தோழர் ஆர்.பி. மோரே அவர்களால் முதலாவது மஹத் மாநாட்டைப் பற்றி எழுதப்பட்ட விவரணையால் இந்த நூல் முதன்மையாக உத்வேகம் பெற்றது. அந்த மாநாட்டின் முதன்மை அமைப்பாளர் அவரே. அந்த மாநாடு தலித் மக்கள் தங்களுடைய குடிமை உரிமைகளுக்காக ஒரு காவியப் புகழ் வாய்ந்த போராட்டத்தை நடத்துவதற்கு இட்டுச் சென்றது.

தோழர் மோரே, மஹத் மாநாட்டை நடத்துவதற்குத் தான் எப்படி திட்டம் வகுக்க நேர்ந்தது என்பதை நினைவு கூர்ந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நீண்ட கட்டுரையினை மராத்தி மொழியில் எழுதியிருந்தார். அக்கட்டுரை, மஹத்தில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் கல்லூரியின் ஆண்டு மலரில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. பிற்பாடு, அக்கட்டுரை ஒரு குறு நூல் வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டு, வரையறைக்குட்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்பட்டது. மராத்தி மொழி வாசகர்கள் கூட அதைப் பற்றி அறிந்து கொள்ளாமல்தான் இருந்தார்கள். தலித் மக்களின் இந்த முதலாவது போராட்டத்தின் உருவாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய ஒரு விரிந்த வாசகப் பரப்புக்கு மேற்கண்ட இந்த வரலாற்றுப் பூர்வமான ஆவணம் கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற தேவை உணரப்பட்டது. அதன் காரணமாகவே அந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்தப் போராட்டம் பற்றிய விரிவான தலையங்கங்களை பாபா சாஹேப் அம்பேத்கர் தாமே ‘பகிஷ்க்ருத் பாரத்’ பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறார். இப்பத்திரிகை தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் நிறுவிய ‘பகிஷ்க்ருத் ஹிட்காரிணி சபா’வின் இதழ். மஹத் மாநாட்டையும், அதையடுத்துத் தொடர்ந்த சத்தியாக் கிரகத்தையும் பற்றிய, அதைச் சூழ்ந்து அமைந்த அம்சங்கள் பற்றிய தகவல்களை இந்தத் தலையங்கங்களே கூட கணிசமான அளவுக்கு வழங்குகின்றன; கெடுவாய்ப்பாக மராத்தியில் எழுதப்பட்ட பிரதிகளுடனேயே இவை கட்டுண்டவையாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒரு சில பகுதிகள், மகாராஷ்டிர அரசாங்கத்தினால் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘டாக்டர் அம்பேத்கர் பேச்சுகளும் எழுத்துகளும்’ தொகுப்புகளின் 17-வது தொகுதியில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

ஆனந்த் டெல்டும்ப்டே.

மற்றொரு முக்கியமான தரவும் உள்ளது. அது சி.பி. காயர்மோட் அவர்களால் எழுதப்பட்ட பல்தொகுதிகள் கொண்ட மராத்தி மொழி வரலாற்று நூல். இந்த நூலின் தொகுதிகளுடைய முக்கியத்துவம் எதுவெனில், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய ஏராளமான தரவுகளை அவை உண்மையில் கொண்டுள்ளன என்பதே. ஆனால் பதிப்பாசிரியரின் மெருகேற்றலோ, ஆசிரியரின் மறுவிளக்கமோ இல்லாமல் அப்படியே தரவுகளாக உள்ளன. இவையன்றி மராத்தியில் அங்கங்கே சிதறிக் கிடக்கிற பல குறிப்புகளும் கிடைக்கின்றன. மஹத் மாநாட்டையும், அதே போல சத்தியாக் கிரகத்தையும் அமைத்து நடத்திய பிரதான அமைப்பாளர்களுள் ஒருவரான ஏ.வி.சித்ரேவினுடைய வாழ்க்கை வரலாற்று நூல் அவற்றுள் ஒன்று. இந்த நூல், ஏனைய ஆவணங்களில் காணக்கிடைக்காத, தவறிப்போன அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இவற்றோடு கூட, அரசாங்க ஆவணக் காப்பகமும் இந்தப் போராட்டம் பற்றிய ஆவணங்களைக் கொண்டிருக்கிறது என அறிய முடிந்தது. எமது தேடல், ஆவணக் காப்பகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கை அளவுடைய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. குறிப்பாக, முதல் மாநாட்டுக்குப் பிறகு, ‘சத்தியாக்கிரக மாநாடு’ என்றழைக்கப்படும் இரண்டாவது மாநாட்டை நடத்துவதைப் பற்றியவையாக இருந்த பல ஆவணங்கள் அங்கிருந்தன. காலனிய அரசு நிர்வாகம், இந்தப் போராட்டங்களை எப்படிப் பார்த்தது என்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை அவை பிரதிபலித்தன. போராட்டங்களைப் பற்றிய நிர்வாகத் தரப்பிலான கண்ணோட்டத்தை இந்த ஆவணங்கள் வழங்குபவையாக இருப்பதால் முக்கியமானவை ஆகும். முதலாவது, இரண்டாவது மஹத் மாநாடுகளின் வரலாறுகளைக் கட்டமைப்பதில் இந்த எல்லா வகையான தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் சாதிய அமைப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் மஹத் மாநாடுகளின் முழுமையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதென்பது சாத்தியமில்லை. மஹத் போராட்டத்திற்கு முன்னர், சாதிமுறைக்கு எதிரான வரலாற்றுப்பூர்வமான எதிர்ப்பு இலக்கியங்களைப் புரிந்து கொள்வதென்பதும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததே. எனவே, மஹத்துக்கு முன்னதாகப் பல்வேறு பகுதிகளில், சாதிகளின் தோற்றம் எப்போது நடந்ததோ அந்த காலத்திலிருந்தே வளர்ச்சியடைய ஆரம்பித்த தலித்துகளின் முழுமையான வடிவம் பெறாத இயக்கங்கள் தோன்றிப் பரவிய கால வரையிலான வரலாற்றுச் சித்திரத்தின் பரிணாமப் பண்பை கட்டியெழுப்புவதற்காக ஓர் அத்தியாயம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல, சமகாலத் தலித் இயக்கத்தின் அனுபவம் சார்ந்த அம்சங்களுடன் மஹத் போராட்டத்தினை இணைக்கக்கூடிய வகையில் அப்போராட்டத்தின் இயல்பைப் பற்றிய பின்னூட்டப் பார்வையை வழங்கும் பொருட்டு நூலின் இறுதிப்பகுதியில் மற்றோர் அத்தியாயமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அத்தியாயங்களுமே மஹத் போராட்டத்தை அதனுடைய வரலாற்றுப் பின்னணிச் சூழலுடன் பொருத்துவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன… (நூலாசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே எழுதியுள்ள முன்னுரையிலிருந்து சில பகுதிகள்)

