பத்திரிகைச் செய்தி

 18.01.2019

 தமிழகத்தில் நடப்பது  சட்டத்தின் ஆட்சியா?  ஸ்டெர்லைட்டின் ஆட்சியா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் முன்னணியாளர்களை போலீசு குறிவைத்து கைது செய்வதும், அவர்களின் குடியிருப்புப் பகுதிக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மிரட்டல் விடுப்பதும், பின் தொடர்ந்து கண்காணிப்பதும், அச்சுறுத்துவதும், பொய் வழக்குப் போடுவதும் தொடர்ந்து வருகிறது.

நேற்று மதியம், பண்டாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த, அனைத்துக்கல்லூரி மாணவர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சந்தோஷ் என்பவர், சீருடை அணியாத போலீசால் கடத்தப்பட்டு மாலை வரை எங்கிருக்கிறார்? என தெரியாத நிலையில்,  போலீசைக் கண்டித்து கிராம மக்கள்  உள்ளூரிலேயே அமர்ந்து போராடினர்.  இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பரவியதும் இரவோடு இரவாக பொய் வழக்கில் சந்தோஷ் கைது செய்யப்பட்டு பாளையம் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்றைய (17-01-2019) போராட்டத்தில் முன்னணியாக கலந்து கொண்ட மைக்கேல் என்ற இளைஞரையும், சட்ட ஆலோசகர் அரிராகவன் என்பவரையும் இன்று (18-01-2019) அதிகாலையில் கைது செய்து  சிறையிலடைத்தனர்.

இவர்களின் கைதுக்கான காரணமாக போலீசார் சொல்வது, ”ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று பிரசுரம் கொடுக்க  தூண்டினார்கள், உதவினார்கள் என்பதுதான்.  தூத்துக்குடி போலீசாரின் இந்த செயலை மக்கள் அதிகாரம்  வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

தமிழகத்தில்  கார்ப்பரேட் ஸ்டெர்லைட் ஆட்சிதான் நடக்கிறது. ”தூத்துக்குடியில்  மருத்துவமனை, கல்வி நிறுவனம், குடிநீர், வேலை வாய்ப்பு மகளிர் சுய உதவி குழுவிற்கு  கடன் வசதி அனைத்தையும் செய்து தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து முதல் பக்கத்தில் தினசரி நாளிதழ்களில் விளம்பரம்  கொடுத்துள்ளது.  ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னைக்கு மக்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

இதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய மக்களுக்கும் கட்சி இயக்கங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஸ்டெர்லைட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் போலீசார் அனுமதி அளிக்கின்றனர். எதிர்த்துப் பேசினால் கடுமையாக ஒடுக்குகின்றனர். ஸ்டெர்லைட்டின் கூலிப்படையாகத்தான்  தூத்துக்குடி போலீசும் மாவட்ட நிர்வாகமும் செயல்படுகிறது என குற்றம் சாட்டுகிறோம்.

திருவைகுண்டத்தில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி “ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கூடாது, 14 பேர் உயிர்த்தியாகம் வீண்போகலாமா?” என பிரசுரம் கொடுத்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூவரை திருவைகுண்டம் போலீசு கைது செய்து சிறையிலடைத்தது. 15 நாட்களுக்குப் பின்னர்  பிணை கிடைத்தது.  ஒருமாதம் தினமும் போலீசு நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை பிணையில் வெளியே வந்தனர். பிரசுரம் கொடுத்தது குற்றம் என்று எந்த சட்டம் சொல்கிறது? இந்தப் பிரசுரத்தைக் கொடுக்க தூண்டியதாகதான் ஒப்புதல் வாக்கு மூலத்தில் பெயரை சேர்த்து இன்றைக்கு மைக்கேல், சந்தோஷ், அரிராகவனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  தமிழகத்தில் போலீசு ஆட்சிதான் நடக்கிறது.

“14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும்  ஆலையை திறப்பேன்” என்கிறது ஸ்டெர்லைட். “14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும் போராட வருகிறீர்களா?” என்று மக்கள் மீது அடக்குமுறை செலுத்துகிறது  போலீசு. இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்.

இது  தூத்துக்குடி பிரச்சினை மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கு எதிரான போராட்டம். மக்களின், நாட்டின்  இறையாண்மையை காக்கின்ற, இயற்கை வளங்களை சூறையாடுகின்ற  மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடுகின்ற கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டம். எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை  திறப்பதற்கான எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த கைது நடவடிக்கைகள்.

தொடர்ச்சியாக மக்களுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும் செயல்படும் தூத்துக்குடி எஸ்பி, கலெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும்.  குறிப்பாக தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா அவர்கள் கோடநாடு கொலைகளை, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக விபத்து, தற்கொலை என வழக்கை முடித்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு  ஆதாரங்களுடன் வலுத்து வருகிறது.  எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும்.

ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய கார்ப்பரேட்டுக்கு உரிமை இருக்கிறதெனில், ஸ்டெர்லைட்டை  மூட வேண்டும் எனப் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. உயிர்த்தியாகம் செய்து போராடி வரும்  தூத்துக்குடி மக்களோடு அனைவரும் இணைய வேண்டும் என அழைக்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க