிறது என்று காட்டுக் கூச்சலிடும் சீமான், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில், இந்திபேசுவோர் நுழைக்கப்படுவது குறித்து அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமானுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கிறது. இத்தொகுதியில் சென்றமுறை பெற்ற வாக்குகளைவிட, இந்த வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவிற்கு வீழ்ச்சி ஒன்றுமில்லை.

சீமான் தேர்தலில் வெல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், சீமானுக்கு கிடைத்த அந்த 10 ஆயிரம் வாக்குகளும், சீமானது பாசிச அரசியலுக்கு கிடைத்த வாக்குகளாகும். வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான சீமானின் இனவெறி அரசியலை ஆதரிப்பவர்களது வாக்குகளாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பகைவர்களால், நேரடியாக மோதி தமிழ் மண்ணை ஒருகாலும் கைப்பற்ற முடியாது. ஆனால், சீமான்-மணியரசன் போன்ற துரோகிகளின் மூலம், தமிழ் மண்ணைக் கவிழ்ப்பதற்கு பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் சாதரணமாக கடந்துசெல்ல முடியாது.

எதிரிகளை விட துரோகிகள் அபாயமானவர்கள், தமிழினம் இக்கும்பலை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்!

அம்பலப்படுத்தி தோலுரிப்போம்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
05.03.2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க