“யாத்திரிகன் க்ருபயா க்யான் தீஜியே, காடி நம்பர் …” ரயில்வேயின் இந்த இந்தி மொழி அறிவிப்பு, எப்போதும் இல்லாத ஒரு பதட்டத்தை இம்முறை ஏற்படுத்தியது.

காரணம், புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயணம் செல்ல வேண்டியிருந்தது.

“ரயில் வட மாநிலத்தில் இருந்து வருவதால் பெரும்பாலும் இந்திக்காரங்கதான் வருவாங்க. உனக்கு மொழி புரியாது. பிஸ்கெட் குடுத்தாங்க, சாக்லேட் குடுத்தாங்கன்னு வாங்கக் கூடாது. குழந்தைய பத்திரமா பாத்துக்கனும்…….” வீட்டில் சொன்ன எச்சரிக்கையால் மனதுக்குள் பதட்டம் என்றாலும் முகத்தில் வெளிக்காட்டாமல் ரயிலேறினேன்.

இருக்கை இருக்கும் இடம் வரும் வரை ரயிலுக்குள் எந்த தமிழ் வார்த்தையும் காதில் விழவில்லை. என் எதிர் இருக்கையில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்னை பார்த்ததும் மனதுக்குள் பரவசம். நம் பக்கத்து கிராமத்து முகமாக இருந்ததால் ஏற்பட்ட பரவசம். “நீங்க எங்க போறிங்க” என கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்றால் அதற்கே வாய்ப்பில்லை என அந்தப் பெண் ஏதோ போட்டித் தேர்வுக்காக தீவிரமாக படித்தபடி குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.

பக்கவாட்டு இருக்கையில் நடுத்தர வயதைக் கடந்த இந்திக்கார கணவன் மனைவி. மற்ற இருக்கைகளில் ஆளில்லை. ஆட்கள் இன்னும் வரவில்லையா? அல்லது இதர இந்திக்காரர்கள் தண்ணீர் பிடிக்க உணவு வாங்க இறங்கி இருப்பார்களா? யோசனையோடு அடுத்து வருபவர் தமிழாக இருக்கவேண்டுமென காத்திருந்தேன்.

அடுத்து அறுபது வயதைக் கடந்த ஒரு பெரியம்மா வந்தார். படித்த நகரத்து முகச்சாயல், வாட்டசாட்டமான உருவம், வடநாட்டு கலர் தோற்றத்தை வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை. “நீங்க எங்க போறீங்கன்னு கேட்டா, “பேட்டா தமிழ் நஹி மாலும்” இப்படி ஏதாவது சொல்லிவிட்டால்? பிறகு தானாகவே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வருமென்று, வாயிலிருந்த வார்த்தைய தொண்டைக் குழிக்குள் புதைத்து விட்டேன்.

அடுத்து நாலைந்து இந்தி மொழி ஆண்கள் வந்தாங்க. வந்தவங்க குருப் 1 பொண்ணுகிட்ட “இது எங்க இருக்கை” என்றனர் இந்தியில். அந்த பொண்ணு எதுவும் பேசாமல் செல் பேசியில் இருக்கும் டிக்கெட்டை எடுத்து காட்டினாள். “எங்க போன்லையும் இதே நம்பர்தான் காட்டுது இது எங்க இருக்கைதான்” என்று அவர்களும் போனைக் காட்ட சலசலப்பு ஏற்பட்டது.

“கொங்கு தமிழ்ல பேசினாலே குழம்பி போயிடுவோம் இதுல இந்தி வேறா. நல்ல வேளை இந்த பிரச்சனை நமக்கு வரல.” என்று பெருமூச்சு விட்டேன்.

