“உலகில் தமிழர்களுக்கு மட்டுமே இனப் பிரச்சினை இருப்பதாக” நினைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகளை பல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட வேண்டும்.
இங்கும் அதே இனப்பிரச்சினை. மொழி மட்டும்தான் வேறு. மற்ற படி அரசியல் ஒன்று தான். அரசியல்வாதிகளின் பேச்சுகளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும்.
இலங்கையில் உள்ள சிங்களவர் – தமிழர் பிரச்சினையை விட பல்கேரிய இனப் பிரச்சினை இன்னும் மோசமானது எனலாம். அயல் நாடுகளும் சம்பந்தப் பட்டிருப்பதால் சிக்கலானது.
சுருங்கக் கூறின் : பெரும்பான்மை பல்கேரியர்களுக்கும், சிறுபான்மை துருக்கியருக்கும் இடையிலான பிரச்சினை. இலங்கையில் சிங்களவர் போன்று பல்கேரியர்களும் தமிழர் போன்று துருக்கியரும் ஒரே மாதிரியான அரசியல் கதையாடல்களை கொண்டுள்ளனர்.
துருக்கியர்கள், பல்கேரிய பேரினவாத ஒடுக்குமுறை பற்றி பேசுவார்கள். அதே நேரம், பல்கேரியர்கள் துருக்கியின் பிராந்திய வல்லரசு ஆக்கிரமிப்பு பற்றி பேசுவார்கள்.
அதை விட இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நடந்த இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்புகள் பற்றி இன்றும் நினைவுகூருகிறார்கள். அதற்காக நீதி கோரி ஜெனீவாவில் முறையிடுகிறார்கள்.
இன்றைகும் இன முரண்பாடுகளின் விளைநிலமான பால்கன் பிராந்தியத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!
இனப் பிரச்சினை பற்றி தெரிந்து கொள்வோமா? நான் இன்னும் சொல்லத் தொடங்கவேயில்லை… எங்கே தலை தெறிக்க ஓடுகிறீர்கள்?
பல்கேரியா தலைநகர், சோபியா நகர மத்தியில் அமைந்துள்ள மசூதி, ஐநூறு வருட காலப் பழமையானது. இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சோபியாவில் வாழும் துருக்கி – இஸ்லாமிய சிறுபான்மையினர் மட்டுமல்லாது, அகதிகள், மாணவர்களும் அங்கு தினசரி தொழுகைக்காக வருகின்றனர்.
சுமார் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக, பல்கேரியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் இலட்சக் கணக்கான பல்கேரியர்கள் இஸ்லாமியராக மதம் மாறி இருந்தனர்.
ஓட்டோமான் ஆட்சியில் கிடைத்த சலுகைகளும், குறிப்பாக அரச பதவிகள் இஸ்லாமியருக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டமையும் மத மாற்றத்திற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலானவர்கள் துருக்கி மொழியை தாய்மொழியாக பேசி துருக்கியராக மாறி விட்டனர்.
இதைவிட “போமாக்” எனப்படும், பல்கேரிய மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கே வாழ்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தொலைதூர மலைப் பிரதேசங்களில் வாழும் அந்த சமூகம், உலகில் அழிந்து வரும் சிறுபான்மை இனங்களில் ஒன்று.
துருக்கி எல்லையோரம் இருக்கும் தெற்குப் பகுதியில் துருக்கியரின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இப்போதும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாகவும், பல்கேரிய மொழி பேசி கடையில் ஒரு பொருள் கூட வாங்க முடியாது என்று பல்கேரிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும் என்ற மாதிரி, பல்கேரிய இனப்பிரச்சினைக்கும், இலங்கை இனப்பிரச்சினைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு நாடுகளிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதற்குக் காரணம், தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப் படாத பிரச்சினைகளும் தான். துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்து தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதை துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர்.
பல்கேரிய பெரும்பான்மை இனத்தவரின் வாதம் இப்படி இருக்கிறது. தமது நாட்டில் உள்ள துருக்கியர்கள், இனத்தால் பல்கேரியர்கள் என்றும், துருக்கி மொழி பேசுவதால் வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் துருக்கி சிறுபான்மையினரின் வாதம் அதற்கு நேர் எதிரானது. பல்கேரியர்கள் பூர்வீகத்தில் துருக்கியரே என்றும், ஸ்லாவிய மொழி பேசுவதால் தம்மை வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.
இரண்டு தரப்பினரும் சொல்லும் வாதங்களிலும், ஓரளவு உண்மையும் இருக்கிறது. அதே நேரம் மிகைப் படுத்தல்களும் உள்ளன. பண்டைய கால அரசியல் இன்றுள்ளதை விட மிகவும் மாறுபாடானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாதம் அறிமுகமானது. அன்றிலிருந்து எல்லோரும் தேசியக் கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எண்பதுகளில் பல்கேரிய அரசியல் போக்கும் மாறிக் கொண்டிருந்தது. பூகோள அரசியல் மாற்றங்கள் காரணமாக, அந்நாட்டிலும் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினை தலைதூக்கியது. அயல்நாடான துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்த படியால், பல்கேரியாவில் இருந்த துருக்கி சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என கோரப் பட்டனர். பல்கேரிய மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் துருக்கிக்கு செல்லலாம் என அறிவிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் அகதிகளாக வெளியேறி துருக்கிக்கு சென்றனர்.
