“நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

கூலி அடிமை முறையை தீவீரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்!” என்கிற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பேரணி – ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அவற்றின் செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு…

*****

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 01.05.2019 அன்று மே நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் துவங்கி, தபால் நிலையம் வரையில் மே நாள் பேரணி நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகேந்தர் தலைமையேற்றார். பொதுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. மணிபாலன், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி கும்முடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் J. அருள், கும்முடிப்பூண்டி செந்தமிழ் சோலை அமைப்பை சேர்ந்த கவிஞர் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் தோழர் நெடுஞ்செழியன், மணலி தொழிற்சங்க கூட்டமைப்பின் கெளரவ தலைவர் தோழர் செங்கை S. தாமஸ், மற்றும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கும்முடிப்பூண்டி நாகராஜ கண்டிகை கிராம மக்கள் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி சுதேஷ்குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆகியோர் மே நாள் எழுச்சி உரையாற்றினர்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் தோழர் சரவணன் நன்றியுரைக்கு பின் இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

***

புதுச்சேரியில்…

ட்டு மணி நேர வேலை, 8 மணி நேர புத்துயிர்ப்பு, 8 மணி நேர உறக்கம் என மனித வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது மே நாள். 18-ம் நூற்றாண்டின் கொடிய அடக்குமுறை வரலாற்றைத் திருப்பிப் போட்டது மே நாள். அந்த மே நாள் அரசியலின் அவசியத்தை யோசிக்கவிடாமல் பாராளுமன்றத் தேர்தல் களேபரங்களில் மக்களை மூழ்கவைத்துக் கொண்டிருக்கின்றன ஓட்டுக் கட்சிகள்.

வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஓட்டுப் பொறுக்கி, பதவியைக் கைப்பற்ற நாயாய் அலைகின்றனர். வாக்குறுதிகள் பொய் என்பது ஒருபுறம் இருந்தாலும், எந்த வாக்குறுதிகளும் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதாக இல்லை. மக்களுக்கு சம்மந்தமே இல்லாத வளர்ச்சியைப் பற்றியும், 6,000 தருகிறேன், 72,000 தருகிறேன் என மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதாகவும் தான் வாக்குறுதிகள் உள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசினாலே அரசின் அடக்குமுறைகள் பாய்கிறது. முதலாளித்துவம் தோன்றிய 18-ம் நூற்றாண்டில் இருந்த அதே நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன தொழிலாளர் மீதான அடக்குமுறைகள். ஆனால், அன்று தொழிற்சங்க அமைப்புக்களோ, சட்டங்களோ இல்லை. ஆனால் இன்றோ தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்து பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறது தொழிலாளி வர்க்கம்.

தொழிலாளர்களுக்கென இருக்கின்ற 44 சட்டங்கள் இன்று காலாவதியாகி விட்டன. வேலைவாய்ப்பை உருவாக்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் கூறு போட்டு தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டன. லாபமீட்டும் நிறுவனங்களையும் ஒழிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. புதிதாய் பணியமர்த்தப்படும் எந்த ஒரு துறையிலும், நிரந்தர வேலை என்பது கிடையாது.

ஏற்கெனவே காண்டிராக்ட் முறையில் 480 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் வேலை நிரந்தரம் என இருந்தது. நடைமுறையில் அது இல்லாமல் ஒழிக்கப்பட்டு விட்டது. தற்போது NEEM, FTE உள்ளிட்ட நவீன உழைப்புச் சுரண்டல் முறைகளால் தொடர்ச்சியாக 480 நாள் வேலை என்பது குதிரைக்கொம்பு தான்! ஒரு தொழிலாளி வேலைக்கு சேரும்போதே வேலையை விட்டு நீக்கும் தேதியை தீர்மானித்து பணிக்கு அமர்த்துவதுதான் குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு (FTE) எனும் கொத்தடிமை திட்டம்.