“அய்யய்யோ உங்களுக்கு இங்கிலீஸ் தெரியாதா? எனக்கு இந்தி தெரியாது. வீட்டுக்காரர் ரிசர்வேசன் செஞ்சுட்டு அவரு வரல. டிக்கெட்ட கேன்சலும் பண்ணல. எனக்கு ரெண்டு சீட்டு இருக்கு.” என்றார் அந்த பெண். இடையில் புகுந்தார் அருகில் இருந்த பெரியம்மா. தமிழிலும் இந்தியிலும் மாறி மாறி பேசி பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

இந்திக்காரர்கள் மொத்தம் 68 இருக்கை பதிவு செய்ததால் வந்த குழப்பம் என்பதை பிறகு தமிழில் தெளிவாக விளக்கினார்.

“நன்றிம்மா, ரெண்டு மொழியும் தரவா பேசறீங்க எது உங்க மொழி எது கத்துகிட்ட மொழி“ என்று வினா எழுப்பினார் போட்டித் தேர்வு பெண்.

தன் கணவரின் இராணுவ பணிக்காக பீகாரில் பல வருடம் வாழ்ந்த அனுபவம், அதன் வழி இந்தி கற்றதை பகிர்ந்து கொண்டார், அந்த அம்மா. அனுபவ நினைவுகளோடு ஆழமாகச் செல்வதற்குள் கணவன் மனைவி இரு குழந்தைகளுடன் ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் எங்கள் பெட்டிக்கு வந்தனர்.

குழந்தைகளுடன் அவர்கள் அமர்ந்ததைப் பார்த்ததும் நம் குழந்தைக்கு விளையாட ஆள் கிடைத்த சந்தோசம் எனக்கு. ஆனால், வந்தவர்கள் இது நமது இருக்கை என்ற உரிமையுடன் உட்கார்ந்ததாகத் தோன்றவில்லை. அதனால் “உங்க சீட்டு நம்பர் எத்தனங்க” என்றேன்.

“தக்கல்ல ட்ரைபண்ணேன் கிடைக்கல. அவசியமா ஒரு விசேசத்துக்கு போகனும் ஓப்பன் டிக்கெட்டு எடுத்து அன்ரிசர்வுல ஏறிட்டேன். விடுமுறை அதிலும் பள்ளி விடுமுறை வேற… கூட்டத்துல குழந்தைங்கள வச்சுகிட்டு நிக்க கூட முடியல. டீடியாரு வந்தா சொல்லிக்கலான்னு வந்துட்டேன். கைக்கொழந்தைய வச்சுட்டு இவங்களுக்கு (மனைவி) உட்கார எடம் கிடைச்சா போதும். நானு வாசப்படி பக்கம் நின்னுப்பேன்” என்று தயங்கியபடி பேசினார் அந்த முஸ்லீம் நண்பர்.

படிக்க:
சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !
ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை

“அய்யோ பாவமே! நீங்க உக்காருங்க பாத்துக்கலாம்” நம்பிக்கை ஊட்டினார் பெரியம்மா. “எங்கிட்ட ஒரு சீட்டு சும்மாதான் இருக்கு அதை நீங்க எடுத்துக்கலாம் கவலைப்படாதீங்க” ஆறுதல் சொன்னாள் போட்டித் தேர்வு பெண். “வாடா மேல் சீட்டுக்கு போவோம்” என் குழந்தையை கூப்பிட்டான் அப்துல்லா என்ற அந்தக் குழந்தை. இரண்டு மணிநேர இடைவெளிக்குள் எஸ் 5 ரயில் பெட்டி இனிதே ஒரு கூட்டுக் குடும்பமானது.

காலை உணவு சாப்பிட நினைத்தேன். “எனக்கு நம்ம சாப்பாடு வேண்டாம்” என் குழந்தை வழக்கம் போல் அடம் பிடித்தது. கணப்பொழுதில் இட்லி, சப்பாத்தி, லெமன் சாதம் என்று அணைவர் பையிலிருந்த உணவும் வெளி வந்தது. “இதை சாப்பிடு தம்பி” என என் குழந்தைக்கு உபசரிப்பு பலமானது. போட்டித் தேர்வு பெண் கொண்டு வந்த லெமன் சாதத்துக்கு என் குழந்தை முன்னுரிமை தந்தது.

