வர் கிரிட் நிறுவனத்தின் மின்வட பாதைகளில் உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட விவசாய நிலங்களில் காலை 5 மணிக்கு கடமை உணர்ச்சியுடன் மாவட்ட ஆட்சியர்,  வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் படை பரிவாரங்களுடன் பட்டா நிலங்களில் அராஜகமாக உள்ளே புகுந்து நிலம் அளவிடும் பணியை செய்கின்றனர்.  இதனை எதிர்க்கும் விவசாயிகளை போலீசை வைத்து மிரட்டுவது என்று  குண்டர் படையாகவே காவல் துறை செயல்பட்டு வருகிறது.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு வடிவங்களில்  அமைதியாக  போராடி வருகின்றனர்.  அவர்களுக்கு ஆதரவாக கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை  சுற்று வட்டார பகுதி வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். மேலும்  திருப்பூர்,  கோவை மாவட்டங்களில் சூலூர், பல்லடம் பகுதி வியாபாரிகளும்  உழவர் சந்தையில் கடை வைத்திருப்போரும்  கடையைடப்பு செய்து தங்களது ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

பொது இடங்களில் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய விடாமல் போலீஸ் தடுத்தது.  அமைதி வழியில் பேராடும் உரிமையை மறுக்கும் போலீசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விவசாயிகள் சென்றனர்.  “ஏன் ஜனநாயக உரிமையை மறுத்தாய்” என போலீசையும், மாவட்ட நிர்வாகத்தையும் உயர்நீதிமன்றம் கண்டிக்கவில்லை .

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகரில் அனைத்து கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு பேரணியாக வட்டாட்சியருக்கு மனு கொடுக்க செல்ல முயன்ற போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீஸ் தடுத்து, கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.

போராடும் விவசாயிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்திட அரசு முன்வரவில்லை.  மேலும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதற்காக கோவை மாவட்டத்தில் “மக்கள் அதிகாரம்” அமைப்பு மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும், நேபாள், பூட்டானிலும் நீர் மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.  கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் / செய்யப்போகும் மின்சாரத்தை  இந்தியா முழுவதும் கொண்டு சென்று விற்பது,  மற்றும் பங்களாதேஷ், இலங்கை, பாக்கிஸ்தான், நேபாள் போன்ற அண்டை நாடுகளுக்கு விற்று கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் விவசாயிகளின் வாழ்வைச் சிதைத்து இந்த மின்பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெறுகின்றன.

ஏற்கனவே ஜம்மு முதல் தமிழ்நாடு வரையிலும் பவர் கிரிட் (Power Grid) என்ற பொதுத்துறை நிறுவனம் தனது மின் நிலையங்களையும 3.5 லட்சம் கிலோ மீட்டருக்கு மின்பாதையையும் நிறுவி பராமரித்து வருகிறது.  இன்றைய நிலையில் இந்தியாவின் மின் தேவையில் 50% மின்சாரத்தை கடத்திக் கொண்டு செல்லும் நிறுவனமாக இந்நிறுவனம் உள்ளது.  லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்த பவர்கிரிட் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பொதுத்துறை நிறுவனம் HVDC (High Voltage Direct Current) மின்பாதையை நாடு முழுவதும் நிறுவிக் கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகலூருக்கு 6000 MW ஆறு மின்வடம்  நிறுவிடும் திட்டம் போடப்பட்டுள்ளது.  இந்த  திட்டத்தில் 5 மின் பாதைகள் புகலூரில் இருந்து பிரிகின்றன.  இதில் ஒரு மின் பாதையால் பாதிக்கப்படும் 13 மாவட்ட விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

நமது நாட்டின் மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.  இதன் விளைவாகத்தான் மின்கட்டணம் அதிகரித்த வண்ணம் உள்ளன.  மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்டதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  இது நிர்ணயிக்கும் கட்டண அளவை மத்திய மாநில அரசுகளால் நீதிமன்றங்களால் குறைக்க முடியாது;  இந்த ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிட முடியாது என்ற அளவிற்கு இந்த ஆணையம் தன்னாட்சி பெற்ற ஆணையமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையங்கள் மூலம் மின் உற்பத்தி, விநியோகத்தை கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கானதாக மாற்றிடும் பணி நடைபெற்று வருகிறது.

மின்சார உற்பத்தியும், விநியோகமும் அதாவது விற்று லாபமீட்டும் துறைகள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் உள்ளன.  ஆனால் இதற்கு தேவைப்படும் மின் கடத்தல் பணி (மின் வடப்பாதை அமைத்தல்) என்பது மிகவும் செலவு பிடிக்கும் பணியாக உள்ளதால், அதை மட்டும்  பவர் கிரிட் என்ற அரசு நிறுவனத்தின் வசம் விட்டுவைத்து அதற்கான செலவுகளை மக்கள் பணத்தில் இருந்து செய்ய வைத்து உள்ளனர்.

