லலிதா இனிப்புக்கடை ஒரு மக்கள் பலகாரக் கடை என்றால் மிகையல்ல. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது இக்கடை. இன்றும் அந்த சந்தைப் பகுதியை கடக்கும் எவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கடையிது. எந்த இனிப்பு எடுத்தாலும் பத்து ரூபாய். வேலை முடித்து வீடு திரும்புவோருக்கு மாலைநேர சிற்றுண்டி இக்கடைதான். இருபது ரூபாயில் இருந்து ஐம்பது ரூபாய் வரை நான்கைந்து வகையான இனிப்பு- கார வகைகளை இங்கு வாங்கலாம்.

குலோப் ஜாம், ஜாங்கிரி, மைசூர் பாகு, லட்டு, அல்வா, பூந்தி, பால்கேக், ஸ்பெஷல் லட்டு இன்னும் பெயர் தெரியாத இனிப்புகள்; காரவகையில் பக்கோடா, மிக்சர், காரப்பூந்தி, காராசேவ், என்று மற்ற கடைகளில் கிடைக்கும் பண்டங்கள்தான் என்றாலும் இங்கே தனித்துவமான ருசி இருப்பதை உணர முடியும். இக்கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் நான் இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை என்று முப்பதாண்டுகளைக் கடந்தும் வருவது இக்கடையின் சிறப்பு.

இப்பகுதியை அடுத்து உள்ள கே.கே நகரை சுற்றி உயர் நடுத்தர வர்க்கம் வசிக்கும் இடம். அங்கு கிராண்ட் சுவீட், கிருஷ்ணா சுவீட், அடையார் ஆனந்த பவன் என்று மேட்டுக்குடியினருக்கு உரித்தான கடைகள் குவிந்திருக்கிறது. அங்கே அவ்வப்போது கூட்டம் இருக்குமென்றால் இங்கே எல்லா நேரமும் கூட்டம் மொய்க்கும். அதன் வியாபார ரகசியத்தை அறிய அக்கடைக்கு சென்றோம்.

சாலையில் செல்பவர்களின் மூக்கை துளைக்கும் வெங்காய பக்கோடாவின் வாசனை.

கடை பத்துக்கு பத்து அளவை விட சிறியதாக இருந்தது. அடுப்பு முதற்கொண்டு அனைத்தும் வேலைகளும் அதிலேயே பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 70 வயது நெருங்கும் ஒரு முதியவர் கை நடுக்கத்துடன் சுவீட் பேக்கிங் பெட்டியை மடித்துக் கொண்டிருந்தார். அவர்தான் அக்கடையின் முதலாளி. அவரிடம், உங்கள் கடை மக்கள் விரும்பி வரும் ஒரு பிரபலாமான கடையாக இருப்பதன் ரகசியம் என்னவென்று வினவினோம். அதற்கு அவர் புன்சிரிப்பையே பதிலாக தந்தார்.

பக்கத்தில் நம்மை வாஞ்சையாக அழைத்து…. ஒரு மெல்லிய உடைந்த குரலில் பேசினார்…

“நான் ஒரு அனாதை… எனக்கு சொந்த ஊர் கேரளா. 1967 -ஆம் ஆண்டு சிறு பையனாக சென்னைக்கு வந்தேன். அப்போது இருந்தே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதுதான் ரகசியம். என்னை சிறு வயதில் வாழ வைத்தவர் பாரிஸ் கார்னரில் மளிகை கடை வைத்துள்ள ஒரு சேட். அங்கதான் பல வருஷம் அவருகிட்ட எடுபிடி வேலை செய்தேன். அவரே எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டி ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டி வச்சார். அதன்பிறகு பல்வேறு வேலைகள் மாறி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.

லலிதா இனிப்பகத்தின் முதலாளி சந்திரன்.

நான் இங்கு வரும்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை சரி இல்லாமல் அமெரிக்காவில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். எந்த ஆண்டு என்று எனக்கு நினைவு இல்லை. அப்போது நானும் என் மனைவியும் வீட்டிலேயே இனிப்புக்களை செய்து தள்ளு வண்டியில் வைத்து விற்றோம். இன்று ஏறக்குறைய ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி புரியும் கடையாக வளர்ந்திருக்கிறது.

