போலீசை எதிர்கொண்ட சட்டக்கல்லூரி மாணவரின் அனுபவம் !

ந்தியா போன்ற வளரும் நாடுகளில் (வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிக தொழிற்துறையை ஈர்ப்பதால் அப்படியே அழைக்கலாம்) ஜனநாயகத்தின் நடைமுறை எவ்வாறு உள்ளது என்பதை சட்டக்கல்லூரி மாணவர் என்ற அடிப்படையில் நேரடியாக அனுபவைத்ததிலிருந்து பகிர்கிறேன்.

ஜனவரி 22-ம் தேதி  ஜாக்டோ – ஜியோ சார்பாக ஆசிரியர்கள் தொடர்போராட்டத்தை அறிவித்தார்கள் மாணவர் அமைப்பின் பிரதிநிதியாக நான் கடந்த ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் உண்மைக்கு புறம்பாக வரலாற்று புனைவுகளை எப்படி அறிவியலுடன் இணைத்து பேசுகிறார்கள் மக்களையும், மாணவர்களையும் எப்படி மூடத்தனத்தில் ஆழ்த்துகிறார்கள் என்றும், அதை குறிப்பாக அறிவியலின்பால் கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் எப்படி உணரவேண்டும் என்ற அடிப்படையில் “மூடத்தனத்தை பரப்பும் அறிவியல் மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை விநியோகித்தேன்.

வழக்கம் போல் உளவுப்பிரிவினர் வந்து பிரசுரம் பெற்றுச் சென்றபின் சில நிமிடத்தில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வந்து கையில் உள்ள பிரசுரத்தை பறித்துக்கொண்டு வண்டியை வரச்சொல்லுங்க என துணை ஆய்வாளரிடம் கூறினார்.

நானோ ஏன் சார் பிரசுரம் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது என்றதும், பதில் ஏதும் இல்லை. நான் நீங்கள் இப்படி தான்  20 – ஜனவரி 2019 அன்றும் எங்களை உளவுப்பிரிவு போலிசார்  பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கூறியவுடன்  விசாரணை என்ற பெயரில்  ஒரு நாள் முழுவதும்  காவல் நிலையத்தில் வைத்தீர்கள் ஏன் சார்? எங்களிடம் ஏதும் நீங்கள் சந்தேகப்படும் படியான பொருள் இருந்ததா? என்ற கேள்விக்கும் ஸ்டேஷனுக்கு வாங்க பேசிக்கொள்ளலாம் என கூறி  அழைத்துச்சென்றனர்.

காரில் ஏறியதுமே செல்போனைப் பறித்துக்கொண்டனர். ஸ்டேசனில்  துணை ஆய்வாளர் இருந்தார். இறங்கியதுமே “என்ன செஞ்ச”? என்ற வினாவுடன் ஆரம்பித்தார். “நோட்டீசு கொடுத்தேன் அதற்கு கூட்டிட்டு வந்தாங்க” என்றேன். என்ன நோட்டீசு என்றார்.  நான் பிரசுரத்தின் தலைப்பையும்  அதனுடைய அவசியத்தையும் கூறும்போதே குறுக்கிட்டு, “நோட்டீசு கொடுப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? நீங்க சட்டக்கல்லூரி மாணவர்தானே? இதுகூட தெரியாதா? என்றும் சட்டத்திலேயே அனுமதி பெற்றுதான் நோட்டீசு கொடுக்க வேண்டும் என்று இருக்கு  உங்களுக்கு தெரியாதா?” என்றார்.

அதற்கு நானோ நீங்கள் கூறுவது எந்த சட்டத்திலும் அப்படி இல்லை. அடிப்படை உரிமைகளில் (Fundamental Rights Art-19) என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளது அதனால் என்னுடைய கருத்தை நான் கூறலாம் என்று பதிலளிக்கும்போதே, சீறுடை அணியாத துணை ஆய்வாளர் “உங்கள் கருத்தை மக்கள் மீது திணிக்ககூடாது தம்பி, மற்றவர்களின் உணர்வு அது, அதில் ஏன் நீங்க தலையிடுறீங்க” என்றார்.

