“நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டும் NEEM – FTE
திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை தூக்கியெறிவோம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட மே தின நிகழ்வுகளின் தொகுப்பு.

*****

திருவள்ளூர்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 01.05.2019 மேநாளில் கிளை – இணைப்பு சங்கத் தொழிலாளர்களை திரட்டி கொடியேற்றி, ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொரிய பன்னாட்டு நிறுவனமான தூசன் (DOOSAN) தொழிற்சாலை, நெமிலிச்சேரி அருகில் உள்ள டி.ஐ. மெட்டல் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆவடியில் உள்ள TPI – IBP பொதுத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றில் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொருளாளர் மற்றும் அவ்வாலைகளின் சிறப்பு தலைவர் தோழர் பா.விஜயகுமார் சங்கத்தின் கொடியேற்றினார். பின்னர், அங்கு நடைபெற்ற ஆலைவாயில் கூட்டங்களில் மத்திய – மாநில அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை அம்பலப்படுத்தியும், மேநாள் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி, அவர்கள் காட்டிய போராட்ட பாதையில் போராட வேண்டும் என உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனைத் தொடர்ந்து, சென்னை – மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஆகிய அமைப்புகள் இணைந்து மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டத்தை ஆவடி பகுதியில் நடத்தினர்.

நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் இந்தப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி மாலை 4.30 மணியளவில் ஆவடி, மார்க்கெட் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் ம.சரவணன் தலைமைதாங்கினார். அவர்தனது தலைமை உரையில், இன்றைய அரசியல் சூழலில் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள், சட்டங்கள் எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக சட்டப்பூர்வமாக திருத்தப்பட்டு வருகிறது. இதனை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி பேசினார்.

ஆவடி, மார்க்கெட் பகுதியில் இருந்த சிறுகடை மற்றும் தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், குடியிருப்பு பகுதி மக்கள் ஆகியோர் பெருத்த ஆரவாரத்துடன் ஆதரித்தனர். விண்ணதிரும் முழக்கங்களுடன், இசை சமர் குழுவினரின் ஆடலுடன் கூடிய பறையிசையுடன் வந்த பேரணியில் தொழிலாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சகோதர அமைப்பை சேர்ந்த தோழர்கள் என 300 பேருடன் ஆவடி – பூவிருந்தவல்லி சாலை மற்றும் அவுசிங்போர்டு வழியாக, நகராட்சி அலுவலகம் அருகில் முடிவுற்றது.

பேரணியில் போடப்பட்ட அரசியல் முழக்கங்கள் மற்றும் பதாகைகள் மக்கள் மத்தியில் கார்ப்பரேட் காட்டாட்சியை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது.

ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் தோழர் மு.சரவணன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் தொழிலாளி வர்க்கத்தின் மீது மோடி அரசு NEEM – FTE என்ற திட்டங்களை புகுத்தி கொத்து குண்டுகளை போட்டு நிரந்தர வேலைமுறையை ஒழிக்க நினைக்கிறது. இதனை தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது, மேதின தியாகிகளின் வீரம் செரிந்த போராட்டப் பாதையில் திரண்டு போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை நகர செயலாளர் தோழர் சாரதி பேசும் போது எப்படி தொழிலாளர் மீதான தாக்குதலை மோடி அரசு செய்து வருகிறதோ? அதேபோல் தான் மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த கல்வித் துறையை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளது என்றும், சென்னையில் பல்கலைக் கழகம் திவாலானதாக அறிவிக்கிறது, அரசு பல்கலைக் கழகங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, தனியார் கல்வி வியாபாரிகள் மூலம் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை கடை சரக்காக்கும் வேலையை செய்து வருகிறது மோடி அரசு! இதனை முறியடிக்க தொழிலாளர்கள் – மாணவர்கள் இணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது என பேசினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் மேநாள் உரையாற்றினார். அவர் தனது உரையில், NEEM – FTE திட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் நிரந்தர வேலைமுறையை முற்றிலும் ஒழித்துக்கட்டும் திட்டம் என்பதையும், 1926 தொழிற்சங்க சட்டம் அமலில் உள்ள நாட்டில் சங்கம் ஆரம்பித்தார்கள் என்ற காரணத்திற்காக 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2014- வரை லாபகரமாக இயங்கிய BSNL-யை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்காக ஒழித்துக்கட்ட முடிவெடுத்துள்ளது மோடி அரசு!

ஆவடி பகுதியில் உள்ள படைஉடை தொழிற்சாலை (OCF) மூட முடிவெடுத்துள்ளனர். ஆனால் நாம் நமது இருசக்கர வாகனத்தில் (DEFENCE) என்று ஸ்டிக்கர் போட்டுக் கொண்டு போகிறோம், நாட்டின் பாதுகாப்பு துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு கூட வேலைக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர், இதற்கு எதிராக நாம் ஒன்றினைந்து போராட வேண்டாமா?

இந்த மேநாளில் கார்ப்பரேட் காட்டாட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் – விவசாயி – மாணவர் – இளைஞர் – சிறு, குறு தொழில் முனைவோர்- சிறுவணிகர் ஆகிய வர்க்கங்களை இணைத்து போராடுவதே தீர்வு என்றும், தனித்தனியே நடத்தும் போராட்டங்களால் தீர்வு கிடைக்காது என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட இனைச் செயலாளர் தோழர் லட்சுமணன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

*****

ஓசூர்

சூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, ஒசூர் ரயில்நிலையம் அருகே எழுச்சிமிகு மே தின ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மே 1 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வமைப்பை சேர்ந்த தோழர் இ.கோ. வெங்கடேசன் தலைமைத் தாங்கினார். விண்ணதிர முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து தனது தலைமை உரையின் வாயிலாக மேதின வரலாறு குறித்து அறிமுகத்தை விளக்கிப்பேசினார்.

அதன்பிறகு, ஒசூர் பகுதியின் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, மக்கள் அதிகார அமைப்பின் தருமபுரி மண்டல அமைப்பாளர் தோழர் கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

தோழர் சங்கர் தனது உரையில் காண்ட்ராக்ட், சி. எல், மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் அவல நிலைமையை படம்பிடித்துக்காட்டி இதற்கு காரணமான கார்ப்பரேட் கம்பெனிகளின் சூழ்ச்சியையும் இதற்கு துணைநிற்கும் அரசையும் விரிவாக அம்பலப்படுத்திப்பேசினார்.

தோழர் அன்பு தனது உரையில், இந்த சமூகம் இயங்குவதற்கு அடிப்படையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தை நன்றியோடு நினைவுகூர்ந்து அவர்களின் அவல நிலையை புள்ளிவிவரங்களுடன் விவரித்து அம்பலப்படுத்திப் பேசினார். குறிப்பாக, பொறியியல் பட்டதாரிகள் போன்ற உயர் படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட், சி.எல் மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாக பணிபுரிந்தும் உணவகங்களில் எடுபிடி வேலைகளை செய்துகொண்டும் அடிமை நிலையில் வாழ்ந்துவரும் அவலத்தை புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்தி தற்போதைய மாணவ சமூகத்தை எச்சரிக்கை செய்து நாட்டுப்பற்றுக்கொள்ளும்படி அறைகூவி அழைத்துப்பேசினார்.

தோழர் கோபி தனது உரையில், மேதினத்தை ஒரு விழாவாக கொண்டாடுவது என்பது முதலாளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. அதனைத்தான் பரந்துபட்ட தொழிலாளர்களின் எதிரிகள் விரும்புகின்றனர். ஒரு ஆயுதபூஜை நிகழ்வைப்போல நடத்தச்சொல்லி பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆலை நிர்வாகங்களால் நிர்பந்திக்கப்பட்டு அதற்கு தொழிற்சங்கங்கள் பலியாகிப்போய்கிடக்கின்ற இந்த சூழலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் போராட்ட நாளாக அறிவித்து தற்போது ஒசூரில் ஆர்ப்பாட்டமாக நடத்தப்படுகின்ற இந்த நிகழ்வை வாழ்த்தி தனது உரையை தொடங்கிப்பேசினார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் நீம், எஃப்.டி.இ முறையிலான நவீன சுரண்டல் கொள்கை என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் தொழிலாளர்களை சுரண்ட கொண்டுவந்த சட்டங்களின் நவீன வடிவ மறுபதிப்பே என்பதை தோலுரித்துப்பேசினார். அதற்கு அடுத்து நமது நாட்டில் நம் கண்ணெதிரே நடந்த வீரம் செறிந்த மாருதி தொழிலாளர்களின் போராட்டம், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டதுடன் அந்த போராட்டங்களின் போது அரசும், கார்ப்பரேட் முதலாளிகளும் எப்படி போராடும் மக்களுக்கு எதிராக கைக்கோர்த்துக்கொண்டிருந்தனர் என்பதை அம்பலப்படுத்திப்பேசினார்.

இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ள சில நேர்மையான நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை. கார்ப்பரேட் காவிப்பாசிசம் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, கோடிக்கால் பூதங்களான தொழிலாளர்கள் தனித்தனியே தங்களது கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுவது என்ற போக்கை கைவிட்டு. பிற உழைக்கும் அனைத்துப் பிரிவு மக்களிடமும் இணைந்து அந்தப் போராட்டங்களுக்கு தலைமைத்தாங்கி தொடர்ந்துப் போராடினால்தான் தற்போது அச்சுறுத்தலாக உள்ள கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை இந்த மண்ணிலிருந்தே துடைத்தொழிக்கமுடியும் வேறுகுறுக்குவழி ஏதுமில்லை என்பதை தீர்வாக முன்வைத்து அந்தவகையில் அமைப்பாக திரண்டெழுவீர் என்றவகையில் அறைகூவி அழைத்துப்பேசினார்.

படிக்க:
தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?
தமிழகத்தைக் குலுக்கிய மே தினம் ! | செய்தி – படங்கள் !!

திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இறுதிவரை ஆர்வமுடன் பார்த்து ஆதரித்துச்சென்றனர். குறிப்பாக ஆட்டோ தொழிலாளர்கள், பேருந்துப் பயணிகள், சிறுகடை வியாபாரிகள் என பெரும்பாலோர் ஆர்வமுடன் கவனித்துச்சென்றனர்.

நடந்து முடிந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு முன்னதாக இதனையொட்டி ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் அச்சிட்டு ஆலைவாயில்களில் விநியோகித்தும், வீடுகளில், தொழிலாளர்களின் குடியிருப்புகளில், தெருமுனைகளில் மற்றும் பேருந்துகளில் பரவலாக விநியோகித்தும் பிரச்சாரம் செய்திருந்தனர். நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகளை ஒட்டியும் பிரச்சாரம் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர். தொடர்புக்கு : 97880 11784.

*****

மதுரை

மே நாளை முன்னிட்டு மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணி – ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு மதுரை மாவட்ட ம.க.இ.க அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் தலைமைதாங்கினார். பேரணியை மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணப்பாளர் தோழர் குருசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மதுரை ஒத்தக்கடைப் பகுதியில் தொடங்கி நடந்த இப்பேரணி நரசிம்மன் சாலையை வந்தடைந்ததும், ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு தோழர் சினேகா, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அமைப்பின் தோழர் லயனல் அந்தோனி ராஜ் மற்றும் சிவகங்கை பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், தோழர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளிகளின் வயிற்றை போராட்டம் என்ற பெயரில் அடித்து, அப்பாவிகளை பலியிட்டு வினவு கூட்டங்களின் மே தின கொண்டாட்டம்…

    கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தல் இல்லாமல் மே தினம் கொண்டாடுகிறார்கள் வினவு கூட்டங்கள்.

    நாசமா போன கம்யூனிசம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க