அண்மையில் வெளியாகி சுமாராக ஓடிய ‘96’ திரைப்படம், முன்னாள் – இன்னாள் காதலர்களின் ‘அழியா நினைவு’களை கிளறிவிட்டுச் சென்றிருக்கிறது. படம் வெளியாகி நான்கைந்து மாதங்கள் ஆனபோதும், தாக்கம் குறையவில்லை.
‘96’ படத்தின் கதை மிக எளியது. ஜானகி – ராமச்சந்திரன் என்ற ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கிடையே ஏற்படும் பதின்பருவக் காதல், அந்தக் காதலை இருவரும் எப்படி தங்களுடைய முப்பதுகள் வரை தூக்கி சுமக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. படத்தில் நாயகி தனது பதின்பருவக் காதலை மறந்து திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு குடும்பம் இருக்கிறது. நாயகன் திருமணம் செய்துகொள்ளவில்லை; ஆனால், திருமணம் செய்துகொள்ளும் எத்தனிப்பில் இருக்கிறான். இருவரும் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலில் சந்திக்கும்போது தங்களுடைய ‘நிறைவேறா முதல் காதல்’ குறித்து அழுது தீர்க்கிறார்கள்; உருகிப் போகிறார்கள். இருவரும் வேறு வேறு பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டார்கள். அவர்கள் ஒன்று சேர முடியாது. அவர்கள் ஒன்று சேர்வதற்கான நியாயமும் காரணமும் அவர்களிடம் இல்லை. எனவே, மென்சோகத்துடன் அவரவர் வழியைப் பார்த்து கிளம்புகிறார்கள்.
இந்த மென்சோகம்தான் பலரை ‘96’ படத்தை விதந்தோத வைத்துக்கொண்டிருக்கிறது. படம் வெளியானபோது பலர் தங்களுடைய ‘முதல் காதல்’ அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு சிலாகித்தார்கள். பழைய பயன்படாத குப்பைகளைக் கிளறி, அந்தக் குப்பைகளைப் பார்த்து கடந்த காலத்தை வெட்டியாக நினைவுகொள்வோமே… அதுபோல ‘முதல் காதல்’ அனுபவங்கள் குவிந்தன. அதென்ன ‘முதல் காதல்’? எந்த வயதில், யார் மீது வருவது முதல் காதல்? இருவரும் காதலிப்பது முதல் காதலா? அல்லது ஒரு தலையாக காதலிப்பதும் முதல் காதலில் வருமா? முதல் காதல் அபத்தமா ? அல்லது அழியா நினைவா? சில நிகழ்ந்த சம்பவங்களின் வழியாக நாம் இதுகுறித்த முடிவுக்கு வருவோம்…
சம்பவம் 1 :
என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் அழகாகப் பாடுவார். இளையராஜாவின் மென்சோகப் பாடல்களையே எப்போதும் பாடிக்கொண்டிருப்பார். ஏன் எப்போதும் சோகப்பாட்டே பாடுகிறீர்கள் எனக் கேட்டபோது, தன்னுடைய நிறைவேறா ‘முதல் காதல்’ கதையைச் சொன்னார். பத்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காதல், திருமணத்தில் முடியவில்லை. அந்தப் பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்; இவரும் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. மறக்காமல் தன்னுடைய காவிய சோகத்தை தினந்தோறும் நினைவில் கொள்ள தனது மகளுக்கு ‘காதலி’யின் பெயரையே வைத்திருக்கிறார்.
‘உங்கள் மனைவிக்கு இப்படியொரு காதல் கதை இருந்து, அவர் காதலன் பெயரை உங்கள் மகனுக்கு வைத்திருந்தால் ஒப்புக் கொண்டிருப்பீர்களாக’ என அருகில் இருந்த நண்பர் ஒருமுறை கேட்டார். அதற்கு அவரிடம் பதில் இல்லை. மழுப்பலான சிரிப்புதான் பதிலாக வந்தது. ‘இது ஒருவகையில் உங்கள் மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா?’ என இன்னொரு நண்பர் கேட்டார். ஆனாலும், அந்த நண்பர் தினமும் ‘முதல் காதல்’ நினைவுகளை பாடாமல் விட்டதில்லை.
படிக்க:
♦ லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி
♦ நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !
மேற்சொன்ன நண்பரைப்போல, ‘முதல் காதல்’ கதைகளை பேசிக் ‘கொல்லும்’ பல ஆண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படியான ‘முதல் காதல்’ அனுபவங்களை விதந்தோதும் ஒரு பெண்ணைக்கூட சந்திக்கவில்லை. பலருக்கு காதல் கைகூடாமல், வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தபோதும்கூட தங்கள் ‘முதல் காதலை’ தனிப்பட்ட பேச்சிலும்கூட நினைவு கூறியதில்லை. பெண்கள், ஆண்களைக்காட்டிலும் நிதர்சனத்தில் வாழ்கிறவர்களாக இருக்கலாம். அல்லது ஆண்களைப்போல தங்களுடைய காதல் பராக்கிரமங்களை சொல்லிக்கொள்ளும் ‘சுதந்திரம்’ பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது பெண்கள் முதல் காதலை நினைப்பதால் உண்டாகும் சிக்கலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலை அதற்கு இடம்கொடுக்காது. ஆனால், ஆண்கள் முதல் காதலைத் தொடர எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் சமூக வாழ்நிலையும் அவர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது.
ஆக, ‘முதல் காதலில்’ ஆண்கள் ஏன் மயங்கித் திளைக்கிறார்கள் என்பதற்கு தனக்கு இன்னொரு விருப்பத்தேர்வு இருக்கிறது என்பதும் அது தனது ஆண்மைக்கு ஒளிகூட்டக்கூடியது என்பதுமே முதன்மையான காரணங்கள். மேலே சொன்ன முதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது சம்பவத்தை சொல்கிறேன். ஆனால், இரண்டும் வேறு நபர்களுக்கு நடந்தவை.
சம்பவம் 2 :
அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள். இருவருக்கும் காதல். ஆனால், வேறு வேறு நபர்களுடன் திருமணம். பெண், ஒரு குழந்தையுடன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்றுவிடுகிறார். ஆணுக்கு, அவன் கட்டிய மனைவியால் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு குழந்தைகளும் உண்டு. விவாகரத்துக்குப் பின் அந்தப் பெண் அலுவலகம் வருகிறாள், இருவருக்கும் மீண்டும் ‘முதல் காதல்’ துளிர்விடுகிறது. அந்த ஆண், அந்தப் பெண்ணை ‘திருமணம்’ செய்துகொள்கிறான். அது சட்டப்படியான திருமணம் அல்ல. ஏனெனில் அவனுடைய குடும்பத்தைக் கைவிட அவனுக்கு மனதில்லை.
பகலில் காதலி வீட்டிலும் இரவில் கட்டியவள் வீட்டிலும் இருப்பான். ஒழிந்துவிட்டதாக கருதப்பட்ட இருதார மணம், இப்படியாக உயிர்ப்பெற்று இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையே அந்தப் பெண், அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பெற்றுவிட்டாள். அந்த சமயத்தில் அவனுக்கு விபத்து. காலில் அடிபட்டு கட்டியவள் வீட்டில் அடங்கிவிட்டான். அவனை நம்பி, குழந்தையைப் பெற்ற அவள் மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு, பணிக்குப் போக வேண்டிய கட்டாயம். ‘முதல் காதல்’ இப்போது நுனிவரை இருவருக்கும் கசக்கிறது!
சம்பவம் 3 :
இன்னொரு முதல் ‘காதல் கதை’, சற்றே தூக்கலான சோகம் நிறைந்தது. சோகம், ‘முதல் காதல்’ ஜோடிகளுக்கு அல்ல, இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. அவர்கள் இருவரும் பதின்பருவத்தின் முடிவில் பணிபுரியும் இடத்தில் காதல் வயப்பட்டார்கள். இருவரும் ஒருவரிடம் ஒருவர் காதலை சொல்லிக்கொள்வதற்குள் ‘விதி’ அவர்களை பிரித்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு வீட்டில் அவசர அவசரமாக திருமணம் செய்துவிட்டார்கள். திருமணம் ஆன விசயமேகூட நீண்ட மாதங்கள் கழித்துதான் தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண், கணவருடன் வேறொரு ஊருக்கு சென்றுவிடுகிறார். எதேச்சையாக அதே ஊருக்கு இந்த ஆணுக்கு பணிமாற்றல் கிடைக்கிறது.
பொதுவான நண்பர்கள் மூலமாக பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறார் ஆண். இருவருக்குள்ளும் இருந்த ‘முதல் காதல்’ துளிர்க்க தொடங்குகிறது. சில மாதங்களுக்குப் பின், கைக்குழந்தையுடன் படிக்கப்போவதாகச் சொல்லி, தாய் வீட்டிற்கு திரும்புகிறார் அந்தப் பெண். ஆணுக்கும் மீண்டும் அதே ஊரில் பணி. இவர்கள் ‘முதல் காதல்’ இந்த முறை, எங்கு போய் முடிய வேண்டுமோ அங்கு முடிகிறது. எதிர்ப்பார்த்த திருப்பமாக, அந்தப் பெண்ணின் வீட்டாருக்கு விசயம் தெரிந்து, இருவரையும் மிரட்டி, அவர்களைப் பிரிக்கிறார்கள். பெண்ணின் கணவர் ‘பெருந்தன்மை’யாக அவரை ஏற்றுக்கொள்கிறார்.
அந்த ஆணை, வேறொரு பெண் திருமணம் செய்துகொள்வதிலிருந்து இதில் சோகம் ஆரம்பிக்கிறது. முதல் காதலிலிருந்து மீளாத, அல்லது மீள முடியாத நிலையில் இருக்கும் ஆண், தன்னுடைய கடந்த காலத்தை சொல்லியே அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். அந்தப் பெண்ணுக்கு இதை வெளிப்படையாகச் சொன்னதே அவனை திருமணம் செய்துகொள்ள கூடுதல் தகுதியாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், திருமணத்துக்குப் பின்தான் இங்கே வாழ்க்கை தொடங்குகிறது.
‘முதல் காதலை’ விட்டு மீள முடியாமல் தவிக்கும் அவன், தன் மனைவி மீது அதைக் கொட்டுகிறான். வேறொரு ஆண் மூலம் காதலி பெற்ற குழந்தையை தன் குழந்தையாக சொல்லிக்கொண்ட அவனுக்கு, மனைவி அலுவலக விசயமாக போனில் பேசுவதுகூட, ‘படுப்பதாக’ப் படுகிறது. வார்த்தைகளாலும் அடியினாலும் அவளை சித்ரவதை செய்கிறான். பாலுறவின்போது, ‘நீ அவளைப்போல இல்லை’ என்கிறான். அந்தப் பெண் அவனுடன் வாழ முயற்சித்தபோதும், அவன் இறந்த காலத்தை விட்டு வெளியேறத் தயாராக இல்லை.
“ஒருமுறை குடும்பத்தோடு வெளியே போயிருக்கோம். அப்போ ரோடு கிராஸ் பண்ணும்போது அன்கான்ஷியசா அவரோட கையைப் பிடிச்சிட்டேன். உடனே, அவர் அன்கான்ஷியசா கையை உதறினார். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. சாதாரணமா அவர்கிட்ட நெருங்கவே பதட்டமா இருக்கும்கா. இந்த பதட்டத்தோடதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என தனது சீரழிந்துபோன திருமண வாழ்க்கையை பகிர்ந்துகொண்டார் அந்தப் பெண். திருமணம் ஆன அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய பெற்றோர் இறந்துவிட்டபடியால், அந்தப் பெண்ணிற்கு போக்கிடம் இல்லை. அவனை திருமணம் செய்துகொண்டதைத் தவிர, வேறு எந்த தவறையும் இழைக்காத அந்தப் பெண்ணை ‘முதல் காதலின்’ பெயரால் சித்ரவதை செய்கிறான் அவன்.
இந்த மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய நபர்களின் மனவக்கிரத்தின் அடிப்படையில் அவர்களுடைய செயல்பாடுகளின் அளவுகள் கூடக்குறைய இருக்கின்றன. இந்த மனவக்கிரத்தின் பொதுவான அம்சமாக இருப்பது மறக்க முடியாத ‘முதல் காதல்’ என்னும் அபத்தம்.
‘96’ படம் பார்த்துவிட்டு, வாட்சப் குரூப் மூலம் ‘முதல் காதலை’ தேடி வரும் ஆண்கள் இருக்கிறார்கள். தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக குடும்பம் இருக்கிறது. நட்பாக நலம் விசாரித்த அந்தப் பெண்ணைப் பார்க்க, 400 கி.மீ கடந்து அவன் திடீரென வந்து நின்று, ‘நாம் நட்பாக இருப்போம்; பேசலாம் வா’ என அழைக்கிறான். அது என்னவகையான ‘நட்பாக’ இருக்க முடியும்?
விஜய் நடிப்பில் ‘பூவே உனக்காக’ என்றொரு அபத்தப் படம் வந்தது. அந்தப் படத்தில் வரும் ‘செடியில பூ பூக்கறதுபோல, ஒரேமுறைதான் காதல் வரும்’ என்கிற வசனம் இப்போதும்கூட பிரபலமானது. இந்த வசனத்தைக் கேட்டு, பெரும்பாலான ஆண்கள் ஓரக்கண்ணில் கண்ணீர் சிந்துகிறார்கள். அந்த பெரும்பாலான ஆண்கள் எவரும் வாழ்க்கை முழுவதும் அப்படியே ‘முதல் காதல்’ நினைவாகவே இருந்துவிடுவதில்லை என்பதே யதார்த்தம். அப்படி இருப்பது இயற்கைக்கு முரணானது தானே?
படிக்க:
♦ என் தோழி என்ன தவறு செய்தாள்? – சந்தனமுல்லை
♦ குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ?
‘முதல் காதல்’ நினைவுகள் ஏன் மறக்க முடியாததாக பலருக்கு இருக்கிறது? முதன்முதலில் வானத்தில் பறக்கும் நிகழ்வு தரும் த்ரில் போன்றதொரு அனுபவத்தை ‘முதல் காதல்’ தருவதால் அது மறக்க முடியாததாக உள்ளது என்கிறார்கள், உளவியலாளர்கள். அதைக் கடந்து வேறு எந்த ‘புனித’மும் அதற்கு இல்லை. இதுவே கூட, சிலருக்கு த்ரில் அனுபவமாக இருக்கலாம், சிலருக்கு டிராஜிடியாகவும் அமைந்துவிடலாம்.
அதோடு, எதை முதல் காதல் என சொல்கிறார்கள்? எட்டு வயதில்கூட ஆண்-பெண் ஈர்ப்பு சாத்தியம். அதை முதல் காதல் என சொல்லலாமா? பதின்பருவத்தில் ஹார்மோன் கிளர்ச்சியால் உண்டாகும் ஈர்ப்பை முதல் காதல் என சொல்லலாமா? அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டப்படியான திருமண வயதை எட்டிய பின் வருவதுதான் முதல் காதலா? அல்லது படிப்பு, வேலை என செட்டிலானபின் வருவது முதல் காதலா? 30, 40 வயதில் முதல் காதல் வந்தால் அதை முதல் காதல் பட்டியலில் சேர்க்கலாமா? எதை ‘முதல் காதல்’ என்கிறார்கள்? முதல் காதலுக்குப் பிறகு வரும் காதலெல்லாம் அழகிய நினைவாக கொண்டாட தகுதியற்றதா?
அப்படியெனில், கடந்துபோன முதல் காதலை கொண்டாடுகிற பலர், நிகழ்காலத்தில் அன்பில்லாத வறட்டுத்தனமான வாழ்க்கையை வாழ்வது தெரிகிறது. கிட்டத்தட்ட இறந்தகாலத்தை மறக்க முடியாத மனநோயாளிகள் போன்றதொரு நிலையில் வாழ்கிறார்கள். மனநோய் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அவர்களையும் கடந்து அவர்களுடைய குடும்பத்தை பாதிக்கிறது; சமூகத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது. ஒருதலை காதல் கொலைகள், காதலின் பெயரால் நிகழும் வன்முறைகளுக்கு மிகைப்படுத்தப்பட்ட, புனிதமாக்கப்பட்ட, சினிமாக்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ‘முதல் காதல்’ என்கிற அபத்தமே அடித்தளமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அவற்றை பட்டியலிட்டால் மேலே சொன்ன சம்பவங்களைக் காட்டிலும் வன்முறையின் அளவு இவற்றில் கூடுதலாக இருக்கும்.
வழக்கமாக ஆண்-மைய சமூகத்தில் காதலும் திருமணமும் பெண்களை சுரண்ட கிடைத்த கருவிகளாகிவிட்ட நிலையில் ‘முதல் காதல்’ என்பதையும் ஒரு சுரண்டல் ஆயுதமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்களை கொல்லவும் அவர்கள் மீது கட்டற்ற வன்முறைகளை ஏவவும் அவர்களை சுரண்டவும் ஆண்களுக்கு கிடைத்த மற்றுமொரு ஆயுதமே‘முதல் காதல்’. பண்பட்ட மனிதராக வாழ விரும்பினால் முதலில் இந்த ஆயுதத்தை தூக்கி எறியுங்கள்.
மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.