சென்னையில் அமைந்திருக்கும் கல்லூரி ஒன்றில் கடந்த வாரம் படித்து முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவர் கலந்து கொண்ட விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி சில ஆண்டுகள் நிரப்பப்படாமல் இருந்ததால் இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான மாணவர்களுக்கு தேர்ச்சிப் பட்டம் ஒரே நாளில் வழங்கப்பட்டது. மாணவப் பட்டதாரிகளும், பெற்றோர்களுமாக சுமார் மூன்றாயிரம் பேர் திரண்டிருந்தனர். இது பெரிய சந்தடியை கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தியது. பட்டம் பெறும் மாணவர்கள், முக்கிய விருந்தினர் மற்றும் முக்கிய நிர்வாகத்துறையினர் ஆகியோர் மேலங்கி அணிந்து வித்தியாசமாக தோன்றினர். மாணவர்கள் தங்கள் தோற்றப் பொலிவில் உற்சாகம் கொண்டு கைகளிலிருந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் ஃபோட்டோ மற்றும் செல்ஃபிக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர்.

பட்டமளிப்பு விழாவின் தீவிர ஆச்சாரம் அவர்களின் உற்சாகத்துக்கு தடைபோட்டது. துணைவேந்தரின் பட்டமளிப்பு செய்திக்கு பின்னர் மாணவர்கள் பட்டங்களை பெறத் தொடங்கினர். பட்டங்களை பெறும் போது கரவொலிகள் எழுந்தன. துறை வாரியாக பட்டங்களை பெற்ற மாணவர்கள் மறுபடியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர மறுத்தனர். தங்கள் கைகளில் இருந்த அலைபேசிகள் மூலம் பல்வேறு சூழல் பின்னணியில் ஃபோட்டோக்களை தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் எடுக்கத் தொடங்கினர். ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட மறுத்தனர். அனைவருக்கும் பட்டங்களை வழங்கிய பின்னர் உறுதிமொழி ஏற்பின் போது மிகக்குறைந்த எண்ணிகையிலான மாணவர்களே அரங்கில் இருந்தனர். இது நிர்வாகத் தரப்புக்கு மொத்த நிகழ்ச்சி குறித்து ஒரு தோல்வி மனப்பான்மையை வழங்கியது. தமது சங்கடத்தை ஆத்திரமாக ஆசிரியர்கள் மீது காட்டத் தொடங்கியது.

படிக்க:
♦ நீங்க நல்லவரா ? கெட்டவரா ? – உளவியல் ஆய்வுகளை முன்வைத்து ஒரு பார்வை !
♦ குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்

பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு ஆசிரியர்களை வீட்டிற்கு செல்ல அனுமதி மறுத்து கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். என்ன தவறு? என்பதை விவாதிப்பது போல் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் விரைவிலேயே கல்லூரியின் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக தொடங்கினர். குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் இரண்டாண்டு நிகழ்ச்சியை ஒரே நாளில் நடத்தியதால் ஏற்பட்ட கூட்ட நெருக்கடி என்று காரணம் கூறியதை கல்லூரி முதல்வர் ஏற்கவில்லை. மாணவர்களை கட்டுப்படுத்தும் கடமையை ஆசிரியர்கள் ஒழுங்காக செய்யவில்லை என்ற தவறை கண்டுபிடித்து வெளியிட்டார். பட்டமளிப்பு நாளின் புனிதம் கெட்டு விட்டதாக துக்கித்தார். இத்தனைக்கும் ஒரு நாள் முன்பாகவே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பட்டம் பெறப்போகும் அனைவரும் அழைக்கப்பட்டு அடுத்த நாள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.

உண்மையில் எங்கு தவறு நடந்தது?