“நோட்டீசு கொடுப்பதில் என்ன கருத்துத் திணிப்பு வரப்போகிறது சார்… பிரச்சாரம் செய்வது, நோட்டீசு கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது இவையெல்லாம் அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சார்” என்றதும், “அதெல்லாம் கிடையாது நீகொடுக்கக்கூடாது..” என்றார்.

“சரி சார் நான் கொடுக்கக்கூடாது என்றால் அறிவியல் மாநாட்டில் அப்படி  புராணப்புரட்டுகளைப் பேசியது மட்டும் கருத்து திணிப்பு இல்லையா..?” என்றதும்

“அதையெல்லாம் நீ பேசாத உள்ள போயி உக்காரு..” என்று மிரட்டும் தொனியில் பேசி அதிரடிப்படைப் போலிசிடம் சொல்லி அழைத்துச்சென்று உட்காரவைத்தார்.

என்னை அழைத்துசென்ற அதிரடிப்படைப் போலிஸ் 15 நிமிடம் கழித்து  என்னிடம் வந்து “எந்த அமைப்பு, நீங்கள் பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.

நான் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி என்கிற மாணவர் அமைப்பு எங்களுடையது பதிவு செய்யப்படாத அமைப்புதான் என்று கூறவும்,

“பதிவு செய்தால் தானே தெரியும் என்றும்,  இல்லையென்றால், மக்களுக்கு எப்படி தெரியும்?” என்றார்.

“நாங்கள் தான் பிரசுரம் கொடுக்கிறோம் இதுபோல் பிரச்சாரம் செய்கிறோம், போஸ்டர் ஒட்டுகிறோம், அனுமதி பெற்று போராட்டம்  நடத்துகிறோம், மக்களுக்கு தெரியாதா மேலும் பதிவு செய்வது அரசிடம், மக்களுக்கு எப்படி தெரியும்…” என்றவுடன்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

“அப்படியிருந்தாலும் அரசுக்கு தெரியவேண்டாமா?” மேலே சொல்லும் நடவடிக்கையின் வாயிலாகவே தெரிந்துகொள்ளலாமே சார். “இல்ல தம்பி கண்டிப்பாக பதிவு செய்திருக்கணுமே” என்றார். நானோ அப்படி கிடையாது  7-பேர் சேர்ந்தால் ஒரு சங்கத்தையோ, அமைப்பையோ ஆரம்பிக்கலாம் சட்டமே உரிமை வழங்கியுள்ளது மேலும் சட்டரீதியான தீர்வுகளை  நாடும்பட்சத்தில்தான் பதிவு செய்யவேண்டும் இல்லையென்றால் அதுவும் அவசியம் இல்லை, கட்டாயமும் இல்லை என்றதும் சென்றுவிட்டார்.

நோட்டீசை போனில் யாரிடமோ படித்து காண்பித்தார் சீருடை அணிந்த துணை ஆய்வாளர். பிறகு என்னை அழைத்து  உளவுப்பிரிவு(IS) ஆய்வாளர் பேசுகிறார் பேசு என்று போனில் பேசச் சொன்னார். அவரோ “தம்பி நீங்கள் செய்வது எல்லாம் சரியான செயல்தான் நல்ல கருத்துக்களைதான் சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே நாளில் எப்படி நீங்க நினைப்பது போல் நாட்டை  மாற்றிவிட முடியாது பல கருத்துள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மெது மெதுவாகத்தான் செய்ய முடியும்.”

