கருத்துப்படம் : வேலன்

திமுக- பாஜக-பாமக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஆரம்பித்து முதல் பொதுக்கூட்டம் சென்னை கிளாம்பாக்கத்தில் நேற்று (06.03.2019) கோடிகளைக் கொட்டி கோலாகலமாக நடைபெற்றது. பொதுக்கூட்டதிற்கு செல்லும் சாலையெங்கும் கட்சிக்கொடிகள், தோரணம், வாழை மரங்கள் என்று தேசிய நெடுஞ்சாலையையே ஆக்கிரமித்திருந்தார்கள்.

சாலையில் இப்படி வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் அவ்வப்போது சொன்னாலும் அது ஆளும் கட்சிகளுக்கு பொருந்தாது போலும். மக்களோ சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள மர நிழலைத் தேடி அலைந்து கொண்டிருக்க, அவர்களை இங்கு நிற்கக் கூடாது, அங்கு நிற்கக் கூடாது என்று போலிசு விரட்டிக் கொண்டிருந்தது.

பொதுக்கூட்ட மைதானத்தின் நுழைவில் தடுப்பரண்கள் போல் பேனரை வைத்திருந்தனர். விஐபி செல்வதற்கு தனி வழி, மக்கள் செல்வதற்கு தனி வழி என்று அமைத்திருந்தார்கள். மைதானத்தில் உள்ளே கண்ணை பறிக்கும்படி கட் அவுட்கள்… மிதமிஞ்சி இருந்தன. சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் இரண்டு அடிக்கு பத்து போலீசு என்று காக்கி உடைகள் அதிகம் தென்பட்டன.

பல இடங்களில் மெட்டல் டிடெக்டரை கையில் வைத்துக் கொண்டு போலீசார் அலைந்து கொண்டிருந்தனர். கூட்டத்திற்கு உள்ளே செல்லும் மக்கள் மிகுந்த கெடுபிடிக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேடையில் அதிமுக தலைவர்கள் வழக்கத்தை விட அதிக இறைச்சலோடு முழங்கிக் கொண்டிருந்தனர். இதுதான் கொடுத்த காசுக்கு மேலே கூவுவது போலும்.

கூட்டத்திற்குள் சென்று போலிசின் வளையத்திற்குள் மாட்டிக் கொள்ளாமல் கூட்டத்திற்கு வெளியிலேயே அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தவர்களிடம் இந்த கூட்டணி கட்சிகள், தேர்தல் குறித்து கேட்டோம்.

முனுசாமி, சாலவாக்கம், உத்திரமேரூர், அதிமுக

முனுசாமி

“நான் உத்திரமேரூர் சாலவாக்காத்தில் இருந்து வாரேன். இவ்ளோ நேரம் கூட்டத்திற்குள்தான் குந்தியிருந்தேன். ஹெலிகாப்டர்ல வந்த மோடி என் கண்ணு ரெண்டுலயும் மண்ண வாரி கொட்டிட்டார். இடம் முழுக்க தூசு பறந்துச்சு. கண் எரிச்சல் தாங்க முடியல. அதான் வெளியில் ஓடி வந்துட்டேன்” என்றார்.

அவரிடம் “உங்களோடு கூட்டணி வைத்துள்ள பிஜேபிகாரர்கள் உங்கள் ஊரில் இருந்து வந்திருக்கிறார்களா?” என்று கேட்டதும், அவர் சிரித்தார். “அப்படி எல்லாம் இல்லங்க. ஒருத்தர் ரண்டு பேர்தான் அந்த கட்சியில சேருறாராங்க. அவங்கள எங்கத் தேடி புடிக்கிறது” என்றார்.  “நீங்கள் சொல்றது நேர்மாறாக இருக்கே. உங்க தலைவர்கள் பிஜேபியை புகழ்கிறார்களே” என்றோம். “அவங்க பிஜேபிகாரன்கிட்ட பொட்டி வாங்கிட்டாங்க. அதனால புகழத்தானே செய்வார்கள்” என்றார் வெள்ளந்தியாக.