இந்த கேள்விக்கான பதிலை எங்கிருந்து பெறுவது என்பது முக்கியமானது. படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சமூகத்தில் என்னவாக இருக்கிறது? வேலைவாய்ப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்திருப்பதாக தேசிய மாதிரி அளவெடுப்பின் (NSSO) மிகச் சமீபத்திய புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. 45 வருட காலத்தில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும், 15 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களின் வேலை வாய்ப்புகள் மிகக் குறைந்துள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நகர்ப்புற பெண்கள் வேலையின்மை 27 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அது தெரிவிக்கிறது. வேலையின்மை அதிகரித்திருப்பதோடு தொழிலாளர்கள் வேலை இழப்பதும் கூடியுள்ளது. பக்கோடா விற்பதை பெரிய தொழில் வாய்ப்பாக பிரதமரே முன்மொழியக்கூடிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். இவையெல்லாம் தாம் பெற்ற கல்வி மற்றும் சான்றிதழ்களின் பயன்பாடு சார்ந்த மதிப்பு குறைந்ததற்கு முக்கியப் புறநிலை காரணமாக விளங்குகிறது.

தனியார் கல்லூரிகள் கல்விக் கடைகளாக கடந்த சில பத்தாண்டுகளில் மாயிருப்பது யாவரும் அறிந்த ரகசியம். கடையில் பொருள் வாங்கிய நபரிடம் கடைக்காரர் கட்டுப்பாடுகள் விதிப்பதை வாடிக்கையாளர் ஏற்பாரா? கல்விக் கட்டணம் என்ற வகையில் மட்டுமல்ல; தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் மற்றும் நிகழ்ச்சிக் கட்டணம் என அனைத்தையும் வசூலித்து விட்டு மாணவர்களிடம் வேறு வகையான ஒரு அணுகுமுறையை எதிர்பார்க்க முடியுமா?

பல கல்லூரிகள் நவீனச் சிறைச்சாலைகள் போன்று செயல்படுகின்றன. பனோப்டிக்கன் சிறை விடுதிகள் 18-ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஒன்று. அதனை வடிவமைத்தவர் ஜெரேமி பெந்தாம் என்ற இங்கிலாந்து சிந்தனையாளர். அதன்படி வட்டவடிவில் சிறை கட்டப்பட்டு அதன் நடுவில் உயரமான தூண் ஒன்று கட்டப்பட்டு இருக்கும். சிறைவாசிகளை கண்காணிப்பதற்கான ஏற்பாடு அது. அதில் ஒருவர் அமர்ந்து கொண்டு அனைவரையும் கண்காணிக்கும் வகையிலானது. சிறைக் காவலர்கள் என்று பலர் தேவையில்லை. அந்த ஒருவரும் கூட எப்போதும் இருக்கத் தேவையில்லை. சிறைவாசிகளுக்கு தாம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதான அச்சத்தை அந்த தூண் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

இன்று கல்வி நிறுவனங்களில் அந்த வேலையை கண்காணிப்பு கேமராக்கள் செய்கின்றன. உடனடி நடவடிக்கைகள் அவற்றை கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றாலும் மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதான அச்சம் சுதந்திரமாக கற்பதற்குரிய மனதை கட்டுப்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது.

பனோப்டிக்கன் சிறை

மாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில்தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும். ஆனால் இந்த கண்காணிப்புகள் சிறைபட்டிருக்கும் அனுபவத்தை வழங்குகிறது. அவர்களின் சிந்தனையில் விலங்கை மாட்டியிருக்கிறது. மாணவர்கள் பற்றிய எல்லா விபரங்களும் சேகரிக்கப்பட்டு தாமதமாக வருவது, விடுப்பு எடுப்பது, தேர்வில் தோற்பது ஆகியவை கடுமையாக எதிர்கொள்ளப்படுகின்றன.

