றிவின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி என்பது பழைய கருத்துக்கும், அதன் போதாமை காரணமாக பிறக்கத் துடிக்கும் புதிய கருத்துக்கும் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் மூளையின் போராட்டம். ஆனால் அறிவு என்பது அனைத்தையும் அறிந்து கொண்ட பேரமைதி என்று பலர் கருதுகின்றனர். இப்படித்தான் ஞானிகள், நவீன சாமியார்கள், சூப்பர் ஸ்டார்கள் கொண்டாடப் படுகின்றனர்.

வினவுங்கள் !

 

அனைத்தையும் அறிய முயற்சி செய்கிறேன் என்பது வேறு, அனைத்தையும் அறிந்து கொண்டேன் என்பது வேறு. பின்னது மதவாதமாகவும், முன்னது அறிவியலாகவும் இருக்கிறது. எதையும் அறிய முடியாது என்பதன் மறுபக்கமே எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன் என்று சொல்வது. இந்த உலகை, மனித சமூகத்தை, மனித சிந்தனையை இயக்கும் விதிகளைப் புரிந்து கொண்டு சமூக நலனுக்காக நடைமுறையை நிபந்தனையாகக் கொண்டு வளரும் அறிவு ஒருபோதும் அமைதியாக இருக்காது. அது கொந்தளிப்புடன் கூடிய பேரரறிவுப் பெருங்கடல்.

எல்லாவற்றையும் சந்தேகப்படு – கார்ல் மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை.  சந்தேகங்கள் கேள்விகளின் முதிர்ந்த வடிவம். கேள்விகள் முதிர்ந்த அறிவின் துவக்கப் பயணம்.

என்சைக்ளோப்பீடியா போன்றதொரு தகவல் பதிவுகளை மனனம் செய்வதெல்லாம் அறிவாக முடியுமா? பிரபல இதழ்களில் என்சைக்ளோப்பீடியாவின் தகவல்களே கேள்வி பதில்களாக வருகின்றன. அதை விட்டால் கடிகள், சினிமா நடிகர் ஒப்பீடு, ஏட்டிக்குப் போட்டி முதலானவை இருக்கும். முத்தத்தின் வரலாறு, உலகிலேயே இனிப்பான மாம்பழம், உள்ளாடைகள் வளர்ந்த வரலாறு…..இவையெல்லாம் இந்த கேள்வி பதில் நாயகர்கள் அதிகம் அலசும் வழமையான விசயங்கள்.

என்சைக்கிளோபீடியா வழங்கும் சுஜாதா பதில்கள்

முன்னர் மதன், சுஜாதா போன்றோர் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சார வசதிகளையே அறிவியல் என்ற பெயரில் கேள்வி பதில்களாக வெளியிட்டனர். மறுபும் சமூக பயன்பாடு குறித்த விமரிசனம் இல்லாமல் தூய அறிவியலை மட்டும் மர்மம் நிறைந்த பாடு பொருளாக அறிமுகம் செய்வது சுஜாதா பாணி. சமகால அரசியலில் நீர்த்துப் போன நியாயங்களையும், கிளுகிளுப்பூட்டும் நடிகைகளின் சினிமா கிசுகிசுக்களை ஒப்பிடுவது குமுதம் அரசு கேள்வி பதிலின் இலக்கணம்.

பார்ப்பனிய மேலாதிக்கத்தையே நியாயமென பதிலளிப்பார் மறைந்து போன துக்ளக் சோ. இன்றைய குருமூர்த்தியோ அத்தோடு பாஜக-வின் ஊழல் மோசடிகளையும், ஒடுக்குமுறைகளுயும் வெளிப்படையாக ஆதரிக்கும் புரோக்கர் பதில்களை அளிக்கிறார்.

கேள்விகளின் பயன்பாடு எவை? புரிதலை வழங்குகிறது. புரிதல் மீது சவால் விடுகிறது. புரிதலை ஆதரிக்கிறது. அறிவை வளர்க்கிறது. பங்கேற்பதை ஊக்குவிக்கிறது. பொது அரங்கு உரையாடலில் நம்பிக்கையை தருகிறது.

சமகால வாழ்வின் இடர்களை புரிந்து கொள்ளவோ, அதை மாற்றியமைக்கவோ வேண்டுமென்றால் யதார்த்தத்தை கேள்வி கேட்பதிலிருந்தே துவங்க முடியும். புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றோரெல்லாம் தமது சமகால சமூக அமைப்பை அந்தந்தக்காலம் விதித்திருக்கும் வரம்புகளுக்குட்பட்டு கேள்வி கேட்டவர்கள். மட்டுமல்ல அதற்கான விடையையும் தேடியவர்கள். பின்னர் அவையே கேள்விகளோ, சந்தேகமோ ஏற்படக்கூடாத மத நிறுவனங்களாக நிலை பெற்றன.

வர்க்க சுரண்டலை கேள்வி கேட்க முடியாத அடிமைகள், மறுமையில் காத்திருக்கும் இன்பத்திற்காக, இம்மையின் துன்பத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்த பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றிய மதங்கள், ஆண்டைகளுக்கு தேவைப்பட்டன.

ஆன்மீக வழிகாட்டிகள் மோன (சவ) நிலையையே அறிவின் உச்சநிலை என்கின்றனர்.

அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது – கெட்டது, ஒழுக்கம் – சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.

ட்ரம்ப், மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, போன்றோர் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம். எடப்பாடி அரசோ தனக்குப் பிடிக்காத செய்தியை கூறினாலே அரசு கேபிள் இணைப்பிலிருந்து தொடர்புடைய தொலைக்காட்சியை துண்டித்து மிரட்டுகிறது.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க என்னிடம் ஒரு மணிநேரம் மட்டும் தரப்பட்டால், அதில் 55 நிமிடங்கள் பொருத்தமான கேள்விகளை அறிய செலவழிப்பேன். ஒரு பொருத்தமான கேள்வியை கண்டுபிடித்து விட்டால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஐந்து நிமிடம் போதும்.  – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஆம். கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.

வினவில் கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறோம். கேளுங்கள். இப்பகுதி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறோம். தற்போது சுருக்கமான முறையில் அதிக பதில்கள் அளிக்க முயல்கிறோம்.

அரசியல், சமூகம், பண்பாடு, நடப்பு நிகழ்வுகள், தத்துவம், சித்தாந்தம், மதம், சாதி, காதல், என்று எது தொடர்பாகவும் அவை இருக்கலாம். எங்களால் முடிந்த அளவு, எவை முக்கியமென்று கருதுகின்ற அளவு பதில் அளிக்கிறோம். அதே நேரம் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எங்களிடமில்லை. ஆனால் ஒரு கேள்வியை வெறும் கேள்வி என்ற நிலையிலிருந்து மாற்றிவிட்டு, அந்த கேள்வியின் வரலாற்றுக்காலத்தை புரிந்து கொள்ளும்போது நமக்கு தெரியமால் இருக்கும் விடையை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து கொள்வோம்.

கேள்விகளை இந்தப்பக்கத்தில் மட்டும் அளியுங்கள், பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டாம். கேள்விகள் மிக மிகப் பொதுவாக இல்லாமல் மிக மிகக் குறிப்பானதாக இருந்தால் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

கேளுங்கள், காத்திருக்கிறோம்!

நட்புடன்
வினவு

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க