அனைவரும் என் குழந்தையை தம்பி என்றும் வாடா போடா என்றும் கூப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் “இது பொம்பளப் பிள்ளை” என்று சொல்ல வேண்டிய தேவை வந்தது. எங்க போனாலும் இது ஒரு பிரச்சினை எனக்கு!

“நெசமாவா சொல்றீங்க.” “அட அப்டியா” ஆளுக்கொரு விதமாக வியப்பை வெளிக் காட்டினர். “காதுல கழுத்துல எதுவுமில்லை. பையன் மாதிரி கிராப்பு வெட்டி ஃபேண்ட் சட்டை போட்ருக்கு. பொட்டு கூட இல்ல. பேரும் ஆணா பெண்ணான்னு தெரியல. எத வச்சு நாங்க பொம்பளன்னு நெனைக்க முடியும்” சந்தோசம் கலந்த ஆச்சர்ய வினா அனைவருக்கும்.

குறைவாகப் பேசி படிப்பில் அதிக கவனமாக இருந்த போட்டி தேர்வுக்கு ஆச்சர்யம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. “ குழந்தையோட பேரு ஒரு மாரியாருக்கே! திராவிடம் பேசுவாங்களே, அவங்களா நீங்க” என்றாள். “நாங்க திராவிட இனம்தான் ஆனால் சர்வதேசியவாதி அதனால வெளிநாட்டு பேரு வச்சோம்” என்றேன். “தப்பா எடுத்துக்காதிங்க அவங்கதான் இப்படி திராவிடமணி திராவிச்சுடர்னு புதுசா புதுசா ஏதோ பேரு வைப்பாங்க” என்றாள்.

“பெரியாரு திராவிடம் பேசினாரு. அதனால தி.க.–காரவங்க இது போல தமிழ்ல பேரு வைப்பாங்க. இவங்க வேற ஏதோ பேரு வச்சுருக்காங்க.” என்றார் பெரியம்மா. “பெரியாரு, திராவிடம், தமிழ் எப்படிம்மா உங்களுக்கு அறிமுகம்!” என்றேன்.

தந்தை பெரியார் காலத்தில் இயக்க வேலைகள் செய்தவராம் அவர் மாமனார். அவருக்கு தஞ்சை சொந்த ஊராம். “பெரியார் கூடல்லாம் எங்க மாமனார் இருந்துருக்காரு” என்பதை பெருமையாகச் சொன்னார்.

“நான் கல்யாணமாயி வந்த புதுசில சாமிக்கி விளக்குப் போட்டேன்னா இந்த எண்ணெய ரெண்டு நாளைக்கி தாளிக்கலாம்பாரு. அதிகாலையில கோலம் போட்டேன்னா, லட்சுமி வராது ஜலதோசம்தான் வரும்பாரு. எனக்கு அழுகதான் வரும். ஆனா, எங்க வீட்டுக்காரு செத்து 12 வருசமாச்சு இன்னமும் என் நெத்தி பொட்ட அழிக்காம இருக்கேன்னா எங்க மாமனாரு தான் காரணம்.” ஆர்வத்துடன் கேட்கும் போது “ஐ.டி.கார்டு குடுங்க” என்றார் கரகரப்பான குரலில் டீடியார்.

பவ்யமாக எழுந்த முஸ்லீம் நண்பரை குறுக்கு விசாரணை செய்தார். மூணு மணி நேரமா இந்த பெட்டியில பயணம் செய்ததே தவறு என கண்டித்தார். அபராதம் கட்ட நேரும் என்றார். பிறகு காத்திருங்கள் பார்க்கலாம் என இறங்கினார். இறுதியாக “லேடிஸ் இருக்கட்டும் நீங்க பாத்ரூம் பக்கம் நின்னுக்கங்க” என்று அனுசரணையாக பேசினார்.

