லுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருக்கும் போது நம்மைக் கடந்து செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், லாரிகளின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் கவித்துவமான வாசகங்களைக் கண்டிருப்போம். வாசித்ததும் ’அட.. செமையா இருக்கே..’ என நம்மை துள்ளச் செய்யும் வாசகங்கள் பல அவற்றில் கண்டிப்பாக இருக்கும். இலக்கியங்களில் பல வகை உண்டு. அதில் நாட்டார் இலக்கியத்தோடு தொடர்புடை வாய்மொழி இலக்கியம் தொட்டு நவீன சமூகவலைத்தள மீம்கள் வரை பழமையும் புதுமையும் இருக்கின்றன. அதில் அதிகம் கவனிக்கப்படாத ஒன்றுதான் ஆட்டோ இலக்கியம்.

ஒருமுறை மதுரையில் ஒரு ஆட்டோ வாசகம் இன்ப அதிர்ச்சியை தந்தது. அதில் வழக்கமாக சாமி, அம்மன் பெயரில் துணை என்று இருக்கும் இடத்தில் பொது மக்களே துணை என்று இருந்தது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை ஆட்டோவில் “சீறும் பாம்பை நம்பலாம், பெண்ணை நம்பாதே” போன்ற பிற்போக்கு வாசகங்களே அதிகம் இருந்தன. இடையில் அவை மாறியிருந்தால் இன்னமும் அத்தகைய சாயல் கொண்ட வாசகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆட்டோக்களில் ”மெதுவாகப் போ ரோட்டில் ! காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!” என்பது போன்ற அக்கறையுடன் எச்சரிக்கும் வாசகங்கள் தொடங்கி, ”சுமக்க நானிருக்க நடைபயணம் ஏன் ?” என்பது போன்ற மார்கெட்டிங் வாசகங்களும் எழுதப்பட்டிருக்கும்.  இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டு பல்வேறு வாகனங்களில், “தொடர்ந்து வா தொட்டு விடாதே”, ”சத்தமிடு, முத்தமிடாதே” போன்ற வாகனக் காதல் எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

வாகனத்தின் பின்னால் எழுதியிருக்கும் வாசகங்களைப் போல லாரிகள், பேருந்துகளின் பக்கவாட்டிலுள்ள பேட்டரி பெட்டியில், “தினமும் என்னைக் கவனி” என்பது போன்ற கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் இடம் பெற்றிருக்கும்.

படிக்க:
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !
♦ உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்

இந்த வாரம் நமது வாசகர் புகைப்படங்களுக்கான தலைப்பு “ஆட்டோ இலக்கியம்.” ஆட்டோ என்பது ஒரு குறியீடுதான். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டு அனைத்து வாகனங்களிலும் எழுதப்பட்டுள்ள ஈர்க்கத்தக்க வாசகங்களை, அந்த வாகனத்தோடு சேர்த்து புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். வாகனங்களோடு வாகன ஓட்டுநர்களையும் இணைத்து எடுக்கலாம். வாகனங்களில் சே குவேரா, அம்பேத்கர், பெரியார் முதல் ஏசுநாதர் வரை படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதிலும் அரிதாக மார்க்ஸ், லெனின் படங்களையும் பார்க்க  முடியும்.

மாமூலான வாசகங்கள் பல இருந்தாலும் முடிந்த அளவிற்கு வித்தியாசமான, கவித்துவமான வாசகங்களை, தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் அங்கே இருக்கும் வாகனங்களில் காணப்படும் வாசகங்களை – படங்களை – வித்தியாசமான வடிவமைப்பை படம் எடுத்து அனுப்புங்கள். எந்த ஊர் வாசகங்கள் சிறப்பாக வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் !

படங்கள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25-12-2018

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.