காலேஜ் கல்ச்சுரல்ஸ் : தற்போதைய நிலையும் அதன் தாக்கமும் | விஜய் அமந்தா

ன்றளவில், கல்லூரி வளாகங்களில் கல்ச்சுரல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, தனியார் கல்லூரிகளில் இந்நிகழ்ச்சிகள் ஆரவாரத்தோடு கொண்டாட்டமாக நடைபெற்று வருகின்றன. கட்டாயமாக வருடத்திற்கு ஒரு நிகழ்ச்சியாவது நடத்திவிடவேண்டும் என்பதே நிர்வாகத்தின் நிலைப்பாடு. நிர்வாகம் மட்டுமல்லாமல், மாணவர்கள் மத்தியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புண்டு. அவ்வெதிர்பார்ப்பின் வெளிப்பாடாய், நிகழ்ச்சியில் என்னென்ன போட்டிகள் நடத்தலாம், எந்த சினிமா நடிகரை அல்லது இயக்குனரை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் எனக் கலந்தாலோசிப்பதில் அதிதீவிரம் காட்டுகின்றனர்.

நடப்பது என்னவென்றறியாத மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் இதில் பங்கேற்று பரிசுகள் பெற வேண்டும் என்ற ஆசையில் நிறைய பணம் செலவழிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இது போன்ற கல்ச்சுரல்ஸ் மாணவர்களின் போட்டியிடும் குணத்தை தீவிரபடுத்துவதாகவும், திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பத்தை உருவாக்குவதாகவும், கல்விச் சுமையை இலகுவாக்குவதாகவும் பொதுப் புத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுவதே.

(மாதிரிப் படம்)

கல்லூரியில் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் என்னதான் நடக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம். ஏதேதோ புரியாத கிரேக்க, இலத்தீன் மொழிகளிலிருந்து எடுத்த வார்த்தைகள் நிகழ்ச்சியின் தலைப்பாக வைக்கப்படும். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து முப்பது நாற்பது போட்டிகள் நடத்தித் தீர்க்கப்படும். அப்போட்டிகளுக்கு நடுவர்கள் என்ற பெயரில் சினிமாத்துறையில் இருந்து எவரையாவது அழைத்து வருவார்கள். தொலைக்காட்சியில் ஒரு தடவை தோன்றியிருத்தாலும் celebrity என்று அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

மற்ற நாட்களில் தூங்கும் மாணவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாட்டில் தீவிரமாக செயல்படும். ஜனநாயக முறையில் மன்றத்தின் அலுவல் பொறுப்பிற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இதற்காகத் தானோ என எண்ணத் தோன்றும் நமக்கு. நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக இருப்பதற்கு பெரு நிறுவனங்களிடம் மாணவர்கள் சென்று ஒப்புதல் பெற வற்புறுத்தப்படுகிறார்கள். சினிமாத் துறையில் பிரபலமான நடிகர் யாரையாவது கல்ச்சுரல்ஸ் பற்றி நல்ல விதமாக பேசச் சொல்லி ப்ரோமோ வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படும்.

படிக்க:
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

எல்லாம் சரி, இது போன்ற நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களின் பங்குதான் என்ன? மேடை அலங்காரம், பார்வையாளர்கள் அமர இருக்கைகள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, சான்றிதழ் எழுதுவது, பரிசு பொருட்கள் வாங்குவது, ஒழுங்கீன நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபடாமல் தடுப்பது, நுழைவாயிலில் மாணவர்கள் அடையாள அட்டை கொண்டு வருகிறார்களா என சோதனையிடுவது, வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்று மாணவர்களை கண்காணிப்பது, நடுவர்களை உபசரிப்பது ஆகிய அனைத்தும் ஆசிரியர்களின் பொறுப்பாக அறிவிக்கப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகவே கல்லூரி இயங்குவது போல் அனைவரும் இரவு பகல் பாராமல் உழைப்பார்கள்.

(மாதிரிப் படம்)

உண்மையில் இங்கே நடப்பது culturals தானா? இதற்கு பதில் கூற வேண்டுமானால் culturals என்ற சொல்லின் அர்த்தத்தையும், அதன் வேர் சொல்லான culture என்ற சொல்லின் அர்த்தத்தையும் கவனமாக ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவ்விரண்டு சொல்லுக்கும் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தைப் பார்த்தால் மட்டும் போதாது. ஆகையால், ரேமண்ட் வில்லியம்ஸின் (Raymond Williams) Keywords என்ற நூலில் culture என்ற சொல் பல்வேறு சூழலில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற விரிவான விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்.