அவரிடன், “இங்கு கொடியும், தோரணமும் அதிமுகவிற்கு இணையாக பிஜேபிக்கும் பறக்கிறதே…. ஜெயலலிதா இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா” என்று அம்மா அடிமைத்தனத்தை நினைவுபடுத்தினோம். அதற்கு அவர் “இந்த எடப்பாடி ஒபிஎஸ் எல்லாம் ஜெயலலிதாவிற்கு ஈடாக முடியுமா? இவங்க அனுபவிக்கிற பதவியே அவங்க (பிஜேபி)  தயவுல தானே இருக்குது. இவங்க வாங்குன பொட்டியில ராமதாசும் விருந்து மொய் வாங்கிட்டாரு. வீணாப்போன விஜயகாந்த இவங்க இப்ப ஹீரோவாக்கிட்டாங்க. என்னமோ  நடக்குது.”

“எங்களுக்கு ஒரு வண்டிக்கு ரூ.12000 தான் கொடுத்தாங்கன்னு சொல்றாங்க. மொத்தம் 52 பேர் வந்தோம் தலைக்கு 200 ரூபா, பிரிஞ்சி சாதம், இரண்டு டீ வாங்கி கொடுத்தாங்க. மேலிடம் கொடுத்தது ரூ.12000 தானான்னு நாங்க ஒன்றியத்த கேட்டு செக் பண்ண போறோம். எவ்ளோ வந்தாலும் எங்க ஆளுங்களும் எங்க வயித்துல தான் அடிப்பானுங்க. நான் இப்படி பேசுறதால ரெட்டை இலைக்கு ஓட்டு போட மாட்டேன்னு நெனக்காத. நான் பொறந்ததுல இருந்து ரெட்ட இலைதான் என் கண்ணுக்கு தெரிஞ்சது. எவன் பணம் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஃபுல் மப்புல என்ன இட்டுனு போனாலும் ஓட்ட ரெட்ட எலையில தேடி குத்திடுவேன்” என்றார்.

வெங்கடேசன், நடத்துனர், அரசு போக்குவரத்து கழகம். அதிமுக

வெங்கடேசன் ( இடதுப்புறத்திலிருந்து இரண்டாமவர்)

நான் படிக்கும்போதே அதிமுக மாணவரணியில் சேர்ந்தேன். என் உடம்பில் ஊறிப்போனது அதிமுக கட்சி. இப்போது இருக்கும் எடப்பாடி ஓபிஎஸ் என்ன பன்னாலும் அம்மாவுக்கு இணையாக முடியாது. அம்மா பிஜேபி-ய தண்ணி காட்டுனாங்க. அந்த மாதிரி இந்த தலைவர்களுக்கு தைரியம் கிடையாது. இவங்க தலைவரா இருக்க அவங்க தானே (பிஜேபி) முழுக்காரணம். அதற்கு நன்றி காட்டனும் இல்லையா? பணம் வேற பிஜேபிகாரன் கொடுத்திருக்கிறதா சொல்றாங்க. எல்லாம் சேர்ந்து செய்யுது. உண்மைய சொல்லனும்னா பிஜேபிகாரன் இல்லன்னா கட்சி இந்நேரம் காணாம போயிருக்கும். இல்லன்னா தினகரன் கைப்பற்றி இருப்பாரு” என்றார்.

பாஸ்கர், பொதுக்கூட்டங்களில் கட்சிக்கொடி விற்பவர்.

முப்பது வருடத்திற்கு மேலாக இந்தத்தொழில் செய்கிறேன். திருவண்ணாமலை-செஞ்சி அருகே என் பூர்வீகம். சிறு வயதில் 50 ரூபாயுடன் சென்னை வந்தேன். பல வேலைகள் செய்து கடைசியாக இந்தத் தொழிலில் செட்டில் ஆயிட்டேன். தமிழகத்தின் எல்லா கட்சி தலைவர்களின் படங்களையும் எப்போதும் ஸ்டாக் வைத்திருப்பேன். தலைவர்கள் காரில் கட்டும் கொடி, படங்களைத்தான் விற்பேன். அதுதான் அதிகம் விற்பானையாகும். கொடி, துண்டு எல்லாம் வேஸ்ட். மூட்டை தான் சுமக்கனும். வியாபாரம் இருக்காது.

அதிமுக, திமுக, பாமக, விசிக, காங்கிரசு, கொடிகளோடு இப்போது பிஜேபி கொடியும் சேர்த்து விட்டேன். அந்த அம்மா இருந்த வரையில் நல்லா வியாபாரம் ஆகும். இப்போது பாதியாக குறைந்து விட்டது.  எடப்பாடி ஓபிஎஸ் போன்றோரின் படங்களை யாரும் கேட்டும் வாங்குவதில்லை. கொடுத்தாலும் வாங்குவதில்லை.