*****
நாஸி ஜெர்மனியில் நடந்த பாராளுமன்ற எரிப்பு வழக்கில் துணிச்சலாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்து விடுதலையாகி உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் டிமிட்ரேவ் ஒரு பல்கேரியா நாட்டுக்காரர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் சோஷலிச பல்கேரியாவின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். பல்கேரியாவில் அவரது காலம் பொற்காலம் என்று கூறலாம்.
பிரபலமான பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ், சோஷலிச பல்கேரியாவில் 1949 -ம் ஆண்டு காலமானார். மொஸ்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் இந்த சமாதி கட்டப் பட்டு, டிமித்ரோவின் பூதவுடல் அங்கு வைக்கப் பட்டிருந்தது.
பல்கேரியா முதலாளித்துவ- ஜனநாயக நாடான பின்னர், டிமித்ரோவின் பூதவுடல் அகற்றப் பட்டு எரிக்கப்பட்டது. 1999 -ம் ஆண்டு, வலதுசாரிக் கட்சி ஆட்சியில் இந்த சமாதியையும் இடித்து விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் கூட எதிர்ப்பு இருந்தது.
ஒரு கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமாதி இடிக்கப்படுவதை விரும்பவில்லை. இருப்பினும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், டிமிட்ரோவ் நினைவாலயம் நான்கு தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் அப்படி ஒரு கட்டிடம் இருந்தமைக்கான எந்த சுவடும் இல்லை.
பல்கேரிய தலைநகர் சோபியாவில் முன்பிருந்த கம்யூனிச காலத்து சிலைகளை எல்லாம் அகற்றி விட்டார்கள். அவற்றில் சிலவற்றை ஓரிடத்தில் வைத்து மியூசியம் ஆக்கி விட்டார்கள்.
அதற்கு அருகில் Socialist art museum என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பு ஓவியங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அந்த ஓவியங்கள் 1989-ம் ஆண்டு முதலாளித்துவத்திற்கு திரும்பியதை கொண்டாடுகின்றன. அந்த வருடத்திற்கு முந்திய வரலாற்றை அழித்து விட விரும்புகிறார்களாம்.
*****
தலைநகர் சோபியாவில் இருந்து வடக்கு நோக்கி சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் Montana என்ற நகரம் உள்ளது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய நகரம். இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
அங்கு ஒரு பல்கேரிய நண்பரின் விருந்தாளியாக தங்கி இருந்தேன். அந்த பல்கேரிய நண்பருக்கு ஆங்கிலம் ஒரு சொல் கூட தெரியாது. இந்த தொடர்பாடல் பிரச்சினை பற்றி சோபியாவில் இருந்து என்னை அங்கு அனுப்பி வைத்த நண்பரும் முன்கூட்டியே அறிவித்து இருந்தார். மொழிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்று என்னைப் போல் அவரும் யோசித்திருப்பார். என்னை அழைத்துச் செல்ல வந்த நேரம் “பிரெஞ்சு தெரியுமா?” என்று கேட்டார். நல்லவேளையாக எனக்கும் பிரெஞ்சு தெரிந்த படியால், இருவரும் பிரெஞ்சில் உரையாடினோம்.
இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பல்கேரியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாக கற்பிக்கப் படவில்லை. அதற்குப் பதிலாக ரஷ்யன் கற்பித்தார்கள். 90-களுக்கு பிறகு தான் அதை நிறுத்தி விட்டு ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
தொண்ணூறுகளுக்கு முன்னர், ரஷ்யன் இரண்டாம் மொழியாக இருந்தாலும், பாடசாலைகளில் இன்னொரு அந்நிய மொழியும் கற்பித்தனர். அது மாணவர்களின் சுய தெரிவாக இருந்தது. மூன்றாம் மொழியாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை கற்றனர். இதே தகவலை முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்ந்த பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவ்வாறுதான் எனது பல்கேரிய நண்பருக்கு பிரெஞ்சு பேசத் தெரிந்திருக்கிறது. ஓய்வு பெறும் வயதிலும் அவர் பிரெஞ்சை மறக்கவில்லை. எனக்கும் சரளமாக பிரெஞ்சு தெரியாது. கொஞ்சம்தான் தெரியும். ஆனால், அடிப்படை விடயங்கள் பற்றிய தொடர்பாடலுக்கு தேவையான அளவு பிரெஞ்சு தெரிந்தால் போதும்.
விராட்சா நகரில் ஒரு பெரிய அரச அச்சகம் இருந்தது. பல்வேறு வகையான அரச வெளியீடுகளை அங்கு தான் அச்சடித்தார்கள். 1990 -ம் ஆண்டு வரையில், சுமார் 300 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தனர். தொண்ணூறுகளில் “ஜனநாயகம்” வந்த பின்னர் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். விலை உயர்ந்த அச்சு இயந்திரங்களை, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விட்டனர். தொன்(டன்) கணக்கிலான கடதாசிகளை வீசி விட்டனர். அங்கு வேலை செய்தவர்கள் வேலையில்லாமல் நடுத் தெருவில் விடப் பட்டனர்.
அந்த தொழிலகத்தை நான் நேரில் சென்று பார்த்தேன். பாழடைந்த கட்டிடமாக, உள்ளே ஒன்றும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்டு, தரையெங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. நொறுங்கிய கண்ணாடித் துண்டுகள் போன்றது தான், அந்த நகரத்தில் வாழும் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலைமையும். அவர்களைப் பற்றி கவலைப்பட யாருமில்லை.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
அற்புதமான விளக்கம்