ருபது வருடங்களுக்கு முன்பு களைகட்டியிருக்கும் கிண்டி மடுவங்கரையில் உள்ள ஸ்டீல் மார்கெட், தற்போது ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.

படிக்கட்டு கைப்பிடிகள், பால்கனி தடுப்புகள், ரசாயனத் தொட்டிகள் மற்றும் மேசை – நாற்காலிகள் போன்றவை தயாரிக்கத் தேவையான SS ஸ்டீல், பைப், இரும்பு தகடுகளின் விற்பனைச் சந்தை, கிண்டி காந்தி மார்கெட்டில் உள்ளன.

இரும்பு, எஸ்.எஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளிலிருந்து கழிவுகளைச் சேகரித்து, அதிலிருந்து நல்லவற்றைச் சேகரித்து, அதுகூடவே மேலும் சில புதிய பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வந்தார்கள். ஜி.எஸ்.டி வரி அமுலாக்கத்திற்கு பிறகு தொழிலையே கைவிட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், சிறுவியாபாரிகள்.

கிண்டியில் கிருஷ்ணா ஸ்டீல்ஸ் கடையை நடத்திவரும் கிருஷ்ணசாமியை சந்தித்தோம்.

தொழில் எப்படி இருக்கு? என்று கேட்டதுமே “எங்க தொழில பத்தி என்னத்த சொல்லச் சொல்றீங்க, அந்தக் கேள்வியே எங்கள எரிச்சலூட்டுது. முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை” – என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டு, தொடர்ந்தார்.

திரு கிருஷ்ணசாமி

“படிக்கட்டுகளுக்குத் தேவையான SS கைப்பிடி, பைப்புன்னு விக்கிறோம். நம்மிடம் சின்ன சின்ன வியாபாரிகள் வாங்குவாங்க. அப்புறம் சொந்தத் தேவைகளுக்காக வீடு, கடைகளுக்கு நேரடியாகவும் வாங்கிப் போறாங்க.

ஒரு பொருள கம்பெனியிலிருந்து டீலர் மூலமாத்தான் வாங்க முடியும். இதுல கம்பெனிக்குத் தேவையான ஜி.எஸ்.டி வரிய டீலர்கிட்டே புடிச்சுக்குவான், டீலர் எங்ககிட்டே புடிச்சுக்குவாங்க. நாங்களும் நட்டத்துக்குக் கொடுக்க முடியாதே, அது சின்ன அளவில வாங்கக்கூடிய பொதுமக்கள் தலையிலதான் விடியுது. அதனால, எங்ககிட்டே நேரடியா வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களும் படிப்படியா கொறைஞ்சிட்டாங்க.

சரி, பழையபடி ஸ்கிராப் தொழிலையே முழுமூச்சா செய்யலாமுன்னு பாத்தா, பக்கத்துல இருந்த ஸ்டீல் ஃபாக்டிரியெல்லாம் சிட்டிக்குள்ளே இருக்கக்கூடாதுன்னு சொல்லி, திருமுடிவாக்கம், திருமழிசைன்னு கொண்டு போயிட்டாங்க. முன்னெல்லாம், ஒருபொருள எடுத்துவர ஏத்துக்கூலி எறக்குக்கூலியும் போலீசுக்குக் கொடுக்குற மாமூலும்தான் செலவாகும். இப்போ என்னடான்னா டிரான்போர்ட்டோட சேத்து, ஜிஎஸ்டி-க்கும் கட்டி அழவேண்டியிருக்கு.

கிருஷ்ணா ஸ்டீல்ஸ் நிறுவன ஊழியர்

எந்த ஒரு தொழிற்கூடமும் கச்சாப்பொருட்களை வாங்கும்போது அதுக்கு ஜி.எஸ்.டி கட்டித்தான் வாங்க முடியும். உற்பத்தி செய்த ஒரு பொருளை விற்கும்போது, மொத்த கச்சாப் பொருளுக்கும் சேர்த்து வரி வாங்க முடியாது. காரணம், தொழிற் போட்டியினால் குறைவான விலை வைத்தால்தான் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியும். மீதமுள்ள கச்சாப் பொருளின் கழிவில் அதன் விலையும் ஜி.எஸ்.டி-யும் அடங்கியிருக்கு. அந்தக் கழிவை நாங்கள் எடுக்கும்போது, அது எங்க தலையிலதான் விடியுது.

