ந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தூணி செல்லும் உப்படா கடற்கரை சாலை. பாண்டிச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை என்றால்; காக்கிநாடாவிற்கு இந்த சாலை. அருகிலேயே கடலையொட்டி பரந்து விரிந்த வயல், அக்கம்பக்கமாக ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கான இடமாகவும் உருவெடுத்து வருகிறது காக்கிநாடா.

kakkinada smart poonkaகடந்த டிசம்பர்-17ம் தேதி வீசிய பெய்ட்டி புயலால் இந்த கடற்கரை சாலையும், அதனையொட்டிய நெல் வயல்களும், மீனவர்களின் படகுகளும் பாதிக்கப்பட்டிருந்ததாகக்கூறி அதனைக் காண்பிக்க அழைத்துச் சென்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாலெ) நியு டெமாக்ரசி கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் துர்கா பிரசாத்.

Comrade Durga Prasad New Democrocy
தோழர் துர்கா பிரசாத்

காக்கிநாடா நகரின் புயல்  பாதிப்பு பற்றியும், அரசின் நிவாரணம் குறித்தும் கேட்டபோது, “கடந்த அக்டோபர் 11-ம்  தேதி வீசிய டிட்லி புயல் விசாகப்பட்டினம்–சிறீகாகுளம் ஆகிய பகுதிகளை கடுமையாகத் தாக்கியது. பின்னர் டிசம்பர் மாதத்தில் வீசிய பெதாய் புயல் காக்கிநாடா-ஏனம் ஆகிய பகுதிகளையும் தாக்கியுள்ளது.

Kakhinada-Cyclone damage 2
உப்படா கடற்கரை சாலை

இந்த புயலில் செல்போன் டவர்கள் சாய்ந்தன, மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மூன்று நாட்கள் மின்சாரம் இல்லை. ஆங்காங்கே சில மரங்கள் விழுந்தன.  மொத்தத்தில் இந்த புயலில் பாதிப்பு குறைவு என்பதால் உள்ளூர் கார்ப்பரேசன் ஆட்களே எல்லா வேலையையும் முடித்துவிட்டனர். இல்லையென்றால், இதைக்கூட சரி செய்யாமல் இருந்தால் மக்களிடம் வெறுப்பு வந்துவிடும்; ஊடகங்கள் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்றஞ்சி  விரைவாக சரிசெய்யப்பட்டது.”

“புயல் நிவாரணம் உண்டா?”

உண்டு. பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். இதுக்கு மேல எதாவது உண்டா..ன்னா வேற எதுவும் இல்ல. சந்திரபாபு நாயுடு “என்னிடம் காசு இல்லை” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார். “மத்திய அரசு நம்மை வஞ்சித்து விட்டது” என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்.

Kakhinada-Cyclone damage 4
புயலில் துக்கி வீசப்பட்ட கட்டுமரம்.

“அதிகாரிகளிடம், நீங்களே கணக்கெடுத்து நிவாரணம் கொடுங்க… அப்புறமா சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ல இருந்து நிதி வந்த பிறகு தறேன்” என்ற தொனியில் சொல்கிறார். அதிகாரிகள் மட்டும் எப்படி கொடுப்பார்கள்?

“ஏற்கனவே அடிச்ச புயலுக்கு நிவாரணம் இன்னும் வரல. அதுக்குள்ள இந்தப் புயல்” என்று பத்திரிக்கைகள் கிண்டல் செய்து எழுதுகிறது. அந்த அளவிற்கு நிவாரண உதவிகளை கேட்டுப் பெறுவதிலும், புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதிலும் அலட்சியம் காட்டி வருகிறது சந்திரபாபு நாயுடு அரசு.

டிட்லி புயலினால் ஏற்பட்ட இழப்பு ரூ.5,000 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் ரூ.2,800 கோடி என்று மதிப்பிட்டிருந்தது. அதேமாதிரி இந்த புயலுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் ரூ.480 கோடி தான் இழப்பு என்று மதிப்பிட்டுள்ளது.

டிட்லி புயலுக்கு இடைக்கால நிதியாக ரூ.1,200 கோடி கேட்டார்கள். பிறகு ரூ.500 கோடிக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதுவே இன்னும் வரல. இதுதான் புயல் பாதிப்புல இருந்து மக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியா எதுவும் செய்யிறதில்லை. முதல்வர் நிதி, மாவட்ட ஆட்சியர் நிதின்னு அனுப்பிடுகிறாங்க. அந்த  நிதியில் இருந்துதான் இதுவரை வேண்டிய செலவுகளை செய்து வருகிறார்களே தவிர அரசு நிதியில் இருந்து இல்லை. அதையாவது முழுசா செஞ்சாங்கள… இல்லையா? எவ்ளோ வந்தது? என்ற கணக்கு வழக்கே இல்லை.

