சண்டேஸ்வரா நிறுவனத்திற்காக வங்கிகள் முடி வெட்டிக் கொள்ளும் 65% தொகையும் – கஜா புயலுக்கான நிவாரண தொகையும் !

சாதாரணமாகவே நாமும் நமது பத்திரிக்கைகளும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை. இப்போது தேர்தல் வேறு வந்து விட்டது, தொகுதி பங்கீடு, எந்த கட்சி யாருடன் கூட்டு சேருகிறார்கள். எந்த மக்கள் பிரதிநிதி எவ்வளவு லஞ்சம் வாங்கினார், எத்தனை கிரிமினல் வழக்குகள் அவர் மீது உள்ளன, போன்ற செய்திகள் மட்டுமே வந்து கொண்டு இருக்கும். இத்துடன் ‘நமது’ சங்கிகள் விடும் புருடாக்கள் இலவச இணைப்பு.

ஆனால் நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் திரைக்குப் பின்னால் நடந்து கொண்டே இருக்கின்றன, இருக்கும்… அதில் சிலவற்றின் பட்டியல்:

  • IL&FS என்ற நிறுவனம் கடனை கட்டமுடியாமல் பிரச்சனையில் உள்ளது என சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. இப்போது அதைப் பற்றி அதிகமாக செய்திகளை பார்க்க முடிவதில்லை. இது போன்ற பெருநிறுவனங்கள் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் செய்வதையே இதற்கும் அரசு செய்தது. குழு ஒன்றை அமைத்து அந்தக் குழு இந்த நிறுவனத்தில் என்ன நடந்தது என்று விசாரிக்கும் என்று சொல்லி கடையை மூடியது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு அந்த நிறுவனம் பற்றி பெரிதாக எந்த செய்தியும் இல்லை. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள், அந்த நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு காரணமாக இருந்தவர்கள் என எவரும் தண்டிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. அந்த நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் பெற்ற கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டும் என்று கூறுகிறார்கள்.
  • எஸ்ஸார் ஸ்டீல் (Essar Steel) என்ற நிறுவனம் வாங்கிய கடனை கட்டாமல் திவால் என்று அறிவிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை ஏலம் விடும் பணி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) நடந்து வந்தது. இந்த தீர்ப்பாயத்திற்கு வரும் இதுபோன்ற வழக்குகளை 270 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயம் என்று இழு-இழு என்று இழுத்து இரண்டு வருடங்களாக முடிவுக்கு வராமலேயே உள்ளது. ஒருவழியாக கடந்த வாரம் ஆர்சிலர் மிட்டல் (ArcellorMittal) என்ற நிறுவனம் ஏலத்தில் வென்றதாக தீர்ப்பாயம் அறிவித்தது.இந்த அறிவிப்பு வரும் முன்னரே கடன் முழுவதையும் தானே செலுத்தி விடுவதாக எஸ்ஸார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ருயா (Ruia) குழுமம் தெரிவித்தது. ஒரு நிறுவனம் திவால் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏலம் விடும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் பொழுது, தாய் நிறுவனம் கடன் முழுவதையும் திருப்பி செலுத்த முடியுமா… ? முடியாதா… ? என்பதுதான் இப்போது நீதிமன்றங்கள் முன் உள்ள பிரச்சினை. அவ்வாறு திருப்பி செலுத்த முடியாது, ஏலத்தில் வென்ற ஆரசிலர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் செல்லும் என்று கடந்த வெள்ளியன்று தீர்ப்பாயம் (NCLT) தீர்ப்பு கூறியது. ருயா குழுமம் இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு செல்லும், அதனால் இதில் எது சரி என்று தீர்ப்பு வரப்போகிறது, எப்போது வரப்போகிறது, என்று நமக்கு தெரியாது. தீர்ப்பே வந்தாலும் என்ன காரணத்திற்காக அந்த தீர்ப்பு வந்தது என்று நமக்குப் புரிய போவது இல்லை, யாரும் புரியவைக்கப் போவதும் இல்லை.
    அதனால் நமக்கு புரியும் விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். ருயா குழுமம் மொத்த கடனையும் திருப்பி செலுத்தி விடுவதாக சொல்கிறது, அந்தத் மொத்த கடன் தொகை சுமார் 54,000 கோடி. ஆர்சிலர் நிறுவனம் வென்ற ஏலத்தொகை ரூ. 42,000 கோடி, அதாவது ஆர்சிலர் நிறுவனத்துக்கு எஸ்ஸார் ஸ்டீல் செல்லும் பட்சத்தில் கடன் கொடுத்தவர்களுக்கு கிடைக்கப்போகும் தொகை ரூ. 42,000 கோடி. ஆக கொடுத்த கடனில் 12,000 கோடி கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
  • Zee தொலைக்காட்சி நிறுவனம் நம் அனைவருக்கும் தெரிந்த நிறுவனம்தான். அதன் தாய் நிறுவனத்தின் பெயர் எஸ்ஸெல் குழுமம் (essel group). எஸ்ஸெல் குழுமம் அதனுடைய ரூ. 13,500 கோடி கடனை கட்டுவதற்காக Zee தொலைக்காட்சி நிறுவனத்தை விற்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இதற்குப் பின்னாலும் என்ன நடக்கிறது என்று பெரிதாக செய்திகள் இல்லை.