அதற்கு நானோ “நாங்களும் மெதுவாகத்தான் செய்கிறோம் பிரசுரம், போஸ்டர் என்றுதான் செய்கிறோம் இதில் என்ன தவறு உள்ளது ஏன் என்னை ஸ்டேசனுக்கு அழைத்து வரச்சொன்னீர்கள்” என்றவுடன் “அப்படி இல்ல.. தம்பி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசு காவலுக்குத்தான் நின்றது. ஆனால் சிவா என்ற நபர்தான் முதலில் தடுப்பின் மீது ஏறி குதித்தார் பிறகு கூட்டத்தை களைக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அது உனக்கே தெரியும். மேலும் 5 நபர்களுக்கு மேல் கூடினால் பிரச்சனை வரும் என 100 வருடத்திற்கு முன்னாலேயே எழுதியுள்ளான். அப்படி சென்சிட்டிவான இடத்தில் போய் ஏன் வேலை செய்கிறீர்கள்  அதனால் தான் அழைத்து வரச்சொன்னேன். சரி உன்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் உன் ஊர் எது உனது தந்தை எங்கு உள்ளார்..” என்று கேள்விகளை அடுக்கினார்.

ஏன் என்றதும் “உனது குடும்பம் திருந்திவிட்டதா, ஊர் திருந்திவிட்டதா? அங்கு போய் வேலை செய்யுங்கள், உங்கள் குடும்பத்தை திருத்துங்கள் பிறகு திருநெல்வேலி வரலாம் என்று கூறி இனி இப்படிப்பட்ட(Sensitive) பதற்றம் நிறைந்த  பகுதிகளில் வேலை செய்யாதீர்கள்..” என்று அழைப்பைத் துண்டித்தார்.

சிறிது நேரம் கழித்து  எழுதி வாங்கிக்கொண்டு விடுதலை செய்தனர்.

  • மேலே கூறிய சம்பவம் ஒரு முக்கியமான நடைமுறையை எனக்கு உணர்த்தியது. அது இந்திய அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியதாக சொல்லப்படும் ஷரத்து 19- ன் அடிப்படை உரிமைகளை மறுப்பதை புரிந்துகொள்ளமுடியும்.
  • ஷரத்து 19(1)a – பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், இச்சட்டம் நமக்கு தெரியாதெனக் கருதி, எதுவும் அனுமதி பெற்றே செய்ய வேண்டுமாம் சட்டத்தில் உள்ளதாகவும் மிரட்டுகிறார்.
  • ஷரத்து 19(1)b – ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். இதை மறுத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட சட்டம் சொல்லும் 5 நபர்களுக்கு மேல் கூடினால் பொது அமைதி குலையும் பிரச்சனை வரும் அதனால் நீங்கள் கூடவே முடியாது, நோட்டீசே ஆயுதங்களாகப் பாவிக்கப்படுகிறது.
  • ஷரத்து 19(1)c – கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம். இந்த சட்டத்தை மறுத்து, அமைப்பு பதிவு செய்யப்பட்டால்தான்  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பது போலவே அதிரடிப்படை காவலரின் கேள்வி.
  • ஷரத்து 19(1)d – இந்தியா முழுவதும் சென்று வரும் சுதந்திரம், சட்டமே நியாயமான கட்டுப்பாடு என்று பொதுமக்களின் நலன் முன்னிட்டும் ஷரத்து 19(5)1 என்பதன் மூலம்  இந்தியா முழுவதும் எங்கும் செல்லலாம் என்று கூறியுள்ளது. இதை மறுத்து உனது ஊரை விட்டு ஏன் இங்கு வந்தாய் அங்கு சென்று வேலையைப்பார் என்று மிரட்டுகிறார். (ஒரே மாவட்டத்துக்குள்ளேயே இந்த நிலைமை)

மேலே விவரிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டுள்ள உரிமை. ஆனால் போலீசு அரசின் நடவடிக்கையை, அது அவ்வாறு அளிக்கப்படவில்லை என்றும் எதுவாக இருந்தாலும் நாங்கள் தான் முடிவு செய்வோம், எங்களை கேட்டுதான் எதையும் செய்ய வேண்டும். என்ற நிலையை நிலைநாட்டுகிறார்கள் போலீசு, அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள்.