என் கடையில் சாப்பிட்ட தாத்தா அவர் பேரனுக்கு வாங்கிக் கொடுக்கிறார். இந்த தொழிலில் மூன்று தலைமுறை வாடிக்கையாளைர்களை பார்த்து விட்டேன்.  எல்லோருக்கும் இக்கடையின் ருசியின் மீதும் தரத்தின் மீதும் பெரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான், இந்த வயதிலும் எனக்கு உழைக்கும் வேகத்தை தருகிறது. ஏறக்குறைய நான் கடை துவங்கிய போது எல்லா பண்டங்களும் வெறும் பத்து பைசா தான்… இன்று அது பத்து ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அதிரசம்.

காலையில் ஏழு மணிக்கு நான் கடைக்கு வந்தால் இரவு பன்னிரெண்டு மணிக்குதான் வீடு திரும்புவேன். என்னால் முடிந்த வேலைகளை செய்து உதவியாக இருக்கிறேன். சில நேரங்களில் மாஸ்டர் வரவில்லை என்றால் நானே வெதுப்பகத்தில் இறங்கி விடுவேன்.  இனிப்பு வகையில் ஒரு டஜன் அயிட்டங்களும், கார வகையில் அதே அளவிற்கு பல பண்டங்களும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அயிட்டங்களை இங்கு தயாரித்து இருக்கிறேன். அந்தளவுக்கு காரம் இனிப்பு என்று 150 – 200 கிலோ தினமும் விற்றுத் தீருகிறது.

மேலும் சீர்வரிசை, கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள் என்று 20 கிலோ மீட்டர் சுற்று வட்டாராத்தில் எந்த விஷேசங்கள் நடந்தாலும் பெரும்பாலான ஆர்டர் என் கடைக்குத்தான் வரும். ஒரே பார்டிக்கு 5,000 லட்டு 6,000 லட்டுகூட செய்து கொடுத்திருக்கிறேன்.  இங்கு அதிகபட்சம் ஒரு கிலோ காரமோ, சுவிட்டோ 200 லிருந்து 250-க்கு மேல் விக்க மாட்டேன். விலைதான் இங்கு மலிவே தவிர அதில் போடும் பொருட்கள் எந்த விதத்திலும் தரம் குறைந்தது இல்லை.

கடையில் ஊழியர்களோடு ஊழியர்களாக பனிபுரியும் உரிமையாளர்.

ரீபைண்டு ஆயிலும், பாமாயிலும் உபயோகப்படுத்த மாட்டேன். மைதா மாவு சர்க்கரை இவற்றை தரமாக நானே தேர்ந்தெடுப்பேன். லாபம் என்பது நிரந்தரமாக சிறிய அளவுதான் வைத்துக்கொள்வேன். அதுதான் இந்த வியாபாரம் நீடிக்க உதவுகிறது.  இங்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பத்து ரூபாய்க்கு வாங்கினால் கூட தங்களுடைய சொந்த வீட்டில் சாப்பிடுவதைபோல பல அயிட்டங்களை எடுத்து ஆசையாக ருசி பார்ப்பார்கள். நான் அதற்கு எந்த தடையும் சொல்வதில்லை. குழந்தைகளை வீட்டில் நாம் எப்படி பார்க்கிறோமோ அதேபோல் தான் நான் வாடிக்கையாளர்களை நேசிக்கிறேன்.

வியாபாரம் எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் என்னுடைய வாழ்க்கை வசதி பெரிதாக எதுவும் மாறவில்லை. வரவுக்கும் செலவுக்குமே சரியாகி விட்டது. நான் முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய மைதா இன்று 2,300 ரூபாய். நூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய சர்க்கரை இன்று 3,500 ரூபாய். ஆயில் 600 – 700 க்கு வாங்கியது இன்று 1,500 ரூபாய் ஒரு டின். இவ்வாறு பல மடங்கு விலை ஏறி இருந்தாலும் நான் பெரிதாக விலையை ஏற்றவில்லை.

கண் முன்னே தயாராகி இருக்கும் மொறு மொறு மிக்சர்.