“வாலண்டியர் வந்தாங்களா?”

எந்தப் புயலுக்கும் வாலண்டியர்கள் வருவதில்ல. நிவாரண நிதியோட நிறுத்திப்பாங்க. அரசுதான் செய்யனும்… ஆனா செய்யிறதில்ல. செய்யிறவங்களையும் புடிச்சி உள்ள போடுது…

Kakhinada-Cyclone damage 1
கட்டுமரங்கள் மட்டுமல்ல கடவுளர்களையும் புரட்டிப் போட்ட புயல்.

“டிட்லி புயலுக்கு குண்டூர் ஏரியாவில் இருந்து இடதுசாரி-மக்கள் திரள் அமைப்பினர் நிவாரணப் பொருட்களை சேகரித்து சிறீகாகுளம்-பந்தாகுளம் பகுதியில் வழங்கியபோது ஒரு விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தது.

நிவாரணம் கொடுத்தவங்களை தடுத்து “நீங்க சட்ட விரோத செயலில் ஈடுபடுறீங்க..” எனக் கூறி கைது பண்ணி ரிமாண்ட் செய்துவிட்டது போலீசு. இந்தப் புயலுக்கு கொஞ்ச  நாளைக்கு முன்னாடிதான் அவர்கள் வெளியே வந்தார்கள்.

“புயல் கடுமையா வீசிய பகுதி எது?”

ஜெக்கம்பேட்டா, சீத்தாநகரம், ஜிந்த்தூரு வி.ஆர். புரம், தூணி, கொத்தப்பள்ளி, காக்கிநாடா, ஏனம், பைரவ் பள்ளம் மற்றும் ராஜமுந்தரியில் சில ஏரியா…. அதுலயும் இந்தப் பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயம்தான்.

நிவாரண முகாம் அமைச்சாங்களா?”

“கேம்ப் அமைச்சாங்க. ஆனா அதுல மக்கள் யாரும் தங்கல.. அதிகபட்சம் இரண்டு நாள் தங்கினாங்க… அவ்ளோதான்.”

“ஏன்?”

“அரிசி சோறும் சாம்பார்’ன்ற பேர்ல குழம்பும் ஊத்துனாங்க. சுத்தமா நல்லா இல்ல.. வேற எந்த வசதியும் ஏற்படுத்தி தரல. உடுத்த துணி இல்ல, மெடிக்கல் வசதி இல்ல. குடிக்க-குளிக்க தண்ணி இல்ல. இல்லை.. இல்லை… என்பதுதான் இருக்கிறது.  இதனால நோய் தொற்று வரும்னு பயப்படுறாங்க. இதோடு சேர்த்து இன்னொரு பிரச்சனையும் இருக்கு. வீட்ட விட்டு வந்து கேம்ப்ல தங்கிட்டா வீட்டுல இருக்க பொருட்களை யாராவது திருடிட்டு போயிடுவாங்களோன்ற அச்சம் இருக்கு. புயல்ல போனது போக மிஞ்சி இருக்கிறதை கொண்டுதான் வாழ்க்கைய தேத்தனும் அதுவும் திருடு போயிட்ட என்னா பன்றது…” .என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்.

Kakhinada-Cyclone damage 7
சாலை அரிப்பு

இறங்கி பார்த்தபோது எதிர்பார்த்ததைவிட பயங்கரமாக ஏற்பட்டிருந்தது கடற்கரை சாலை அரிப்பு. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை எல்லாம் தூக்கி வீசியிருந்தது புயல். வழிபாட்டுக்காக மக்கள் வைத்திருந்த சாமி சிலைகளும் தப்பவில்லை. அரிக்கப்பட்டிருந்த அந்த அபாயகரமான சாலையில்தான் மக்கள் பயணித்து வருகிறார்கள். பரந்து விரிந்த வயலும் மக்கள் குடியிருப்பும் கடலையொட்டியே இருந்தது. கடலுக்கும் குடியிருப்புக்கும் மிஞ்சி போனால் இருபது மீட்டர் இடைவெளி இருக்கும் அவ்வளவுதான். இரண்டுக்கும் இடையில் பாதுகாப்பு அரணாக பெரும்பாறைகள் கொட்டப்பட்டிருந்தன.