மின்கோபுரங்கள், மின்வடம் அமைக்கும் பணியை வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனமான ஏபிபி (ABB)  என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்திற்கு பொதுத்துறை தனியார் கூட்டு (Public – Private Partnership) என்ற முறையில்  கொடுத்து மக்கள் பணத்தை ஏபிபி நிறுவனம் கொள்ளையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பணிக்கு தேவையான உதிரி பாகங்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஸ்டெர்லைட் உள்ளிட்ட 35 தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு மக்கள் பணம் கார்ப்பரேட்டுகளால் கொள்ளையடிக்கப்படுவது பரவலாக்கப்பட்டுள்ளது.

நாட்டு வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பது, அவர்கள் தொழில்  செய்து கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வேண்டிய வேலைகளை செய்து கொடுப்பது என்பது அரசின் முக்கிய பணியாக உள்ளது.  இந்தநோக்கத்தில் தான் அதானி நிறுவனம் குஜராத்தில் அமைத்துக் கொண்டிருக்கும் 25,000 KW மின் உற்பத்தி திறன் கொண்ட நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பாகிஸ்தானில் விற்பதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கத்தில்தான் (பதவி ஏற்ற ஒரு வருடத்திற்குள்) மோடி பாகிஸ்தானுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாட்டின் மின்தேவை நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் உள்ளது.  உதாரணமாக இந்திய மக்களின் தனி நபர் மின்சார நுகர்வு (Per capita consumption) என்பது ஒரு மணி நேரத்திற்கு 1990 மார்ச்-ல் 464 KW என்பதாக இருந்தது, 2018 மாச்சில் 1149 KW ஆக உயர்ந்து விட்டது.

நாட்டின் இந்த மின் தேவையை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான வழிகள் மத்திய மாநில அரசுகளால் செய்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இந்த பணிகள் அனைத்தும் நாட்டு மக்களின் நலனுக்கானதாக மத்திய மாநில அரசுகளால் சித்தரிக்கப்படுகின்ன.  ஆனால் உண்மை நிலை என்ன?  விவசாயத்திற்கு மின் இணைப்பு பெற ரூ.2.75 லட்சம் கொடுக்க வேண்டும்.  அல்லது இலவச இணைப்பு கேட்டு விண்ணப்பித்து விட்டு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.  ஆனால், மின்பாதை அமைப்பதற்காக விவசாய நிலங்கள்  அரசால் அராஜகமாக, தடாலடியாக ஆக்கிரமிக்கப்படுகிறது.  உரிய இழப்பீடும் தருவதில்லை அந்த நிலத்தினை விவசாயி பயன்படுத்தும் உரிமை என்பது கேள்விக்குறியாக்கப்படுகிறது .  மின்பாதையை ஒட்டியுள்ள மீதி நிலத்தின் மதிப்போ அதல பாதாளத்தில் வீழ்த்தப்படுகிறது.   விவசாயியின் வாழ்வே புரட்டிப் போடப்பட்டு நசுக்கப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மின் உற்பத்தி செலவும், அதை மக்களுக்கு கடத்திக் கொண்டு வரும் செலவும்  குறைந்து வரும் நிலையில் மின் கட்டணமோ உயர்ந்து வருகிறது.  முன்கூட்டியே கட்டணம் செலுத்தி மின்சாரத்தை பயன்படுத்தும் முறை (Prepaid System) கொண்டு வரப்படுகிறது.  மின் கட்டணம ஒருநாள் கூட தாமதமாக கட்ட முடியாத நிலை, ஒருநாள் கூட மின் துண்டிப்பை  தள்ளிப்போட முடியாது என்ற நிலை ஏற்படப் போகிறது.

தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளில் சாகர்மாலா திட்டம்  மூலம் மீன்வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வை அழிப்பது, பெட்ரோ-கெமிக்கல் மண்டலம் அமைப்பதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வை அழிப்பது ஸ்டெர்லைட்டை இயக்கிட அனுமதிப்பதன் மூலம் தூத்துக்குடி மக்களை வியாதியில் கொல்வது, கூடங்குள அணுவுலை மூலம் சுற்றியுள்ள மக்களை அணுக்கதிர் வீச்சில் சிதைப்பது, புதிய துறைமுகம் அமைப்பது மூலம் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வை அழிப்பது, எட்டுவழிச் சாலைக்காக விவசாய நிலங்களை விவசாயிடமிருந்து பிடுங்கிக் கொள்வது – இத்தனையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக மத்திய, மாநில அரசுகளால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் . இவற்றால் நேரடியாகவோ சுற்றுவழியில் மறைமுகமாகவோ பாதிக்கப்படாதவர்கள் யாராவது இருக்க முடியுமா?  இதனுடன் இணைத்துதான் விவசாயிகள் மின்வடப்பாதையால்  பாதிக்கப்படுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் இது போன்ற நிலைதான் உள்ளது.  மக்கள் அனைவரும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் மின்வட்டப் பாதையில் பாதிக்கப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டும்.   இது காலத்தின் தேவை – காலத்தின் கட்டாயம்.

தகவல்:
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
உடுமலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க