விலையை குறைப்பதற்கு, வாங்கும் பொருளிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். சரக்கு மாஸ்டருக்கு தினமும் 1,000 ரூபாயும், கடையில் இருப்பவர்களுக்கு 600 ரூபாயும் தருகிறேன். இத்தொழிலில் மன நிம்மதியைத் தவிர  ஆடம்பரம், பணம் என்று எதையும் பார்க்கவில்லை. என் வீட்டில் இருப்பவர்கள் என்னை நல்லா பாத்துகுறாங்க. அதுக்கு மேல பெரிய சொத்து எதுவும் தேவையில்லை” என்றார்.

கடைக்கு உள்ளே அடுமனையில் கொதிக்கும் சட்டியில் இருந்து கட்ட காரஸை போட்டுக் கொண்டிருந்தார் வரதன் மாஸ்டர். “நான் விழுப்புரம் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவன். இங்கு 20 வருஷமா மாஸ்டரா இருக்கேன். என்னோட சேத்து இன்னும் இரண்டு மாஸ்டருங்க இருக்காங்க. தினமும் இங்க இரண்டு சிஃப்டு வேலை. காலை ஏழு மணிக்கு வந்தால் மதியம் 3 மணி வரை சிப்டு. மதியம் இரண்டரை மணிக்கு வந்தா இரவு பத்தரை மணி வரை சிப்டு. மூட்டிய அடுப்பை இரவு பத்து மணிக்குத்தான் அணைப்போம். இந்த வேலைக்கு தினமும் எண்ணெய் மட்டுமே ஏழு டின் காலியாகிடும். ஒரு டின் பதினைந்து லிட்டர்.

வரதன் மாஸ்டர்

லட்டிலிருந்து குலோப்ஜாம் வரை பக்கோடாவில் இருந்து ஓமப்பொடி வரை காலியாக காலியாக போட்டுக் கொண்டே இருப்போம். எண்ணெயை மறுநாள் உபயோகப்படுத்த மாட்டோம். முடியும் போது மீந்துகிற எண்ணெயை வெளியில் கொடுத்து விடுவோம். போடும் சரக்கு 90 சதவீதம் அன்றே தீர்ந்து விடும். இரண்டு நாளைக்கு மேல் இங்கு எந்தப் பொருளும் பார்க்க முடியாது. அதனால் தான் இங்கு கஸ்டமர்கள் வருகிறார்கள். சுற்று வட்டாரம் குன்றத்தூரில் இருந்து தாம்பரம் வரை புது புதுசா வந்து கொண்டிருப்பார்கள்.  ஒருமுறை வாங்குவோர், அவரை சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இங்குதான் அனுப்பி வைப்பார்.

கண்கவர் இனிப்பு பூந்தி.

இங்கிருந்து மலேசியா, அந்தமான், சிலோனுக்கு  பலகாரங்கள் செல்கின்றன.  எங்கள் முதலாளி எங்களுடன் உழைத்து எல்லா வேலையும் சேர்ந்து செய்வார். எங்கள் கஸ்டங்களை கேட்டு தீர்த்து வைப்பார். வீட்டு விஷேசத்துக்கு இங்கிருந்துதான் இனிப்பு காரங்களை எடுத்து செல்வோம். அதற்கு எந்த தடையும் சொல்வதில்லை. எல்லோரும் மனம் ஒன்றி வேலை செய்வதால்தான் கடை வியாபாரமும் நிலைத்து உயர்கிறது” என்கிறார்.

ஓயாமல் வந்து கொண்டே இருக்கும் கஸ்டமர்களுக்கு சளைக்காமல் அயிட்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் ரகு. “மாலை 7 மணியிலிருந்து 10 மணி வரை கொடுத்து மாளாது. வந்து கொண்டே இருப்பார்கள். பல அயிட்டங்கள் 2 மணி நேரத்தில் காலியாகி விடும். 9 மணிக்கு மேல வந்தால் விரும்பிய அயிட்டங்கள் கிடைக்காது. வேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் 10, 20 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு 30 ரூபாய்க்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கு வாங்கி செல்வார்கள். ஐம்பது ரூபாய் வைத்தால் குடும்பத்தினரின் பலகார ஆசை தீர்ந்து போகும்.

