மே லான கவனத்திற்கு! மே நாள் வெல்லட்டும்!

நான்
ஒரு தொழிலாளி
உழைப்பாளி
என்பதுதான்
மகிழ்ச்சியும்
மதிப்பும்.

நான் ஒரு தொழிலாளி
என்ற மகிழ்ச்சியை
எதனோடு ஒப்பிட முடியும்?

ஓடை பனிநீரில்
ஊறும் குளிர்நிலவின்
ஜாடை எனில்,

அது,
ஒரு தொழிலாளி
உலகூட்டும்
உழைப்பின் விளைபயனும்
அது பலர்க்கும் உருவாக்கும்
பெரும் சுகமும்
ஒத்ததாய் இல்லை.

நான் ஒரு தொழிலாளி
எனும் கவுரவத்தை
உலகின் பெருமதிப்பு
எதனோடும்
இணைவைக்க முடியவில்லை,
ஏனெனில்,

சூரியன் எனில்,
அது மறைந்து விடுகிறது.
வானம் எனில்,
அது வெளிறி விடுகிறது.
மரம் எனில்,
அது உதிர்ந்து விடுகிறது.
நிலம் எனில்,
அது சரிந்து விடுகிறது.
அனைத்துக்கும் ஆதரவாய்
அழியா பெரும் உயிர்ப்பாய்
புவிப் பரப்பெங்கும்
வர்க்கப் பெருமிதம்
விரிந்து கிடக்கிறது.

என்ன இருந்தாலும்
அவன் பெரிய முதலாளி,
நாம சாதாரணம்
என்ற எண்ணமே பிழை..

பெரிய முதலாளிகள்..
பில்லியன் மூலதனங்கள்..
எதுவாயினும்
தொழிலாளியே
உனது கை படாவிட்டால்
அவை வெறும் கல்.
உனது உழைப்பு தீண்டாவிடில்
பணம்
பிணம்!

பிரச்சினை,
அவன் முதலாளி
என்பது மட்டுமல்ல
நான் தொழிலாளி
எனும் பலமறியாத
பலவீனமே!

ஆலைகள் மாறலாம்
ஆடைகள் மாறலாம்
அனைவரும் சுரண்டப்படுகிறோம்
எனும்
பொது அநீதிக்கெதிராக
வர்க்கமாய்
நாம் இணைந்துகொள்ள
மறுப்பது,
நமது சுவாசத்தை
நாமே மறுப்பது.

இனம்
மதம்
சாதி
பாலினம்
அனைத்தின்
வழியாகவும்
ஆதிக்கம் செய்கிறது
அன்னிய – பெருமூலதனம்.

அனைத்தும்
நம்மைக் கண்டு
அஞ்சி நடுங்கும் …

அனைத்தையும்
அடித்து நொறுக்கும்
வரலாற்றுப் பேராயுதம்
நமது வர்க்க பலம்.

எவ்வளவு
மும்முரமாய் உழைத்தாலும்
அது முதலாளிக்கே,
கொஞ்சம்
அரசியலாய் உழைத்துப் பார்
அதுதான் தொழிலாளிக்கு!

உனது
முதுகெலும்பு
உருவப்படுவது கூடத் தெரியாமல்
முன்னேறி முன்னேறி
முதலாளித்துவ நுகர்வில்
கிறங்காதே…

முன்னோர்கள் ரத்தத்தில்
ஒளியாதே..
முதுகுக்குப் பின்னால்
நெளியாதே..
தொழிலாளி வர்க்கமே
துலங்கும்படி பேசு!
தொடர்ச்சியைப் பேசு!
நீதான்
புது உலகைப் படைத்திடும்
போராட்ட மூச்சு!

எட்டு மணிநேர வேலை..
ஏற்ற ஊதியம்
பணிப் பாதுகாப்பு
உரிமைக்கான சங்கம்..
அத்தனையும்
போராடிப் பெற்றது சிவப்பு.
வர்க்க அரசியல்தான்
மே நாளின் சிறப்பு.

போராடாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது
போராடிப்பார்.. அங்கே
மே நாள் சிலிர்க்கிறது!

துரை. சண்முகம்