ண்மையில் ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள கிறித்தவ தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு கூறுகிறது.

தாக்குதலை நடந்த்தியது ஐ.எஸ். அமைப்பு என்பதால் ஒட்டுமொத்த முசுலீம் சமூகத்தையே குற்றவாளி போல சித்தரிக்கும் போக்கு ஊடகங்களிலும் முசுலீம் சமூகத்தை சந்தேகத்தோடு அணுகும் போக்கு பொதுச் சமூகத்திடமும் எழுந்துள்ளது. இலங்கையில் வாழும் பல முசுலீம்கள் தங்களை பொதுச் சமூகம் தள்ளிவைத்திருக்க முனைவதாக தங்களுடைய கவலைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். இலங்கை அரசும்கூட அந்த சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. முழுவதும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்துள்ளது அந்த அரசு. மதத்தைக் குறிப்பிட்டு தடை விதிக்கவில்லை எனினும், ‘நிகாப்’ எனப்படும் முழுவதும் மறைக்கும் உடையை முசுலீம் பெண்கள் மட்டுமே அணிகின்றனர்.

படிக்க :
♦ மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?
♦ விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?

இலங்கையில் ‘இசுலாமோஃபோபியா’ திட்டமிட்டு உருவாகிக்கொண்டிருக்கிற நிலையில், பயங்கரவாதத்துக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என நிரூபித்திருக்கின்றனர் அதே இலங்கையைச் சேர்ந்த முசுலீம் மக்கள்.

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்கள் குறித்து அந்தப் பகுதி வாழ் முசுலீம் இளைஞர்கள், பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அம்பாரா மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது நகரத்தில் உள்ள இரும்புப் பாலத்தின் அருகே ஒரு இளைஞர் சென்றுகொண்டிருந்தபோது, அருகில் இருந்த வீட்டில் ஒருவர் துப்பாக்கியுடன் நின்றிருப்பதைக் கண்டிருக்கிறார். சில நிமிடங்களில் அப்பகுதி வாழ் மக்கள் ஒன்றாக சேர்ந்து வீட்டில் இருந்தவர்களிடம் தங்களுடைய அடையாள அட்டையை காட்டும்படி கேட்டுள்ளனர். அவர்கள் சுற்றி வளைத்த போது, உள்ளே இருந்த ஒருவர் மேலே நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அந்த நேரத்தில் உள்ளூர் மசூதி கமிட்டிக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் உள்ளே இருந்த ஒருவர் பணத்தாள்களை அள்ளி வெளியே வீசியிருக்கிறார்.

தேடுதல் வேட்டையில் போலீசும் இராணுவமும் ஈடுபட்டுள்ளன

அதற்குள் போலீசும் இராணுவமும் வந்து அவர்களை பிடிக்க முயற்சித்திருக்கிறது. ஆனால்,குழந்தைகள் உள்பட வீட்டில் இருந்த 15 பேரும் அந்தத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாகச் சொல்லப்படும் சகாரான் ஹுசைனின் தந்தையும் இரு சகோதரர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

முசுலீம்கள் அதிகம் வாழும் சாய்ந்தமருது, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இலங்கையில் நடந்த மோசமான நிகழ்வு குறித்து பேச அப்பகுதி வாழ் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர்.

“ஈஸ்டரில் நடந்த குண்டுவெடிப்பு எங்களை ஆழமாக பாதித்துள்ளது. குறிப்பாக, இறைவழிபாடு நடத்தும் இடத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளது, எங்களுக்கு கோபத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் இங்கே வசிக்கும் முகமது சுல்ஃபிகர்.

15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், “கையில் துப்பாக்கியுடன் ஒருவரைப் பார்த்த இளைஞர் சொன்ன தகவலின் அடிப்படையில் நாங்கள் அங்கே சென்றோம். 10 நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இங்கே குடிவந்தார்கள்; இந்தப் பகுதியில் வாழும் எவருடனும் அவர்கள் பழகவில்லை. அடையாள அட்டையை காட்டும்படி கேட்டபோது, மழுப்பலான பதிலைக் கூறியதோடு நாங்களெல்லாம் முசுலீம் எங்களை சந்தேகிப்பது தவறு என ஒருவர் கோபமானார். அவர்களிடம் நாங்களும் முசுலீம்தான் என்று சொன்னோம். விவாதம் முற்றியபோது, ஒருவர் துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டார். நாங்கள் பயந்து ஓடினோம்” என்கிறார்.

இரும்புப் பாலத்துக்கு அருகே உள்ள மசூதி கமிட்டியிடம் தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். “நாங்கள் வீட்டை அடைந்தபோது, சூழ்நிலையில் மோசமாக இருந்தது. வீட்டில் இருந்த ஒருவர், பகுதி வாழ் மக்களை நோக்கி கத்திக்கொண்டிருந்தார், ‘துரோகிகள்’ என்றார். இதற்கிடையே, ‘நாங்கள் முசுலீம்களை எதுவும் செய்ய மாட்டோம்’ என வாக்குறுதி அளித்தார். ஆனால், நாங்கள் அந்த வீட்டை சோதனையிடுவதில் உறுதியாக இருந்தோம்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மசூதி கமிட்டி உறுப்பினர் ஒருவர்.

படிக்க :
♦ நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !
♦ இலங்கை குண்டுவெடிப்பும் – சவுதி வஹாபியிசமும் !

அதற்குபின் நடந்ததுதான் வினோதமானது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

“உள்ளே இருந்த ஒரு இளைஞர் பணத்தாள்களை எடுத்து எங்கள் மீது வீசத் தொடங்கினார். ‘பணத்தை சாப்பிடுங்கள், எங்களை தனியாக விடுங்கள்’ என தமிழில் எங்களை வசைபாடினார். அரை மணிநேரத்துக்குள்தான் அத்தனையும் நடந்தது. அருகில் இருந்த டிராபிக் போலீசிடம் விசயத்தை சொன்னோம், அதன்பின் இராணுவம் வந்தது” என்கிறார் கமிட்டி உறுப்பினர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக, இந்தப் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த பலர், வேலை இழப்பு காரணமாக நாடு திரும்பியிருக்கின்றனர். அவர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருதுவில் கூடி என்ன நடந்தது என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“பத்து வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்ததைப் போல மீண்டும் ஒரு சட்டகத்துள் வாழ்க்கை அடைக்கப்பட்டிருக்கிறது. தாடியை வைத்துக்கொண்டு வெளியே போவது குறித்து ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கிறேன். எல்லா நேரங்களிலும் அடையாள அட்டை இருப்பதை உறுதி செய்துகொள்கிறேன். அரசு எங்களுக்கு பிரச்சினை தரவில்லை. சில பித்தர்கள் செய்த மிக மோசமான குற்றத்தால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது” என்கிறார் இந்தப் பகுதியில் வாழும் ரகுமான்.

கலைமதி

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்