நீம் (NEEM) என்ற பயிற்சித்திட்டம் மூலம் இளம் தொழிலாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி கொடுத்து திறனை வளர்ப்பதாகச் சொல்லி, நேரடி உற்பத்தியில், நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை இடங்களில் திணிக்கின்றன. இத்தொழிலாளர்கள் கடைசிவரை பயிற்சியாளர்களாகவே இருக்க முடியும். ஒருபோதும் வேலை நிரந்தரம் கிடையாது. நேரடி உற்பத்தியில் ஈடுபட்டாலும், பயிற்சியாளர் என்று சொல்லப்படுவதால் சம்பளப் பட்டுவாடா சட்டத்தின் மூலம் கோரும் நியாயமான சம்பளம், போனஸ், பணிக்கொடை போன்ற எதையும் கோர முடியாது. தொழிலாளி என்ற வரையறையில் வராததால், சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமையும் கிடையாது. இவற்றின் மூலம் நிரந்தர வேலை சட்டப் பூர்வமாகவே ஒழிக்கப்பட்டு விட்டது.

நிரந்தர தொழிலாளர்கள் என்று சொல்லப்படுபவர்களை, இயந்திரத்தோடு இயந்திரமாய் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கட்டிப் போடுகின்றனர் முதலாளிகள். அரை நொடி நகர்ந்தாலும், ஒலி எழுப்பும் கருவிகளை வைத்துக் கண்காணிக்கின்றனர். சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளுக்கு அட்டவணை போடுகின்றனர். விடுப்பு எடுத்தால் கக்கூஸ் கழுவ வைப்பது, கழுத்தில் போர்டு மாட்டி விடுவது என மனரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். இவ்வளவு கடும் பணிச் சூழலில் நாளொன்றுக்கு 12 முதல் 16 மணிநேரம்  வேலை செய்தாலும், அற்பக் கூலிதான் பெறுகின்றனர்.

மொத்தத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகள் சட்டப்படியே நிலை நாட்டப்பட்டு உரிமை கோரும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஏதோவொரு மூலையில் ஒரு மணிநேரத்திற்கு 55 தொழிலாளர்கள் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாகின்றனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வறிக்கை. மறுபுறம், அம்பானி, அதானி, மிட்டல், ரூயா உள்ளிட்ட 9 முதலாளிகளின் சொத்துமதிப்பு மக்களில் 63 கோடிபேரின் சொத்து மதிப்பிற்குச் சமம் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

இந்த ஏற்றத்தாழ்வான சூழலைப் புரிந்து கொள்ளாமல் மேதினத்தை சடங்காகக் கொண்டாடுவதில் பயனில்லை. ஆலையில் ஒரு தொழிலாளி பாதிக்கப்பட்டால் அதற்கான போராட்டம் தொழிற்பேட்டை, அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புக்கள் போன்ற எல்லைகளைத் தாண்டி பல்வேறு ஆலைத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் என இணைந்து போராட வேண்டும். ஒரே ஒரு தொழிலாளிக்குப் பிரச்சினை என்றால் கூட அனைத்து தொழிற்சாலைத் தொழிலாளர்களும் ஒன்று சேர்வார்கள், போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்ற அச்சத்தை முதலாளிகளுக்கு உருவாக்க வேண்டும். அதை மேதினத் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர் தம் வழியில் போராட வேண்டும்.

மேற்படி நோக்கத்தை தொழிலாளர் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நகரின் முக்கிய சிக்னலான ராஜா தியேட்டர் சிக்னலில் பேரணியும், பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பேரணியையும், ஆர்ப்பாட்டத்தையும் புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். சரவணன் தலைமை தாங்கினார்.

பேரணியில் மே நாள் தியாகிகளைப் போற்றியும், தொழிலாளர் மீதான அடக்குமுறைகள், சுரண்டல்களை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கட்டுப்பாடோடும், விடாத முழக்கங்களையும் நின்று பார்த்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், NEEM மற்றும் FTE பற்றியும், அந்த திட்டங்கள் எவ்வாறு உரிமைகளற்ற கொத்தடிமையாக மாற்றுகிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடனும் விளக்கினர். மேதினத் தியாகிகளால் கிடைத்த உரிமைகளை நிலைநாட்ட அந்தத் தியாகிகளை நெஞ்சிலேந்திப் போராட வேண்டும் என விளக்கினர்.