கடைசியாக கன்னியாகுமரியில் நடந்த பிஜேபி மோடி கூட்டத்திற்கு போயிருந்தேன். அங்கு லாரி லாரியாக தொப்பி, தண்ணிர், டி. சர்ட் எல்லாம் கொடுத்தனர். அதை முறையாக பிரித்துக் கொடுப்பதற்க்குக்கூட அவர்களிடம் ஆட்கள் இல்லை. கிடைத்ததுவரை லாபம் என்று சிலரே பொட்டி பொட்டியாக வாரி சென்றனர்.

பிஜேபியே சொந்தமாக கட்சி கட்டி வேலை செய்தால்கூட மக்களிடம் இந்த மவுசு வந்திருக்காது. இந்த எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் தான் அதை தலையில் தூக்கி வச்சி விக்கிறாங்க. எங்களை மாதிரி பொழப்பு பாக்குறாங்க. பிஜேபி இல்லை என்றால் இவர்களும் இல்லை. அதற்கு நன்றிக் கடன் செய்கிறார்கள்.

நாமெல்லாம் வீட்டை லீசுக்கு எடுத்து தான் குடி இருப்போம். பிஜேபிகாரனுங்க கட்சியையே லீசுக்கு எடுத்துட்டானுங்க. கூட்டம் காட்டுறானுங்க” என்றார். ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்றதும்… “நான் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் போயிதான் என் பொழப்ப நடத்துறேன்… போட்டொ மட்டும் எடுக்காதிங்க.

பரஞ்சோதி,  பாமக, சேலம்.

பரஞ்சோதி

நான் பக்கா பாமகக்காரன். எங்க கட்சியினர் இந்த சுற்றுப்புற மாவட்டத்துல இருந்து மட்டும் வந்தா போதும்னு சொன்னதால எங்க கூட்டம் அதிகம் வர்ல. நான் சேலத்துல இருந்து டிக்கெட் எடுக்காமத்தான் வந்தேன். டிக்கெட் எங்கன்னு டி.டி.ஆர் வந்து கேட்டான். என்னோட டிக்கெட்ட மோடிகிட்ட கேளு. அவருதான் என்ன கூட்டத்துக்கு கூப்பிட்டாரு என்றேன். திரும்ப வரும்போதும் நீ…தான் வருவியா.. அப்பவும் டிக்கெட் எடுக்க மாட்டேன்னு சொன்னேன். அசந்துட்டான்.

அவரு சரி போ.போ.. அங்க போயி கீழ உக்காருன்னு சொன்னார்.

நாங்க பிஜேபிகூட கூட்டு வச்சதால உங்களுக்கு கேவலமா இல்லையான்னு கேக்குறாங்க… எங்களுக்கு அதுமாதிரி எதுவும் இல்ல. ராஜீவ்காந்தி சாவுக்கு திமுககாரன்னு காரணம்னு சொல்லிட்டு அவனுங்கள ஓட ஓட வெரட்டினான் காங்கிரசுகாரன். அப்போ சேலத்துல பாமககாரன் வீட்டுலதான் திமுககாரன் ஒளிஞ்சிக்கினானுங்க. ஏன்னா காங்கிரசுகாரன் எங்க வீட்டுல வந்தா நாங்க வெட்டுவோம்னு திமுககாரனுக்கும் , காங்கிரசுகாரனுக்கும் தெரியும். எங்களால திமுககாரன் உயிர் பொழச்சானுங்க. கடைசியில திமுககாரனோட கொடிய தான் காங்கிரசுகாரன் வெட்டினான். அவனுங்க கூடவே திமுககாரனுங்க கூட்டணி வச்சிருக்கானுங்க .. நாங்க வச்சா என்ன தப்பு…” என்றார்.

வி.சி.குமார், சென்னை ராயபுரம்.
2006 ராயபுரம் சட்ட மன்ற தொகுதி பிஜேபி வேட்பாளர்.

வி.சி.குமார்

கொடியை கையில் ஏந்தியபடி வந்துகொண்டிருந்தவரிடம், இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றோம்..

அவரோ… அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என்றார்.

தமிழ்நாட்ல ஜெயிக்குமா என்றதும்….

இங்க..என்று இழுத்துக்கொண்டே… எங்க இலக்கு அடுத்த சட்ட மன்றத்தேர்தல்தான் என்றார்.

