அப்சல் குரு-க்குத் தூக்கு ! அசீமானந்தாவுக்கு விடுதலை !! நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

“இந்துக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்த காங்கிரசைத் தண்டிக்க இந்துக்கள் முடிவு செய்துவிட்டனர்” எனத் தனது  தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார், மோடி. காங்கிரசை இந்துக்களின் விரோதியாகவும் முசுலீம்களின் நண்பனாகவும் சித்தரிப்பது பா.ஜ.க.வின் பழைய பல்லவிதான் என்றபோதும், இப்பொழுது,  குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இப்புளுகுணி ஆட்டத்தை அக்கட்சி ஆடக் காரணம், கடந்த மார்ச் மாத இறுதியில் சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு.

தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த சம்ஜௌதா விரைவு ரயிலில், கடந்த  2007, பிப்ரவரி 18 -ம் தேதியன்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெட்டிகள் எரிந்து போயின. அத்தொடர் வண்டி அரியானா மாநிலம், பானிபட் அருகே சென்றுகொண்டிருந்தபோது நடந்த இத்தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலோர்  பாகிஸ்தான் குடிமக்கள்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா உள்ளிட்ட நான்கு  பேரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம், “இவ்வழக்கை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) போதுமான  ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை; குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லை” எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

“இந்து பயங்கரவாதம் என்ற ஒன்றே கிடையாது. அது காங்கிரசு புனைந்த பொய்க் குற்றச்சாட்டு” எனக் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, இந்தத் தீர்ப்பு வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாகிவிட்டது.

***

ம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பின் பின்னணியையும் அக்குண்டுவெடிப்பு நடந்த காலச்சூழ்நிலையையும் தெரிந்து கொண்டால்தான் இத்தீர்ப்பு நீதியைக் கேலிக்கூத்தாக்கியிருப்பதைப்  புரிந்துகொள்ள முடியும்.

68 பேரை பலிகொண்ட சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு ( கோப்புப் படம்)

2007-ம் ஆண்டில் சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு மட்டும் நடக்கவில்லை. ஒன்றுபட்ட ஆந்திரத் தலைநகராக  இருந்த ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் 2007, மே மாதம்  நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதனைத்  தொடர்ந்து அக்டோபர் 2007-ல் இராசஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம்-மாலேகானில் உள்ள மசூதி ஒன்றில் 2006-ல் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2008-ல் மீண்டும் அந்நகரில் குண்டு வெடித்தது.

வழமை போலவே, இச்சம்பவங்கள் அனைத்திற்கும்  முசுலீம் தீவிரவாத /அடிப்படைவாத இயக்கங்களின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. சம்ஜௌதா குண்டுவெடிப்பிற்கு சிமி அமைப்பு  காரணமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த முசுலீம் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதும் முசுலீம்கள். அச்சம்பவத்திற்காகக் கைது செய்யப்பட்டதும் முசுலீம்கள். இவை மட்டுமின்றி, அக்குண்டுவெடிப்பு நடந்த மறுகணமே, அம்மசூதிக்கு அருகே முசுலீம்கள் நடத்தி வந்த கடைகளை ஆந்திர போலீசு தாக்கியதில் தமது அற்ப உடமைகளை இழந்ததும்  முசுலீம்கள். அக்கடை வீதியில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  பலியானதும் முசுலீம்கள்.

படிக்க:
♦ அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு
♦ கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி

அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்ததற்கு முசுலீம்  மதகுருமார்களும், மதரசா ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு,  தொடர்ந்து 25 நாட்கள் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

2006-ல் மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கும் முசுலீம் தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் எனக் கூறப்பட்டு, அந்நகரைச் சேர்ந்த ஒன்பது அப்பாவி முசுலீம்கள் உள்ளூர் போலீசால் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தடா, பொடா சட்டங்களுக்கு இணையான  கருப்புச் சட்டமான அமைப்புரீதியான குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அத்ராபாத் நகரில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு (கோப்புப் படம்)

மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட  இந்த ஒன்பது பேரும் தம்மைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக்  கோரித் தொடர்ந்த வழக்கில், குற்றவியல் நடுவர் மன்றமும், மும்பய் உயர்நீதி மன்றமும் அத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர்ந்தது சரியென்று தீர்ப்பளித்தன. இத்தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், அவர்களைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அக்குண்டுவெடிப்பை மறுவிசாரணை செய்யுமாறு தேசியப்  புலனாய்வு முகமைக்கு உத்தரவிடப்பட்டது.