இந்த நடைமுறையினால், சிறிய வியாபாரிகளான எங்களால் தாக்குபிடிக்க முடியல. சரி, அதையே கொஞ்சம் பெருசா செய்யலாமுன்னு நெனச்சா, கழிவ சேர்த்து வைக்க குடோன் வசதியும் கெடயாது. அதனால, வர்ற பொருள உடனே கைமாற்றிக் கொடுத்தாகணும். இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கிராப்பின் விலையை அதிகப்படுத்துகிறார்கள். குடும்பம் வாழனுமுன்னா வேறு வழியில்லாமல் அதிக வெலகொடுத்து வாங்க வேண்டியிருக்கு. ஆதலால், எங்கள மாதிரி சிறிய வியாபாரிகள் படிப்படியாக அழிஞ்சுகிட்டிருக்கோம்.

படிக்க:
♦ பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?
♦ ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்

முன்னெல்லாம் கம்பெனிகாரங்க, அவங்க எடத்திலிருந்து ஸ்கிராப்ப எடுத்துப்போனா போதுமுன்னு தள்ளிவிடுவாங்க. ஆனா, இப்போ தொழில் போட்டி அதிகமானதுனால, ஸ்கிராப் போடுற கம்பெனிகாரனே ரேட்ட.. தீர்மானிக்கிறான்.

அதுமட்டுமல்ல, சேகரித்த இந்த உலோகக் கழிவுகளை நாங்கள் நேரடியாக உருக்காலைக்கு அனுப்ப முடியாது. முதலில் மும்பை மற்றும் வட இந்தியாவில் உள்ள மார்வாடி சேட்டுகளுக்கு கொடுப்போம். அதை அவர்கள் உருக்காலைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். காரணம் அவர்களுக்குத்தான் டை-அப் உள்ளது. மாதத்துக்கு 300 டன் அனுப்புனாத்தான் அவங்களுக்கு சர்வீஸ் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, முதல் பேமெண்டே 60 நாட்களுக்குப் பிறகுதான் நம்ம கைக்கு வரும். அதையும் தொடர்ச்சியா அனுப்பும்போதுதான் அதில் நீடிக்க முடியும். நம்மால செய்ய முடியுமா?

இனி, என்ன செய்யப் போறோமுன்னு எதுவும் புரியல. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் தம்பி. ஊருல மூட்ட தூக்குனேன். அப்புறம் நல்லா சம்பாதிக்கனுமுன்னு சென்னை மும்பைன்னு அலைஞ்சி ஸ்கிராப் எடுக்குற கடையில வேலைக்குச் சேர்ந்து படிப்படியா முன்னேறினேன்.

செழிப்பா வாழ்ந்த நேரம் அது. அப்பப்போ ஊருக்கு போயி வருவேன். கோயில்… கொளமுன்னு செலவு பண்ணுவேன். ஒரு அம்மன் கோயிலயே கட்டிக்கொடுத்திருக்கேன்னா பாருங்களேன். அப்படி சொந்த ஊருக்கு போகும்போது, சின்ன வயசுல என்கூடவே மூட்ட தூக்குன சொந்தக்காரன்தான் இப்போ ஞாபகத்துக்கு வர்றான். “நாம எவ்வளவோ முன்னேறி வந்திருக்கோம், இவன் பொழைக்க வழியில்லாம கிராமத்துல மூட்ட தூக்கியே செத்துடுவான்போலன்னு…” அவன நெனச்சி கவலப்பட்டிருக்கேன். ஆனா, இப்போ நான் அந்த மூட்டயக்கூட தூக்க முடியாது மூப்படைஞ்சி நிக்கிறேன்.” என்றார் சோகமாக…

