ஒருவெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்து விட்டன
எங்கு பார்த்தாலும் ரத்தவாடை அடிக்கிறது!

1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட கலவர வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், குஜராத், கந்தமால், முசாஃபர் நகர், மும்பையில் நடந்த பெருந்திரள் கொலைகளும் அதே பாணியில் நடைபெற்றுள்ளதாக கோடிட்டு காட்டுகிறது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 2003-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டிசம்பர்  17-ஆம் தேதி தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம். (கோப்புப் படம்)

நீதிபதி எஸ். முரளிதர், நீதிபதி வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிவு 120பி (சதித்திட்டம் தீட்டுதல்), பிரிவு 302 (கொலை), பிரிவு 436 (வீடு உள்ளிட்டவற்றை அழிக்கும் நோக்கத்தோடு தீ வைத்தல்), 153 ஏ (இரு சமூகங்களுக்கிடையே பகையை தூண்டுதல்) மற்றும் 153 பி (தேச ஒற்றுமைக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுதல்) ஆகிய இந்திய தண்டனை பிரிவுகளின் கீழ் சஜ்ஜன் குமாருக்கு தண்டனை வழங்கியது. இதன் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தார்கள்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 320, 436, 153 ஏ, 295-ன் படி அதாவது பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒரு இலட்ச ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த முடியாத நிலையில் ஓராண்டு சிறையும் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

தேச பிரிவினை, குஜராத், கந்தமால், மும்பை, முசாஃபர் நகரில்நடந்த பெருந்திரள் கொலைகள்!

சஜ்ஜன் குமார்.

தண்டனை அறிவிப்பின் போது, “1984 -ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் தூண்டப்பட்ட கலவரத்தால் டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டார்கள். நாடுமுழுவதும் 3,350 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் (அரசு அறிவிப்பின் படி இந்தக் கணக்கு). அதுதான் முதலும் கடைசியுமான பெருந்திரள் குற்றம் என சொல்ல முடியாது. 1984 நவம்பரில் அப்பாவி சீக்கியர்களுக்கு எதிரான கொலைகள்  பிரிவினையின்போது நடந்த வலி மிகுந்த சம்பவங்களை நினைவு படுத்துகின்றன” என சுட்டிக்காட்டியதோடு, குஜராத்தில் நடந்த முசுலீம் இனப்படுகொலை, ஒடிசா கந்தமாலில் நடந்த கொலைகள், பாபர் மசூதி இடிப்புக்குப் பின் மும்பையில் நடந்த கொலைகள், உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடந்த படுகொலைகள் ஒரே பாணியில் நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மும்பய்க் கலவரம். (கோப்புப் படம்)

“சிறுபான்மையினரை குறிவைத்து, ஆதிக்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சட்டத்தை அமலாக்குகிறவர்களின் துணையுடன் இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கின்றன” எனக் கூறிய நீதிபதிகள், “பெருந்திரள் கொலைகளைச் செய்த கிரிமினல்கள் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றதோடு, விசாரணையில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பினார்கள். இதுபோன்ற கிரிமினல்களை நீதியின் முன் நிறுத்துவது நமக்கு பெரும் சவாலாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பதில் பெறுவதற்குள் தசாப்தங்கள் கடந்து விடுகின்றன. இது நமது  நீதிமுறையை வலுப்படுத்த வேண்டியதை சுட்டிக்காட்டுகிறது. ‘மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்’ அல்லது ‘இனப்படுகொலைகள்’ எனப்படுபவை  நமது உள்நாட்டு குற்ற சட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன. இந்த ஓட்டையை நாம் உடனடியாக கவனிக்க வேண்டும்” என்றனர்.

முசாஃபர்நகர் கலவரம். (கோப்புப் படம்)

மத அடிப்படையில் மக்களைக் கொல்வதும் நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையும் நமது நாட்டுக்கு புதிதல்ல. கடந்த கால நினைவுகளை கிளறிய நீதிமன்றம், 1947-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் நடந்த பிரிவினையின் போது, நாடு மிக மோசமான பெருந்திரள் கொலைகளைப் பார்த்தது, பல இலட்சக்கணக்கான சீக்கியர்கள், முசுலீம்கள் மற்றும் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அம்ரிதா ப்ரீதம்.

பிரிவினையின்போது இளம் கவிஞராக இருந்த அம்ரிதா ப்ரீதமின் கவிதைகளை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். லாகூரிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டுக்கு அம்ரிதா ப்ரீதம் மேற்கொண்ட துயரமான பயணத்தை ’வாரிஸ் ஷாவுக்கு கவிதை’ என்ற தலைப்பில் கவிதையாக எழுதியிருந்தார்.

