ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒருமுறை சொன்னார், “தகவல் தொடர்பு கொள்வதில் உள்ள ஒரே மிகப்பெரிய பிரச்சினை, அது நடந்த இடத்தில் ஏற்படுத்தும் மாயைதான்”.

மனித தொடர்பு கொள்தலில் உள்ள மிகப்பெரிய கண்ணி குறித்து ஷா எச்சரிக்கும்விதமாக அப்படி சொல்லியிருக்கிறார். ஆனால், நரேந்திர மோடி தன்னுடைய முழுமையான தகவல் தொடர்பையும் பொது மக்கள் தொடர்புத் திட்டத்தையும் இந்த ‘மாயை’யை ஒட்டியே வடிவமைத்திருக்கிறார்.

நம்முடைய பிரதமரைத் தவிர, வேறு எந்த இந்திய தலைவரும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து முற்றிலுமாக நழுவிச்சென்றதில்லை.

மிகச் சமீபத்திய மோடியின் ‘தொடர்பு கொள்தலின் மாயை’க்கு உதாரணம், அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட  பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எடுத்த ”அரசியல் அல்லாத” நேர்காணலைச் சொல்லலாம்.  தன்னுடைய பிரதமர் பதவி காலத்தில் போதுமான அரசியல் நேர்காணல்களை அளித்துவிட்டார் என்கிற மாயையை ஏற்படுத்தும் வகையில், இந்த நேர்காணல் ‘அரசியல் அல்லாத’ என்கிற அடைமொழியோடு வெளியானது.

உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கொண்ட பிரச்சினைகளில் ஒரு சிறுபகுதியைக்கூட பேசவேயில்லை. அவர் பதில் சொல்ல வேண்டிய ஒரே ஒரு கேள்விக்குக்கூட உருப்படியான, உண்மையான பதிலை அளிக்கவில்லை. பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரே ஒரு ‘அரசியல் நேர்காணலை’கூட அவர் அளித்ததில்லை.

தான் பதவியேற்ற 2014 முதல் வழங்கி வரும் ‘மன் கி பாத்’ வானொலி உரை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், ஏபீபி தொலைக்காட்சி பேட்டிகளைத் தவிர, இந்திய மக்களோடு உண்மையான வார்த்தைகளோடு மோடி தொடர்பு கொண்டதே இல்லை.

இலத்தீன் சொல்லான ‘கம்யூனிஸ்’ என்ற சொல்லிருந்து உருவான ‘கம்யூனிகேஷன்’ என்ற சொல்லுக்கு ‘பொதுவில் பகிருதல் அல்லது பகிரச் செய்தல்’ எனப் பொருள்.  உண்மையான தொடர்பு கொள்ளுதல், இரு வழி பரிமாற்றமாகும்.  அதாவது அது ஒரு பரிமாற்றம், ஒன்றுசேர்தல் அல்லது ஒன்றாக இணைதல். இது உங்களையும் என்னையும் ஒரு பொதுத் தளத்தில் ஈடுபட வைக்கிறது. அங்கே என எனக்கு கேள்விகளோ, கரிசனங்களோ இருக்குமானால், நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும்வகையில் எதிர்வினை செய்கிறீர்கள். அதுபோல எனது கரிசனங்களையும் தீர்த்து வைக்கிறீர்கள்.

படிக்க:
சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !
♦ மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

இந்திய பிரதமரை போல, என்ன பேச வேண்டும் என்பதையோ எப்போது பேசவேண்டும் என்பதையோ தானே முடிவு செய்வதல்ல அது.

கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதின் உண்மையான பல எரியும் கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. அவை இதுபோன்றவை….

  • பணமதிப்பழிப்புக்கான நோக்கம்தான் என்ன?
  • அது சாதித்தது என்ன? அது உண்மையில் யாருக்கு உதவியது?
  • அது கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டதா?
  • அது தீவிரவாத தாக்குதல்களை நிறுத்திவிட்டதா?
  • சிறு வியாபாரிகளுக்கு (அல்லது தொடர்புடைய யாருக்கேனும்) ஜி.எஸ்.டி. பயனளித்ததா?
  • பணமதிப்பழிப்பும் ஜி.எஸ்.டி.-யும் சிறந்த யோசனைகள் எனில், வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை ஏன் உள்ளது?
  • ‘நல்ல நாட்கள்’(அச்சே தின்) எங்கே?
  • வளர்ச்சி (விகாஸ்) எங்கே?
  • வாக்குறுதி அளித்த கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் எங்கே?
  • ட்விட்டரில் அவதூறு பரப்புவர்களை பிரதமர் பின்தொடர்வது ஏன்?
  • வகுப்புவாத வன்முறையின் கொடூர சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் வாயை மூடி மவுனியாக இருப்பதேன்? சம்பவங்கள் நடந்தமுடிந்த வெகுநாட்களுக்குப் பிறகு, அதுகுறித்து பலவீனமான ஒரே விதமான பதிலையே அளிப்பதேன்?
  • நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற திருடர்கள் நாட்டைவிட்டு வெளியேறியபின், நாமெல்லாம் ‘காவலாளிகள்’ என சொல்லிக்கொள்வதேன்?

இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு என்றேனும் பிரதமர் பதிலளித்திருக்கிறாரா ? மேலும் தொடர்ந்து புனையப்பட்ட நிகழ்ச்சிகளின் பின்னே, உண்மையான பிரச்சினைகளை அவர் மறைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற பின்வரும் கேள்விகளுக்கே பதிலளிக்க விரும்புகிறார்…

  • உங்களுக்கு மாம்பழம் பிடிக்குமா?
  • மாம்பழத்தை எப்படி சாப்பிடுவீர்கள்?
  • உங்களுக்கு எப்போதாவது கோபம் வருவதுண்டா?
  • உங்களுடைய கோபத்தை எப்படி கையாள்கிறீர்கள்?
  • உங்களுக்கு இன்னமும் நகைச்சுவை உணர்வு இருக்கிறதா?
  • நீங்கள் அணியும் உடைகளை நீங்களே துவைப்பதேன்?
  • உண்மையில் எவ்வளவு குறைவாக நீங்கள் தூங்குகிறீர்கள்?
  • நீங்கள் திரைப்படங்களைப் பார்ப்பீர்களா?
  • திரைப்படப் பாடல்களை நீங்கள் முணுமுணுத்ததுண்டா?
  • உங்களுடைய தாய் உங்களுடன் எப்போதாவது வந்து தங்குவதுண்டா?

தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய சமூகத்தில் அதிர்வுக்குரிய மாறுதல்களை உருவாக்கிய, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர், ‘அரசியல் அல்லாத நேர்காணலை’ பாலிவுட் நடிகருக்கு தருகிறார். அதுவும் பரபரப்பான தேர்தல் நேரத்தில்… நாட்டின் அதிகாரம் மிக்க மனிதர், பயந்து ஓடிக்கொண்டிருப்பதைத்தான் அப்பட்டமாக இது காட்டுகிறது.

இந்த வினோதமான, மிகை யதார்த்தமான இந்த நேர்காணல் குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. மோடிக்கு இணக்கமான தொலைக்காட்சிகள் இதைக் கொண்டாடின. இணக்கமல்லாத தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் தோலுரித்துப் பேசின. சமூக ஊடகங்கள் பழித்தன; எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்.டீ.டி.வி -யின் ராவிஷ் குமார், தன்னுடைய பிரைம் டைம் நிகழ்ச்சியில் இதுகுறித்து ஒரு முழுமையான பகடி நிகழ்ச்சியையே நடத்தினார்.

‘அரசியல்-அல்லாத’ என்ற அடைமொழியோடு வந்தாலும் அதில் ஏராளமான அரசியல் இருந்தது. பிரதமர் எதிர்க்கட்சிகள் மீது பல சந்தர்ப்பங்களில் குற்றம் சொன்னார். ஆர்.எஸ்.எஸ். பற்றி குறைந்தபட்சம் மூன்று முறை உச்சரித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான ‘நட்பு’ குறித்து, அரசியல் எதிர்க்கட்சிகளிடமிருந்து தனக்கு குர்தாவும் இனிப்பும் வருவது குறித்தும் பேசினார்.

கத்தோலிக்கம் அல்லாத போப் என்பதைப் போல, அரசியல் அல்லாத பிரதமர் என ஒன்று இல்லவே இல்லை.

பலர் இதை புத்திசாலித்தனமான விளம்பர ஜோடிப்பு என்றார்கள். ஆனால், மோடி – அக்‌ஷய் குமாரின் நேருக்கு நேர், விளம்பரம் என்பதைக் கடந்து தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். மோடியின் பி.ஆர். குழு அவரை சுவைப்பதிலும் பழக்கத்திலும் பணம், பதவியை அனுபவிப்பதிலும் எளிமையாக உதாரண வாழ்வு வாழும் அன்பான வயதான நபராக காட்ட விரும்பினார்கள்.

ஆனால் அவர்களுடைய திட்டம், யதார்த்தத்திலிருந்து தப்பித்து ஓடுகிற சுயமோகம் பிடித்த ஒருவராக மோடியைக் காட்டி மிக மோசமாக முடிந்தது.

படிக்க:
சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?
♦ 50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

மோடி தன்னை இதுபோல் தட்டிக் கொடுத்திருந்தால், விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என அவருக்கு யாராவது நினைவுபடுத்தியிருக்கலாம். ஆனால், இப்போது தாமதமாகிவிட்டது. இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சினைகளை தூக்கி எறிந்த பெரும் அரசியல்வாதி என வரலாற்றில் சொல்லப்படுவதற்கு பதிலாக, சமூக ஊடக ட்ரோல் படைகள் மற்றும் மிகப்பெரிய பி.ஆர். எந்திரத்தின் துணையுடன் மக்களுடன் தொடர்பு கொள்தலில் தக்கவைத்திருக்கும் மாயைகளுக்கிடையே இந்தியாவின் 14 -வது பிரதமர் பயந்தவராக -பாதுகாப்பற்றவராக- பாலிவுட் நடிகரின் துணை தேவைப்படுவராக, எப்போதும் நினைவு கூறப்படுவார்.


கட்டுரை : ரோஹித் குமார்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : த வயர்