உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா?
அதுபோல் நீங்களும் பாதுகாப்பானவர்களா?
சம்பவம் 1
ஷாணி, 16 வயது பள்ளி செல்லும் மாணவி, மிகவும் துடிதுடிப்பானவள், கெட்டிக்காரி. அதுபோல் பேரழகி. பள்ளி செல்லும் இளவல்களின் மங்காத பேசு பொருள். பணக்கார வீட்டு செல்லப் பிள்ளை. பெற்றோர் இருவரும் மிகப்பெரும் நிறுவனங்களில் 6 இலக்கங்களில் சம்பளம் வாங்குகிற பெரும்புள்ளிகள். இதனால் அவள் போகின்ற வருகின்ற வழிகளெல்லாம் வாலிபக் கூட்டம். இந்தத் தொல்லைகளை தவிர்ப்பதற்காக அவள் பயணிப்பதற்கென்றே ஒரு சொகுசு கார். அதற்கென்று தனியான ஒரு நம்பிக்கையான, மிக நம்பிக்கையான டிரைவர்.
இப்படியாக மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வந்த அந்தப் பெண்பிள்ளை ஒருநாள் வயிற்று வலியால் அவதிப்படுகிறாள். உடனே மருத்துவமனைக்கு எடுத்து வரப்படுகிறாள். வைத்திய பரிசோதனைகளின் போது அவளது வயிற்றில் இரண்டு மாத சிசு வளர்வது கண்டுபிடிக்கப்படுகின்றது. இந்த செய்தியை கேள்வியுற்ற பெற்றோர்கள் இருவருமே மயங்கி விழுந்து விடுகின்றனர். கதை போல் இருந்தாலும் இது உண்மை. கடைசியிலே அந்த குழந்தைக்கு காரணம் அவள் அங்கிள், அங்கிள் என்று அன்போடு அழைக்கின்ற, பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் நம்பிக்கையானவர், மிக நம்பிக்கையானவர் என முத்திரை குத்தப்பட்ட வாகன சாரதிதான் (Driver) என்பது தெளிவாகின்றது.
சம்பவம் 2
 ஐந்து வயதுள்ள சின்மயி, மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவள். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த  ஆரோக்கியமுடன் வளர்ந்து வருகின்ற  ஓர் சிறுமி. ஒரு சில வாரங்களாக அவளின் நடத்தையில்  பல்வேறுபட்ட மாற்றங்கள். வழமை போல் அமைதியாக இல்லை. எடுத்ததற்கெல்லாம் அழுகிறாள், முரண்டுபிடிக்கிறாள்,  ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது, முறையாக  தூங்குவது கிடையாது. முன்னரைப் போல் சிரித்த முகம்  இல்லாமல் சோர்ந்து போய் விடுகிறாள்.
ஐந்து வயதுள்ள சின்மயி, மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவள். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த  ஆரோக்கியமுடன் வளர்ந்து வருகின்ற  ஓர் சிறுமி. ஒரு சில வாரங்களாக அவளின் நடத்தையில்  பல்வேறுபட்ட மாற்றங்கள். வழமை போல் அமைதியாக இல்லை. எடுத்ததற்கெல்லாம் அழுகிறாள், முரண்டுபிடிக்கிறாள்,  ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது, முறையாக  தூங்குவது கிடையாது. முன்னரைப் போல் சிரித்த முகம்  இல்லாமல் சோர்ந்து போய் விடுகிறாள்.
இப்படி சில வாரங்களாக இருந்தவள் ஒருநாள் திடீர் திடீரென காரணமில்லாமல் சிரிப்பதும் அழுவதும் இடை இடையே தனியே கதைப்பதுமாக, மொத்தமாக ஒரு பைத்தியத்தின் உருவமாக மாறி விடுகிறாள். இப்பொழுது வைத்தியத்திற்காக அனுமதிக்கப்படுகிறாள். பல்வேறு பரிசோதனைகளை செய்துகொண்டு போகின்றபோது, அவள் வீட்டிற்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்காக வருகின்ற ஐம்பது வயது ஆசிரியரினால் முந்தைய ஒரு மாதமாக தொடர் பாலியல்ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட மனப் பிறழ்வே இவ்வாறான நிலைமைக்குக் காரணம் எனவும் கண்டறியப்படுகிறது.
சம்பவம் 3
முராசில் 13 வயது பள்ளி மாணவன். அடிக்கடி வயிற்று நோவு, மலச்சிக்கல் மற்றும் சிறுநீரில் கிருமித் தொற்று என வைத்தியத்திற்காக வருகின்ற ஒரு பையன். தொடர்ச்சியான பரிசோதனைகளின் போது பெரிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கடைசியாக ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு வைத்திய பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவனுக்கு சிபிலிசு எனும் பாலியல் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகின்றது. அதற்கு காரணம் அவனது ஆசிரியர்தான் என்பதும் இறுதியிலேயே தெரியவருகிறது.