Culture என்ற சொல்லை செயல்முறையைக் குறிக்கும் சொல்லாகத்தான் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அக்கறையோடு கவனித்துக் கொள்வது, குறிப்பாக பயிர்களையும், விலங்குகளையும் பராமரிப்பது; பயிர் விளைவித்தல். பதினெட்டாம் நூற்றாண்டில் தான் இச்சொல்லின் அர்த்தம் விரிவடைந்துள்ளது. இவற்றை நாம் மூன்று வகைமைக்குள் பொருத்தலாம்: (i) அறிவு, ஆன்மீகம், மற்றும் ரசனையின் வளர்ச்சியைக் குறிக்கும் (ii) குறிப்பிட்ட மக்களின் அல்லது காலத்தின் வாழ்க்கை முறையை குறிக்கும் (iii) அறிவு மற்றும் கலை சார்ந்த செயல்பாடுகளைக் குறிக்கும். இன்றளவில் மூன்றாவது அர்த்தமே மிகப் பிரபலம். Culture – ன் பெயரடை cultural பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தான் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில், அறிவு, ஆன்மீகம், ரசனை சார்ந்த வளர்ச்சியையும், கலை சார்ந்த செயல்பாடுகளில் இதனின் வெளிப்பாடையும் culture என்ற சொல் உள்கிரகித்துள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், culture வளர்ச்சியை நோக்கி பயணிப்பதை உணர்த்தும் சொல்லாக உருவெடுத்துள்ளது. Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இனையான தமிழ் சொல் பண்பாடு என்பதே. இச்சொல்லுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அர்த்தங்களும் பொருந்தும்.

தி. சு. நடராசன் பண்பாடு குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்; “மனிதனுடைய வாழ்நிலைகளில் சாரமாகக் காணப்படுகின்ற ஒழுகலாறுகள், நடத்தைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள், சுற்றி இருப்பவை பற்றிய உணர்வுநிலைகள் முதலியவற்றைக் குறிப்பது பண்பாடு. சமூகக்குழுக்கள், இனங்கள், நாடுகள் என்ற நிலைகளில் காணப்படும் பல்வேறுபட்ட உறவுகள், கலை அழகியல் வெளிப்பாடுகள், சடங்குகள், வழிபாடுகள் முதலியவற்றைக் குறிப்பது பண்பாடு.”

(மாதிரிப் படம்)

Culture / பண்பாடு பற்றிய விளக்கங்களை அடிப்படையாக வைத்து மேலே விரிவாக குறிப்பிடப்பட்ட கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படும் முறையை பார்த்தோமேயானால், எந்தளவுக்கு அபத்தம் என்பதை உணரலாம். இக்கலை நிகழ்ச்சிகளின் நோக்கம் கொண்டாட்டமாகத் தான் இருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களும், பார்வையாளராக அமர்ந்திருக்கும் மாணவர்களும் முடிந்தளவு கொண்டாடி தீர்க்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

ஒரு மாதிரியான பித்து பிடித்த மனநிலையில் மாணவர்களைப் பார்க்க முடியும். காட்டுமிராண்டித்தனம் மட்டுமே மேலோங்கி அறிவு மற்றும் ரசனை இவையெதுவுமே மேம்படாத சூழல் உருவாகிறது. முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கல்வி நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு வித சுதந்திரத்தை அளித்து விடுகிறது. பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்களுக்கு நடனமாடலாம். இரட்டை அர்த்த சொற்களை மேடையில் பயன்படுத்தலாம். DJ வைத்து மணிக்கணக்கில் ஆட்டம் போடலாம்.

இவை அனைத்தும் மாணவர்களின் ஆற்றலை முற்றிலும் வீணடிப்பவை. ஏற்கனவே அவனிடம் உள்ள புரியாத வேட்கையை தூண்டிவிடுபவை. மொத்தத்தில், கல்ச்சுரல்ஸ் மாணவர்களிடம் தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன. சமூக உணர்வும், பொறுப்புமற்ற கற்பனையையும், திறமையையும் வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களின் கல்வி, கலை சார்ந்த மதிப்பீடுகளை மேம்படுத்த வாய்ப்பேயில்லை.

