டந்த 10-02-2019 அன்று மோடி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து பாஜக கூட்டத்தில் பேசியது அனைவரும் அறிந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு வேறு ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு சில திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதுவும் பலருக்கு தெரிந்து இருக்கலாம். இந்த அரசு விழாவை பொறுத்தவரை முற்றிலும் அரசாங்கச் செலவு. இந்த அரசு விழாவானது மொத்தம் பத்து நிமிடம் மட்டுமே நடந்தது. வெறும் பத்து நிமிட மோடியின் விளம்பரத்திற்காக அரசு பணம் செலவழிக்கப்படுகிறது.

இந்த விழாவில் திருப்பூரில் 100 படுக்கை வசதி கொண்ட தொழிலாளர் காப்பீடு நிறுவனத்தின் (ESI) மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுதல், திருச்சி விமான நிலையத்தில் ஒரு ஒருங்கிணைத்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், சென்னை விமான நிலையம் நவீனப்படுத்தும் திட்ட தொடக்கம், சென்னை மெட்ரோ திட்டத்தின் சிறு வழித்தடத்தினைத் தொடங்கி வைத்தல், சென்னையில் மற்றுமொரு ESIC மருத்துவமனையைத் திறந்து வைத்தல், சென்னையில் நெடுஞ்சாலை ஒன்றை நாட்டுக்கு அர்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திருப்பூரில் அமைக்கப்பட்ட மேடை அரங்கு போக, இந்தத் திட்டங்கள் தொடங்கும் இடங்களிலும் சிறு மேடை அரங்கு, LED திரை என மக்கள் பணத்தில்தான் முழுச்செலவும். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்கு மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அடிக்கடி வெளிநாடு செல்வதும், இந்தியாவில் இருக்கும் நேரங்களில் ஏதாவது திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக விழாவில் கலந்து கொள்வதுமாகவே இருந்து வருகிறார். வெளிநாடுகளுக்குச் செல்வது தனது கார்ப்பரேட் நண்பர்களின் இலாப நலனுக்காக என்றால், உள்ளூர் விழாக்களில் கலந்து கொள்வது தனது விளம்பரத்திற்காக. இது மட்டுமா, 4 துடைப்பம் 40 புகைப்பட கலைஞர்கள் சகிதம் ஊர் ஊருக்கு சென்று குப்பையே இல்லாத இடத்தில் குப்பையை கொட்டி கூட்டி விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் கூத்து வேறு.

இவை அனைத்துமே மக்கள் பணத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்திற்கு மட்டும் வெறும் விளம்பரத்திற்காக ரூ. 536 கோடி செலவழித்துள்ளது இந்த அரசு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். ஏற்கனவே கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதும், கட்டி முடிக்கப்படாத திட்டத்திற்குத் திறப்பு விழா நடத்துவதும் இந்த ஆட்சியில்தான். அதுமட்டுமல்ல, வெறும் பத்தே கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையைக் கூட ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளும் இங்குதான் நடந்து வருகிறது. பட்டேல் சிலை, அதிவிரைவு நெடுஞ்சாலைகள், தொழிலக ரயில் பாதைகள் என மோடி தொடங்கிய பல திட்டங்கள் முழுக் கட்டுமான பணிகளும் முடிவடையாதவை. அந்த வகையில் சென்னையில் பிப் 10-ம் தேதி தொடங்கிய மெட்ரோ சேவையும், திருப்பூர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வும் அடங்கும்.

மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த மெட்ரோ சேவை வழித்தடமானது ஆயிரம் விளக்கில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவுக்கானது ஆகும். ஊடகங்கள் அனைத்தும் இது முதல் வழித்தடத்தில் இறுதி பகுதி என்று பொய் கூறி வருகின்றன. இந்தப் பத்து கிலோமீட்டருடன் இந்த வழித்தடம் முடிவுக்கு வருகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் வரையில் மேலும் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதற்கு இன்னொரு தொடக்க விழா மக்கள் பணத்தில் நடக்கும்.