திருவண்ணாமலை, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர். கண்ணன், “உரிமைகள் பெறுவதற்கு நீதிமன்றத்தை மட்டும் நாடுவதில் ஒரு பலனும் இல்லை. ஏனெனில், நீதிபதிகள் காவி சிந்தனையோடும், கார்ப்பரேட்டுக்களின் அடியாளாகவும் மாறி தீர்ப்புக்களை வழங்குகின்றனர். எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடக்கிறதோ அங்கு மட்டுமே ஓரளவிற்கு மக்கள் சார்பாக தீர்ப்புக்களை வழங்குகின்றனர். எனவே, உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள ஒரேவழி போராடுவது மட்டுமே” என விளக்கினார்.

அடுத்ததாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர், தோழர். மணியரசு, தொழிலாளர்களது உரிமைகள் பறிக்கப்படுவது போல், பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி விரிவாக விளக்கினார். கல்வியில் இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழிப்பதன் மூலம், ஏழை, எளிய மாணவர்கள், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கினார். எனவே, மேதினத் தியாகிகளின் வழியில் தொழிலாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என விளக்கினார்.

இறுதியாக உரையாற்றிய புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் தோழர். மகேந்திரன், மே தினம் என்பது, உரிமைகள் பெற்ற தினம் என்றும், அந்த நாளை போதை விருந்து என கொண்டாடத்தான் என்று முதலாளிகள் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், இன்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க விவசாயிகளும், ஒக்கி புயலில் சிக்கி மீனவர்களும், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்றனர் என்பதை பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டு விளக்கினார்.

நிகழ்ச்சியில் நானே உலகம், கம்யூனிசம் வெல்லும் ஆகிய புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், விடாத முழக்கங்களுடன் நகர்ந்த பேரணியும், அதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டமும் உணர்வுப்பூர்வமாக வெயிலில் அமர்ந்து கலந்து கொண்ட தோழர்களது அர்ப்பணிப்பும் மக்கள் மத்தியில் நிகழ்ச்சியை கவனிக்க வைத்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு: 95977 89801. 

*****

வேலூரில்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்ப்பாக 133-வது மே நாள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 01.05.2019 அன்று மாலை நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில், வேலூர் மண்டி வீதியலிருந்து மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய பேரணியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாலை 6.00 மணிக்கு அண்ணா கலையரங்கம் அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்  மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம் சார்பில் அடுக்கம்பாறை, மீன் மார்க்கெட், அண்ணா கலையரங்கம் கிளைகளிலிருந்தும் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்  மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சரவணன், வேலூர் மாநகர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் சங்கம், அடுக்கம்பாறை கிளை உறுப்பினர் தோழர் செல்வி, வழக்கறிஞர் பாலு மற்றும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.

பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு நடைமுறைப் படுத்திவரும் தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பணி (NEEM-National Employability Enhancement Mission), ஒப்பந்த கால வேலை வாய்ப்பு (FTE – Fixed Term Employment) போன்ற தொழிலாளர் விரோத திட்டங்களை ஒழித்துக் கட்டவும், கார்ப்பரேட் கம்பெனிகளின் காட்டாட்சிக்கு முடிவு கட்டவும் தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்விதமாக அமைந்தது வேலூர் பேரணி மற்றும் அர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர்

*****

திருச்சியில்…

லகத் தொழிலாளி வர்க்கம் தனக்கான விடியலைப் போராடி நிறுவிய மே தினமான 01.05.2019 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், திருச்சி சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கம் ஆகிய சங்கங்களின்

நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்ற மே தினப் பேரணி மாலை 5.30 மணியளவில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து புறப்பட்டது. பேரணியை பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் உத்திராபதி தொடங்கி வைத்தார்.