2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட முசுலீம்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அதேவேளையில், 2008-ல் அதேநகரில் மீண்டும் நடந்த குண்டுவெடிப்பை மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் போலீசு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே விசாரிக்கத் தொடங்கினார். அந்த  விசாரணையில்தான் இத்தொடர்குண்டுவெடிப்பு வழக்குகளில் எதிர்பாராத திருப்பமும் உடைப்பும் ஏற்பட்டது.

அவ்விசாரணையில் அக்குண்டு வெடிப்புக்குப்  பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யா சிங் தாக்கூர் என்ற  இந்து பெண் சாமியாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார், கர்காரே. இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்பு அபிநவ் பாரத் என்ற பெயரில் இயங்கிவரும் இந்து மதவெறி  அமைப்பின் சதிச்செயல் என்ற உண்மை வெளியுலகிற்குத் தெரிய வந்ததோடு, 2006 மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து மதவெறிக்  கும்பலின் சதிச்செயலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது.

ஏனெனில், 2006-ல் மாலேகான் நகர மசூதியில் குண்டுவெடிப்பதற்கு முன்னரே மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், இந்து மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. நந்தேட் நகரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த இரண்டு பஜ்ரங் தள் உறுப்பினர்கள், எதிர்பாராதவிதமாக அக்குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டிருந்தனர். பர்பானி, புர்னா, ஜல்னா ஆகிய பகுதிகளில் நடந்த  மர்மமான குண்டுவெடிப்புகளுக்கும் இந்து மதவெறி அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

இவற்றையெல்லாம் புலனாய்வு செய்துகொண்டிருந்த கர்காரே 2008 நவம்பரில் நடந்த மும்பய்த் தாக்குலின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் சந்தேகம் இருப்பதாக கர்கா ரேயின் மனைவியே குற்றஞ்சுமத்தினார். இந்து பயங்கரவாதிகளின் சதிகளைக் கண்டுபிடித்த காரணத்தாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இன்றுவரை இருந்துவருகிறது.

இவை ஒருபுறமிருக்க, 2007-ல் நடந்த அஜ்மீர்  தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த தேவேந்தர் குப்தாவும், சந்திரசேகரும் இராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சம்ஜௌதா, அஜ்மீர், மெக்கா மசூதி குண்டு  வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பான வனவாசி கல்யாண் மையத்தின் முக்கியத் தலைவரான அசீமானந்தாவிற்கும் பங்கு இருப்பது தெரிய வந்தது.

குண்டுக்குக் குண்டு எனக்கூறித் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய இந்து பயங்கரவாதிகள் (இடமிருந்து) அசீமானந்தா, பிரக்யா சிங் தாக்கூர், கர்னல் புரோகித் மற்றும் சுனில் ஜோஷி

தலைமறைவாக இருந்த அசீமானந்தா 2010-ல் கைது செய்யப்பட்ட பின், அவர் டெல்லி தீஸ் ஹஸாரி குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அளித்த வாக்குமூலத்தின் வழியாக காவி பயங்கரவாதத்தின் முழுச் சித்தரமும் தெரிய வந்தது. “2002 குஜராத் கலவரத்திற்குப் பின் அக்சர்தாம் கோவில் உள்ளிட்ட சில இந்து வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் நடந்ததைத் தொடர்ந்து, அதற்குப் பழிக்குப் பழி வாங்கும் அடிப்படையிலேயே, குண்டுக்குப் பதில் குண்டு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே சம்ஜௌதா, அஜ்மீர், மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளை  நடத்தியதாகவும், ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த பலருக்கும் இக்குண்டு  வெடிப்புகளில் தொடர்பிருப்பதையும்” குறிப்பிட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார், அசீமானந்தா.

அசீமானந்தா இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை போலீசு கொட்டடியில் கொடுக்கவில்லை. மேலும், “நானும் எனது  சகாக்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலீம் என்ற இளைஞரை எதேச்சையாகச் சந்தித்ததே, நாங்கள் செய்த குற்றத்தை வெளிப்படையாகக் கூறத் தூண்டியது; நிர்பந்தம், அச்சுறுத்தல் அடிப்படையில் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார் அசீமானந்தா.