(மூன்று சம்வவங்களில் வரும் பெயர்கள் மட்டுமே கற்பனை என்பதை கருத்தில் கொள்க)
இவைகளெல்லாம் கடந்த இருவாரங்களில் நான் சந்தித்த பல்வேறுபட்ட பாலியல் துஷ்பிரயோகங்களின் ஆழ அகலத்தை தெளிவுபடுத்துகின்ற ஒரு குறுக்கு வெட்டுமுகம் மட்டுமே.
பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக மருத்துவ பீடத்தில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் சட்ட மருத்துவத்திலும், சிறுவர் மருத்துவத்திலும் படித்தபோது இவைகள் எல்லாம் இங்கே நடக்கின்றதா இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். இவைகள் எல்லாம் எங்கோ உலகின் ஒரு மூலையில் வெள்ளைக்காரர்களால் செய்யப்படும் அல்லது கதைகளில் மட்டுமே சாத்தியமாயிருக்கின்ற செயல்கள் என்று உறுதியாக நம்பியவர்களின் தலைவன்.
அதன்பின் பயிற்சி வைத்தியராக மற்றும் சிறு பிள்ளை வைத்தியராக, பயிற்சி வைத்திய நிபுணராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றிய காலப்பகுதிகளில் நான் கண்டு, கேட்டு பெற்ற அனுபவங்களின் மூலம் இந்த எண்ணம் தலைகீழாக மாறிவிட்டுருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நான் கேட்பவைகளை, பார்ப்பவைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்றால் குறைவாகவே சிரிப்பீர்கள் அதிகம் அழுவீர்கள்.
 பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. இது உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Physical abuse), உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் (Psychological abuse), பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Sexual abuse), உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் (Emotional abuse) , புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் (Neglect) எனப் பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது. இதில்  பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளது.
பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. இது உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Physical abuse), உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் (Psychological abuse), பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் (Sexual abuse), உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் (Emotional abuse) , புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் (Neglect) எனப் பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது. இதில்  பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவுள்ளது.
மத குருமாரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுவர்கள், ஆசிரியர்களினால், ஆலோசகர்களினால் பலாத்காரங்களுக்கு உள்ளாகும் மாணவர்கள், வைத்தியரினால் பாலியல் இம்சைக்கு உள்ளாகும் நோயாளிச் சிறுவர்கள், தந்தையினால் வன்புணர்வுக்கு ஆளாகும் மகள், அண்ணனினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் தங்கை, மாமாவினால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மருமகள் என்று துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் சம்பவங்கள் தினமும் நடந்தேறுவதை நீங்களும் ஊடகச் செய்திகள் மூலம் அறிந்துதான் இருப்பீர்கள்.
ஆனால் மார்க்கம் பேசுபவர்களாலும், மார்க்கம் போதிக்க பாடசாலைகள் நடத்துபவர்களாலும், இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடருவது மட்டுமல்லாமல் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், உண்மையை மறைக்கவும், இந்த இயக்க பக்தர்களும், நிர்வாகிகளும், அமைப்புகளும், ஏன் ஊர் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியிடுவதை பார்க்கும்போது மட்டுமே இந்த சிறுவர் துஷ்பிரயோகம் வியாபித்திருக்கும் விஸ்தீரணங்களை (பரப்புகளை) புரிந்து கொள்ள முடிகிறது.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற காரணமென்ன?, துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?, எத்தகையவர்களால் துஷ்பிரயோகம் ஏற்படுகிறது? துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம்? அதற்கான முறையான பொறிமுறைகள் எவை ? ஆகியவை உள்ளிட்ட கேள்விகளுக்கான பூரண அறிவைப் பெறுவது மிக அவசியமாகும். இவை குறித்த முறையான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கிராமம் மற்றும் நகரந்தோறும் முன்னெடுக்கப்படுவது முக்கியமாகும். இவைகள் எல்லாவற்றையும் இப்பத்தியில் எழுவது நடைமுறை சாத்தியமற்றது எனினும் ஒரே ஒரு அடிப்படையை புரிந்து கொண்டால் இவைகளை தடுத்துக் கொள்ள முடியும்.
பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிடலாகாது என்பதுதான் அந்த அடிப்படை. ஒருவர் எவ்வளவு நல்லவராகவும் நம்பிக்கையானவராகவும் இருக்கலாம் அது போல் உங்களுக்கு தெரியாத நிலையில் அவர் கெட்டவராகவும் இருக்கலாம். நல்லது, கெட்டது என்ற இரண்டு குணங்களும் ஒரே மனிதனிடம் ஒரே நேரத்தில் இருக்கலாம். யாரும் 100% நல்லவர் கிடையாது. சந்தர்ப்பம், சூழல் என்பவைகள் தான் நல்லவர், கெட்டவர் என்பதைத் தீர்மானிக்கிறது.
