மீபத்தில் கிளினிக்கில் சந்தித்த சகோதரியின் சோகக் கதையினை விழிப்புணர்வுக்காக பகிர்கிறேன். நிச்சயம் அவரின் கதையில் நமக்கு படிப்பினை உண்டு.

சகோதரிக்கு பிரச்சினை உயர் ரத்த அழுத்தம் / மன அழுத்தம் / தூக்கமின்மை. மன அழுத்தத்திற்கு காரணம் அவரது கணவரின் முதிர்ச்சியடையா முன்கூட்டிய மரணம் .. இதை நாங்கள் Premature Death என்போம்.

70 வயதுக்கு குறைவாக மரணம் அடையும் அனைவரையும் இந்த Premature death என்ற வரையறைக்குள் கொண்டு வருகிறோம். ஒன்றாக இணைந்து வாழ்வோம் என்று இணைந்த மகன்றில் பறவையுள் ஒன்றை மட்டும் காலம் பறித்துக்கொண்டால் இணை பிரிந்த மற்றொரு பறவை என்ன செய்யும்..?

தாயை பிரிந்த மகனுக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறேன். மகனை பிரிந்த தாய்க்கு மகனாக நின்று பேசியிருக்கிறேன். ஆனால், இணை பிரிந்த ஒருவருக்கு ஆறுதல் கூறுவது எனக்கு இன்னும் கைவராத விசயமாகவே இருக்கிறது..

இவரின் கதையில் நமக்கான பாடம் படிக்க தொடர்வோம்.

(மாதிரி படம்)

அன்னாரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இப்பூவலக வாழ்வை நீத்து மண்ணுலகத்துக்கு சென்றுள்ளார். திருமணமான பதினேழு வருடங்களில், பதினேழு வருடங்களாகவும் அவர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

வானம் பார்த்த பூமி இங்கு எங்கள் கஞ்சிக்கும் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள கிழக்கே வளைகுடா நாடுகள் மேற்கே மலேசிய தீபகற்பம்.

கடலோடிகளான இளைஞர்கள் வாழ்க்கையில் செய்யும் ஒரு சடங்காக திருமணம் இருக்கிறது. ஆசை அறுபது நாள் என்பார்கள். அந்த அறுபது நாள் கூட ஒன்றாக வாழாத இணைகள் இங்கு உண்டு.

மீண்டும் ரிட்டர்ன் டிக்கெட் போட்டு விட்டு புதிதாய் திருமணமான மனைவியுடன் வாழும் ஒவ்வொரு நாளும் இன்னும் நீடிக்காதா என்ற எண்ணமே எங்கள் கடலோடிகளுக்கு இருக்கும் …

பிரிதல் பிரிதல் நிமித்தமும் எங்கள் வாழ்க்கையில் புரையோடிவிட்டதால்
ஆங்காங்கே பச்சை தெரிந்தாலும் எந்நிலம் எப்போதும் பாலைதான்..

கதைக்குள் செல்வோம்.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கணவர் ஊருக்கு வந்து இரண்டு மாதம் இருப்பாராம். இரண்டு வருடம் வாழ நினைத்த வாழ்க்கையை இரண்டு மாதங்களில் வாழ்வாகய்யா.. கடலோடிகளின் மனைவிக…

இப்படி இரண்டு முறை வந்து சென்றதில்.. இரண்டு குழந்தைகள்.. அதற்குப்பிறகு இருவருக்குள்ளும் சிறு ஊடல். எந்த காட்டுத்தீயும் சிறு பொறியில் தானே துவங்குகிறது.. சிறு ஊடல் .. பெரு ஊடலாகி… வெண்பாவாக முடிய வேண்டியது காண்டமாக நீண்டு.. அதற்குப்பிறகான பத்து வருடங்கள் தலைவனும் தலைவியும் சந்திக்கவே இல்லை.

இருப்பினும் கணவர் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் தேவையான பணத்தை அனுப்பியுள்ளார். பிள்ளைகளுடன் தினமும் பேசிக்கொள்வாராம்.

இதற்கிடையில் அவருக்கு வெளிநாட்டு வாழ்க்கை தரும் வரங்களான
ரத்த கொதிப்பு .. சர்க்கரை நோய் வர.. இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு ஸ்டெண்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன…

மழைக்கு இணங்காத மண் இல்லை. சூரியனுக்கு இணங்காத பனித்துளி இல்லை. அதுபோல,தலைவனுக்கு இணங்காத தலைவி இல்லை.

கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மனைவி ஊடலைக் கைவிட்டு பேச ஆரம்பித்து இரண்டு வருடங்களாக ஊருக்கு வாருங்கள் வாருங்கள் என்று அழைத்து…

ஒருவழியாக மூன்று வருடங்களுக்கு முன்பு ரமலான் மாதத்திற்கு இரண்டு மாதம் முன்பு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்கு பின் தாய்மண்ணை முத்தமிட்டிருக்கிறார் தலைவர்..

