“பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனிபோல மாறிவிட்டது. தினமும் வெத்து திட்டங்களை, அறிவிப்புகளை மக்களிடம் புகழச் சொல்லி எங்களை விற்பனையாளர்கள் போல ஆக்கிவிட்டார்கள்” என்கிறார் பாஜக-விலிருந்து விலகிய இளம் தலைவர் ஒருவர்.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ரேஷ்மா பட்டேலும் ஒருவர். போராட்டம் நடந்த நேரத்தில் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், பா.ஜ.க ஒரு மார்க்கெட்டிங் நிறுவனம் போல செயல்படுவதாக குற்றம்சாட்டி, அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

ரேஷ்மா பட்டேல்

“பாஜக மாநில தலைவர் ஜித்து வகானிக்கு பாஜகவிலிருந்து விலகியிருப்பதாக கடிதம் எழுதியிருக்கிறேன். வெற்று திட்டங்களை மார்க்கெட்டிங் செய்ய கட்சி தொண்டர்களையும் தலைவர்களையும் பாஜக பயன்படுத்துகிறது என்பதால் அக்கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறேன்.” என்கிற ரேஷ்மா, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பாஜக-வை எதிர்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.

“போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுவதாக உள்ளேன். பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என விரும்புகிற எதிர்க்கட்சிகள் அந்த வாய்ப்பை எனக்கு அளிக்கலாம். அப்படி ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் தனித்து போட்டியிடுவேன்” என்கிறார்.

போர்பந்தர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மனவதார் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். பட்டேல்கள் அதிகமாக இருந்த அந்தத் தொகுதியைச் சேர்ந்த தலைவரின் ராஜினாமா காங்கிரசுக்கு இழப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது. இந்த நிலையில், ரேஷ்மா தான் சார்ந்த பட்டேல் இன வாக்குகளை பெற அந்தத் தொகுதி இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

படிக்க:
மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் !
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

“பாஜக தலைவர்களின் சர்வாதிகாரத்தன்மை தொண்டர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்குமேலும் பொறுமையாக, இந்த அநீதியை சகித்துக் கொண்டிருக்க முடியாது. பொதுநலன் கருதியே நான் கட்சியிலிருந்து விலகியிருக்கிறேன். சர்வாதிகாரத்தன்மையான தலைவர்கள் செய்த பாவங்களிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என தன்னுடைய விலகல் கடிதத்தில் பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார் ரேஷ்மா.

2014-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் மாதிரி வளர்ச்சியை வைத்து மோடி பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஐந்தாண்டுகால ஆட்சியில் இந்த வளர்ச்சி பொய் பிம்பம் சுக்கு நூறாய் உடைந்துவிட்டதை கண்கூடாக மக்கள் கண்டுவிட்டார்கள். பாஜக-வின் வளர்ச்சி மாயையில் மயங்கிய இளைஞர்களும்கூட அக்கட்சிக்கு எதிராக திரும்பிவிட்டனர். அந்த வகையில் பாஜக-வின் வெற்று பொய்களை உண்மை போல பரப்பும் மார்க்கெட்டிங் உத்தியை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ரேஷ்மா.


-கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க