மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 44 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி
”அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

அவள் மிகுந்த கவனத்தோடு இருந்தாள். அந்த முகப்பு வாசலில் அவள் நின்ற இடத்திலிருந்தே மிகயீல் இவானவிச்சின் கரிய வதங்கிப்போன முகத்தைப் பார்க்க முடியும். அவனது கண்களிலிருந்து பிரகாசத்தையும் அவள் காண முடியும். என்றாலும் அவனும் அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், அவள் தன் முன் கால்விரல்களை ஊன்றிக் கழுத்தை நீட்டிப் பார்த்தாள்.

மக்கள் முகஞ் சுழித்து அவநம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்கள். மெளனமாயிருந்தார்கள். கூட்டத்துக்குப் பின்னால் மட்டும் அமுங்கிப்போன குரலில் ஏதோ கசமுசப்பு எழுந்தது.

“விவசாயிகளே!’’ என்று சிரமப்பட்டு உரக்கப் பேசினான் ரீபின் . “அந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை நம்புங்கள். இதற்காக நான் உயிரையும்கூட இழக்க நேரிடலாம்; அவர்கள் என்னை அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள். அவற்றை நான் எங்கிருந்து பெற்றேன் என்பதை என் வாயிலிருந்து கக்க வைக்க முயன்றார்கள். மீண்டும் அடிப்பார்கள். ஆனால், நான் அதையும் தாங்கிக் கொள்ளத் தயார். ஏனெனில் அந்தப் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளவை உண்மை – அந்த உண்மைதான் நமக்கு நம்முடைய அன்றாட உணவைவிட – அதி முக்கியமானதாக, அருமையானதாக இருக்க வேண்டும். அதுதான் சங்கதி!’’

“அவன் இதையெல்லாம் ஏன் சொல்லுகிறான்” என்று முகப்பு வாசலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த முஜீக்குகளில் ஒருவன் கேட்டான்.

“எதைச் சொன்னால் என்ன? இப்போது எல்லாம் ஒன்றுதான்” என்று அந்த நீலக் கண்ணன் சொன்னான். “மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும்.”

அந்த ஜனங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாது அங்கேயே நின்று தங்களது புருவங்களுக்குக் கீழாக உம்மென்று பார்த்தார்கள். கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒரு பார உணர்ச்சி அவர்களைக் கீழ்நோக்கி அழுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட அந்தக் கட்டிடத்துக்குள்ளிருந்து தட்டு தடுமாறிக்கொண்டே முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தான்.

“யாரங்கே பேசுகிறது” என்று அவன் குடிகாரனைப் போலக் கத்தினான்.

திடீரென்று அவன் விடுவிடென்று படிகளை விட்டிறங்கி ரீபினிடம் போய் அவனுடைய தலைமயிரைப் பற்றிப் பிடித்து தலையை முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்கிவிட்டான்.

“டேய்! நீதானா பேசினாய்? நாய்க்குப் பிறந்த பயலே’’ என்று அவன் கூச்சலிட்டான்.

ஜனக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முணுமுணுப்பு அலைபாய்ந்து பரவியது. நிராதரவான வேதனையுணர்ச்சியோடு தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். மீண்டும் ரீபினின் குரல் ஓங்கி ஓலித்தது.

”பாருங்கள், நல்லவர்களே!…..”

”சத்தம் போடாதே!” அந்த ஜார்ஜெண்ட் அவன் காதோடு ஓங்கியறைந்தான். ரீபின் தடுமாறிச் சாய்ந்து, கீழே விழாமல் சுதாரித்து நின்றான்.

“ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள்.”

படிக்க:
சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்
கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்

”போலீஸ்! இவனைக் கொண்டு போங்கள். ஏ, ஜனங்களே, சீக்கிரம் கலைந்து போங்கள்!” வாயிலே கறித்துண்டைக் கவ்விக் கொண்டு தாவுகின்ற நாய் மாதிரி அந்த ஸார்ஜெண்ட் ரீபினுக்கு முன்னால் பாய்ந்து சென்று அவனது முகத்திலும், நெஞ்சிலும், வயிற்றிலும் தன் முஷ்டியால் ஓங்கி ஓங்கிக் குத்தினான்.

“அடிப்பதை நிறுத்து” என்று யாரோ கூட்டத்தினரிடையேயிருந்து கத்தினார்கள்.

”நீ ஏன் அவனை அடிக்கிறாய்?” என்று மற்றொரு குரல் அதை ஆமோதித்து ஒலித்தது.

“நாம் போய்விடுவோம்” என்று அந்த நீலக்கண் முஜீக் தலையை அசைத்துக்கொண்டே தன் தோழனிடம் சொன்னான். பிறகு அவர்கள் இருவரும் அந்தச் சாவடியை நோக்கி மெதுவாக நடந்தார்கள். அவர்கள் போகும்போது தாய் அவர்களை அன்பு நிறைந்த கண்களோடு பார்த்தாள். அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட் மீண்டும் சாவடியின் முகப்பை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும் தாய்க்கு நிம்மதி நிறைந்த பெருமூச்சு வெளிப்பட்டது. அங்கு வந்து நின்று வெறிபிடித்த குரலில் அவன் கத்தினான்.

“கொண்டு வாருங்கள் அவனை! நான் பார்த்துக் கொள்கிறேன்……”

“அப்படிச் செய்யாதே” என்று கூட்டத்திலிருந்து ஒரு பதைத்த குரல் எழுந்தது. அந்தக் குரல் அந்த நீலக்கண் முஜீக்கின் குரல்தான் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். ”பயல்களா, அவர்களை விடாதீர்கள். அவனை உள்ளே கொண்டு போனால் அவர்கள் உதைத்தே கொன்றுவிடுவார்கள். அப்புறம் அந்தக் கொலையை நாம்தான் செய்தோமென்று நம்மீது பழியும் காட்டிவிடுவார்கள். விடாதீர்கள் அவர்களை!”