வரவங்களுக்கு பலகாரம் கொடுத்து ஓயவே ஓயாது… வேலையை விவரிக்கும் ரகு.

பள்ளி செல்லும் சிறுவர்கள்கூட பத்து ரூபாயை எடுத்து வந்து விரும்பியதை வாங்கி சாப்பிடுவார்கள். ஒருநாளைக்கு சராசரியாக 30,000-க்கு குறையாமல் கல்லா கட்டுவோம். ஆனால் அப்பணத்தை தண்டல்காரிடமே முதலாளி கொடுத்து விட்டு சென்று விடுவார். இதுநாள் வரையில் ஒரு இரண்டு லட்ச ரூபாய் வைத்து சொந்தப் பணத்தில் சரக்கு வாங்குவதே இல்லை. அதற்கு காரணமும் எங்களுக்கு புரியவில்லை.

கேட்டால், “எங்கடா சேர்த்து வைக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போகுது. விலைவாசி முன்ன மாதிரி இல்ல. கொஞ்ச லாபம் பாக்குறதே முடியல. ஏதோ கஸ்டமருங்க குறையாம வந்துனு போயினு இருக்காங்களே  அது போதும். லாபத்தை பார்த்தா மத்தவங்க மாதிரி கடையை மூடிட்டு போக வேண்டியது தான்” என்று சொல்வர். காலையில் தண்டல் வாங்கி சரக்கை விற்பது, மாலை தண்டல்காரரிடம் திருப்பி கொடுப்பது என்று இப்படியே போகிறது” என்று சொல்லி அலுத்துக் கொள்கிறார் ரகு.

கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாகலட்சுமி

நாகலட்சுமி

நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்துல இருந்து இங்கதான் வாங்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு பக்கத்துலயே இருக்கதால தினமும் எதாவது வந்து வாங்கிட்டு போவேன். உடம்புக்கு எந்த கெடுதியும் இது வரைக்கும் வந்ததில்ல. எல்லா பொருளும் நல்லா இருக்கும். நம்பிக்கையா வந்து வங்கிட்டு போவேன்.

மணிகண்டன்

சின்ன வயசுல இருந்து சாப்பிடுறேன். பக்கோடா தான் ரொம்ப புடிக்கும். பத்து ரூபா அதிகமா இருந்தா வேற எதனா வாங்கி சாப்பிடுவேன். இல்லனா வீட்டுக்கு வாங்கிட்டு போவேன்.

ராஜா

எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. இங்க வந்து ஆறு மாசம்தான் ஆகுது. இந்த கடையில நாலு மாசமா பலகாரம் வாங்கிட்டு இருக்கேன். காரணம், இங்க தரமா இருக்கு. பல இடங்கள்ல பளப்பளனு இருக்கும். ஆனால் நல்லா இருக்காது. சிக்கு நாத்தம் அடிக்கும். இங்க அப்படி இல்ல. பாக்கத்தான் கடை அழுக்கா இருக்கு. ஆனா எந்த பிரச்சனையும் வரதில்ல. நம்ம கண்ணு முண்ணாடியே செய்யிறாங்க. எல்லாம் உடனே உடனே காலி ஆகிடுது. அதோட இல்லாம நாம வாங்குற எந்த பொருளா இருந்தாலும் கூடதான் குடுப்பாங்களேயொழிய குறைவா இருக்காது. நம்ம மனசுக்கு நிறைவா கொடுப்பாங்க. அதால இங்க வாங்குறதுல ஒரு திருப்தி இருக்கு.

பார்வதி

நான் சக்தி நகர்ல இருக்கேன். இரண்டு நாளைக்கு ஒருமுறை வந்து வாங்கிட்டு போவேன். பசங்க விரும்பி சாப்பிடுறாங்க. அவங்களுக்காகவே வந்து வாங்கிட்டு போவேன்.

நாகம்மாள்

எனக்கு பசங்க இல்ல. ஒரு முப்பது வருஷமா இங்க முறுக்கு, பக்கோடா, பூந்தி வாங்கி சாப்பிடுறோம். என் வீட்டுக்காருக்கு புடிக்கும். தினமும் வந்து வாங்கிட்டு போறேன். குறைவான விலை. மனசுக்கு திருப்தியா சாப்பிடுறோம்.