ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் மக்களின் இடை நிறுத்தமாக இளைப்பாறுதல் தருவது தேநீர்க் கடை! ஒரு கடையில் பதினைந்து நிமிடத்தில் பத்து ரூபாயில் ஒரு தேநீர் அருந்தும் போது நம்மை கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்கிறோம்.
இரவு 12 மணிக்கு கடைகள் திறக்கக் கூடாது என போலீசு உத்திரவு போட்டிருப்பதால் தமிழகத்தில் முழு நாளும் திறந்திருக்கும் கடைகளை காண முடியாது.
தமிழகத்தின் ஒவ்வொரு தேநீர்க்கடையிலும் ஒரு சிறப்பு இருக்கும். கம்பத்தில் கெட்டியான பாலில் மணம் கமழும் தேநீர் கிடைக்கும். ஊட்டியில் செயற்கை மணமற்ற இயற்கையான வாசனையோடு தேநீரும் வர்க்கியும் கிடைக்கும். சென்னை தேநீரில் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு. லைட்டான டீ, மீடியம் டீ, ஸ்ட்ராங், டபுள் ஸ்ட்ராங், இதில் சர்க்கரை கொஞ்சம், நிறைய, இல்லாமல், கருப்பு தேநீர் தற்போது நாட்டுச் சர்க்கரையுடன் எலுமிச்சை தேநீர் புதிய வரவு. இரவு நேரங்களில் “டம்” டீக்கள் இப்போது நகரெங்கும் கிடைக்கின்றன.
சென்னை, கோவை தவிர்த்த பல ஊர்களில் ஐந்து ரூபாய் வடைகள் உண்டு. மதுரை பேருந்து நிலைய டீக்கடைகள் காலை நான்கு மணிக்கு பாய்லர் உட்பட அனைத்தும் குளித்து திருநீறு பூசி, டி.எம்.எஸ். பாடலோடு அன்றைய தினத்தை துவங்கும். திருப்பூரில் ஒன் பை 2 – 3 தேநீர்கள் பிரபலம். திருப்பூர் – கோவை டீக்கடைகள் கேரளா கடைகள் போல மினி பேக்கரியாக இருக்கும்.
தமிழகத்தை தவிர முழு இந்தியாவும் தேநீரை சாய் அல்லது சாயா என்று அழைக்கிறது. ஹைதராபாத் ஈரான் தேநீர் கெட்டியாகவும் ஒரு முறை அருந்தினால் நிறைவான அனுபவத்தையும் கொடுக்கும். கேரளாவில் டீ குடிக்க என்றால் கடிக்க இருக்கும் பழபொறி – வாழைக்கப்பம் பிரபலம். ஒரிசாவில் குவளையில் கொதிக்க வைத்த தேநீர் இருக்கும். பெங்களூர், தில்லியில் முக்கியமான பகுதிகளில் தேநீர்க் கடைகளே கிடையாது. தேநீர் வேண்டுமென்றால் மக்கள் குடியிருப்பை நோக்கி பயணிக்க வேண்டும். சென்னையிலும் மேன்மக்கள் வாழும் பகுதிகள் பலவற்றில் தேநீர்க்கடைகள் கிடையாது.
படிக்க:
♦ சொக்கலிங்கம் தேநீர்க் கடை!
♦ மாட்டுக் கொட்டகை மனிதர்களும் தேநீர்க் கடையும் !
சென்னை டீக்கடைகளில் சேட்டன்கள் பிரபலம். தற்போது வடை போடுவதில் வட இந்திய தொழிலாளிகள் நிறைய வந்து விட்டார்கள். இன்னும் இலங்கையில் தேநீர்க் கடை எப்படி இருக்கும், சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் எப்படி இருக்கும் தெரியவில்லை.
ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் தேநீர்க் கடை என்றொரு வகையினம் உண்டா என்பது தெரியாது. வெளிநாடுகளில் இருப்போர் தேநீர்க்கடை போன்று மக்கள் அடிக்கடி சந்திக்கும் கடைகள் இருப்பின் அவற்றை படமெடுக்கலாம்.
தேநீர்க் கடைகளில் தொழிலாளிகள், முதலாளிகள், உணவு பதார்த்தங்கள், வாடிக்கையாளர்கள், கடையின் வடிவமைப்பு, அரட்டை, என பல அம்சங்கள் இருக்கின்றன.
அனுப்புங்கள், காத்திருக்கிறோம். புகைப்படங்கள் வரும் 16.12.2018 ஞாயிற்றுக் கிழமைக்குள் அனுப்புங்கள். நன்றி!
புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.