முதன்முதலாக ஒரு ஆணை நிர்வாணமாக பார்த்தபோது, நான் அழுதேன். கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த எனக்கு, என் உடல் உறுப்புகளைக்கூட நான் பார்த்ததில்லை. மேலும், சுயஇன்பம் கொள்வதற்காக நான் நரகத்துக்குப் போவேன் என நினைத்தேன். பாலுறவை தவிர்ப்பது என்பது மட்டும்தான் எனது பள்ளியிலும் வீட்டிலும் சர்ச்சிலும் நான் கற்றுக்கொண்டது. இது என்னை பல ஆண்டுகளாக அவமானத்திலும் தனிமையிலும் பயத்திலும் வைத்திருந்தது.

கோலரோடா, உட்டா, இடாஹோ போன்ற இடங்களில் பரந்துபட்ட பாலியல் கல்விக்கு அனுமதி குறித்த சமீபத்திய சச்சரவுகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். பாலியல் கல்வியாளராகவும் தொழில்முனைவோராகவும், நான் ஆயிரக்கணக்கான தவறாக கற்பிக்கப்பட்ட இளைஞர்களுடன் பேசியிருக்கிறேன். இது எத்தகைய மன மற்றும் உடல்நல சேதத்தை உருவாக்கிவிடுகிறது என்பதை நான் அறிவேன்.

பாலுறவு குறித்து குழந்தைகளுடன் பேசுவது பெற்றோருக்கு ஏற்படுத்தும் சங்கடங்களை பற்றி அமெரிக்கர்கள் சிரிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது பரந்துபட்ட பாலியல் கல்வியை ஒருசில மாணவர்கள் பெறுகின்றனர். 1990-களிலிருந்து பழமைவாத செயல்பாட்டாளர்கள், பழமைவாத அதிபர்களின் துணையுடன் பாலியல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தடுத்துவிட்டார்கள். பள்ளிகள் உள்ள ஒரே திட்டம் பாலுறவை தவிர்க்க சொல்வது என்பது மட்டும்தான்.

அமெரிக்காவில் பாதிக்கும் மேலான பள்ளிகளில் எந்தவொரு பாலியல் கல்வியும் இல்லை. மீதமுள்ளவற்றில் பாலுறவை தவிர்க்க சொல்வது மட்டும் தான் ஒரே அறிவுறுத்தல். கருவுறுவதலை தடுப்பது குறித்தோ, பாலுறவால் பரவும் நோய்களை தடுப்பது குறித்தோ, ஒப்புதலுடன் பாலுறவு குறித்தோ எந்த கற்பித்தலும் இல்லை.

சொல்லப்போனால், 18 மாகாணங்களில் உள்ள பயிற்றுநர்கள், திருமணத்துக்குப் பிறகான பாலுறவே ஏற்றுக்கொள்ளத்தக்கது என மாணவர்களிடம் சொல்கிறார்கள். ஒருபாலின மாற்றுப் பாலினத்தினர் குறித்து பேசுவது ஏழு மாகாணங்களில் ஆசிரியர்கள் பேசுவது தண்டனைக்குரியது. ஒரு பாலினத்தை எதிர்த்தோ, எச்.ஐ.வி. தொற்று குறித்தோ பேசுவதற்கும் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பத்து மாகாணங்களில் மட்டுமே பாலியல் வன்முறை அல்லது மனமொத்த பாலுறவு குறித்து பாலியல் கல்வியில் சொல்லித்தரப்படுகிறது.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

மேலும், விரிவான பாலியல் கல்வி சொல்லித்தரப்படும் மாவட்டங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய கல்வி தேவையா இல்லையா என்பதை பெற்றோர் முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாலியல் கல்வி அளிப்பது அரசின் பணியல்ல என பழமைவாதிகள் எப்போதும் சொல்லிவருகிறார்கள். பாலியல்பு மற்றும் உறவுகள் குறித்து பெற்றோர் மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பது அவர்களுடைய வாதம். ஆனால், பெரும்பாலான பெற்றோர் அத்தகைய வழிகாட்டுதலை தருவதில்லை. குழந்தைகளுக்கு தங்களுடைய பாலியல் வளர்ச்சி குறித்து மருத்துவ ரீதியிலான சரியான தகவல்களை வழங்க மறுப்பது கருத்தியல் அல்ல, அது அலட்சியம்.

அதுகூட பயனுள்ளதாக இல்லை. பாலுறவை தவிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே பாலியல் கல்வியாக சொல்லித்தரப்பட்ட மாகாணங்களில் அதிக அளவிலான பதின்பருவ கர்ப்பம் நிகழ்ந்துள்ளது.

ஒபாமா ஆட்சி காலத்தின் போது, பாலுறவை தவிர்க்க வேண்டும் என சொல்லித்தரப்பட்ட பாலியல் கல்வி, மேலும் விரிவடைந்த கல்வியாக சொல்லித்தரப்பட்டது. பதின்பருவ கர்ப்பம் தரித்தல் தேசிய அளவில் 41 சதவீதமாக குறைந்தது. டிரம்பின் அரசு, பாலுறவை தவிர்ப்பது மட்டுமே போதும் என முந்தைய கல்வி முறையை திருத்தியது. 200 மில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்குதலையும் நிறுத்தியது.