பேரணியின் முன்பு சிறுவர்கள் – தோழர்கள் என உற்சாக நடனத்துடன் பறை இசை இசைத்தனர். தேர்தல் கட்டுப்பாடு என்ற மோன நிலையை களைத்தது தோழர்கள் பறை இசை!

ஆயிரக்கணக்கான மக்கள் குவியும் பிரதான சாலையின் மத்தியில், நமது மே தின ஊர்வலத்தையும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தோழர்கள் உயர்த்திப் பிடித்த செங்கொடி பதாகைகளைப் பார்த்து திருச்சி நகர மக்கள் பரவசப்பட்டனர்.

தோழர்களின் விடாப்பிடியான முயற்சியின் விளைவாக காவல்துறை மக்கள் நெருக்கம் மிகுந்த பிரதான சாலையில் மேதின ஊர்வலம் நடத்த அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

மே – தின கோரிக்கைகளான,

  • நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!
  • கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!
  • இட்லர் முசோலினி வாரிசுகளாகிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – சங் பரிவார் கும்பலை வீழ்த்த தொழிலாளி வர்க்கமாய் ஒன்று திரள்வோம்!

என எழுச்சியாக முழங்கிய பேரணி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. அங்கே 6.30 மணியளவில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் மணலிதாசன், அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் தோழர்.பழனிச்சாமி, பு.மா.இ.மு. திருச்சி. அமைப்பாளர், தோழர் பிரித்திவ், பு.மா.இ.மு. கரூர், பொருளாளர் தோழர்.சிவா, மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலாளர் தோழர்.ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் “ஒரு சதவீதம் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும் 99 சதவீதம் உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும் கட்டியமைக்கும் கார்ப்பரேட் ஜனநாயகத்தை வீழ்த்தாமல் விடிவில்லை!

மே தினம் என்றாலே மண்டையை பிளந்து, இரத்தம் சிந்தி உயிரை கொடுத்து தொழிலாளிவர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் நினைவுக்கு வரவேண்டும். அப்படிபட்ட தியாகத்தின் வரலாறே மேதின வரலாறு!

ஆனால் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிய தாராளமயக் கொள்கைகளை பல கட்டமாக திணித்ததன் விளைவாக தொழிலாளி வர்க்கத்தை நடைமுறையில் பாதுகாத்த 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் காலாவதியாகிவிட்டன. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் கானல் நீராகிவிட்டது. அரசு வேலை என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது. நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை என்ற, அடிப்படை உரிமைகள் அற்ற கொத்தடிமைச் சட்டம் நடைமுறையாக்கப்படுகிறது என்றார்.

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் மெட்ரோ இரயில் தொழிலாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது சட்டவிரோதம். தொழிலாளர் நலனுக்காக 7 பேர் இணைந்து சங்கம் வைக்கலாம் என இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் தொழிற்சங்கம் அமைத்தது குற்றமெனகூறி 8 பணியாளர்களின் வேலையை பறித்த கொடூரத்தை கண்டித்துத்தான் மெட்ரோ இரயில்வே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

கார்ப்பரேட் நலனில் காட்டும் அக்கறை சாதாரண குடிமக்கள் மீது இந்த அரசுகள் காட்டுவதில்லை! தொழிலாளர்கள்-வியாபாரிகள் மாணவர்கள் – விவசாயிகள் என எந்த பிரிவு மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை! தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி சுருட்டிய பணம் , முதலாளிகளின் – கார்ப்பரேட் கும்பலின் கையில் மூலதனமாக குவிகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அம்பானி, அதானி, மிட்டல் ரூயா உள்ளிட்ட 9 முதலாளிகளின் சொத்து 63 கோடி மக்களின் சொத்துமதிப்பிற்கு சமமாக இருக்கிறதென்றால் ஒரு சதவீதம் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும் 99 சதவீதம் உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும் கட்டியமைக்கும் இந்த கார்ப்பரேட் ஜனநாயகத்தையும் அதன் அடிவருடி அரசுகளையும் வீழ்த்தாமல் மக்களுக்கு விடிவில்லை ! ஆகவே நாம் இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையில் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது! கம்யூனிச ஆசான்கள் காட்டிய திசையில் சிந்திப்போம்! மக்கள் அதிகாரத்தைக் கட்டியமைப்போம்! மேதினத் தியாகிகளின் லட்சியத்தை நினைவாக்குவோம்” என தனது சிறப்புரையில் கூறி முடித்தார்.