படிக்க:
கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?
பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா !

… நாட்டுப்புற வழக்காற்றில், மஹத் என்பது சாவதார் குளத்து சத்தியாக்கிரகத்துடனே இணைந்திருக்கிறது. உண்மையில், அந்தப் போராட்டம் ஒரு போதும் நடைபெறவேயில்லை. முதல் மாநாட்டின் போது குளத்தை நோக்கிய தலித் நடைப்பயணமும், தங்களுடைய குடிமையியல் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்காக குளத்தின் நீரை அவர்கள் அருந்தியதும் மார்ச் 20, 1927 அன்று நடைபெற்ற நிகழ்வுகள். அது ஒரு சத்தியாக்கிரகமல்ல. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாநாடு அது. அங்கு, மாநாட்டுக்கு முந்தின நாள் இரவு, திடுதிப்பென்று தங்களின் சிவில் உரிமையைப் பயன்படுத்தியதாக வேண்டுமென்று அந்த மாநாடு தன்னெழுச்சியாக முடிவு செய்தது. இந்த முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு அமைந்தது. சாதி இந்துக்களின் தீவிரமான, மூர்க்கம் நிறைந்த எதிர்ப்புக்கு இது ஓர் எதிர்வினையாக இருந்தது. இந்தமுறை ஒரு சத்தியாக்கிரக மாநாடாக உணர்வுபூர்வமான விழிப்புணர்வுடன் திட்டமிடப்பட்டிருந்தது. சாவதார் குளத்தருகே மனுஸ்மிருதியை எரிப்பதென்றும், தலித்துகளுக்காக அது திறக்கப்படும்வரை தொடர்ந்து நடைபெறும் வகையில் ஒரு போராட்டத்தைத் தொடங்குவதென்றும் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் மாநாடு தொடங்குவதற்குச் சற்றே முன்னதாக, சில பழமைவாத சாதி இந்துக்களால் மோசடியான தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் மூலம் இந்தப் போராட்டத்திற்குத் தடையுத்தரவு பெறப்பட்டது. அதன் காரணமாக பிந்தைய போராட்டத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமாறு நேர்ந்தது. இந்த இரு மாநாடுகளையுமே சத்தியாக்கிரக மாநாடுகள் என்று ஒன்று சேர்த்துக் கூறப்பட்டு வருவது இந்த விதத்தில் தவறான கூற்றாகும். பின், மஹத் என்பதென்ன? மஹத்தில், உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வு உலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது? சமகால தலித் இயக்கத்திற்கு அதனுடைய பாரம்பரியம் என்ன? எதிர்கால சந்ததிக்கு அதன் படிப்பினைகள் எவை?…

மஹத்தில்தான் தலித்துகள் தங்களுடைய குடிமை உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தாமாகவே முதல் தடவையாக உணர்வுப்பூர்வமாக ஒன்று திரண்டனர். மைய நீரோட்டப் பகுதி சார்ந்த அறிவுஜீவிகள் மஹத் போராட்டத்தை குடியுரிமைகள் சாரந்த போராட்டம் என அழைப்பதற்கு விருப்பமற்று அசட்டையாக இருந்தார்கள். இன்றைய நாட்களில் தலித்துகளுடன் தொடர்புடைய எந்த ஒரு விசயத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதனுடன் ‘தலித்’ என்ற முன்னொட்டைப் பொருத்தியே குறிப்பிடும் ‘சாதிய’ச் சாயை படிந்த ஒரு புதிய சொல்லாடல் பரிணாமம் பெற்று வளர்ந்துள்ளது. இப்படியாக தலித்துகளின் குடியிருமைகள் தலித் உரிமைகளாகிவிட்டன. ஒரு தலித் எழுத்தாளரால் எழுதப்படுவது ‘தலித் எழுத்து’ ஆகிவிட்டது. அரசாங்கப் பதவிகளை ஒரு வேளை தலித் வகிப்பார்களேயானால், அப்பதவிகளை வகிப்போர் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களுடைய சாதி பற்றிய குறிப்புடன் சேர்த்தேதான் – எவ்வித தீங்கிழைக்கும் எண்ணம் இல்லாவிடினுங்கூட – குறிப்பிடப்பட்டு வருகின்றன. (நூலிலிருந்து… பக்.11-13)

நூல்: மஹத் (முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்)
ஆசிரியர்: ஆனந்த் தெல்தும்ப்டே
தமிழில்: கமலாலயன்

வெளியீடு: பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்.,
16, (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
தொலைபேசி: 044 – 28482441

பக்கங்கள்: 590
விலை: ரூ 550.00

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க