“வெறுப்பின் விதைகள் வேகமாக வளர்ந்துவிட்டன
எங்கு நோக்கினும் ரத்தத்துளிகள்
நஞ்சு பாய்ந்த தென்றல் காட்டில் உள்ள மூங்கில் குழல்களை பாம்புகளாக மாற்றிவிட்டன
அவைகளின் நஞ்சு, ஒளியும் வண்ணமும் மிக்க பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டன”

வழக்கின் பின்னணி

1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தன்னுடைய இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின், 37 ஆண்டுகள் கழித்து, இந்த நாடு மாபெரும் மனித துயரை மீண்டும் எதிர்கொண்டது. நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரையான நான்கு நாட்களில் டெல்லியில் மட்டும் 2733  சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.  அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த படுமோசமான குற்றங்களுக்குப் பின்னால் இருந்த பலர் அரசியல்வாதிகளின் அரவணைப்பைப் பெற்றனர். இருபதாண்டு காலமாக விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்து தப்பினார். பத்துக்கும் மேற்பட்ட கமிட்டிகள், கமிஷன்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபின்,  2005-ஆம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி. (கோப்புப் படம்)

தற்போதைய மேல் முறையீடு சிபிஐ விசாரித்த தென்மேற்கு டெல்லியில் ராஜ் நகர் பகுதி-1 ல் நடந்த ஐந்து சீக்கியர்களின் படுகொலை மற்றும் ராஜ் நகர் பகுதி-2ல் நடந்த குருத்வாரா எரிப்பு குறித்தது.  அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சஜ்ஜன் குமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது 2010-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. மூன்று ஆண்டுகள் கழித்து விசாரணை நீதிமன்றம், ஐந்து பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் சஜ்ஜன் குமாரை விடுவித்தும் தீர்ப்பளித்தது. ஐவரில் மூவர் மீது ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டது, கொலை செய்தது போன்ற குற்றங்களும் இருவர் மீது ஆயுதம் ஏந்தி கலவரம் செய்தல் என்ற குற்றமும் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் சொன்னது.  சஜ்ஜன்குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. தண்டனை பெற்றவர்களும் விடுவிக்கக்கோரி மேல்முறையீடு செய்தார்கள்.

படிக்க:
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

இந்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சஜ்ஜன் குமாரை சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மற்ற ஐவரின் மேல் முறையீட்டில் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக கூடுதல் தண்டனையையும் அறிவித்தது.

சாட்சியங்களின் மன உறுதி!

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், மூன்று சாட்சியங்களின் மன உறுதி மற்றும் விடாமுயற்சியின் பலனாக நீதியின் முன் நிறுத்தப்பட்டனர். ஜக்திஷ் கவுர் –  கொல்லப்பட்ட ஐவரில் இவருடைய கணவர், மகன் மற்றும் மூன்று உறவினர்கள் அடங்குவர். ஜக்‌ஷிர் சிங் – கவுரின் உறவினர் –  நிர்ப்ரீத் கவுர், இவர் குருத்வாரா எரிக்கப்படுவதையும், வன்முறை கும்பலால் அவருடைய அப்பா உயிரோடு எரிக்கப்பட்டதையும் பார்த்தவர்.

ஒடிசா கந்தமால் கலவரம். (கோப்புப் படம்)

தீர்ப்பின் இறுதியில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்… “1984-ஆம் ஆண்டு நடந்த படுகொலை ‘மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்’.  சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் முன் அவை அதிர்ச்சியை நீண்ட காலத்துக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த நீதி கிடைக்க 30 ஆண்டுகள் ஆனது என்பதை மறுக்க முடியாது. நமது குற்றவியல் நீதி அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அது நிமிர்ந்து நிற்கிறது. ஜனநாயகம், சட்டத்தின் வழியில் நடைபெறும் போது இத்தகைய பெருந்திரள் குற்றங்களைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்த முடியும். நீதி வேண்டி பாதிக்கப்பட்டு பொறுமையோடு காத்திருக்கும் எண்ணற்றவர்களுக்கு ‘உண்மை வெல்லும்;  நீதி கிடைக்கும்’ என்பதை உறுதிசெய்ய வேண்டும்”.

குஜராத் கலவரம். (கோப்புப் படம்)

அபூர்வமாக அரசியல் கொலைகள் குறித்து நீதிமன்றங்கள் உணர்ச்சி பெருக்கோடு தராசை உயர்த்திப் பிடித்து தீர்ப்பு எழுதுவதுண்டு. ஆனால் காலம்தாழ்த்திய நீதியால் என்ன பயன்? சீக்கிய படுகொலை பாணியில் நான்கைந்து பெருந்திரள் படுகொலைகள் நடந்துவிட்டன. ஒருவேளை நீதித்துறை அரசியல் தலையீடு அற்றதாக இருந்து, சீக்கிய படுகொலைகளுக்கு நீதி உடனடியாக கிடைத்திருந்தால், அதே பாணியிலான கும்பல் கொலைகளுக்கு இந்தியாவில் இடமிருந்திருக்காது. ஜனநாயகத்தில் அப்படி நடக்க சாத்தியமே இல்லை. குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லது நீதியே கிடைக்காமலும் போகலாம் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.

தமிழாக்கம்: அனிதா
நன்றி: நியூஸ்கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க