தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் மொத்த வாக்காளர்களில் எத்தனை சதம் மக்கள் இக்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் ? வாக்களிக்காதவர்களை என்ன கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

– அழகிரிசாமி.

ன்புள்ள அழகிரிசாமி,

ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களித்தோர் சதவீதம் பின்வருமாறு :
மத்தியப் பிரதேசம் 75%, தெலுங்கானா 73.20%, இராஜஸ்தான் 74%, சட்டிஸ்கர் 76% மிசோரம் 80%

இந்திய தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் பதிவாகியிருக்கும் வாக்கு சதவீதம் கொஞ்சம் அதிகம்தான். வழக்கமாக 65 சதவீத அளவிலான வாக்குப்பதிவே இங்கு அதிகம். மிசோரம் மாநிலம் ஒரு பாராளுமன்ற தொகுதியை மட்டும் கொண்டிருப்பதால் அங்கே 80% வாக்கு பதிவை விதிவிலக்காக வைத்துக் கொள்ளலாம். இதை தவிர்த்து விட்டு பார்த்தால் மற்ற நான்கு மாநிலங்களிலும் சராசரியாக 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மீதம் உள்ள 25 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை

பொதுவில் தேர்தல் காலத்தில் கிராமப்புறங்களில் வாக்களிக்கும் விகிதம் அதிகமாகவும், நகரப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். நகர்ப்புறங்களிலும் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தோர் மத்தியில் வாக்களிக்காதவர்கள் கணிசமாக இருப்பார்கள். வாக்களிக்காத இவர்கள் யாரும் அரசியல் பூர்வமாக தேர்தலை புறக்கணிப்பார்கள் அல்ல. ஒருவகையில் வாக்குச்சாவடி சென்று எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை என நோட்டா பட்டனில் வாக்களிக்கும் மக்கள் கூட கொஞ்சம் அரசியல்ரீதியாக எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்று சொல்லலாம்.

மேலும் வாக்களிக்காத இப்பிரிவினர் தேர்தலன்று வாக்களிப்பதை கூட ஒரு சுமையாகவும் சிரமமாகவும் கருத கூடியவர்களே!

கிராமப்புறங்களில் சாதி மத பிடிமானம் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் செல்வாக்கு காரணமாக அதிகமான மக்கள் வாக்களிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அத்தகைய நிலை இல்லை. பொதுவில் அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதிகள் என்றாலே கழிசடை என்ற கருத்து நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

இன்னொருபுறம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களை பொருத்தவரை இந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அவர்களது வாழ்வியல் அனுபவமே சொல்கின்றன. அதிகபட்சம் ரேசன் கார்டு, சாதிச்சான்றிதழ், நலத்திட்டங்களை பெறுவது தவிர அவர்களுக்கு இந்த அரசியல் அமைப்பில் இடமில்லை. அந்த அளவைத் தாண்டி இம்மக்கள் உலகில் அரசியல் பிடிமானம் இல்லை.

படிக்க:
♦ தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
♦ தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

மேலும் வாக்களிக்கும் மக்கள் அதை ஒரு சடங்காகவும் காலம் காலமாக செய்ய வேண்டிய கடமையாகவும் கருதுகிறார்கள். சில நேரம் அந்தந்த காலகட்டத்தின் தேவைகள் விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் காரணமாக கூட அவர்கள் வாக்களிக்கலாம். இதே காரணங்களை வைத்து அவர்கள் தேர்தலை சில நேரம் புறக்கணிக்கவும் செய்யலாம். அல்லது காசு வாங்கிக்கொண்டு வாக்கு அளித்தாலும் அந்த மக்களும் தேர்தல் மற்றும் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிப்பதில்லை. அது ஒரு நாள் கூத்து, விழா என்ற வகையில் வாக்களிக்கிறார்கள். தேர்தல் முடிந்து தமது தொகுதியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்ற கனவெல்லாம் அவர்களிடம் இல்லை. வாக்களிப்பது என்பது கோவிலுக்கு சென்று வழிபடுவது போல ஒரு சடங்காக மாறிவிட்டது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேர்தலில் வாக்களிக்காத மக்கள் அரசியல் அற்ற முறையிலும், வாக்களித்தவர்கள் தேர்தலைத் தாண்டி அரசியல் ரீதியாக இந்த அமைப்பை ஓரளவிற்கேனும் புரிந்தவர்களாவும் இருக்கிறார்கள். வாக்களிக்காத நபர்களுக்கு இந்த அமைப்பு வழங்கியிருக்கும் இடம் உரிமை சலுகை எவையும் வாக்களிக்கும் மக்களுக்கு இருப்பதில்லை. எதிர்காலத்தில் நோட்டாவின் விகிதம் அதிகரித்தாலும் அதை தூக்குவதற்கு கட்சிகளும், அரசும் கண்டிப்பாக முயலும். மேலும் நோட்டா என்பது இந்த தேர்தல் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை தக்கவைக்கும் நோக்கிலும் வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட வேட்பாளரின் குணநலன்கள் காரணமாக தொகுதியில நல்ல வேட்பாளர் இல்லை என்றே நோட்டாவை தெரிவு செய்யச் சொல்லி பிரச்சாரம் நடக்கிறது.

ஆகவே தேர்தலை அரசியலற்று புறக்கணிக்கும் மக்களிடமும், தேர்தலை அரசியலற்று ஆதரிக்கும் பெரும்பான்மை மக்களிடமும் நாம் தொடர்ந்து பிரச்சாரத்தை செய்ய வேண்டியிருக்கிறது. மக்களுக்கான உரிமைகள், ஜனநாயகம் இந்த தேர்தல் அமைப்பில் இல்லை என்பதை அவர்களது சொந்த அனுபவத்தினூடாகவும், அதற்கான மாற்றுக்களை முன்வைத்தும் நடக்கும் அந்த பிரச்சாரத்தினூடாக மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க