Job near me – என்னருகில் வேலை ஏதும் இருக்கிறதா?

“கூகிளாண்டவர்” இது தமிழ் வலை உலகில் பதிவர்கள் செல்லமாக அழைக்கும் ஒரு வார்த்தை. அந்த அளவுக்கு கூகிள் தேடுபொறி மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்டது. எதையும் எப்போதும் எங்கும், தேடலாம் என்ற ’நம்பிக்கை’யை இணையப் பயன்பாடும் கூகிளும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது சரியா தவறா என்பது இங்கே விவாதப் பொருளல்ல.

கூகிள் தேடுபொறியில் எந்த வாரத்தை அதிகம் தேடப்படும் என்பது அடிக்கடி செய்தி ஊடகங்களில் பேசப்படுகிறது. இந்தியா என்றல்ல உலகளவில் சினிமா, பொழுது போக்கு, மருத்துவம், உடல்நலம், உணவு, நுகர்வுப் பொருட்கள், போர்னோ போன்றவை முன்னணி தேடலில் இருக்கும். செய்தி – அரசியலைத் தேடுவோர் 2 அல்லது 3 சதவீதம் வந்தால் அதிகம். தேர்தல் போன்ற பரபரப்பான காலத்தில் அது 5 அல்லது பத்து சதவீதத்தை தொடலாம்.

கூகிள் ஆண்டவர்

தற்போது வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் “Job near me” (என்னருகில் வேலை) எனும் வார்த்தையே அதிகமாக தேடப்படுகிறது. இந்த வார்த்தைதான் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் தேடப்படுகின்ற வார்த்தைகளில் பல மடங்கு வளர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கூகிள் தேடுபொறியில் வார்த்தைகள் அதிகம் தேடப்படுவதை எப்படி மதிப்பிடுகிறார்கள்?  ஒரு வார்த்தையை லட்சக்கணக்கானோர் தேடும் போது அது நூறு எனும் மதிப்பை அடையும். ’நூறு’ எனும் மதிப்பை அடையும் பட்சத்தில் அதன் பிரபலம் மிக அதிகம் எனப் பொருள். இதை தேடுபொறியின் மென்பொருள் அமைப்பே கண்டுபிடித்து சொல்லி விடும். அதே வார்த்தை 50 எனும் மதிப்பைப் பெற்றால், அது பாதியளவில்தான் பிரபலமாகியிருக்கிறது என்று பொருள். பிரபலமற்ற வார்த்தையின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது அதை சிலரே தேடுகிறார்கள் என்பதால்.

இந்தியாவைப் பொருத்தவரை கூகிள் தேடுபொறியில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தைதான் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வார்த்தை தேடுபொறியில் மிக அதிகமாக தேடப்படுகிறது.

தேடுபொறியில் பிரபலமாகும் வார்த்தைகளை அந்தந்த வகையில் வைத்து மதிப்பிடுகிறார்கள். சான்றாக டீசர் (Teaser) எனும் தேடல் சினிமா எனும் வகையில் வரும். அது போல ’என்னருகில்’ (Near ME) என்ற இணைப்போடு தேடப்படும் வார்த்தைகள் தனி வகையாக மதிப்பிடப்படுகிறது. இந்த வகையில் ’என்னருகில் வேலை’ (Jobs Near Me) என்பதும் சேர்கிறது. 2018-ம் ஆண்டில் இந்த “என்னருகில்” வகையில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல் வார்த்தைகளில் “என்னருகில் வேலை” எனும் தேடல் வார்த்தை இடம் பிடித்திருக்கிறது.

2004 ஜனவரியிலிருந்து 2014 மே வரை என்னருகில் வேலை என்ற வார்த்தை அவ்வளவு அதிகமாக தேடுபொறியில் வரவில்லை. அதன் பிறகு அதன் தேடல் சூடு வைத்த மீட்டர் போல அதிவேகமாக வளர்ந்திருக்கிறது.

படிக்க:
♦ வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா
♦ வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?

