அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 1

மேல்நிலைக் கல்வி அல்லது இளங்கலை பட்டப் படிப்பில் ஒரு மாணவர் பொருளாதாரம் பயில்கிறார் என்றால் என்ன நினைப்போம்? பாவம் அவருக்கு வேறு படிப்பு கிடைக்கவில்லை, அறிவியல், கணக்கு, வணிகவியல் படிக்கும் அளவுக்கு அறிவில்லையென கருதுவோம். இந்தியாவில் வரலாறும், பொருளாதாரமும் அப்படி புறக்கணிக்கப்படும் படிப்பாக மாறிவிட்டது.

ஆனால் சமூக வாழ்வில் விலைவாசி, பங்குச் சந்தை, பண மதிப்பு, வங்கி, வணகம், வரி என பொருளாதாரம் சார்ந்து பேசுகிறோம், பாதிக்கப்படுகிறோம். பொருளாதாரம் என்றால் என்ன என்பதை வேலைக்கு போன பிறகு அறிய விரும்புகிறோம். அப்போது படிக்க நினைத்தாலும் பொருளாதார இலக்கண வார்த்தைகளும், குழப்பமான பொருளியல் துறைகளும் நம்மை புரிந்து கொள்ள விடாமல் அச்சுறுத்துகின்றன.

இதில் முதலாளித்துவ உலகம் பொருளாதாரத்தை பல்வேறு துறைகளில் பிரித்ததோடு அதன் முழுமையை விலக்கி வைத்து விட்டு ஒரு சூத்திரமாக மாற்றி விட்டது. மேலும் அந்த முழுமை மனித சமுதாயத்தின் சமூக இயக்கம், வரலாறோடு தொடர்புடையது, அடிப்படையானது எனும் தத்துவப் புரிதலையும் தவிர்த்து விடுகிறது. எல்லாம் சேர்த்துப் பார்த்தால் பொருளாதாரம் என்பதை அறிய விரும்பினாலும், அறிய முடியாமல் இருக்கிறது.

மார்க்சிய அறிஞர்கள் பொருளாதாரத்தை அதன் வரலாற்று வளர்ச்சியில் வைத்து உள்ளது உள்ளபடி விளக்குகிறார்கள். இன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையை ஆய்ந்து கண்டவர் மார்க்ஸ். பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் சோசலிசம் எனும் யதார்த்தமாக மாறுவதற்கு உதவின. இன்றைக்கும் முதலாளித்துவம் ஒழிக எனும் முழக்கம் அதன் கருவறையில் ஒலிப்பதைக் கேட்கிறோம். சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகும் மார்க்சை தேடிப்பிடித்து படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடிகளை புரிந்து கொள்வதற்கே மார்க்ஸ் பலருக்கும் தேவைப்படுகிறார்.

நிற்க. இந்நூல் மார்க்சின் கண்டுபிடிப்பை பற்றியதல்ல. அவருக்கு முன்னால் பொருளாதாரம் என்பதும் அதன் பல்வேறு அம்சங்களை விளக்கிய அறிஞர்களைப் பற்றியும் ஒரு கதை போல எளிமையாக பொது வாசகருக்கு விளக்குகிறார் இந்நூலாசிரியர்.

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் எனும் இந்நூலை படித்து முடித்த பிறகு நாம் நவீன பொருளாதாரத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பொருளாரத்தை பயில விரும்பும் வாசகர்கள் இந்நூலை ஆழ்ந்து படியுங்கள். அதன் தொடர்புடைய செய்திகள், வரலாற்றை தேடிப் படியுங்கள். வெளியாகும் பகுதி குறித்து இங்கேயே விவாதியுங்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள்!

வாருங்கள் சேர்ந்து படிப்போம்!

நட்புடன்
வினவு

றிமுகம்:

அ.அனிக்கின்
பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றி எல்லா மொழிகளிலும் நூற்றுக்கணக்கான புலமை சான்ற புத்தகங்கள் இருக்கின்றன; இந்தத் தொகுப்புடன் இன்னும் ஒரு புத்தகத்தைச் சேர்ப்பது ஆசிரியருடைய நோக்கம் அல்ல. இந்தப் புத்தகம் எல்லோரும் விரும்பிப் படிக்கக்கூடிய கட்டுரைகளின் வடிவத்தில் எழுதப்பட்டிருப்பதால், மிகவும் முக்கியமான வாழ்க்கை வரலாற்று விவரங்களிலும் விஞ்ஞானச் செய்திகளிலும் குறிப்பான வகையில் கவனம் செலுத்துவது சாத்தியமாயிற்று; அத்துடன் இந்த நூலில் இன்று இன்னும் அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி எந்தவகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக்கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்துபோன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சினைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும்பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை. சமீபகாலத்தில் சரிநுட்பமான விஞ்ஞானங்கள், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் – பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க வகையில் மிகச் சாதாரணமாகிவிட்டது.