இந்த நிறுவனங்கள் எல்லாம் நிதி சிக்கலில் மாட்டுவது என்பதையே நம்மால் நம்ப முடியவில்லை. இந்த நிறுவனங்களை எல்லாம் விட பிரபலமான நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் திவால் என்று அம்பானியே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) போய் சொல்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

அனில் அம்பானியின் அனைத்து நிறுவனங்களும் திவால் ஆகவில்லை, அவருடைய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் மட்டுமே திவாலானதாக அனில் அம்பானி இந்த தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நமக்கு அனைவருக்கும் பரிச்சயமான நிறுவனம்தான்.

மொபைல் போன்கள் வெகுமக்களுக்கு மத்தியில் அதிகம் புழக்கத்தில் இல்லாத பொழுது ரிலையன்ஸ் நிறுவனம் 500 ரூபாய்க்கு செல்போன்களை விற்பனை செய்தது, பேச்சுவழக்கில் அதை ‘கொம்பு செட்’ என்று கூறி வந்தோம். அந்த கொம்பு செட்டை விற்ற நிறுவனம் தான் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இப்போது அந்த நிறுவனம் திவால் ஆகி விட்டது.

மொபைல் போன் விஷயத்தில் இந்தியா ஒரு புரட்சியை செய்து விட்டது என்று புளகாங்கிதம் அடைவோருக்கு இந்த செய்திகள் ஒரு பொருட்டாக படுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் ஏர்செல் என்ற நிறுவனமும் திவாலானது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கட்டவேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா, ரூ. 45,000 கோடி. அனில் அம்பானி அவர்களின் மற்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுவதாக தெரியவில்லை.

படிக்க:
♦ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி !
♦ ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !

எரிக்சன் என்ற நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளித்த சேவைக்காக கொடுக்க வேண்டிய சுமார் 500 கோடி ரூபாயை ஒப்புக்கொண்டபடி கொடுக்காத வழக்கில், அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அந்த தொகையை எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்காவிட்டால் சிறைக்கு அனுப்பப்போவதாக உச்ச நீதிமன்றம் அம்பானியை மிரட்டியுள்ளது. 500 கோடி என்பது அம்பானியை பொருத்தவரை சொற்பமான தொகை, ஆனால் அதையே அவர் செலுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பை செய்கிறார் என்றால் நிலைமை எவ்வாறு உள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