அதற்காக இந்நிகழ்ச்சிகள் எவ்வித பண்பாடையும் பிரதிபலிக்கவில்லை என்றும் சொல்லமுடியாது. பண்பாடைப் பிரதிபலிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், பண்பாடு என்பது என்றும் மாறாத நிலையான ஒன்றாக கருதுகிறார்கள். தமிழர் பண்பாடு என்றாலே வேட்டி, சட்டை, சேலை, விவசாயம், ஒழுக்கம் என வரையறுக்கப்பட்டுள்ளதை, புற குறியீடுகள் மூலம் நம்மால் உணர முடியும்.

(மாதிரிப் படம்)

இக்கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சிகளில் முற்றிலும் மூழ்கி, சிலாகித்துக் கொண்டிருக்கும் யாவருக்கும் உலகமயமாக்கலுக்கு பிறகு சமூக பண்பாட்டு தளத்தில் நடந்த மாற்றங்கள், சிக்கல்கள் பற்றி துளியளவும் கவலை இல்லை. பொங்கல் பண்டிகை என்றாலே வேட்டி, சேலை அணிவதும், மண் பானையில் பொங்கலிடுவதும், கரும்பு சாப்பிடுவதும், விவசாயத்தின் பெருமை பேசுவதும், போட்டிகள் நடத்துவதும் பொதுவான பழக்கமாகிவிட்டது. உண்மை என்னவெனில் இத்தகைய இலட்சியப் போக்கின் பின் மறைந்துள்ள சமூக பொருளாதார நிலை குறித்து பேச மறக்கிறோம், மறுக்கிறோம்.

ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்று முழங்கிய காலம் மாறி டிஜிட்டல் இந்தியா என முழங்கும் காலம் வந்துவிட்டது. விவசாயிகளுக்கு மூலதனம் அதிகமாகிறதேயொழிய உற்பத்தி அதிகரிக்கவில்லை. அப்படியே உற்பத்தி அதிகரித்தாலும் பெரும்பாலும் மலிவான விலைக்கு விற்க வேண்டிய அவல நிலை. இது போக இடைத்தரகர்களின் சுரண்டல் வேறு. இதற்கிடையில் இயற்கை பேரிடர்கள் நேரின், அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு அப்பட்டமாகிறது. இதை மீறியும் விவசாயம் செய்தால் விவசாயிகள் அனைவரும் கடன்காரர்கள் என்ற சித்தரிப்பு தான் மிச்சம்.

இவை எதைப்பற்றியும் விவாதிக்காமல், கவலைப்படமால் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து மக்கள் இசை பாடலுக்கு நடனமாடினால் போதுமா? ஆகமொத்தத்தில் தமிழர் பண்பாடு என்பது குறியீட்டு அளவில் சுருக்கப்படுகிறது. இதே போன்று குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற சடங்குகள் ஏன் நடத்தப்படுகின்றதென அர்த்தமற்று போகிறது.

அறிவு, ஆன்மீகம், ரசனை சார்ந்த வளர்ச்சியையும், கலை சார்ந்த செயல்பாடுகளில் இதனின் வெளிப்பாடையும் பிரதிபலிக்கும் வண்ணம் கல்ச்சுரல்ஸ் நடத்தப்படுவதில்லை. மாறாக, கல்ச்சுரல்ஸ் என்றாலே கொண்டாட்டமென்றும் கருத்தியலளவிலே மட்டும் பண்பாடை பிரதிபலிக்கும் என்றும் புலனாகிறது. ஒரு புறம், கல்ச்சுரல்ஸ் அதனின் அடிப்படை நோக்கத்தையே பூர்த்தி செய்யமுடியவில்லை.

மறுபுறம், இந்நிகழ்ச்சிகள் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்களான ஆசிரியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதே அவர்களது தலையாயக் கடமையாகக் கொடுக்கப்படுகிறது. பெரிய பேரணி அல்லது போரட்டம் நடக்கும் முன் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்களுக்கு கொடுக்கப்படும் உத்தரவுகள் போல ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மற்ற வேலை நாட்களைக் காட்டிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது விடுப்பு எடுப்பதற்கு பல கெடுபிடிகள் உண்டு. இவையெல்லாமே ஓர் அபாயகரமான சூழலுக்கே வழிவகை செய்கிறதெனில், ஆசிரியர்களைக் கொண்டு ஆரோக்கியமான சூழல் எவ்வாறு உருவாக்கப்படலாம்?

