ஐ.டி. ஊழியர்கள் மட்டுமல்ல, மக்களும் கூட சினிமாவில் ஹீரோ ‘கெத்து’ காட்டுவதை விரும்புகின்றனர். இதில் ஐ.டி ஊழியர்களுக்கு அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், மல்டிப்ளக்ஸ் என  கூடுதல் வாய்ப்புகள் உண்டு. வெள்ளித்திரையில் கொடுமை கண்டு பொங்கும் ஹீரோக்களின் ஆக்சன் காட்சிகளை ரசிப்பவர்கள், தாங்கள் பணி நீக்கம் செய்யப்படும்போது ஹாரர் மூவி  (Horror Movie) போல பலிகடா ஆவது ஏன் ? இதோ ஒரு அனுபவம் !

12 ஆண்டுகாலமாக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் எனது ஐ.டி. துறை வாழ்க்கையில் Lay Off என்ற பயங்கரத்தை நேரில் கண்டதில்லை. “அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள், இவரை துரத்தி விட்டார்கள்” என்பது போன்ற இரண்டாம் கட்ட ஆதாரங்களை மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர் மதியம் என்னோடு உணவு உண்டவர் இன்று என்னோடு அலுவலகத்தில் இல்லை. இப்போது வீட்டில் இருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். எத்தனை நாள் வீட்டில் இருக்க அவரால் இயலும்? அவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க மனம் பதறுகிறது. திடீரென ஒருவர் எப்படி செல்லாக்காசாக மாறிவிட்டார் என்பதை நம்ப மனமில்லை. பதற்றம் நிறைந்த சூழல்.

ஜனவரி 30-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி எங்களுக்கு மூன்று நாட்கள் கழித்துதான் தெரிந்தது. தெரிந்தவுடன் எனக்குள் பதற்றம். இப்படி கருவேப்பிலை போல் உயிருள்ள ஓர் மனிதனை எப்படி திடீரென குப்பையாக மாற்ற முடிகிறது என்ற கேள்வியும் பதற்றமும் என்னுள் எழுந்தது, என்னால் இயல்பாக இருக்க இயலவில்லை.

நிறுவனங்களின் இலாபவெறி கண்டு வெறுப்படைந்தேன். மனிதத்தன்மையற்ற, நேர்மையற்ற இதுபோன்ற செயல்பாடுகளால் எரிச்சலடைந்தேன். அந்த நபரின் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்து, வரும் பதற்றத்தை கண்டுணர்ந்தேன்.

அந்த நபரோடு, அவர் LayOff  பண்ணப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் எனக்கு அறிமுகம். தான் LayOff பண்ணப்படலாம் என்ற முன்பயம் அவருக்கு இருந்தது.

ஏனெனில், கடந்த இரு  (Performance Rating Cycle) பணி தரநிலைகளில், வேலையில் முன்னேற்றம் தேவை (Need Improvement) என்ற மதிப்பீடு தரப்பட்டு இருந்தது. மேலும் கடந்த ஆண்டிற்கான பணித்தரநிலை மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்து தோல்வியடைந்திருந்தார். எனவே, பணி நீக்கம் இன்றோ நாளையோ என்ற மனநிலையில்தான் அவர் இருந்தார். இது போன்ற சூழலில் அவரை சிலர் (என்னைப் பற்றி அறிமுகம் இருந்த பரஸ்பர நண்பர்கள்)  என்னிடம் அறிமுகப்படுத்தி ஆலோசனை பெற அறிவுறுத்தினர்.

அலுவலகத்தில் அரசியல், தொழிலாளர் நல உரிமை, சட்டங்கள் பற்றி மற்றவர்களிடம் பேசுவதுண்டு. எனவே, அந்த அடிப்படையில் அவர் என்னைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், அதையும் மீறி பணி நீக்கம் செய்யப்பட்டால் அதை எதிர்ப்பது எப்படி என்றும், NDLF, FITE போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர் சங்கங்கள் பற்றியும், கடந்த சில ஆண்டுகளில் பெருநிறுவனங்களை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கதை பற்றியும் எடுத்துச் சொன்னேன். NDLF, FITE   ஆகியவற்றின் தொடர்பு எண்களைத் தந்து அவற்றில் ஏதாவது ஒன்றில் (அவருக்கு எது பிடிக்கிறதோ அதில்) சேரச் சொன்னேன்.

(கோப்புப் படம்)

பணி நீக்கம் செய்யப்படும் சூழல் வருமாயின் அது போன்ற HR உடனான சந்திப்புகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், என்ன சொன்னாலும் “பணிவிலகல் கடிதம் கொடுக்காதே” என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அப்படியே பணி நீக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்தால் அவர்களை (நிறுவனத்தை) பணிநீக்க ஆணையை அனுப்பச் சொல் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். மேலும், இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வாய்ப்புள்ள ஆதாரங்களை திரட்டவும் அறிவுறுத்தினேன்.

இவ்வளவு அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்குப் பின்னரும் ஏன் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் “இவரைப் போன்ற தன்னுரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத அடிமைகள் இருக்கும் வரை” இலாபவெறி பிடித்த, நேர்மையற்ற தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கிள்ளுக்கீரை போன்று நடத்துவது தொடரும் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.

நடந்தது என்னவெனில் பணிநீக்கம் செய்யபடப்போகிற அந்த நாளின் காலையிலே (HR) மனிதவள துறை நிர்வாகியோடு சந்திப்பு உறுதியாகிவிட்டது. அந்த சந்திப்பு பணிநீக்கம் தொடர்பானது என்று அவர்  கணித்துள்ளார். அன்று மதிய உணவை எங்களோடு இணைந்துதான் உண்டார். அப்போது பதற்றத்தில் இருந்தார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எங்களோடு எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. அன்று மாலை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மனிதவள நிர்வாகியுடனான சந்திப்பில் “உங்களை பணி நீக்கம் செய்யப்போகிறோம், நீங்கள் பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிடுங்கள்” என்று மனிதவள நிர்வாகி சொல்லியுள்ளார். அதற்குப் பதிலீடாக மூன்று மாத சம்பளம் தருவோம் என்ற உத்திரவாதத்தை தந்துள்ளனர்.

பணிவிலகல் கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்ட அடுத்த நிமிடம் அவரிடம் இருந்து அடையாள அட்டையைப் (ID Card) பெற்றுக்கொண்டு காவலாளி (Security) துணைகொண்டு அவரை அலுவலக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

(கோப்புப் படம்)

அதன்பின்னர் அவர் அலுவலகம் வராததால் இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை. பின்னர் ஒருவழியாக மூன்றாம் நாள் அவரைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், “இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, NDLF நண்பர்களிடம்  அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள், அவர்களோடு இணைந்தால் வழிபிறக்கும் என்று (Guide) அறிவுறுத்திய போதும், “இன்னும் சில நாட்களில் பதிலீட்டுத் தொகையை (Compensation package) பெற்றுக்கொண்ட பின்னர் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்று சொன்னவரை பணிநீக்கம் செய்யாமல் என்ன செய்வார்கள்?

படிக்க:
TCS : We can Combat layoff!
ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !

என்ன நண்பர்களே, இவரைப் போன்று தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?

உங்களுக்கு சந்தேகம் உண்டா? எனக்கு இல்லை.

உள்ளம் நிறைந்த அன்புடனும்,  நெஞ்சம் நிறைந்த நன்றியுடனும்,

– சு. விஜயபாஸ்கர்
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க