திருச்சி ம.க.இ.க தோழர்கள் மற்றும் பெண் தோழர்கள் இணைந்து புரட்சிகர பாடல்களை பாடினர். இறுதியாக தஞ்சை ம.க.இ.க செயலர் தோழர் இராவணன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி, தொடர்புக்கு : 89030 42388.

*****

கோவையில்…

கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக மே தினத்தன்று KNG புதூர் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியை ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்டிரிஸ் சங்கக் கிளைத் தலைவர் தோழர் எம்.கோபிநாத் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் துணைத் தலைவர், தோழர் பழனிச்சாமி முழக்கமிட்டு பேரணியைத் துவக்கி வைத்தார். இந்த பேரணி வெளியில் இருந்த மக்களை கவரும்படி இருந்தது.

இந்தப் பேரணியில் தொழிலாளர்கள் மற்றும் ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். பேரணியை கணுவாய் நோக்கி சென்ற சாலையில் பொதுமக்கள் இருபுறமும் நின்று கவனித்தனர். மக்களிடம் மே நாள் பிரசுரம்  விநியோகம் செய்யப்பட்டது.

சுமார் 5.30 மணியளவில்  கோவை மாவட்ட துணைத்தலைவர்  தோழர்  எம்.தேவராஜ்  அவர்கள் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது அதில் மே நாள் என்பது யாருக்கானது? இது தற்போதைக்கு எந்தவகையில் அவசியம்? எங்கு முதலில் போராட்டம் துவங்கியது என்பதைப்பற்றி விளக்கி பேசினார்.

மக்கள் கலை இலக்கிய கழகதின் சார்பில் நன் உலகம் பாடலுடன் நிகழ்ச்சி  துவங்கியது. முதலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தோழர்.  சுரேஷ் அவர்கள் இந்த அரசு முறையாக தேர்தல் நடத்துவதற்குக்கூட வக்கற்ற வகையில் இருப்பதையும் கல்வியில் பார்ப்பனியத்தை திணிப்பதையும்  அம்பலப்படுத்தும் விதமாக பேசினார்.

மக்கள் கலை இலக்கிய கழகதின்  சார்பில்  தோழர் சித்தார்த்தன்  அவர்கள்  கோவை மாவட்ட  கண்காணிப்பாளர் SP. பாண்டியராஜனையும் , டாஸ்மாக்  கடைகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், புரட்சிகர அமைப்புகளில் பொதுமக்கள்  தங்களை இணைத்து  கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பேசினார்.

முருகன் மில் கிளை செயலாளர் தோழர் ஜெகநாதன் அவர்கள் மில் தொழிலாளியின் அவலநிலைமையும் , ஆணாதிக்க மனநிலையில் பெண்கள் வீட்டில் படும் பாட்டையும், ஆலையில் அவர்களின் உழைப்பினை ஒட்ட சுரண்டி ஏமாற்றப் படுவதை விவரித்தார். கூட்டத்தில் இருப்பவர்களை கலகலப்பாக இருக்கும் வகையில் பேசி  ஒட்டு போடுவதால் பிரச்சனை  தீராது போராட வேண்டும் என்று  தனது உரையை  நிறைவுசெய்தார்.