இளைப்பு நெஞ்செரிச்சல் போன்றவை அடிக்கடி வந்திருக்கிறது. இருப்பினும், தான் வாழாத இந்த வாழ்வை மனைவி மக்களுடன் வாழும் ஆசையில் முதல் இரண்டு மாதங்கள் இதய நல சிறப்பு நிபுணரை சந்திக்கவில்லை.

பத்துக்கு பத்து அறையில் முடங்கிக்கிடக்கும் அவலம்.

என் தந்தை வெளிநாட்டில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தவர். “தினமும் வேலை முடிந்தவுடன் உணவு சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து உத்திரத்தை பார்க்கும் போது ஒரு வெறுமை இதயத்தை கூறுபோட்டு அழுத்தும் அந்த வலிக்கு இணையே இல்லை” என்று கூறுவார்.

ஆம்… குடும்பத்தை பிரிந்து பிழைப்பு தேடி கடலோடியாய் வாழும் ஆண் தினமும் அனுபவிக்கும் பிரசவ வலி ஐயா அது..

இப்படியாக … கார்டியாலஜிஸ்ட்டை சந்திக்காமல் இரண்டு மாதங்கள் வாழ்ந்த தலைவனுக்கு ரமலான் மாதத்தில் நடுபத்தில் லேசான நெஞ்சு வலி வரவே நான்மாடக்கூடல் நகரில் உள்ள கார்டியாலஜிஸ்ட்டிடம் காட்ட.. அவர் உடனே ஆஞ்சியோ கிராஃபி எனும் இதய ரத்த நாள அடைப்பை அறியும் பரிசோதனை செய்ய.. முக்கியமான ரத்த நாளங்களில் 90% க்கு மேல் அடைப்பு உள்ளது . ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது.
உடனே பைபாஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் அட்டாக் வந்து உயிர் போகும் என்றே எச்சரித்திருக்கிறார் அவர்.

எச்சரிக்கையை துச்சம் செய்திருக்கிறார் கணவர். அவர் கூறிய காரணம்
தான் இதுவரை ஒரு பெருநாள் கூட குடும்பத்துடன் கொண்டாடியதில்லை என்பதே.. இந்த ஆசையில் தவறேதுமில்லையே, வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காத மனுசன் இதுக்கு கூட ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படலாம். ஆனால் அதுவே அவரது கடைசி ஆசையாகிப்போச்சே..

தன் வாழ்நாளில் மனைவி மக்களுடன் கொண்டாடிய ஒரே பெருநாளே அவரது கடைசி பெருநாளாகவும் ஆகி விட்டது. பெருநாள் கொண்டாடிய அடுத்த நாளாவது அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும். சரியாக பெருநாள் முடிந்த ஆறாவது நாள்.. இதை ஆறு நோன்பு என்போம். அட்டாக் வந்து அன்னார் உயிர் நீத்தார்.. 😭

அந்த குடும்பத்திற்கு இறைவன் நாடியது ஒரு பெருநாள்தான் என்று எடுத்துக்கொண்டு கடந்து விடலாம். ஆனாலும் இங்கு அந்த தலைவன் செய்த மிகப்பெரிய பிழையை சுட்டி அதில் கொட்டு பட்டு பாடம் கற்காமல் விட்டால் அந்த பிழை நம்மையும் துரத்தி ஆட்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த கணவர் தாய்மண்ணை அடைந்த உடனே மருத்துவரை சந்தித்து உடனே பைபாஸ் செய்திருக்கலாம்.  அல்லது  ரமலான் மாதம் என்று பார்க்காமல் உடனே பைபாஸ் செய்திருக்கலாம். அல்லது, அவர் கூறியதைப்போல பெருநாளை கொண்டாடி விட்டு அடுத்த நாள் போய் அட்மிட் ஆகியிருக்கலாம்.

வாய்ப்புகளை வாழ்க்கை வழங்கிக்கொண்டே இருக்க.. எதையும் ஏற்காமல் மரணத்தை ஆரத்தழுவிக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது.. அன்னாரை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்…

அவனிடம் இருந்து வந்த உயிர்கள் அவனிடமே செல்கின்றன..

உடல் விசயத்தில் மருத்துவர் கூறும் அறிவுரைகளை புறந்தள்ளாமல் உடனே வினையாற்றுவது பல மாற்றங்களை செய்யும். தயவு செய்து மருத்துவ அறிவுரைகளை புறந்தள்ளாதீர்கள்… தாமதிக்காதீர்கள்.

படிக்க:
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

மருத்துவரின் அறிவுரை என்பது அவரது படிப்பறிவு, ஏட்டறிவு , பட்டறிவு
அனுபவ அறிவின் ஒட்டுமொத்த சாரமாக வெளிவருவதாகும்.

மருத்துவரின் அறிவுரையை கூகுள் தராது. கோரா தராது. அவை குழப்பத்தையும் மனநோயை மட்டுமே தரும்.

ரத்தமும் சதையுமான உங்களின் மருத்துவரை நம்பாமல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்துக்கும் நீங்களே பொறுப்பு.. இதுவே இந்த நிகழ்வின் மூலம் நாம் அறியும் பாடம்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க