கேள்வி: நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா…?? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றிபெறுகிறாரா..???அல்லது யாரோ முடிவு செய்கிறார்களா..??

– க.தட்சிணாமூர்த்தி

வினவு கேள்வி பதில்

ன்புள்ள தட்சிணாமூர்த்தி,

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் மக்களிடையே செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன. விளம்பரத் தொழிலே பிரம்மாண்டமாய் வளர்ந்தது. இன்று ஒரு நபர் பயன்படுத்தும் சோப்பு, சீப்பு, பற்பசை அனைத்தும் அவரே முடிவு செய்து வாங்குவதாக நினைத்தால் அது உண்மையில்லை.

electionsநமது நுகர்வு ஆசையையும், அதில் வாங்க வேண்டிய பிராண்டையும் விளம்பரங்களே முடிவு செய்கின்றன. விளம்பரங்கள் என்பது ஊடகம், விளம்பரப் பலகைகள் மூலம் மட்டுமல்ல, இவற்றின் செல்வாக்கினால் மக்களே குறிப்பிட்ட பிராண்டுகளை தாமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.

ஒரு பற்பசை வாங்குவதையே நம்மால் சுயமாக முடிவு செய்ய முடியாத போது தேர்தலில் மட்டும் சுயமாக ஓட்டுப் போட முடியும் என்று நம்புகிறீர்களா? சென்ற 2014 தேர்தலில் மோடிக்கு வாக்களித்த மக்களில் கணிசமானோர் ஊடகங்களின் செல்வாக்கினால் பாஜக-வைத் தெரிவு செய்தனர். வாக்குப் பதிவு எந்திரத்தின் பிரச்சினை எல்லாம் இரண்டாம் பட்சமானது.

அந்தக் காலத்தில் இருந்த “பூத் கேப்சரிங் – வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது” இன்று இல்லை என்றாலும் இந்த எந்திரத்தில் மென்பொருள் மோசடி செய்ய முடியுமென்றும், முடியாது என்றும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சினையே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றது என்று சொல்ல முடியாது.

அரசியல் படுத்தப்படாத மக்கள் சிற்சில பிரச்சாரங்களின் மூலமும், எது வெற்றிபெறும் என பொதுக்கருத்தில் ஒத்துப் போவதினாலும் அதிகம் வாக்களிக்கிறார்கள். அல்லது ஆளும் கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளை தெரிவு செய்கிறார்கள். அவர்களுக்கு வேறு மாற்று இல்லை என்பதனாலும் அப்படி தெரிவு செய்கிறார்கள்.

சென்ற தேர்தலில் மோடியின் வெற்றியை தீர்மானித்தது ஆளும் வர்க்கங்களும், கார்ப்பரேட் ஊடகங்களுமே! அதானி எனும் தரகு முதலாளி பெரும் பணத்தை அளித்தார். ஊடகங்கள் மோடியின் “வளர்ச்சி” சவடால் பிரச்சாரத்தை செய்தியாக அளித்துக் கொண்டே இருந்தன. ஆகவே நமது நாட்டில் தேர்தல் முடிவுகள் என்பது பெயரளவில் ஜனநாயகத்தையும், செயலளவில் முதலாளிகள் – ஆளும் வர்க்கங்களுக்கானதாக மட்டுமே இருக்கின்றன.

தேர்தல் அரசியலுக்கு வெளியே யோசிப்பதன் மூலமே மக்களின் உரிமைகள் மீட்டெடுக்க முடியும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதோ, இந்துத்துவ பார்ப்பனிய பாசிசத்தை வேரறுப்பதோ தேர்தல் மூலம் மட்டும் முடியாது.

♦ ♦ ♦

கேள்வி: ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யாராக இருக்கும்…?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

காங்கிரசு போல பாஜக-வும் கோஷ்டி மோதலை வைத்து இயங்கும் ஒரு கட்சிதான். தமிழகத்திலேயே எச்.ராஜா, பொன்னார், தமிழிசை, எஸ்.வி.சேகர் போன்றோர் கோஷ்டிகளாகத்தான் செயல்படுகின்றனர். காங்கிரசு போல பாஜகவும் நேரடியாக முதலாளிகளின் நலனுக்காக செயல்படும் கட்சி என்பதால் முதலாளிகளின் பிரிவுகளுக்கேற்ப கோஷ்டிகள் செயல்படுகின்றன.

Modi-rahul gandhiஇறந்து போன பிரமோத் மஹாஜன், இன்றைய நிதியமைச்சர் (மருத்துவ விடுப்பில் இருக்கிறார்) அருண் ஜேட்லி போன்றோர் நேரடியாக சில தரகு முதலாளிகளை ஆதரிக்கும் சற்றே லிபரல் கொள்கை கொண்டோர். அன்று பாஜக-விற்கு நன்கொடை வாங்கும் வேலையை பிரமோத் மஹாஜன் செய்தார். சென்ற தேர்தலின் போது மோடி – அமித்ஷா கூட்டணி அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் தயவில் ஆட்சியைப் பிடித்தது. இவர்களது முதலாளிகள் பாசம் ரஃபேல் ஊழல் வரை சந்தி சிரிக்கிறது. இன்றோ நன்கொடைகள் முதலாளிகள் மூலம் குவிந்து வருகிறது. காங்கிரசு கூட பாஜக-வின் நன்கொடை சேர்ப்பு வேகத்தின் அருகில் இல்லை.

எனினும் மோடி எனும் பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் – தரகு முதலாளிகள் – பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக நிறுத்தித்தான் மன்மோகன் சிங் எனும் பழைய பிம்பத்தை மாற்றினர். பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு தாராளமயக் கொள்கை எனும் பொருளாதார ஒடுக்குமுறையோடு இந்துத்துவத்தையும் அமல்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிப் போக்கு முதலாளிகளுக்கு ஆதரவாகவே இருப்பதால் மேற்கண்ட மோடி பிம்பத்திற்கு இப்போது பெரிய ஆபத்தில்லை.

அதே நேரம் சிற்சில அதிருப்திக் குரல்கள் அதாவது ஆர்.எஸ்.எஸ் – சில முதலாளிகள் மூலம் நிதின் கட்காரியை நிறுத்தலாம் என்று வரலாம். ராகுல் காந்தியை சந்தித்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரும், ரஃபேர் ஊழலில் அம்பானிக்கு ஆதரவாக மோடி செயல்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்தின் அதிருப்தியை மோடி இழந்து விட்டார் என்று சொல்ல முடியாது.

ஜெயா போன்று மோடியும் தனிச்சிறப்பான சலுகைகளோடு ஆளும் வர்க்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு தலைவராக இருக்கிறார். அதனால்தான் ஊடகங்கள் முதல் நீதிமன்றம் வரை அவரை தட்டிக் கேட்க யாருமில்லை. அதேநேரம் மோடி எனும் தனிநபராலேயே இந்த ஆட்சி நடைபெறுவதாக பொருளில்லை.

மறைபொருளில் அது ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனியம், முதலாளிகளின் தாராளமயத்தின் நலனாகவே ஒரு கும்பலால் முன்னிறுத்தப்படுகிறது. ஆகவே மோடி எனும் நபர் இக்கொள்கைக் கூட்டணியின் நலனை முன்னிறுத்தும் ஒரு பிம்பம். அது மோடி இல்லையென்றாலும் அப்படித்தான் செயல்படும்.

♦ ♦ ♦

கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க