டிக்கெட் பரிசோதகர் அடுத்த பெட்டிக்கு போனதும் மீண்டும் சபை கூடியது. முஸ்லீம் நண்பர் அனைவருக்கும் கொய்யாபழம் வாங்கி கொடுத்தார். “அப்பா நானும் இவனும் மேல போயி படுத்துக்கட்டுமா” என்றான் அப்துல்லா. “டேய் தம்பி இது பொம்பள பிள்ள……” இடைமறித்தார் அவனது தந்தை. பிறகு “பையன்னு அவன் மனசுல பதிஞ்சிருச்சு. அப்பிடியே இருக்கட்டும் குழந்தைங்கதானே” என்றார்.

“குழந்தைன்னு பொதுவா சொல்றத கேக்க சந்தோசமா இருக்கு. ஆனா குழந்தைக்கும் பர்தா போட்றது கஸ்டமாயிருக்கு” என்றேன்.

சிரித்தார் நண்பர். “எங்க மத வழக்கப்படி நாங்க அதை பின்பற்றித்தானே ஆகனும்” என்றார்.

“ஒவ்வொரு மதமும் ஒவ்வொண்ணு சொல்லுது. மதம் இல்லாம வாழ்றது நல்லாருக்கு. அதனால நாங்க நம்பறதில்ல” என்றேன்.

“நீங்க பேசுறத பாத்தா கம்யூனிஸ்டு போலத் தெரியுது” என்றார் முஸ்லீம் நண்பர்.

நான் வாய்திறக்ககும் முன் “கம்யூனிஸ்டு திராவிடம் என்ன வித்தியாசம்” வினவினார் போட்டித் தேர்வு. “கம்யூனிஸ்டுன்னா எல்லாம் பொதுவுடமையா இருக்கனும்பாங்க” என்று விளக்கம் கொடுத்தார் அப்துல்லாவின் தந்தை.

படிக்க:
காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்

அதிர்ச்சியானாள் போட்டித் தேர்வு. “அப்ப எங்க வருமான வரி டிப்பார்ட்மெண்ட்டே இருக்காதே. என்னோட வேலைக்கி உலை வைக்கிறவங்களா நீங்க”. வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டை பகுதி கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து மாடு மேய்க்கும் இடத்தில் கூட குருப்-2 வுக்கு படித்து வாங்கிய வேலையாம் அவளுக்கு. பதட்டம் இருக்கத்தானே செய்யும்.

“கம்யூனிஸ்ட்டு ஆட்சிக்கு வந்தா உங்க திறமைக்கி இதவிட நல்ல வேலை தருவாங்க” என்றதைக் கேட்டதும் வெட்கப்பட்டு சிரித்தாள்.

இப்படியாக பயணம் மாலை பொழுதை நெருங்கி விட்டது. சுவாரஸ்யமான பேச்சுக்கு நடுவில் இந்திக்கார தம்பதிகள் சாப்பாடு என்னை ஈர்த்தது. “இந்திக்காரங்க சாப்பாடு கலர்ஃபுல்லா இருக்கே எப்படிம்மா” பெரியம்மாவிடம் கேள்வி தொடங்கியது.

“நம்ம ஊர்ல சாப்பாட்டுக்கு நெல்லு மூட்ட மூட்டையா வச்சுருக்காப்போல அவங்க உருளைக்கிழங்கும் வெங்காயமும் மூட்டையா எறக்குவாங்க. சத்துமாவு, கோதுமைமாவு, உருளை, வெங்காயம் இதை சுத்திதான் சாப்பாடு இருக்கும். பொரிக்கிறது வறுக்குறதுன்னு பெரும்பாலும் எண்ணையில முக்கித்தான் சாப்பிடுவாங்க. சமோசா செய்வாங்க பாருங்க…..”