இந்த கடல் அரிப்பு பற்றி கேட்டபோது சொன்னார்.  “தூணி வரைக்கும் போகும் இந்த சாலை மொத்தம் 15 கிலோ மீட்டர் இருக்கும். 2-3 வருஷத்துக்கு ஒரு முறை இந்த சாலையை போடுவாங்க. இப்ப நிக்குற இடத்திலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தள்ளி இருந்த சாலை இது…  அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அரிச்சி இங்க கொண்டு வந்து விட்டிருக்கு. இனியும் இதை சரி பண்ணலன்னா பக்கத்துல இருக்க நிலங்கள் கடுமையா பாதிக்கும்.. அதைவிட முக்கியமா இந்த குடியிருப்புப் பகுதி தாக்கு பிடிக்காது.

கடல் அலையின் சீற்றம் காரணமாக ஒவ்வொரு முறையும் சாலை அறுத்துக்கொண்டு செல்வது வழக்கம்தான், எனினும் இந்த புயலில் கரையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சாலையில் புரட்டிப் போடப்பட்டிருந்தது.

இந்த சாலையை டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களிடையே கடும் போட்டி நிலவும். ஒரு முறை டெண்டர் எடுத்தாலே போதும் பணம் கொட்டோ கொட்டென கொட்டும். அந்த அளவிற்கு இதில் ஊழல் மலிந்துள்ளது. இந்த கடற்கரை சாலையில் செல்ஃபி எடுக்கும்போது பாறைகள் சறுக்கி நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

வழக்கமான சாலை அரிப்புக்கு காரணம் இங்கு இருக்கும் துறைமுகம்தான் என்றாலும் இந்த புயலில் வீசிய அலை சாலை அரிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. குறைந்த வேகத்தில் வீசிய புயலுக்கே இது தாக்குபிடிக்கவில்லை. எனில் இந்த சாலைகளும், தடுப்புகளும் எந்த லட்சணத்தில் போடப்பட்டிருக்கிறது, அதில் எந்தளவிற்கு முறைகேடு நடக்கிறது என்பதை இயற்கை அம்பலத்திபடுத்தி விட்டது”.

“சரி…துறைமுகத்துக்கும்- சாலை அரிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கு’ன்னு நெனக்கலாம். இயற்கையோட சமநிலையை குலைக்கும்போது அது தன்னோட வேலையை செய்து விடும். மூன்று முக்கியமான சம்பவங்கள் உள்ளது.

முதலாவதாக, காக்கிநாடா இயற்கையான துறைமுகம்னு சொல்லுவாங்க. அந்த ஹார்பரை அகலப்படுத்துறது முதல் காரணம். அதன் பரப்பளவை அதிகரிக்க அதிகரிக்க அலையின் இயல்பான வேகத்துல இருந்து வேகமா அடிக்க ஆரம்பிச்சிடுது. அதனாலயே பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இரண்டாவது, கிருஷ்ணா-கோதாவரி டெல்டாவுல கடற்கரையோரம் ரிலையன்சும்-குஜராத் பெட்ரோலியமும் இணைந்து எண்ணெய் துரப்பன கிணறு அமைச்சிருக்காங்க. கடலுக்குள்ள எண்ணெய் எடுக்கிறாங்க. ஏனம் அருகே கடற்கரையையொட்டி அதற்கான இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, காக்கிநாடா கிழக்குல மணல் அதிகமாக இருக்கக் கூடிய ஹோப் தீவும், வட-தெற்குல மடாக்காடும் இருக்கிறது.  இதனால் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற அழிவிலிருந்து  காக்கிநாடா காப்பாற்றப்படுகிறது.

கடலில் இருந்து எண்ணெய் எடுப்பதுபோல, இந்த தீவில் இருந்து குழாய் மூலம் மணல் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் தீவின் இயல்பான சமநிலை சீர்குலைக்கப்படுவதால் அலையின் வேகமும், புயல் காற்றின் வேகமும் சற்று அதிகமாகிறது. இன்னொரு பக்கம் மடாக்காடு புயலின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. இதனையெல்லாம் அழிப்பதால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் ஒவ்வொரு புயலிலும் உணர்ந்து வருகிறோம்” என்றார்.

உண்மைதான்! இயற்கை நல்லதா-கெட்டதா என்று கேட்டல்; அதன் வேலையை அது செய்கிறது. அந்த இயற்கையின் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது ஒரு அரசின் தலையாயக் கடமை. ஆனால் இங்கு அரசே தன் கடமையிலிருந்து நழுவிக் கொள்கிறது.

படம், செய்தி : வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க