‘ஏழைத் தாயின் மகன்’ இவ்வளவு குளறுபடிகளுக்கும் கேள்விகளுக்கும் மத்தியில் ரஃபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு சாதகமாக முடிப்பதில் ஏன் இவ்வளவு அக்கறையும் முனைப்பும் காட்டினார் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இவைகள் எல்லாம் இவ்வாறு இருந்தாலும் இந்த கட்டுரை இவைகளை பற்றியது அல்ல. ‘ஏழைத்தாய் மகனி’ன் நெருங்கிய நண்பரான மெகுல் சோக்சி (Mehul Choksi) ‘யாருக்கும் தெரியாமல்’ நாட்டைவிட்டு தப்பியோடிய சமயத்தில் குஜராத்தை சேர்ந்த இன்னொரு தொழிலதிபரும் தப்பி ஓடினார்.

அவர் பெயர் நித்தின் சண்டேசரா. சண்டேசரா தப்பி ஓடி விட்டார் என்று அக்டோபர் 2018 -ல் செய்தி வந்தது. அவரது நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் கட்டாமல் இருக்கும் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் என்றும் செய்தி வந்தது.

அதற்குப் பிறகு இந்த வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு (NCLT) சென்றது. அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, எந்த செய்தியும் இல்லை.
Business Standard என்ற செய்தித்தாளில் 9 மார்ச், 2019 அன்று ‘Sterling Biotech: Lenders agree to 65% haircut’ என்ற தலைப்பிட்ட செய்தி வந்தது. இதன் தமிழாக்கம்: ‘ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரத்தில் கடன் கொடுத்தவர்கள் 65% முடிவெட்டிக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள்’.

அது என்ன ‘Haircut’ முடிவெட்டுவது, என்று நமக்கு தோன்றலாம். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பதை கேள்விப்பட்டு இருப்போம், அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த ‘haircut’. இங்கு மொட்டை அடிக்கப்படுவது வங்கிக்கு, மொட்டை அடிப்பவர் கடன் வாங்கியவர்.

இந்த செய்தியில் மேலும் உள்ள விவரங்களைப் பார்ப்போம். ஸ்டெர்லிங் பயோடெக் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் கடன் தொகை ரூபாய் 15,000 கோடி. செய்தி என்னவென்றால், இந்த நிறுவனத்தை கட்டுப்படுத்துபவர்களான சண்டேசரா குழுமம் இந்த கடன் தொகையில் 35% திருப்பி செலுத்த முடியும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் சொல்கிறார்கள் என்பது பெரிய செய்தி இல்லை, கடன் வாங்கியவர்கள் மிகக் குறைவான தொகையை திருப்பித் தருவதாக சொல்வது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. நம்மால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், கடன் கொடுத்தவர்களும் 35% மட்டுமே தந்தால் போதும் என்று ஒப்புக்கொள்வதுதான்.
இந்த 35 சதவீதத்தையே ஏன் திருப்பி தருகிறார்கள் என்று நமக்கு தோன்றலாம், அதற்கு காரணம் இருக்கிறது.

எந்த ஒரு நிறுவனமும் வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்த தவறினால் கடன் கொடுத்தவர்கள் அந்த நிறுவனத்தை திவால் என்று அறிவித்து ஏலத்தில் விட்டு கடனை வசூல் செய்து தரும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) முறையிட முடியும்; அவ்வாறு கடன் தந்த வங்கிகள் செய்ய வேண்டும் என்பது தான் சட்டம் (IBC). மேலே சொன்ன எஸ்ஸார் வழக்கில் அவ்வாறு தான் நடந்தது.

ஆனால் இந்த ஸ்டெர்லிங் பயோடெக் விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வங்கிகள் வழக்குத் தொடுத்து இருந்தாலும், சண்டேசரா குழுமம் 35% கடனை திருப்பித் தருகிறோம் என்று சொன்னவுடன் அதற்கு ஒப்புக்கொண்டு இந்த வழக்கை கடன் தந்த வங்கிகள் திரும்பப் பெற்றுக் கொண்டன.

15,000 கோடி ரூபாய் கடன் கொடுத்து விட்டு அதில் 35% மட்டும் வந்தால் போதும் என்று இந்த வங்கிகள் கூறுகின்றன. அதாவது, சுமார் 5000 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறுகின்றன. மீதி 10,000 கோடி சுவாஹா தான்!