மோடி பல தடவை அதிமுக கூட்டத்திற்கு வந்தும் 5 சீட் தான் கொடுத்திருக்கிறார்களே ஏன் என்றோம்….

அவர் ஏதோ பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் திடீரென வந்த பிஜேபி ஆட்கள் அவரை தடாலடியாக அழைத்து சென்றனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த பிஜேபிகாரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிகம் போனால் ஆயிரம் பேர் பிஜேபி தொப்பி, கொடியுடன் குறுக்கும் நெடுக்குமாக திரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் பங்குக்கு கருப்பு சூத்திரர்களை திரட்டி வந்திருந்தனர். தாமரை தொப்பி, தாமரை விசிறியோடு  ஜோடித்து இறக்கி விட்டிருந்தனர். ஒரு சிலர் மையிலாப்பூர் கோவிலுக்கு போவதுபோல் பட்டு வேட்டி சரசரக்க மாமிகளுடன் உற்சாகமாக மோடியைப் பார்க்க வந்திருந்தனர்.

பாமக கட்சியின் இளைஞர்கள் உள்ளூர் அளவில் தங்களுக்கும் அதிகார தாழ்வாரங்களை திறந்து விட்ட சந்தோசத்தில் கூட்டத்தில் மிதந்தனர். அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, ஏ.சி சண்முகம், ஜான் பாண்டியன், தனியரசு, பூவை ஜெகன் மூர்த்தி, சேதுராமன் இப்படி பட்ட சாதித் தலைவர்களின் தொண்டர் படையை எங்கும் காணமுடியவில்லை.

பொதுவாக அதிமுக சார்பாக வந்திருந்த முதியவர்கள் நூறு நாள் வேலைக்கு வருவது போலவே சிவனே என்று உக்காந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் இதற்கு முன் போன பல மாநாட்டு அனுபவங்களை பேசிக்கொண்டு அதற்கு வாங்கிய பணம், சாப்பாடு இப்போது வாங்கிய பணம், சாப்பாடு என்று பேசிக்கொண்டு இருந்தனர்.

கொஞ்சம் தள்ளி கும்பலாக இருந்த பெண் தொழிலாளிகள், வயதானவர்களிடம் மண்டைக்காயும் வெயிலில் வந்திருக்கிறீர்களே மோடியை உங்களுக்கு புடிக்குமா என்றோம்.

ஆமா… எங்களுக்கு புடிக்கும் என்று கேலி செய்து சிரித்தனர். உடனே….. வாங்கடி பேர் கொடுக்கனுமாம்.. கணக்கெடுக்கிறார்கள் என்று ஓடினர். கூட்டத்தில் மற்றொரு பெண் ஏன்…டி நம்ம வண்டிய எடுக்க மாட்டானாம். டீசல் போடுறதுக்கும் பணம் கொடுக்கலயாம்..இட்னு வந்தவனையும் காணோம். நாம எப்ப போறது டி.. என்று விசாரித்தவாறே நகர்ந்தனர். இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களின் அதிகபட்ச அரசியலே பேசிய காசைக் கொடுத்து, நல்ல முறையில் உணவு தந்து, பத்திரமாக நேரத்திற்கு ஊர் போய்ச் சேர முடியுமா என்றே இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த பல அதிமுக தொண்டருக்கும் அப்பாவி மக்களுக்கும் அதிமுக+பாஜக கூட்டணி என்பது பெரிய அதிர்ச்சியாக இல்லை. அவர்களைப் பொருத்தவரை பாஜக என்பது ஒரு கட்சி. அந்த கட்சியால் நமக்கு என்ன ஆதாயம் என்ற அளவில்தான் சிந்திக்கிறார்கள். அவர்கள் உலகில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் என்பதைத் தாண்டி கட்சி, அரசியல் மற்றும் கோ பேக் மோடிக்கு எல்லாம் இடமில்லை.

கூடுதலாக பாமக மற்றும் இதர கட்சிகள் சேர்ந்திருப்பதால் இக்கட்சிகளின் மக்கள் பாஜகவை பிழைப்புக்கான கட்டப் பஞ்சாயத்து தலைவனாக பார்க்கிறார்கள். பாரதிய ஜனதா மக்கள் விரோத கட்சி, ஒரு மதவெறிக் கட்சி அதனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அரசியலை இந்த மக்களிடம் உருவாக்க நாம் தீவிரமாக முயல வேண்டும். இணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் “கோ பேக் மோடி”  முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம்.

– படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க