பொருளாதார விஞ்ஞானத்தின் தொடக்க நிலையில், மனிதகுலத்தின் பண்பாட்டின் மீது அழியாத முத்திரையைப் பதித்துச் சென்ற தனிச்சிறப்புடைய சிந்தனையாளர்களை, விரிந்த பரப்பும் தற்சிந்தனையும் கொண்ட விஞ்ஞான, இலக்கியத் திறமைமிக்க மாபெரும் அறிவாளிகளை நாம் காண்பது தற்செயலானதல்ல.

சென்ற காலப் பொருளியலாளர்களும் இன்றைய காலமும்

மனிதர்களின் வாழ்க்கையில் பொருளாதாரம் எப்பொழுதுமே மிக முக்கியமான பங்கு வகித்து வந்திருக்கிறது; இன்று இது குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்மையாகும்.

பண்டைக்கால மக்கள் அரசியலையும் மத்தியகால மக்கள் கத்தோலிக்க சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பொருளற்றது என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். மனிதகுலம் எப்பொழுதுமே “பொருளாதாரத்தில் வாழ்ந்திருக்கிறது”; அரசியல், மதம், விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியவை பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ முடிந்திருக்கிறது. கடந்த காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமலிருந்ததனால்தான் இந்தக் காலங்களைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நவீன பொருளாதாரம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

பிரான்சுவா கெனே.

இன்றைய உலகம் என்பது உண்மையில் இரண்டு வெவ்வேறான உலகங்களாகும்; சோஷலிஸ்ட், முதலாளித்துவ உலகங்களாகும். இவை ஒவ்வொன்றும் தனியான பொருளாதார அமைப்பையும் அரசியல் பொருளாதாரத்தையும் கொண்டிருக்கின்றன. காலனி ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டிருக்கும் வளர்முக நாடுகள் உலக அரங்கில் மென்மேலும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. எந்தவிதமான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவது என்று முடிவு செய்ய வேண்டிய அவசியம் இந்த நாடுகளுக்கு மென்மேலும் அவசரமானதாகி வருகிறது. அரசியல் பொருளாதார வரலாற்றைப் படிப்பது, நவீன உலகத்தின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கும் அரசியல் பொருளாதாரம் ஒருவருடைய சொந்த உலகப் பார்வையின் இணைந்த பகுதி என்று புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய நூல்கள் -குறிப்பாக ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ எழுதிய நூல்கள் – பொருளாதாரம் என்பது புறவய விதிகள் இயங்குகின்ற அமைப்பு என்ற கோட்பாட்டை முதலாவதாக உருவாக்கி வளர்த்தன. இந்த விதிகள் மனித எண்ணத்திலிருந்து சுதந்திரமானதாக, ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. அரசின் பொருளாதாரக் கொள்கை இந்த விதிகளுக்கு விரோதமாக இல்லாமல் இவற்றைச் சார்ந்திருக்க வேண்டும் என்று இவர்கள் நம்பினார்கள்.

படிக்க:
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

வில்லியம் பெட்டி, பிரான்சுவா கெனே, இன்னும் மற்ற அறிஞர்கள் பொருளாதார நிகழ்வுப் போக்குகளைப் பற்றி அளவுரீதியாக ஆராய்வதற்குரிய அடிப்படையை அமைத்தார்கள். அவர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளை ஒருவகையான வளர்சிதைவு மாற்றம் என்ற ரீதியில் ஆராய்ந்து அவற்றின் திசையையும் செயல் எல்லையையும் சுட்டிக்கூற முயன்றார்கள். மார்க்ஸ் சமூக உற்பத்திப் பொருளின் புனருற்பத்தி என்ற தனது கோட்பாட்டில் அவர்களுடைய விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தினார். நுகர்வுப் பண்டங்களுக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும் இடையே உள்ள சமநிலை, குவித்தல் மற்றும் நுகர்வுக்கிடையே உள்ள அளவு வீதங்கள், வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகள் நவீன பொருளாதாரத்திலும் பொருளாதார ஆராய்ச்சிகளிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவர்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் முன்னோடிகள். இவர்கள் எழுதிய நூல்கள், நவீன பொருளாதாரப் புள்ளியியலைத் தோற்றுவித்தன; அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எவ்வளவு சொன்னபோதிலும் அது மிகையானதல்ல.