மாணவ-மாணவியர் ஒன்றாக சுற்றுவது, பேருந்து, ரயில் நிலையங்களில் காத்திருப்பது ஆகியவை சுடுசொற்களால் விமர்சிக்கப்படுகின்றன. ஆசிரியச் செயல்பாடு என்பது நிழல் போலீஸ் தன்மைக்கு மாறியுள்ளது. எளிதில் கையாளத்தக்க பிண்டங்களாக மாணவர்கள் மாறுவதுதான் சிறந்த ஒழுக்கமாக கருதப்படுகிறது. எனவே இதற்கெதிரான கலக சிந்தனை என்பது மாணவப்பருவத்தில் மிக இயல்பாக எழும் ஒன்று.

மாணவர்களின் இந்த புழுக்கத்தை தணிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தவும் கல்ச்சுரல்ஸ் என்ற பெயரில் மென்போர்ன் தன்மை கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகின்றன. காதல், பெண்கள், ஆண் – பெண் உறவு சார்ந்த புரிதலற்ற வேட்கைகள் இதன் மூலம் தூண்டப்படுகின்றன. ஒரு பக்கம் கடுமையான கட்டுப்பாடுகள் மறுபுறம் கேளிக்கை, சினிமா நிகழ்ச்சிகள் என்று புதிரீடான மனப் பதநிலைக்கு ஒரு மாணவன் உள்ளாக்கப்படுகிறான். இது அவனது அறிவார்த்த ஆளுமையை சிதைக்கிறது. அர்த்தப்பூர்வமான உரையாடலை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.

படிக்க:
♦ மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்
♦ பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?

கருத்தரங்குகள், பட்டறைகள் ஆகியவை பேருக்கு சடங்குத்தன்மையுடனும், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் முழு ஈடுபாட்டுடனும் நடத்தப்படுகின்றன. பின்னர் அவை அனைத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளாக ஆவணப்படுத்தப்படுகின்றன. அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்துக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.

தனியார் கல்லூரிகளுக்குள் ஒரு நாள் நுழைந்து விட்டால் பின்னர் நடுவில் அங்கிருந்து வெளியேறுவது என்பது இயலாத காரியம். ஒரு வகுப்பில் இருப்பதா? வேண்டாமா? என்று தேர்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு இருப்பதில்லை. தங்கள் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி அமர வைக்கப்படுவதாக எண்ணுவதால் அவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற அதிக பயம் தங்களுக்கு விழும் ஆப்சண்ட் பற்றியது. தாங்கள் விடுப்பு எடுக்கும் நாட்கள் போகவும் கல்லூரியில் நடத்தை காரணமாகவும் ஆப்சண்ட் விழுகின்றன. வருகைப் பதிவு குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழே இருந்தால் அவர்களால் தேர்வெழுத முடியாது.

ஒரு கல்லூரி எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுப்பது சிக்கலாக தோன்றலாம். ஆனால் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருத்தல் நல்லது.

ஒரு வீட்டின் இன்றியமையாமை குறித்து ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்க கவிஞன் ஒரு பணியாளரின் மரணம் (The Death of a Hired Man) என்ற நீள்கவிதையில் விவாதித்திருப்பார்.  ஒரு கணவன் மனைவி மற்றும் பணியாளன் ஆகியோர் அக்கவிதையில் வருவார்கள். சிலாஸ் என்ற பணியாளன் ஒரு முக்கியமான நேரத்தில் அந்த வீட்டிலிருந்து வெளியேறி இருப்பார். பின்னர் சாகும் தருவாயில் அந்த வீட்டிற்கு மறுபடியும் வருவார். அதனை வீட்டின் உரிமையாளரான வாரன் எதிர்ப்பார். உறவினரிடத்தில் செல்ல வேண்டியது தானே என்று எரிந்து விழுவார். சிலாஸ் தனது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதாக மனைவி மேரி உரைப்பார். பிறகு வீடு என்பதற்கு ஒரு விளக்கத்தை மேரி கொடுப்பாள். ‘வீடு என்பது நீங்கள் செல்ல விரும்பும் நேரத்தில், அதிலுள்ளவர்கள் உங்களை அணைத்துக் கொள்ள வேண்டும்’ என்பார். அறமின்றி ஒரு வீட்டை கட்ட இயலாதது போன்றது தான் ஒரு கல்லூரியை நிர்வகிப்பதும்.