இருந்தபோதிலும் சமூக பழமைவாதிகளின் கனவுகளுக்கிணங்க, சில பதின்பருவத்தினர் பாலுறவை தவிர்க்கின்றனர். சில ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளி படிப்பை முடிக்கும்போது கிட்டத்தட்ட 60% மாணவர்கள் பாலுறவு கொள்கின்றனர். ஆணுறைகள், தொற்று, மனமொத்த உறவு குறித்து தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது பள்ளியிலிருந்தோ எந்தவித அறிவுறுத்தலையும் பெறாமல் பலர் இதைச் செய்கின்றனர்.

அதனால்தான், நான்கில் ஒரு அமெரிக்க பெண் தன்னுடைய 20 வயதை அடையும்போதே கர்ப்பம் தரிக்கிறார். அல்லது முன்னெப்போதும் இல்லாத வகையில் பதின்பருவத்தினர் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

வெறும் 41% அமெரிக்க பெண்கள் மட்டுமே தங்களுடைய முதல் பாலுறவு அனுபவம் விரும்பத்தக்க வகையில் இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.

நாம் பாலுறவு குறித்து கற்பிக்க மறுக்கும்போது, பாலுறவை தடுப்பதில்லை. மாறாக, நாம் மேலும் அதை ஆபத்தானதாக மாற்றுகிறோம். இது பாலியல் தொற்று நோய்கள் தொடர்பானது மட்டுமல்ல.

தங்களது உடல் குறித்தோ தங்களுடைய உடலுக்கு தாம் மட்டுமே உரிமையாளர்கள் என்பது குறித்தோ அறிவற்ற குழந்தைகள் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தவறானது என சொல்லித்தரப்படும்போது, பாலியல் வன்முறை அல்லது அத்துமீறல் குறித்து அந்த குழந்தையால் எதிர்த்து போராடவோ அல்லது புகார் அளிக்கவோ முடிவதில்லை.

பாலுறவை தவிர்க்கச் சொல்லித்தருவது, மனமொத்த பாலுறவை குறைக்கிறது. நான் பதின்பருவத்தில் இருந்தபோது, ஆண்கள் என்னிடமிருந்து பாலுறவை பெற எதிர்ப்பார்ப்பார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பது என்னுடைய வேலை என்றும் சொல்லித்தரப்பட்டது. பாலியல் வன்முறையோ அல்லது அத்துமீறலோ ஏற்பட்டால் அது என்னுடைய தவறுதான் என எண்ணவைத்தது அது. எல்லாவிதமான பாலியல் செயல்களும் தவறானவை. ஒரு பையன் என்னுடன் டேட்டிங் வந்தால், அவனை தொட அனுமதிப்பது என்னுடைய தவறு என்பதாக அவை சொல்லித்தரப்பட்டன.

குழந்தைகளை இருள் சூழந்த சூழலில் வைப்பது, வேட்டையாளர்களுக்குத்தான் வசதியாய் மாறும். அவமானம் கொண்டு அமைதியாக இருப்பது கலாச்சாரம் என நம்புகிறார்கள். கன்னித்தன்மை உயர்ந்த மரியாதையாக புகழப்படும்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்கள் தங்களை மதிப்பற்றவர்களாக உணர நேர்கிறது. அவமானம் மற்றும் குழப்பம் காரணமாக பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் அளிக்கவும்கூட அவர்கள் தயங்கக்கூடும்.

ஒருபாலின – மாற்று பாலின குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பாலியல் கல்வியில் இவர்கள் குறித்து சொல்லித்தரப்படாதது, அவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது; அவமானப்படுத்துகிறது. ஒருபாலின-மாற்று பாலின குழந்தைகளுக்கு ஒரளவே தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் அதிகப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை புகார் தெரிவிக்கும்போது உடல் ரீதியிலான தாக்குதலிருந்து வீடில்லாமல் தவிப்பது வரை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மருத்துவ அடிப்படையிலான பாலியல் நலனை சொல்லித்தருவதை தவிர்த்து பாலுறவை தவிர்ப்பது என்பதை மட்டும் சொல்லித்தந்தால், அது இளைஞர்களின் வாழ்நாள் முழுக்கவும் உடல் மற்றும் மன ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது இப்படியான வழிகளில் இருக்கக்கூடாது. பல நாடுகளில் பாலியல் நலன் குறித்த துல்லியமான தகவல்களை அளிப்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. நெதர்லாந்தில் மழலையர் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்படுகிறது. டச்சுக்காரர்களைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக அமெரிக்க பதின்பருவத்தினர் பிரசவிக்கின்றனர். பெரும்பாலான டச்சு பதின்பருவத்தினர் தங்களுடைய முதல் பாலுறவு குறித்து நேர்மறையாக கருத்து தெரிவிக்கின்றனர்.

பாலுறவை சொல்லித்தருவது கடினமாக உள்ளதாக நாம் சிரித்துக் கொள்கிறோம். நம்முடைய பெற்றோர் அதுகுறித்து பேசவில்லை என்பதால், நாமும் நம்முடைய குழந்தைகளிடம் அதுகுறித்து பேசுவதில்லை என்கிறோம். அடுத்த தலைமுறையினர் விரிவான பாலியல் கல்வியைப் பெற இந்த சுழற்சியை நாம் உடைக்கலாம். நம்முடைய அவமானத்தைவிட அவர்களுடைய பாதுகாப்பு முக்கியமானது.


கட்டுரை: ஆண்ட்ரியா பாரிகா
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: நியூயார்க் டைம்ஸ்

 

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க