வில்லியம் பெட்டி.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் பொருளாதார ஆராய்ச்சி கணிதவியல் முறைகளை உபயோகிக்க முயற்சி செய்தது. இந்த முறைகள் இல்லையென்றால் இன்று பொருளாதார விஞ்ஞானத்தின் பல பிரிவுகளின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. பிரெஞ்சுப் பொருளாதார நிபுணரான அன்டுவான் குர்னோ இந்தத் துறையின் முன்னோடிகளில் ஒருவர்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலவர்களும் குட்டிமுதலாளித்துவ மற்றும் கற்பனாவாத சோஷலிசத்தைப் பேசியவர்களும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உள்ள முரண்பாடுகள் பலவற்றை ஆராய்ந்தார்கள். முதலாளித்துவ சமூகத்துக்குப் பெருந்தீங்கு விளைவிக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதன்முதலாக முயற்சி செய்தவர்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஸிஸ்மான்டியும் ஒருவர். மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான சான்-சிமோன், ஃபூரியே, ஓவன் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்கள் முதலாளித்துவத்தை மிக ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள்; சமூகத்தை சோஷலிச ரீதியில் புனரமைப்புதற்குரிய திட்டங்களைத் தயாரித்தார்கள்.

வி.இ.லெனின் எழுதியது போல, ”மனித குலத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் முன்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுத்ததில்தான் மார்க்சின் மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் மாபெரும் பிரதிநிதிகளின் போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகவே அவருடைய தத்துவம் தோன்றியது1.”

வி.இ.லெனின்.

மூலச் சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மார்க்சியத்தின் தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்தது. எனினும் மார்க்சின் போதனை அரசியல் பொருளாதாரத்தில் புரட்சிகரமான திருப்புமுனையாக இருந்தது. மூலதனம் என்பது ஒரு சமூக உறவு; விலைக்குப் பெறப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினரின் உழைப்பைச் சுரண்டுவதே அதன் சாராம்சம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அவர் உபரிமதிப்பு பற்றிய தன்னுடைய கோட்பாட்டில் இந்தச் சுரண்டலின் தன்மையை விளக்கிக் கூறி முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான போக்கை – அதன் பகைமையான வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்து இறுதியில் மூலதனத்தின் மீது உழைப்பு வெற்றியடைவதை எடுத்துக்காட்டினார். எனவே மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் இயக்கவியல் ரீதியான ஒருமையைக் கொண்டிருக்கிறது; அது அவருக்கு முன்பிருந்தவர்களின் முதலாளித்துவக் கருதுகோள்களை நிராகரிக்கிறது; அவர்கள் உருவாக்கியவற்றில் சரியானவையாக இருக்கும் ஒவ்வொன்றையும் படைப்பாற்றலோடு வளர்த்துச் சென்றது. இந்த ஒருமையை எடுத்துக்காட்டுவதும் விளக்குவதுமே இந்தப் புத்தகத்தின் முக்கியமான நோக்கம்.

விஞ்ஞான சோஷலிசம் மார்க்சிய-லெனினியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் படைப்பாற்றலோடு வளர்த்துச் செல்வதற்கும் அவற்றின் தோற்றுவாய்களையும் மூலவேர்களையும் விளக்குவது மிகுந்த முக்கியத்துவமுடையதாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : மார்க்சும் அவருக்கு முன்பிருந்தவர்களும்.

அடிக்குறிப்பு:
1) V.I. Lenin, collected Works, Vol. 19, p.23

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

4 மறுமொழிகள்

  1. இந்த நூல் எங்கு கிடைக்கும் ,தமிழில் கிடைக்கிறதா அதன் விபரம் தெரிவித்தால் நல்லது.

  2. இவ்வொப்பற்ற புத்தகத்தைப்பற்றி தற்போதுள்ள கல்லூரிகளில் பொருளாதார பாடமெடுக்கும் ஆசிரியர்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்து தொடராக வெளியிடுவது மிக நல்ல முயற்சி.
    மாக்ஸீம் கார்கியின் ‘தாய்’ வெளியீட்டைவிட, தமிழ் வழியாக சோசலிசம்-மார்க்சீயம் கற்கவிரும்புபவர்களுக்கு ‘மார்க்ஸ் காலத்துக்கு முந்தைய அரசியல் பொருளாதாரம்’ ஒரு சிறந்த வழிகாட்டிக்கையேடு

    • பழைய மாஸ்கோ நூலாக வந்துள்ளது. சென்னையில் உள்ள NCBH வெளியீட்டகத்தில் கேட்டுப் பார்த்தால் கிடைக்க வாய்ப்புள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க