அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
வம்பர்-7 ரஷ்ய உழைக்கும் மக்கள் முதலாளித்துவ ஆட்சியின் கொடுங்கோன்மையை வீழ்த்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய நாள். இது ரஷ்ய உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களது விடுதலைக்கு வித்திட்ட நாள். இந்த நாளை விழாவாக கொண்டாடுவதன் நோக்கம், இந்தியாவில் புதிய ஜனநாயக புரட்சியை சாதிப்பதும், உழைக்கும் மக்கள் தலைமையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். இது உடனே செய்ய வேண்டிய அவசர, அவசியமான கடமையாக நம் முன் நிற்கிறது.
பாசிச மோடி ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது. சாதி, மதக் கலவரங்களை ஆளும் கட்சியே திட்டமிட்டு தூண்டி, முன் நின்று நடத்துவது, அரசுத் துறைகளில் ஆர்.எஸ்.எஸ். காலிகளை நியமித்து காவிமயமாக மாற்றுவது, கலவரத்தை தூண்ட ‘சாகா’ போன்ற ஆயுதப் பயிற்சிகளை கொடுப்பது, தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, பெண்கள் மீது கும்பல் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்துவது, இதுபோன்ற குற்றச் செயல்களை பா.ஜ.க. முன்னணி தலைவர்களே நடத்துவது, இதை விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது ஊபா, EDSO போன்ற கொடிய கருப்புச் சட்டங்களை ஏவி சிறையில் அடைப்பது, கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டோருக்கு பிணை கொடுக்க மறுத்து சிறைக்குள்ளேயே கொன்றொழிப்பது என்று எண்ணற்ற வகையில் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்.
படிக்க :
ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
மறுபக்கத்தில் பெட்ரோல், டீசல் முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை விலை உயர்வு வரலாறு காணாதவாறு உயர்ந்து வருகிறது. வரியை குறைத்துக் கொள்ள பலதரப்பு பொருளாதார அறிஞர்கள் எச்சரித்தபோதும், மோடியோ காதில் வாங்கி கொள்வதே கிடையாது. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் பல கோடி சிறு – குறு தொழிலை அழித்தது போதாதென்று, தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை கொத்தடிமையாக்குகிறது.
மேலும், “பொதுத்துறை சொத்துக்கள் பணமாக்கல் திட்டம்” என்ற பெயரில் மக்களின் சொத்தை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்து வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பயன்படுத்தும் இரயில்வே, மக்கள் வரி பணத்தில் உருவாக்கிய மின்சாரத்துறை, தொலைத்தொடர்பு, நிலக்கரி சுரங்கம், விமானங்கள், கடல் வளங்கள், காடுகள் – மலைகள் என கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் சொத்தை கேள்விக்கிடமில்லாமல் கூவி கூவி விற்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.
மோடி அரசின் இத்தகைய மக்கள் விரோத, நாட்டு விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களை ஈவிரக்கமின்றி கொடூரமாக ஒடுக்குகிறது. குறிப்பாக உ.பி.யில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் கார் ஏற்றி படுகொலை செய்ததை மூடிமறைத்து குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். இதனை வீடியோ எடுத்த செய்தியாளரை திட்டமிட்டு படுகொலை செய்தனர்.
தினந்தோறும் போராடுகிற மக்கள் மீது படுகொலையைக் கட்டவிழ்த்து விடுகிறது பாசிச மோடி அரசு. முசோலினியும், இட்லரும் நடைமுறைப்படுத்திய பாசிசத்தை விஞ்சிய வகையில், வேறு வடிவில் காவியும் கார்ப்பரேட்டும் இணைந்த வீரிய ஒட்டுரக பாசிசத்தை அமல்படுத்தி வருகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்.
இதனை வீழ்த்த விவசாயிகள், தொழிலாளிகள், இளைஞர்கள் – மாணவர்கள், மீனவர்கள், சிறு – குறு முதலாளிகள் என அனைவரையும் கொண்ட பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைக் கட்டி போராடுவதுதான் தற்போது உடனடி தேவையாக உள்ளது. இதனை நிறைவேற்ற நவம்பர்-7 ரஷ்ய புரட்சி நாளில் சபதம் ஏற்போம்!
உழைக்கும் மக்களே!
  • காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைக் கட்டியமைப்போம் !
  • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

நிகழ்ச்சி நிரல்

♠ கொடி ஏற்றுதல்
♠ அரங்கக் கூட்டம்
♠ புரட்சிகர கலை நிகழ்ச்சிகள்

இவண் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு.
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு : 9791653200, 9444836642, 8056386294, 9962366321

2 மறுமொழிகள்

  1. மேலே தலைப்பில் உள்ள “நவம்பர் 7” பாதி தான் தெரிகிறது.கீழே இறக்கி சரி செய்யவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க