அறிவியல் – ஆரோக்கியம் ! – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை!

கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றா?

“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன்.

கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல.

நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?

முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா ? அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்.

உதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம்.  சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ  சிறுநீரகக் கோளாறோ வந்து விடுமா? வராது.

அது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.

எல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு?

ஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது ? இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்.

இருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது.

இந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.

நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது?

நம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்.

அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்.

உண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்?

இப்போது உணவுக்கு வருவோம்.  உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.

ஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்

“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா?  இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது.

உலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா ?

தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.

அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை.

அதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.

சுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

எந்த ஆயில் நல்ல ஆயில் ?

எண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில்? நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் ? நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள்.  அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது.

எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்.

எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.

ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்?

அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.

ஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால்,  ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.

பருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.

இந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா?”  வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன.

ஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

ஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.

எங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ,  மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

வீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.

ஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.

உருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.

உங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால்  இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது.

அதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

காணொளியைக் காண

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.