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி… பெரும்பாலான அரசு கல்லூரிகளில் இத்தகைய விழாக்கள் நடத்தப்படுவதே இல்லை!

இவ்வழக்கத்தை விடுத்து, ஆசிரியர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிகள் குறித்து ஒரு பொது விவாதம் நடத்தப்பட வேண்டும், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விரிவாகப் பேசப்பட வேண்டும், சமூக, பண்பாட்டு அமைப்புகளை நன்கு புரிந்து கொண்டு அதனை கலை வழி கேள்விக்குட்படுத்தும் கலைஞர்களை வரவழைத்து மாணவர்களிடேயே விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும். அந்த விவாதங்களின் வெளிப்பாடாய் கலை நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். பண்பாடு சார்ந்த மதிப்பீடுகளை தொடர்ந்து மறுபரிசீலனை செய்வதற்கேற்ற சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இல்லையெனில், இக்கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நாள் கூத்தாய் மாறிப்போகும். மாணவனும் தன்னோடு பயிலும் பெண்களின் கை தட்டல்களை வாங்கி விடுவதையே சாதனையாக கருதிவிடுவான். மேலும், கலை என்பது சமூகத்தை மறுவாசிப்புக்குட்படுத்திக் கொண்டே இருக்கும் ஒரு அரசியல் களம் என்ற உண்மையை மாணவர்கள் அறியாமலே இருக்கும் நிலை உருவாகிவிடும்.

இம்முழு விவாதத்திற்கும், எதிர் வினையாற்றுபவர்கள் தாங்கள் நுண்கலைகள் சங்கம் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதால் கலையின் நோக்கத்தைப் பற்றியோ அதன் தாக்கத்தைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை என கூறலாம். ஏனென்றால் நுண்கலைகள் அதனின் கற்பனை, அழகியல், அறிவு சார்ந்த கருத்துகளுக்காக மட்டுமே பாராட்டப்பட வேண்டும். அவர்களின் இந்த எதிர்வினையை நிச்சயமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்பார்வை மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அழகியல் இயக்கம் (Aesthetic movement) உருவான போது பரவலாக இருந்தது. கலை கலைக்காக மட்டும் என்பதே அந்த இயக்கத்தின் மையக்கருத்து. இயக்கத்தின் முன்னணி எழுத்தாளர்கள் கலை வடிவம் சார்ந்த அழகியலின் நிறைவுதான் கலையின் நோக்கம் எனவும் கூறினார்கள். இம்மாதிரியான அணுகுமுறை மேட்டிமை உணர்வையே ஏற்படுத்தும். மேலும், அழகியல், ரசனை ஆகியவற்றுள் பொதிந்துள்ள அரசியல் கவனம் பெறாமல் போய் விடும். எடுத்துக்காட்டாக, பிரைடல் மேக்கப், நெயில் ஆர்ட், காஸ்டியூம் டிசைனிங், எத்தினிக் வாக் போன்ற போட்டிகளை அழகியல் சார்ந்தாக மட்டும் பார்த்தால் அதனடியில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தின் பெண்கள் மீதான மதிப்பீடுகளை வெளி கொண்டு வர முடியாது.

படிக்க:
நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா ?
பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

என்னைப் பொருத்தவரை, கலை சமூக, பண்பாட்டு வெளியைத் தாண்டி இயங்குவது சாத்தியமற்றது. ஒருவனை அதீத சமூக உணர்வு நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றலைத் தன்னுள் நிறைத்து வைத்திருப்பதே கலை. கட்டணம் செலுத்தும் மாணவர்களின் பொழுதுபோக்கிற்கென்றும், அடுத்த வருட மாணவ சேர்க்கையின் போது கல்லூரியை விளம்பரப்படுத்தவும் கல்லூரி நிர்வாகத்தினர் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

உண்மையில் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் நடத்தப்படும் கேலிக் கூத்துகள் அனைத்தும் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மாணவர்களின் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனைகளை மழுங்கடித்து, கல்லூரி வளாகத்தினுள் ஒரு ஆரோக்கியமான கல்விச் சூழல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டிப்பாக ஏற்படுத்தாது என்பது தெளிவு.

விஜய் அமந்தா