பட்டமளிப்பு விழாக்களில் அங்கி மற்றும் தலைப்பாகை அணிவது மத்தியக்கால இங்கிலாந்தில் உருவானது. பாதிரிகளின் கட்டுப்பாட்டில் கல்வி அப்போதிருந்ததால் அவர்களின் உடைகளை பின்பற்றி கொண்டு வரப்பட்ட பழக்கமாகும். 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அங்கி அணிவதை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அதன் விதிமுறைகளில் ஒன்றாக பின்பற்ற தொடங்கியது. டவுன் அன்ட் கவுன் (Town and gown) என்ற சொல்லாட்சி பெரும்பான்மை நகர மக்களுக்கும் கவுன் அணிந்த படித்த வர்க்கத்துக்கும் இடையேயான முரணை விளக்கப் பயன்படுத்தப்படுவதாகும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானதே நகரவாசிகளுக்கும் ஆக்ஸ்ஃபோர்டில் படித்த சிலருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட புதிய கல்வி நிறுவனம் என்று சொல்லப்படுவதுண்டு. கால ஓட்டத்தில் அது பழமையின்/காலனியத்தின் எச்சமாக மட்டுமே தொடர தகுதி படைத்த ஒரு வழக்கமாகும். மேலங்கி அணிவது காலனிய எச்சம் என்றுரைத்து 2010-ம் வருடம் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய வனமேலாண்மை நிறுவனத்தின் (IIFM) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தனது அங்கியை கழற்றி வீசினார்.

பட்டமளிப்பு விழாக்களுக்கு கொடுக்கப்படுகின்ற அதீத முக்கியத்துவம் தேவையற்றது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் முதல் தலைமுறை பட்டப்படிப்பு என்பது இன்னமும் முழுமையடையாமலே இருக்கிறது. 8.15 சதவீத மக்களுக்கு தான் உயர்கல்வி வாய்ப்பு இந்தியாவில் கிடைப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பட்டமளிப்பு விழாக்களுக்கு இருக்கின்ற மாணவர்கள் ஈர்ப்பும், ஈடுபாட்டுணர்வும் புரிந்து கொள்ளக் கூடியது. பெற்றோர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு குழந்தைகளின் பட்டமேற்பை காண வருவது அதற்கு சாட்சியாகும்.

ஆனால், அதற்கு புனிதம் இருப்பதாக கருதுவதெல்லாம் 12-ம் நூற்றாண்டின் பழமையின் சுமையை தூக்கி கொண்டாடுவதாகும். உயர்கல்வி என்பது அறிவு சமூகத்தை படைப்பதென்ற யுனெஸ்கோவின் எண்ணத்தை அழிப்பதாகும். அறிவுத்துறை தற்குறித்தனம் உயர்கல்வித் துறையை ஆட்டிப்படைக்கிறது. 21-ம் நூற்றாண்டில் கல்லாமை என்பது எழுதப் படிக்கத் தெரியாமலிருப்பதல்ல; மாறாக புதிதாக கற்றுக் கொள்ளாமலிருப்பதும்; கற்றதை சரிபார்த்துக் கொள்ளாமலிருப்பதும்; ஏற்கனவே கற்றதை மறுபரிசீலனை செய்து கொள்ளாமலிருப்பதும் தான் என்கிறார் ஆல்வின் டொஃப்ளர் என்ற நவீன சிந்தையாளர்.

மாணவர்களை கட்டுப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது எல்லாம் தனிப்பட்ட ஆசிரியரின் திறன் என்று சுருக்கப்படுகிறது. அதற்கு பின்னணியில் ஆசிரியர் – மாணவர்கள் பிரச்சினைகளோடு தொடர்புடைய பல்வேறு கண்ணி இழைகளை அது காண மறுப்பதாகும்.

ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க