சுலாமிய, யூத, கிறித்தவ மக்கள் அருகருகே வாழ்ந்து வந்த பெருமை மிக்க நகரம்தான் வடக்கு ஈராக்கில் அமைந்திருக்கும் மொசூல் நகரம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மொசூல் நகரம் முழுமையாக விடுவிக்கப்படுவதாக, ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி-யால் அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகியும் எந்த முன்னேற்றமும் இன்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது, வரலாற்றுப் புகழ்பெற்ற மொசூல் நகரம்.

சிதைந்து போயுள்ள மொசூல் நகரம்

சுமார் 5 இலட்சம் மக்கள் வாழ்ந்து வந்த இந்நகரம் 2013-ல் ஐ.எஸ்-ன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதுவரை டைப்ரிஸ் நதிக்கரையின் மேற்குப்பகுதி முழுவதும், மொசூல் நகரத்தின் பொருளாதாரக் கேந்திரமாகவும், மொத்தத்தில் மொசூல் நகரம் இந்தப் பகுதிகளுக்கு இதயத்துடிப்பாகவும் இருந்துவந்தது. ஐ.எஸ்-ன் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது.

மொசூல் நகரத்தைத்தான் ஐ.எஸ் இயக்கத்தினர் தங்களுடைய இறுதிப்புகலிடமாக்கிக் கொள்ளத் தீர்மானித்தனர். ஏனென்றால் பழமை வாய்ந்த இந்த நகரத்தின் தெருக்கள் மிக நீண்டதாகவும், பதுங்கிக் கொள்ள மிகவும் பாதுகாப்பானதாகவும் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் ஈராக் இராணுவம் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஐ.நா-வின் அறிக்கையின்படி, ஏறக்குறைய 5000 கட்டிடங்கள் சீர்குலைக்கப்பட்டு, சுமார் 500 கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன.

ஈராக்கில் அனைத்து மட்டங்களிலும் ஊழல், புற்றுநோய் போன்று பரவிவிட்டதால், இந்த நகரத்தைச் சீர்செய்வதற்கு எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அப்படி ஒன்றிரண்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும், நிலத்தின் கீழ் கன்னிவெடி புதைக்கப்பட்டிருப்பதாலும், அபாயகரமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாலும் சீரமைப்புப் பணிகள் மேலும் தொய்வடைகின்றன. மொசூல் நகரம் விடுவிக்கப்பட்ட 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 80 பேர் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது உயிரிழந்துள்ளனர்.

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மொசூல் நகரவாசிகள் சிலர், உயிரிழப்புக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் வீடுகளைச் சரிசெய்யும் பணிகளிலும், வேறுசிலர் தேனீர் மற்றும் பழக்கடைகள் நிறுவியும் வருகின்றனர்.

சுமார் 10 வருட காலமாக ஈராக் மீது அமெரிக்காவால் திணிக்கப்பட்ட போரின் எச்சங்களாக உருவானதுதான் ஐ.எஸ்.ஐ.எல் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம். அதிதீவிர இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட ஒரு அழிவை ஒத்ததாக இருக்கிறது மொசூல் நகரம்.வரலாற்றுக் காலம் தொட்டே பொருளாதாரக் கேந்திரமாக விளங்கிவந்த மொசூல் நகரம் இன்று வேட்டைக்காடாக மாறி நாதியற்றுக் கிடக்கிறது.

வான்வழித் தாக்குதலிலிருந்து தப்பிக்க இரு கட்டிடங்களுக்கிடையில் துளைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐ.எஸ் அமைப்பு

அல் முசாஃபீ மசூதி – வான் வழித் தாக்குதலில் தப்பிய மசூதிகள் சிலவற்றில் இதுவும் ஒன்று

ஐ.எஸ்-பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் சீரழிக்கப்படும் மொசூல் நகரம்

ஐ.எஸ் அமைப்பு தங்களின் இறுதிப்புகலிடமாகப் பயன்படுத்திய கட்டிடங்கள் சூழப்பட்ட மொசூல் நகரம்

மொசூல் நகரத்தின் இதயத்துடிப்பாக விளங்கிய பழமை வாய்ந்த கட்டிடம் உருக்குலைந்து நிற்கிறது

காசீம் யாஹ்யா வயது 75 – தேனீர் விடுதியொன்றில் காலை சிற்றுண்டி தயாரிக்கிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் ஐ.எஸ் அமைப்பால் தலை கொய்யப்பட்டும், கட்டிடங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டும் கொல்லப்பட்டனர் என்கிறார்.

வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிபயங்கர வெடிகுண்டுகளால் இராணுவத்தையும், அப்பாவி மக்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்றொழித்தனர்.

சீரழிக்கப்பட்ட மொசூல் நகரத்தைப் படம்பிடிப்பவர்கள் கைது செய்யப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் ஆளுநர்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையின் சின்னமாயிருந்த மொசூல் நகரத்தின் இப்போதைய அவல நிலை

ஏறக்குறைய 5000 கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்கிறது ஐ.நா-வின் அறிக்கை

ஐ.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமுமில்லாத  மொசூல் நகரம்.

வினவு செய்திப் பிரிவு
தமிழாக்கம்: வரதன்
நன்றி:  அல்ஜசீரா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க