இவ்வளவு பெரிய தொகைகளை எந்தவித சத்தமும் இல்லாமல் ஸ்வாஹா செய்து கொண்டிருக்கும் பொழுது நமது செய்தி ஊடகங்கள் அதிமுக தேமுதிக-வுக்கு நான்கு தொகுதிகள் கொடுப்பது சரியா தவறா, மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தாமல் இருப்பது அரசியலா அரசியல் இல்லையா என்று பத்து பேரை வைத்து விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாமும், தேமுதிகவும் மூணு தொகுதியும் தான் உலகிலேயே முக்கியமான செய்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பக்கம் திரும்பினால், ஏழைத் தாயின் மகன் ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ரோடுகளை திறப்பதிலும், நிலமே கையகப் படுத்தப்படாத திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதிலும் முனைப்பாக உள்ளார். அதுபோக மோடியை கேள்வி கேட்பது இராணுவத்தை கேள்வி கேட்பதா இல்லை நாட்டையே கேள்வி கேட்பதா என்பது போன்ற எதற்கும் உதவாத கேள்விகளை கிளப்புகின்றனர்.

இங்கே 10,000 கோடிகள் சுவாஹா ஆவதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், வெகுமக்களுக்கு 100-களும், 1000-களும் அதிகம் போனால், லட்சம்களும் தான் பரிச்சயம். 10,000 கோடிக்கு எத்தனை பூஜ்யங்கள் வரும் என்று கணக்கிடவே நமக்கு சிறிது நேரம் தேவைப்படும். எத்தனை பூஜ்யங்கள் என்று கணக்கிட்டாலும், நம்மால் அந்த தொகையை புரிந்துகொள்ள முடியாது. ஆகையால் நமக்கு தெரிந்ததை வைத்து புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

  • கொங்கு மண்டல மக்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றியதாக இவர்கள் கூறிக்கொள்ளும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய தொகை ரூ. 1,800 கோடி தான்.
  • 2019-20 ஆண்டுக்கு டெல்லி அரசு கல்விக்கு ஒதுக்கிய தொகை 15,000 கோடி.
  • மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு 2016-17 ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ. 10,000 கோடி.
  • கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிவாரண தொகை 15,000 கோடி. இந்த தொகையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்பது நினைவில்கொள்ள வேண்டிய விஷயம்.

ஆக, கஜா புயல் நிவாரணத்திற்கு தேவைப்படும் தொகைக்கு இணையான ஒரு தொகையை சண்டேசரா குடும்பத்திற்காக வங்கிகள் முடி வெட்டிக் கொள்கின்றனர்!

இவை அனைத்துக்கும் தீர்வுகாண நாம் சொல்ல வேண்டியது :
நமும்கின் அப் மும்கின் ஹே! (‘Namumkin ab mumkin hai’ – Impossible is possible now)

செய்தி ஆதாரங்கள் :

– அருண் கார்த்திக்

1 மறுமொழி

  1. காஜா புயல் நிவாரணத்துக்கு எவ்வளவு தேவையோ அதற்கு இணையான தொகை வங்கிகளுக்கு ஹேர்கட் தொகை.. அருமையான கட்டுரை.
    உண்மையில் வங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக வாடிக்கையாளர்கள், சேமிப்பாளர்கள் மொத்தத்தில் மக்கள் தலையை மொட்டை அடிக்கின்றன. அன்னைக்கு டீ ஆத்துனதா சொன்னவர் இன்னைக்கு கத்தி தீட்டித் தருகிறார்.
    எல்லாம் குடியும் குட்டியுமா குசாலா இருங்கடா… மோடிக்கும் இப்பவே லண்டனுக்கு ஒரு டிக்கெட் போடலாமா? செலவு கொஞ்சம் குறையும் இல்ல…

Leave a Reply to குறுக்குசால் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க