சிம்பிளாக சொல்வதென்றால் ஒருவரின் நெட் ப்ரவுசிங் ஹிஸ்ட்ரி (internet browsing history) இன்னும் ஒருவருக்குத் தெரியாத வரைக்கும் அவர் நல்லவர்தான் என்பது இன்றைய உலகில் உள்ள நல்ல மனிதனுக்கான அளவுகோலாக இருக்கிறது. இந்த ஒன்றை புரிந்து கொண்டால் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்றால், இவர்கள் நமது உறவினர்கள், நன்றாக நம்முடன் பழகுபவர்கள், சாதுவான மனிதர்கள் என்று சொல்லும் எல்லா நல்ல மனிதர்கள் மீதும், அயலார், ரியுசன் மாஸ்டர் (Tuition Master), ஓதிக்கொடுக்கும் ஹஸரத், சமய குருக்கள் என இப்படியாக ஆள் வேறுபாடு இன்றி எல்லோர் மீதும் எமது கவனக் குவிப்பு அவசியமாகின்றது.
அதே போன்று தன் உறவுக்காரர், அல்லது அயல் வீட்டார், அல்லது நண்பர்கள் என எவராவது கொஞ்சம் மேலதிகமாக, சந்தேகப்படும்படியாக பிள்ளைகளுடன் குலாவும் போது, தூக்கி அணைத்து முத்தமிடும் போது, விழிப்பாகச் செயல்படுதல் எதிர்காலத்தில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க உதவியாக இருக்கும்.
 பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான  உபாயங்களாக இருக்கின்றன. உறவினர் வீடு, அயலவர் வீடு, நண்பர் வீடு என அழைப்பிற்கோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ, ஆண் பிள்ளையையோ அல்லது பெண் பிள்ளையையோ இரவை கழிப்பதற்காக அல்லது உறங்கச் செல்வதற்காக எக்காரணம் கண்டும் அனுமதிக்காமல் இருப்பதே உசிதமானது. அதேசமயம் வீட்டில் இடம்பெறும் விசேட வைபவங்களின் போது அல்லது   பிறவீடுகளில்  நடக்கும் வைபவங்களின் போது  தம் பிள்ளைகள்  மீது அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான  உபாயங்களாக இருக்கின்றன. உறவினர் வீடு, அயலவர் வீடு, நண்பர் வீடு என அழைப்பிற்கோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ, ஆண் பிள்ளையையோ அல்லது பெண் பிள்ளையையோ இரவை கழிப்பதற்காக அல்லது உறங்கச் செல்வதற்காக எக்காரணம் கண்டும் அனுமதிக்காமல் இருப்பதே உசிதமானது. அதேசமயம் வீட்டில் இடம்பெறும் விசேட வைபவங்களின் போது அல்லது   பிறவீடுகளில்  நடக்கும் வைபவங்களின் போது  தம் பிள்ளைகள்  மீது அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
பிள்ளைகளுக்கு பிறர் வழங்கும் அன்பளிப்புகள் (டொபி, சொக்லட், விளையாட்டுப் பொருட்கள்) மீது கணிப்பாக இருத்தல் வேண்டும் அதே போன்று இவற்றைப் பெற்றோரின் அனுமதி இன்றி பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்புடனும் விளக்கத்துடனும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதற்கு மேலதிகமாக குழந்தைகளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்தாலும் முதலாவது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்பாக தாய் – பிள்ளை உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நன்றாக பழகிய உறவினர், நண்பர், அயலார் தம் வீட்டிற்கு வந்ததும் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது பயந்தால், அல்லது அழுதால் அவர்களின் சிறு விளையாட்டுப் பேச்சுக்கும் ஆத்திரம் கொண்டால் அதன் அர்த்தம் அவர்கள் மூலம் விரும்பாததொன்றை பிள்ளை சந்தித்துள்ளது, பிள்ளை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள கூடியவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும்.
படிக்க:
♦ ஆதிக்க சாதிவெறி – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் | முகிலன் கேலிச்சித்திரங்கள்
♦ பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!
ஆக மொத்தத்தில் எந்தப் பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது என்ற கிராமிய தத்துவத்தை தெரிந்து கொண்டால் குறைந்த பட்சம் அவதானமாகவாவது இருப்பதுதான் துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய வழியாக தென்படுகிறது. இது குறித்த அறிவைப் பெற்று அதற்கேற்ப செயற்படுவது காலத்தின் தேவையாகவும் உள்ளது. அவ்வாறு செயற்படும் போதுதான், வளரும் பிள்ளைகளை இவ்வாறான ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியும்.
இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா என்று அது போல் இப்பொழுது சொல்லுங்கள் நீங்களும் பாதுகாப்பானவர்களா என்று…
மருத்துவர் பி.எம். அர்சத் அகமத், MBBS(RUH) MD PEAD (COL),
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka











