கும்மிடிப்பூண்டி ராஜ்குமார் இறப்பு: இது தற்கொலையல்ல, அரசின் கொலை

"எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டை காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? ஒரு வாரம் அவகாசம் வேண்டும்" என்று ராஜ்குமார் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டினை இடிக்க முயன்றுள்ளனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி கல்யாணி. கணவனை இழந்த கல்யாணி தனது இரண்டு மகன்கள், மகளுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டை கரை நேதாஜி நகர் 2ஆவது தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். கல்யாணியின் ஏழ்மையை அறிந்த ஒரு தம்பதியர் தனக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தை கல்யாணிக்கு கொடுத்து விட்டு சென்னைக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர், அவர்களுக்கு சென்று வர இந்த இடத்தை கொடுக்கு மாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டாட்சியர் கண்ணன் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம், எனவே நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இரு தரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த இடம் ஆக்கிரமிப்பு எனக் கூறி அதை அகற்ற வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசுத் துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் முயன்று உள்ளனர்.


படிக்க: ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?


பணம் படைத்தவர்களுக்குத் தங்களுடைய விசுவாசத்தை காட்டுவதற்காக அப்பாவி கல்யாணியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டை காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? ஒரு வாரம் அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும் வீட்டினை இடிக்க முயன்றுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ராஜ்குமார் வீட்டைப் பூட்டிக்கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் ஓடினார்.

அவரை போலீசும் தீயணைப்புத் துறையினரும் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் ராஜ் குமாருக்கு 50 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இளைஞர் தீக்குளிப்பு விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, வி.ஏ.ஓ பாக்கிய ஷர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது எவ்வளவு அயோக்கியத்தனமான விஷயம்! அவர்கள் என்ன தெரியாமலா தவறு செய்தனர்? பணம் படைத்தவர்களின் நலனுக்காக ஒருவரைத் தெரிந்தே கொலை செய்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த தண்டனை போதுமானதா!

பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் இவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்களா? அதற்கு இந்த அரசு உத்தரவாதம் கொடுக்குமா?

எளிய மனிதர்களுக்கு எதிராகச் செயல்படும் இந்த கட்டமைப்பை மாற்றியமைப்பது மட்டுமே நம்முன்னுள்ள ஒரே தீர்வு.


சிவா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க