மாவட்ட பொருளாளர் தோழர் சரவணக்குமார் தனது உரையில் பு.ஜ.தொ.மு சங்கம்  துவங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால்  GST, பணமதிப்பு இழப்பு  ஆகியவற்றால் லட்சக்கணக்கானோர்  வேலை இழந்தனர் அதை  கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள், அனைத்திற்கும் அரசுதான் காரணம்  மற்றும்  தொழிலாளர்கள் நுகர்வு வெறியால் போர்குணம் மழுங்கடிக்கப்பட்டு இருப்பதை  அம்பலப்படுத்தியும், காட் ஒப்பந்தம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் அமைந்துள்ளதையும் விளக்கினார்.

இறுதியாக மாவட்ட பொறுப்பாளர் தோழர் லோகநாதன் அவர்கள் மே தினம்  உழைப்பாளர் தினம் என்றும், அது  காலப்போக்கில்  தொழிலாளர் தினமாக சுறுக்கப்பட்டுள்ளது என்பதையும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு மக்கள் போராட்டங்களே என்பதை விளக்கும் விதமாக பண்ணிமடை பகுதி 6 வயது சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் மக்கள் போராட்டம்தான்  குற்றவாளியை   கண்டுபிடிக்க வைத்துள்ளது என்பதை கூறினார். மக்கள் போராட தயங்குவதற்கு அச்சம் காரணமாய் இருக்கிறது. அச்சமின்றி போராடவில்லையெனில் மனிதகுலம் உயிர் வாழ முடியாது. போராட தயங்கும் எந்த உயிரினமும்  உயிர் வாழ   முடியாது என டார்வின் கூறியதை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையும் அரசும் மக்கலுக்கானது அல்ல குற்றவாளிகளின் பாதுகாவலன் என்றும்,  இந்த அரசு நீடிக்கும் வரை பிரச்சனைகள் தீராது. கோவில்களில் வழிபாடு, பூஜைகள் செய்து நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியாது. தோற்று  போன  இந்த கட்டமைப்பை வைத்துக்கொண்டு தேர்தல் பாதையின் மூலம் நமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியாது.

புதிய  ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி போல  ஜனநாயகப்பூர்வமான, தவறு  செய்தால் உடனே திருப்பி அழைக்கிற அமைப்பு முறைகொண்ட  புதியஜனநாயகப்  புரட்சிதான் தீர்வு. எனவே சாதி – மத பேதங்களை  களைந்து வர்க்கமாய் ஒன்றிணைந்து மக்கள் வரவேண்டும்  என பேசி முடித்தார்.

பிரான்ஸ் நிறுவனம் சூயஸ்-க்கு  சிறுவாணித் தண்ணீர் தாரை வார்க்கப்பட்டது    குறித்து ம.க.இ.க நாடகம் நடத்தப்பட்ட பிறகு SRI கிளைத்தலைவர்  தோழர் கோபிநாத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

1 மறுமொழி

  1. பயனர்களாய் உள்ள பொது மக்களுக்கும், ஊழியர்களாய் உள்ள தொழிற்சங்களுக்கும் உள்ள இந்த இடைவெளி அதிகரித்து கொண்டே போகிறதாய் நான் உணருகிறேன்

    இந்த இடைவெளியை எப்படி குறைப்பது ? அதற்கான விளக்கம், செயல் திட்டம் என எதுவும் உள்ளதா?

    எனது வருத்தம், இந்த இடைவெளி நீண்டு கொண்டே செல்கிறது, சமுகத்திற்க்கு ஆரோக்கியமானது இல்லை, இதை இடைவெளியை குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல் திட்டங்கள் வேண்டும், அந்த செயல் திட்டங்கள் கட்டுரை/கூட்டம் போன்ற வடிவங்களோடு நின்று விடாமல் , அதிக வரலாறு இல்லாமல், தற்கால நிகழ்வுகளை கொண்டு, எளிமையாகவும், தொழிட்நுட்பத்துடன் இருக்கும் பட்சத்தில் பயனர்களாகிய உள்ள பொதுமக்களுக்கு புரிய வைக்கமுடியும் என நினைக்கிறேன்

Leave a Reply to சரவணன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க