இடையில் “சாயா டீ, சாயா டீ”  என்ற விற்பனை சத்தம் சமோசா கதையை பாதியில் நிறுத்தியது.

“டீ வேணுமாம்மா” பெரியம்மா குரல் போட்டித் தேர்வு பெண்ணின் காதில் விழவில்லை.  “என்ன யோசனை” மீண்டும் உசிப்பினார்.

“வேலைக்காக 8 மாத குழந்தையை கிராமத்துல மாமியார்ட்ட விட்டுட்டு நானும் கணவரும் 500 மைலுக்கு அந்தண்ட இருக்கோம். நாளைக்கி ஒரு தேர்வு எழுத ஊருக்கு போறேன். நானு வீடு போறதுக்குள்ள ராத்திரி ஆகிடும் எம்பிள்ள தூங்கிருவான். காலையில நான் கிளம்பும் போதும் தூங்குவான் நான் வந்ததே அவனுக்குத் தெரியாது” அவள் மட்டுமல்ல அனைவரும் கலங்கினர்.

“வருந்தாதம்மா! போன் பண்ணு, இப்பயே குழந்தைய நல்லா தொட்டியில போட்டு ஆட்டி தூங்க வைக்கச் சொல்லு. ரெண்டு மணி நேரத்துல நீ போயிடுவெ அப்ப முழுச்சுரப் போறான். ஆசைதீர நீனும் ஒம்மகனும் விளையாடுங்க” பெரியம்மா சொன்ன ஆறுதலால் கலங்கிய முகமனைத்திலும் புன்முறுவல்.

அந்த பகல்நேரப் பயணத்திலிருந்து எனக்கு விடைபெறும் நேரம் வந்து விட்டது. என் குழந்தை அப்துல்லாவிடம் விசேசமாக விடைபெற்றாள். போட்டித் தேர்வு பெண்ணிடம் அடுத்த முறை வரும் போது இதே மாறி நிறைய லெமன் சாதம் எடுத்துனு வரணும் என்றாள். பெட்டியில் அனைவரும் சிரித்தார்கள்.

இப்படி ஒரு சங்கமச் சிரிப்பு தமிழகத்தில் மட்டுமே இருக்குமோ என்னமோ ?

சரசம்மா

2 மறுமொழிகள்

  1. //இப்படி ஒரு சங்கமச் சிரிப்பு தமிழகத்தில் மட்டுமே இருக்குமோ என்னமோ ?//
    No,
    It is there throughout India,
    in all Second Class Sleeper

  2. நல்ல உணர்வுகளைக் கொடுத்தது உங்கள் எழுத்து..நான் இந்தியா முழுக்கப் பயணம் செய்துள்ளேன்/ வசித்திருக்கிறேன்..மதம் மொழி இனம் நிறம் பணம்…இவற்றையெல்லாம் மீறிய அன்பை எல்லா இடங்களிலும் உணர்ந்திருக்கிறேன்.நான் ஒரு பெரியாரிய கம்யூனிச காந்தியிஸ்ட்….அன்பு..இன்னும்.இந்தியாவில் உயிரோடுதான் இருக்கிறது…வெறுப்பும் இப்போது வளர்ந்து வருகிறது.இந்துத்துவம் மக்களின் மனங்களை விஷமாக்கிக் கொண்டு வருகின்ற கோரத்தைக் கண்ணுறுகிறேன்..கேரளாவில் அதன் தாக்கம்.அதிகம்
    ..கம்யூனிசமும் காந்தியிசமும் தோற்றுவிடுமோ என அச்சம் ஏற்படுகிறது..ஆயின் தமிழகத்தில் பெரியாரியம் மட்டுமே இந்துத்துவத்தைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறது. எனவே, அகில இந்தியாவைப் பெரியாரியமே காக்க முடியும் என நம்பத்தொடங்கி உள்ளேன்…

    நல்ல உணர்வைத் தந்தது உங்கள் எழுத்து..நன்றி தோழர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க