“விவசாயிகளே!” என்று கத்தினான் ரீபின். “உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நீங்கள் இன்னும் காணவில்லையா? உங்களை எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள், எப்படி ஏமாற்றுகிறார்கள். எப்படி உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள் என்று உங்களுக்குப் புரியவில்லையா? எல்லாம் உங்கள் சக்தியால்தான் இயங்குகின்றன. நீங்கள்தான் இந்தப் பூலோகத்திலேயே சிறந்த மகோன்னத சக்தியாக விளங்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன? பட்டினி கிடந்து சாவதற்குத்தான் உங்களுக்கு உரிமை இருக்கிறது!”

திடீரென்று அந்த முஜீக்குகள் ஒருவருக்கொருவர் குறுக்கிட்டுச் சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

“அவன் உண்மையைத்தான் சொல்கிறான்!”

”போலீஸ் தலைவனைக் கூப்பிடு. எங்கே அவன்”

”போலீஸ் ஸார்ஜெண்ட் அவனைத் தேடிப் போயிருக்கிறாள்.”

“யார், அந்தக் குடிகாரனா?”

“அதிகாரிகளைக் கூப்பிட்டு வருவது நம் வேலையல்ல.’’

அந்தக் கூச்சல் அதிகரித்துக்கொண்டிருந்தது.

“முன்னாலே போய்ப் பேசு, உன்னை அடிக்கும்படி நாங்கள் விட்டுக்கொண்டிருக்க மாட்டோம்”

“அவன் கைகளை அவிழ்த்துவிடு!”

”நீ அகப்படாமல் பார்த்துக்கொள்!”

”இந்தக் கயிறு என் கைகளை உறுத்துகிறது” என்று அமைதியாகச் சொன்னான் ரீபின். என்றாலும் அவனது குரல் மற்றவர்களின் குரல்களுக்கு மேலாக மேலோங்கித் தெளிவோடு ஒலித்தது. ”நான் ஓடிப்போக மாட்டேன். முஜீக்குகளே நான் இந்த உண்மையிலிருந்து ஒளிந்து மறைய முடியாது. அது என் இதயத்திலேயே வாழ்கிறது.”

சில மனிதர்கள் மட்டும் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று ஒருபுறமாக ஒதுங்கி நின்று ஏதேதோ சொல்லிக்கொண்டும் தலையையாட்டிக் கொண்டும் இருந்தார்கள். கந்தலும் கிழிசலுமாய் உடையணிந்த எத்தனை எத்தனையோ மக்கள் உணர்ச்சி வெறியோடு ஓடோடியும் வந்து குழும ஆரம்பித்தார்கள். அவர்கள் ரீபினைச் சுற்றி கொதிக்கும் கறுத்த நுரை போன்று சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு காட்டுக்கோழி மாதிரி நிமிர்ந்து நின்று தன் கைகளைத் தலைக்கு மேல் ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான் ரீபின்.

“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”

அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக்கொண்டு ரத்தம் தோய்ந்த தனது ஒரு கரத்தை உயர்த்திக் காட்டினான்.

“இதோ என் ரத்தம் – சத்தியத்தைக் காப்பதற்காகச் சிந்திய ரத்தம்!”

“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”

தாயும் படியிறங்கி அந்த முகப்புக்குச் சென்றாள். ஆனால் கூட்டத்தின் மத்தியில் நின்ற ரீபினை அவளால் பார்க்க முடியவில்லை. எனவே மீண்டும் அவள் படிகளின் மீது ஏறி நின்றுகொண்டாள். ஏதோ ஒரு மங்கிய ஆனந்தம் அவளது இதயத்தில் படபடத்தது.

”விவசாயி மக்களே அந்தப் பத்திரிகைகளை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருங்கள், அவற்றைப் படியுங்கள்.

கோயில் குருக்களும், அதிகாரிகளும் உண்மையைச் சொல்லும் எங்களை மாபாவிகள் என்றும், கலகக்காரர்கள் என்றும் உங்களிடம் சொல்வார்கள். அதை நம்பாதீர்கள். உண்மை இந்த உலகத்தில் எங்கும் ரகசியமாகவே உலவுகிறது. மக்களது இதயத்திலே குடிபுகுவதற்காகத் திரிந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளுக்கே சத்தியம் நெருப்பைப் போன்றது. உயிர் பறிக்கும் உடைவாளைப் போன்றது. அவர்கள் சத்தியத்தை ஏற்க முடியாது. ஏற்றால் சத்தியம் அவர்களை வெட்டித் தள்ளிவிடும்; சுட்டுப் பொசுக்கிவிடும்! உங்களுக்கோ சத்திய தேவதை உண்மையான நல்ல தோழியாக விளங்குவாள். அவர்களுக்கோ அவள் பரம விரோதியாக விளங்குவாள். எனவேதான் அவள் இந்தப் பூமியில் ரகசியமாக உலவித் திரிகிறாள்!”

மீண்டும் அந்த ஜனக்கூட்டத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.

“கேளுங்கள், விசுவாசிகளே!”

“ஆ. சகோதரா! அவர்கள் இதற்காக உன்னைத் தண்டிப்பார்களே!’’

“உன்னைக் காட்டிக் கொடுத்தது யார்?”

“தேவாலய மத குரு!” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

இரண்டு முஜீக்குகள் வெஞ்சினத்தோடு கருவினார்கள்.

“அங்கே பாருங்கடா, பயல்களா!” என்று யாரோ எச்சரிப்பது, காதில் விழுந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க