திருப்பூர் மருத்துவமனையைப் பொறுத்தவரை இந்த அடிக்கல் நாட்டு விழா என்பது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. இந்த மருத்துவமனைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகின்றது. இதற்கான நிலம் வாங்கியதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. இப்போதும் அந்தச் சட்ட சிக்கல் முடிவுக்கு வரவில்லை. மேலை நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது தெரிந்தும் மோடி அவர்கள் அந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி இருக்கிறார். அதுவும் மக்கள் பணத்தில்.

இந்திய தொழிலாளர் காப்பீடு நிறுவனம் திருப்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதல் பெற்று அதற்குத் தேவையான நிலங்களை விலைக்கு வாங்கும் பணியில் இறங்குகிறது. இது அரசின் நேரடி திட்டம் இல்லை என்பதால் அரசால் நேரடியாக நிலம் கையகப்படுத்திக் கொடுக்க இயலாது. இந்த நிறுவனமே நிலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி வாங்கிய நிலத்தில் ஒரு பகுதி கோவில் நிலம். இந்தக் கோவில் நிலத்தை அறநிலையத்துறையிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. இதனை எதிர்த்துக் கோவில் குருக்கள் மற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். கீழை நீதிமன்றமானது அறநிலையத்துறை செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது. ஆனால் அந்தக் கூட்டம் மேல்முறையீடு செய்து கடந்த ஆறு வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது.

படிக்க:
திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !

தொழிலாளர் காப்பீடு நிறுவனம் ஒரு அரசு இயந்திரம், அறநிலையத்துறை ஒரு அரசு இயந்திரம். இந்த இரண்டுக்கும் இடையே நிலம் கைமாற்றப்படுகிறது, அதுவும் தொழிலாளர் நலனுக்காக மருத்துவமனை கட்டுவதற்கு. இந்த மருத்துவமனை உழைக்கும் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருப்பூரை பொறுத்தவரை இன்றைய தேதியில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இந்த காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் சேர்த்து இந்த நகரத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் பயனாளிகள் இந்த காப்பீட்டு சேவைக்கு தகுதியானவர்கள். ஆனால் இந்த நகரில் இரண்டு ESI மருத்துவமனை மட்டுமே உள்ளது. பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனையிலோ அல்லது கோவைக்கோ சென்றுதான் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேலம் எட்டு வழி சாலையை எதிர்த்து போராடிய விவசாய மக்களைக் காவல் துறையை ஏவி அடித்து ஒடுக்க நினைக்கிறது எடுபிடி அரசு. நாட்டின் நலனுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று காவி கும்பல் உபதேசம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொழிலாளர் நலனுக்காகக் கட்டப்படும் மருத்துவமனையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் முட்டுக்கட்டையை தூக்கி எறிய இந்த மாநில அரசுக்கும் துப்பு இல்லை, மத்திய அரசுக்கும் துப்பு இல்லை. மோடியோ இது எதுவுமே நடக்காதது போல அடிக்கல் நாட்டி விட்டு போகிறார். நாம் ஆடும் நாடகங்கள் மக்களுக்குத் தெரியவா போகிறது, தெரிந்தால் மட்டும் என்ன செய்து விடுவார்கள் என்ற ஒரு நினைப்புதான். சொந்த உழைப்பிலா இதெல்லாம் செய்கிறார், மக்கள் பணம்தானே.

ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை கொடுக்கப் பணம் இல்லை; தமிழக அரசின் கடன் 3 லட்சம் கோடியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது; நாட்டில் அடுத்த ஆண்டின் போலியோ சொட்டு மருந்துக்கான பணம் இல்லை; ஆனால், வெறும் பத்து நிமிட விளம்பரத்திற்காக ஊருக்கு ஒரு மேடை போட்டு நிகழ்ச்சி நடத்த மட்டும் பணம் இருக்கிறது. தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.

நன்றி : முகநூலில் சக்திவேல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க