உரிமைகள் எல்லாம் காகிதத்தில்தான் உள்ளது

உதாரனமாக : PSO ஆணைப்படி காவல் நிலைய ஆணைதான் தென்தமிழ்நாட்டை குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியை ஆட்சி செய்கிறது. சட்டத்தின்(அரசியல் சானத்தின்) ஆட்சி இல்லை. இங்கு ஒரு மாதத்தில் பாதிக்கு அதிகமான நாட்கள்  144 தடை உத்தரவு அமலில் இருக்கும். சுதந்திரப்போராட்டத் தலைவர்கள் சாதித்தலைவர்கள், போன்றவர்களின்  பிறந்த நாட்கள், நினைவு நாட்கள் என்றால் இங்கு  காவல்துறையின் ஆட்சி தான் நடக்கிறது. அரங்கக்கூட்டங்களைக் கூட அனுமதி பெற்றுத் தான் நடத்த வேண்டும் என கட்டளை இடுகிறார்கள். 144 தடை அமலில் இல்லாத போதும் கூட இதே நிலைதான் நீடிக்கிறது.

ஒரு சட்டம் பயின்ற மாணவர் என்ற அடிப்படையில் நான் பல கனவுகளில் இருந்தேன்  சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ சட்டவழிமுறைகளுக்கு நேரெதிராக உள்ளது. போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட நிலைநாட்டிட, நாம் புதியப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்ற நிலையே உள்ளது.

நமது நாட்டின் அரசமைப்பு எழுதப்பட்ட அரசமைப்பு (Writton Constitution). அது மேன்மை வாய்ந்தது, உறுதித்தன்மை வாய்ந்தது, என்றே கூறப்பட்டது. அதில் முக்கியமாக சர்வாதிகார, எதேச்சதிகார போக்கிற்கு வழி செய்யாது என்றே அம்பேத்கர் உட்பட பல சட்ட வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால் நிலமையோ அப்படியில்லை. போலீசின் ஆட்சி, மாவட்ட ஆட்சியரின் எதேச்சதிகாரப் போக்கு, அளவில்லாத கேள்விக் கேட்க முடியாத போக்கு என்பது, பாசிசத்தை நோக்கி நமது நாட்டை நகர்த்துகிறது, என்றே நான் உணர்கிறேன்.”

அறிவியல் மாநாட்டில் RSS, BJP –யைச் சேர்ந்தவர்கள் அறிவியலுக்கு ஒவ்வாத முரண்பட்ட பிற்போக்குப் புராணப்புரட்டுக்களை அவர்களின் கருத்துக்களாக பரப்பிட சுதந்திர உரிமையுண்டு. அவற்றை அறிவியல் ரீதியாக விமர்சனம் செய்யவோ, மாற்றுக்கருத்தை சொல்லவோ, பிரசுரமாக மற்றவர்களிடம் கொண்டுசெல்லவோ உரிமையில்லை.

மேற்கூறிய நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளதாக நான் படித்தது, நம்பியது எல்லாம் தவறே என்று உணர்த்துகிறது. மாறாக காவல் நிலைய ஆணையின் படியே நான் இயங்க நிர்பந்திக்கப் படுகிறேன். அதுவே சரி என்ற மனநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன்.

இந்த நிகழ்வு என்னை மட்டுமல்ல, ”சட்டத்தை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும்” என்று சிந்தித்து சட்டம் பயிலும் அனைவரிடமும் கேள்வியை எழுப்பும் என்றே எண்ணுகிறேன். நாம் பயின்ற சட்டத்தின் ஆட்சியை எப்படி நடைமுறைப்படுத்துவது, உலகில் பெரிய ஜனநாயக நாட்டின் நிலைமை இதுதான். இதை நாம் எவ்வாறு மாற்றப்போகிறோம் என்ற கேள்விகளுடன் விடைகிடைக்காமல் முடிக்கிறேன்.

சட்டத்தை மிதிப்பவர்களுக்கு போலிஸ் பாதுகாப்பு,
மதிப்பவர்களுக்கு பொய்வழக்குகைதுசிறையிலடைப்பு,
இதுவே இன்றைய இந்திய ஜனநாயகம்”.

சட்டக் கல்லூரி மாணவர்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
நெல்லை.

1 மறுமொழி

  1. புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி பதிவு செய்யப்படாத அமைப்பாக இருப்பதற்கான காரணம் என்ன? ஏதேனும் சட்ட பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க