மே மாதம் 2014 -ம் ஆண்டில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தையின் மதிப்பு ஒன்றாகும். ஜூன் மாதம் 2014-ல் இரண்டாகவும், ஏப்ரல் 2017-ல் அதன் மதிப்பு 17 ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 2018 -ம் ஆண்டில் அதன் மதிப்பு 88-ஆகவும், ஜூலை 2018-ல் அதன் மதிப்பு 100 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

உள்ளூர் அளவில் தகவல்களை தேடுவது இணையத்தில் மிகவும் பிரபலம். அதில் என்னருகில் வேலை என்ற வட்டார தேடல் நகரப் பகுதிகளிலும் தொழில்துறை மண்டலங்களிலும் பிரபலமாக இருந்திருக்கிறது. குறிப்பாக செகந்திராபாத், தானே, மும்பை, ஃபரிதாபாத், காஸியாபாத், பிம்ப்ரி சிஞ்ச்வாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் குர்கான் நகரங்களில் இந்த தேடல் அதிகம் நடந்திருக்கிறது.

பொதுவில் கடந்த நான்கு ஆண்டுகளாக ’என்னருகில்’ என்ற தலைப்பில் தேடுகின்ற பழக்கம் அதிகரித்திருக்கிறது. சான்றாக என் அருகில் இருக்கும் செல்பேசி கடைகள், என் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள், என் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் என்பதாக அந்த தேடல் வழக்கம் அதிகரித்திருக்கிறது.

இதை அடுத்து கூகிள் நிறுவனம் ஏப்ரல் 2018-ம் ஆண்டில் அதன் இணையதளத்தில், வேலை தேடுவதற்காக தனியான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இந்த புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்த உடன் நடந்த மாற்றத்தை கூகுள் நிறுவனமே தெரிவிக்கிறது. அதன்படி 2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் வேலை தேடுகின்ற இந்த தேடல் முயற்சி முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 45% வளர்ந்திருக்கிறது. அதிலும் 50 % மேற்பட்ட வேலை தொடர்பான விசாரணைகள் செல்பேசியிலிருந்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வருடத்தை முழுமையாக வைத்துப் பார்த்தால் 90 % வேலை தேடுகின்ற விசாரணைகள் செல்பேசியில் மட்டும் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையோர் செல்பேசி மூலமாகவே செய்கிறார்கள் என்பதால் இது ஆச்சரியம் இல்லை.

இந்த சொற்றொடரின் தேடல் கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 4, 5 ஆண்டுகளாக அதிகரித்திருப்பது, வெறுமனே தேடல் அதிகரித்திருப்பதை மட்டும் நமக்குத் தெரிவிக்கவில்லை. நாட்டில் அதிகரித்திருக்கும் கைபேசி மற்றும் இணைய பயன்பாடு வளர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி செப்டம்பர் 2018 வரையிலுமான நாட்டின் ஒட்டுமொத்த தொலைதொடர்பு அடர்த்தி, 89.51%-ஆக உயர்ந்துள்ளது.  இது 2013-ம் ஆண்டில் இருந்த 70.63%-ஐ விட அதிகமாகும்.  கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களில் அதிகரித்திருக்கும் தொலைதொடர்புப் பயன்பாடே இந்த உயர்வுக்கு அடிப்படையாகும்.

ஜூம்லாக்களை அள்ளி விடும் மோடிஜி

சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்த ஆய்வு முடிவிலிருந்து என்ன தெரிகிறது? செல்பேசி பழக்கம், மக்களிடம் இணையப் பழக்கம், தேடுபொறியை அதிகம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது என்கிறீர்களா? இல்லை. மோடியின் ஆட்சியில் இங்கே வேலையில்லாத பட்டாளம் பெருமளவு சேர்ந்ததையே இது காட்டுகிறது. அனைவரும் வேலையில் இருந்தால் இந்த தேடல் என்னருகில் சினிமா தியேட்டர், என்னருகில் உணவகம், பொழுதுபோக்கு என்றிருந்திருக்கும். ஆனால் என்னருகில் என்ன வேலை இருக்கிறது என்பதே இளைஞர்களின் கவலை!

ஆக என்ன வேலை, என் அருகே எதாவது வேலை இருக்கிறதா என்ற கவலையோடுதான் இளைஞர்கள் ஆன்ட்ராய்டு ஃபோனோடு திரிகிறார்கள். ஒருவேளை மோடி சொன்ன டிஜிட்டல் இந்தியா என்பது இதுதானோ?

மதன்
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க