மாணவர் எண்ணிக்கையைக் காட்டி பள்ளிக்கு நிதி மறுத்த
பிரெஞ்சு அரசுக்கு பதிலடி கொடுத்த மக்கள் !

ழுங்காகப் படிக்கவில்லை என்றால் ஆடுமேய்க்கப்போக வேண்டியதுதான் என சிறுவர்களை மிரட்டும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பார்த்திருப்போம். ஆனால், படிப்பிற்காக ஆடுகளை பள்ளியில் சேர்ப்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?

இது வேறு எங்கும் இல்லை. பிரான்சு நாட்டின் க்ரெட்ஸ் என் பெல்லெடோன் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் கிராமத்தில் உள்ள பள்ளியில் தினசரி வருகைப் பதிவேட்டில் ஆடுகளின் வருகை எண்ணிக்கையும் பதிவு செய்யப்படுகிறது.

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தங்களது கிராமப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக் குறைவை ஈடுகட்ட இவ்வாறு ஆடுகளையும் பள்ளியில் மாணவர்களாகக் கணக்குக் காட்டியிருக்கின்றனர் இந்த கிராமத்தினர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த ஜூல்ஸ் ஃபெர்ரி தொடக்கப் பள்ளியில் 15 ஆடுகளை மாணவர்களாகப் பதிவு செய்துள்ளனர். இந்த 15 ஆடுகளும் மிகேல் கிரெர்ட் என்ற உள்ளூர் விவசாயியால் வழங்கப்பட்டவையாகும். கடந்த மே 7, 2019 அன்றுதான் இந்த ’அபத்தம்’ நடந்துள்ளது. பிரெஞ்சு அரசின் சிக்கன நடவடிக்கையே இக்கிராமப் பள்ளியின் முடிவுக்கான காரணம். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இருக்க வேண்டிய மாணவர் எண்ணிக்கை குறித்த பிரெஞ்சு அரசின் நிதி ஒதுக்கீட்டு விதிமுறையை ஈடுகட்டவே இந்த நடவடிக்கையை அப்பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளது.

க்ரெட்ஸ் என் பெல்லெடொன்னில் குடியிருப்பவர்கள் தங்களது ’புதிய மாணவர்களை’ பார்க்கின்றனர்.

”தேசியக் கல்வி என்பது துரதிர்ஷ்டவசமாக எண்களில் மட்டுமே உள்ளது. ஆகவே எங்கள் நடவடிக்கையின் மூலம், அரசாங்கக் கணக்கிற்கு தேவையானபடி எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. எங்கள் குழந்தைகளின் கல்விக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லை” என்கிறார் ஆடுகளை மாணவர்களாகப் பதிவு செய்யும் இந்த முயற்சிக்குப் பின்னாலிருந்த பெற்றோர்களில் ஒருவரான கேல்லெ லாவல்.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

இத்தொடக்கப் பள்ளியின் மொத்த பதினொரு வகுப்புகளில் குறிப்பிட்ட ஒரு வகுப்பில் மாணவர் சேர்க்கை அரசு நிர்ணயித்த எண்ணிக்கையை விட குறைவாக இருந்த காரணத்தால், அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாமல் போகும் அபாயம் இருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், மிருகங்களைப் பதிவு செய்து தேவையான ’மாணவர்’ எண்ணிக்கையை உறுதி செய்துள்ளனர்.

ஜூல்ஸ் ஃபெர்ரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது புதிய வகுப்பறைத் ’தோழர்களின்’ வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த முயற்சியை பகிரங்கமாக விளம்பரப்படுத்தும் விளம்பர பேனர்.

”ஆடுகளைப் பள்ளியில் கொண்டிருப்பது அருமையாக உள்ளது. நான் கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை என் வகுப்பிற்குக் கொண்டு செல்வேன். கண்டிப்பாக அவை நன்றாகப் படிக்கும்” என்கிறான் அத்தொடக்கப் பள்ளியில் படிக்கும் எட்டு வயது மாணவன் ஒருவன்.

இந்த முயற்சி மூன்று பெற்றோர்களால் முதலில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் விரைவில் அந்த நகரின் மேயரான ஜீன் லூயிஸ் மாரெட்டும் இந்த முயற்சிக்கு ஆதரவு தந்ததோடு, மிருகங்களை பள்ளியில் மாணவர்களாகச் சேர்ப்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறார்.

இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆடுகளை வகுப்பறையில் சேர்த்ததை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரெஞ்சு அரசு தனது சிக்கன நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மாணவர் எண்ணிக்கையைக் காட்டிக் கட்டுப்படுத்துகையில் பெற்றோர்களும், பகுதிமக்களும் இதுபோன்ற முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து அரசைப் பணிய வைக்க முயற்சிக்கின்றனர்.

இங்கு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை ஊற்றி மூடி, அரசுப் பள்ளிகளையே ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்.  .


நந்தன்.
செய்தி ஆதாரம் : RT

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க