***

2002 தொடங்கி 2008-க்குள் நடந்த மாலேகான், சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி உள்ளிட்ட குண்டு  வெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பரப்புரையாளர் சுனில்  ஜோஷி கொலை வழக்கு ஆகியவற்றில் குற்றம் சுமத்தப்பட்ட / கைது  செய்யப்பட்டவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாலே, ஒருவரே பல குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரும்.

எடுத்துக்காட்டாக, அசீமானந்தா, லோகேஷ் ஷர்மா மற்றும் கொல்லப்பட்ட சுனில் ஜோஷி ஆகிய மூவரும் சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

பரத் மோகன்லால் ரத்தீஷ்வர் அஜ்மீர் தர்கா மற்றும்  மெக்கா மசூதி குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தான்.

ராஜேந்தர் சௌத்ரி, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா, அமித் சௌஹான் ஆகியோர் மெக்கா மசூதி மற்றும் சம்ஜௌதா குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலும், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் தொடர்புடைய லோகேஷ் ஷர்மாவுக்கு மாலேகான் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருக்கிறது.

அபிநவ் பாரத், ராஷ்டிரிய ஜாக்ரான் மஞ்ச், சனாதன்  சன்ஸ்தா என்ற அமைப்புகளின் பெயரால் இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டிருந்தாலும், இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்புப் பிராணிகள்தான்.  மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத்தைச் சேரந்த் பிரக்யா சிங் தாக்கூர், ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மற்றும் பெண்கள் அமைப்பான துர்கா வாஹினி ஆகியவற்றில் செயல்பட்டவர். அதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கர்னல் புரோஹித், ஆர்.எஸ்.எஸ். நாசிக்கில் நடத்திவரும் போன்ஸ்லா இராணுவப் பள்ளியோடு தொடர்புடையவர்.

சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்.-ன் கிளை அமைப்பான வனவாசி கல்யாணின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். இம்மூன்று குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியும், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தேவேந்தர் குப்தா, படேல் ஆகிய இருவரும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பரப்புரையாளர்கள்.

மேலும், அசீமானந்தா சிறையில் இருந்தபோது கேரவன் என்ற  இணைய தள இதழுக்கு அளித்த நேர்காணலில், தமக்கும் மாலேகான்  குண்டு வெடிப்பு குற்றவாளியான பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் சுனில்  ஜோஷி ஆகியோருக்கு இடையேயான உறவு பற்றி மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஒப்புதலோடுதான் இந்தக் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டதையும் கூறியிருந்தார்.

இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் இத்தொடர் குண்டு வெடிப்பு வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.-ன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவர்கூடக் கைது செய்யப்படவில்லை. மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்., தமது அமைப்போடு நேரடியாகத் தொடர்புடைய குற்றவாளிகளை, “அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து விலகி விட்டதாகவும், இந்துத்துவா பெயரில் இயங்கும் மற்ற இயக்கங்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை” என்றும் கூறி, இக்குற்றங்களில்  தனக்குள்ள தொடர்பை மூடிமறைத்தது. காந்தி கொலை வழக்கில்  ஆடிய அதே நாடகத்தை இந்த வழக்குகளிலும் ஆடியது,  ஆர்.எஸ்.எஸ்.

***

ட்லரின் நாஜிக்கள் நடத்திய இன மற்றும் போர் படுகொலைகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றம் விசாரித்ததைப் போலவே, இந்து மதவெறிக் கும்பல் நடத்திய இக்குற்றங்களையும் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், இவைத் தனித்தனி வழக்குகளாகவும், ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போலீசு மற்றும் அம்மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்புப் போலீசு படை, சி.பி.ஐ., தேசியப் புலனாய்வு அமைப்பு எனப் பல விசாரணை அமைப்புகள் நேரத்துக்கு ஒன்றாகவும், ஒன்றோடு ஒன்று தொடர்பின்றியும் தனித் தனியாகவும் விசாரணை செய்ததால், இவ்வழக்குகளை நீர்த்துப் போகச் செய்து, குற்றவாளிகளை விடுவிப்பது மிகவும் எளிதாக அமைந்தது. அதிலும் குறிப்பாக, 2014-ல் மோடி அரசு பதவியேற்ற பிறகு, மாலேகான், சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு முகமை குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டு நீதியைக் குழிதோண்டிப்  புதைத்தது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களுக்குச் சட்ட உதவி வழங்கிய அப்துல் ஹமீது அஸாரி (இடது ஓரம்) மற்றும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட சல்மான் ஃபார்ஸி, டாக்டர் பரூக் ம்க்துமி, நூருல்ஹூடா, ரயீஸ் அகமது மன்சுரி.

சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்குகளில் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால், இம்மூன்று வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான அசீமானந்தா இந்த மூன்று வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

அஜ்மீர் தர்கா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒன்பது பேரில் மூன்று பேரைத் தவிர, மீதமுள்ள ஆறு குற்றவாளிகளும், அசீமானந்தா உட்பட விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.  தண்டிக்கப்பட்ட இந்த மூன்று பேரில் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்டுவிட்டார். கீழமை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேரின் தண்டனையை உயர்நீதி மன்றம் நிறுத்திவைத்து சலுகை காட்டியிருக்கிறது.

மெக்கா மசூதி வழக்கில் 10 இந்து தீவிரவாதிகள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இவர்களுள் இன்று வரை இருவர் தலைமறைவாக உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஏழு பேரில் வழக்கை எதிர் கொண்ட அசீமானந்தா உள்ளிட்ட ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அஜ்மீர் தர்கா வழக்கில் தண்டனை பெற்ற தேவேந்தர் குப்தா இந்த வழக்கில் நிரபராதியாகிவிட்டார்.

சம்ஜௌதா குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு இந்து தீவிரவாதிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களுள் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். சுனில் ஜோஷி கொல்லப் பட்டுவிட, வழக்கை எதிர்கொண்ட அசீமானந்தா உள்ளிட்ட நான்கு  குற்றவாளிகளும் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

இந்து மதவெறிக் கும்பல் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்புகளின் இணைப்புக் கண்ணியாகவே செயல்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த சுனில் ஜோஷி. இந்த முக்கிய சாட்சியை ஒழித்துக்கட்டுவதன் மூலம், அனைத்து வழக்குகளையும் நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இவர் கொலை செய்யப்படுகிறார். இப்படிப்பட்டதொரு முக்கியமான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

***

சொராபுதின் போலிமோதல் கொலை வழக்கிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்ட தீர்ப்பு, மெக்கா மசூதி மற்றும்  அஜ்மீர் தர்கா வழக்குகளில் இருந்து இந்து மதவெறிக் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக இதுநாள்  வரையிலும் மேல்முறையீடு செய்யாமல் அவ்வழக்குகளைக் காலி செய்துவிட்ட என்.ஐ.ஏ., சம்ஜௌதா வழக்கில் மட்டும் நாணயமாக நடந்து கொள்ளுமா?

விடுதலை செய்யப்படும் இந்து பயங்கரவாத  குற்றவாளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூடாது என்பதை மோடி அரசு எழுதப்படாத சட்டமாகவே மாற்றிவிட்டது. இது மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பயங்கரவாத வழக்குகளைச் சீர்குலைக்கும் சதிகளையும் மோடி அரசு செய்துவருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரக்யா சிங் தாக்கூருக்கும் இக்குற்றத்திற்கும் தொடர்பில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவித்துவிட்டது, என்.ஐ.ஏ. மற்றொரு முக்கிய குற்றவாளியான கர்னல் புரோகித், தனது இராணுவ உளவுப் பணி நிமித்தமாகவே அபிநவ் பாரத் அமைப்பில் ஊடுருவி வேலை செய்து வந்ததாக விசாரணை அமைப்பும் இந்திய இராணுவமும் நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றன.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிவரும் ரோஹினி சாலியன், மோடி அரசு பதவியேற்றவுடன், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராகத் தீவிரமாக வாதாட  வேண்டாம் எனத் தன்னை என்.ஐ.ஏ., கேட்டுக் கொண்டதாகக் குற்றஞ்சுமத்தியதோடு, இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் என்.ஐ.ஏ. ஈடுபடுவதாகக் கூறி, அதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தார்.