1 மறுமொழி

  1. வழக்கமாக சென்று பெயிண்ட் வாங்குகிற ஒரு கடை [ கடல் ] — பெரிய கடை — தரைமட்ட தளத்தில் முதலாளி – மற்றும் பில் போடுபவர்கள் — பணம் வாங்குபவர்கள் — கஸ்டமர்கள் என்று ஜே –ஜே — என்று எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் — மேல்தளத்தில் அவர்களின் அலுவலகம் கணணிகளோடு சிப்பந்திகள் என்று ஒரு புறமும் — மறு புறம் வித- விதமான சுவர் மற்றும் சீலிங்கை அழகு படுத்தும் பல கம்பனிகளின் பெயின்டிங் டிசைன்கள் கஸ்டமர் பார்வைக்கும் — அவர்களின் சம்பந்தேகங்களை போக்கும் சிப்பந்திகளும் நிரம்பி இருப்பார்கள் —

    அடித்தளத்தில் அணைத்து கம்பெனிகளின் பெயின்டிங் கலவை மெஷின்களும் இருக்கும் — சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் — நமக்கு தேவையான கலரை கூறியவுடன் — கணனியில் அவர்கள் அதே கலரில் பல விதங்களை காட்டி நம்மை அசத்தி விடுவதோடு மட்டுமில்லாது — நம்முடை வீட்டின் அறைகளுக்கு எந்த கலர் அடித்தால் எப்படியிருக்கும் என்பதையும் காட்டுவார்கள் … இதெல்லாம் இந்த பாழாய்ப்போன செல்லா நோட்டு பிரச்னை — ஜி.எஸ்.டி வரி என்று வருவதற்கு முன் நடந்துகொண்டு இருந்தவை … !

    தற்போது சென்றால் முதலாளியும் — ஒரே ஒரு சிப்பந்தியும் — ஒரு சில லைட்டுகளும் மட்டுமே எரிந்துகொண்டு அவர்கள் விட்டத்தை பார்த்துக்கொண்டு குந்திகிட்டு இருக்கிறார்கள் — நான் எப்போதும் போல சென்று என்னோடு வந்தவர்களையும் மேல்தளத்தில் உள்ள பெயின்டிங் டிசைன்களை காட்டலாம் என்று அழைத்து சென்றால் அந்த ஒரே ஒரு சிப்பந்தி உடன் வந்து அங்கங்கே உள்ள லைட்களை போட்டு ஓரிரு நிமிடங்கள் காட்டிவிட்டு கேழே இறங்க சொல்லிவிட்டார் —

    சரி அடித்தளத்தில் பெயின்டிங் கலக்கும் இடத்தை பார்க்கலாம் என்றால் அதை பெரிய பூட்டு போட்டு பூட்டி வைத்து இருக்கிறார் — ஏன் என்று கேட்டதற்கு — இந்த வீணாப்போன வெறும்பய ஆட்சியில் எங்களின் வியாபாரம் சுத்தமா படுத்துக்கிட்டது காரணம் வரி — வரி வரியேதான் — கட்டுமானத்தொழில் நொடிந்து போய் விட்டதால் இங்கே நாங்கள் ” ஈ ” ஓட்டிக்கொண்டு இருக்கிறோம் — அதுவுமில்லாமல் மணல் தட்டுப்பாடு — தொழிலாளர் கூலி உயர்வு — ஜி.எஸ்.டி வரியினால் விலைவாசி ஏகத்துக்கும் உச்ச நிலையில் இருப்பது என்று பல காரணங்களை அடுக்கினார் முதலாளி .. பல லட்சங்களை தினமும் வியாபாரம் செய்த அந்தக்கடை — இன்று சில நூறுகள் கூட செய்ய முடியாத பரிதாப நிலை —

    இதைபோல் பல தொழில்களும் — வியாபார நிறுவனங்களும் — சிறு -குறு வியாபாரிகளும் தொழிலாளர்களும் — வாங்கும் திறனற்ற மக்களும் படுகிற இன்னல்கள் தான் — ” இந்தியா ஒளிர்கிறது ” என்று கூறி ஏமாற்றுகிறார்கள் — ஒருத்தன் என்னடா என்றால் ஒரு கல்யாணபத்திரிக்கை ஒன்றரை லட்சத்திற்கு அடித்து தனது பெருமையை காட்டறான் — இதுதான் ” டிஜிட்டல் ” இந்தியா என்று மார் தட்டுறான் …!!!

Leave a Reply to s.selvarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க