2008 மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் நீதிமன்றத்திலிருந்தே “காணாமல்” போய்விட்டன. அந்த ஆவணங்களை இன்னமும்  தேடிக் கொண்டிருக்கிறது, என்.ஐ.ஏ.

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
♦ குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

குற்றவாளிகள் போலீசிடம் அளிக்கும் வாக்கு மூலங்களை, அவர்கள் அதனை நீதிமன்ற விசாரணையின்போது மறுத்தால், அம்மறுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும். ஏனெனில், அவ்வாக்குமூலங்கள் நிர்பந்தம் காரணமாக அளிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருத இடமுண்டு. ஆனால், சம்ஜௌதா வழக்கிலோ,  அசீமானந்தா நீதிபதி முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தையே ஏற்கமறுத்து முதன்மைக் குற்றவாளியான அவரை விடுதலை செய்திருக்கிறது, என்.ஐ.ஏ. நீதிமன்றம். மேலும், “போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் மக்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது குற்றம் நடைபெற்ற காலத்தில் நிலவிய அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டோ எந்த வழக்கிலும் தீர்ப்பளிக்க முடியாது” என உபதேசமும் செய்திருக்கிறார், நீதிபதி.

இப்படிப்பட்ட சலுகைகளையும் நியாயங்களையும்  குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முசுலீம்களிடம்  நீதிமன்றங்கள் காட்டியதுண்டா? நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு ஆதாரங்கள் அடிப்படையிலா தூக்கு தண்டனை  அளிக்கப்பட்டது? பொது மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காகத்தான் தூக்கு தண்டனை அளிப்பதாகப் பச்சையாகவே கூறியது உச்சநீதி மன்றம்.

அக்சர்தாம் கோவில் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முசுலீம்களைச் சித்திரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்களையும், மோசடியாகத் தயாரிக்கப்பட்ட சாட்சியங்களையும் கொண்டுதான் அந்த அப்பாவிகளுக்குத் தண்டனைகளை வழங்கியது, குஜராத் உயர்நீதி மன்றம்.

கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டது பாகிஸ்தானின் சதி என மோடியும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்யை வைத்துத்தான், அவ்வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதனையொத்த சம்ஜௌதா ரயில் பெட்டி எரிப்பு வழக்கிலோ, அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மறுக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

முசுலீம் படுகொலையை நடத்தித் தன்னை குஜராத்தின் நிரந்தர முதல்வராக முடிசூட்டிக் கொண்ட நரேந்திர மோடி, அதன் பிறகு, பாகிஸ்தான் ஏவிவிடும் முசுலீம் தீவிரவாதிகளால் எந்நேரமும் தனது உயிருக்கு ஆபத்திருக்கிறது என்ற பொய்யைச் சொல்லிச் சொல்லியே பல போலி மோதல்கொலைகளை குஜராத்தில் அரங்கேற்றினார். குஜராத் அக்சர்தாம் கோவில் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை இன்றுவரை எந்தவொரு புலனாய்வு அமைப்பும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அத்தாக்குதலைக் காரணமாகக் காட்டி நாடெங்கும் தொடர்குண்டுவெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். கும்பல், அவ்வழக்குகளிலிருந்து விடுதலையும் பெற்றுவிட்டது.

மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, குஜராத்தில் நடந்த போலி மோதல்கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு போலீசு அதிகாரியும் அவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர் அல்லது பிணையில் விடப்பட்டுவிட்டனர். அசீமானந்தா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வருவதையும் இதன் தொடர்ச்சியாகவே கருத முடியும்.

மோடி – அமித் ஷா கும்பலின் இந்தச் சதித் திட்டங்களுக்கு உடந்தையாக நடந்துகொள்ளும் நீதிபதிகளுக்குத் தக்க சன்மானங்கள் அளிக்கப்படுவதை, உச்சநீதி மன்ற நீதிபதி சதாசிவம் ஓய்வுபெற்ற பிறகு, கேரளா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதில் கண்டோம். இதற்கு உடன்படாத நீதிபதிகள் தமது உயிரைக்கூட இழக்க வேண்டியிருக்கும் என்பதை நீதிபதி லோயா விடயத்தில் கண்டோம். இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதைத்தான் இந்த விவகாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

செல்வம்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க