மே-22ல், ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் !
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் அறைகூவல் !

உயிரோடு இருந்து செய்யமுடியாததை நம் உணர்வோடு இருந்து செய்து கொண்டிருக்கிறார்கள்  ஸ்டெர்லைட் எதிர்ப்புத்  தியாகிகள். ”

மே-22, 2018 அன்றைய தினம், உலகமே தூத்துக்குடியை உற்றுக் கவனித்த நாள், கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான  தமிழகத்தின்  ஒட்டுமொத்த கோபமும்  தூத்துக்குடியில்  வெளிப்பட்ட நாள், ஸ்டெர்லைட் எனும் உயிர்க்கொல்லி ஆலையை தமிழகத்தில் இருந்து விரட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் ஒன்றிணைந்த நாள். “இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என விண்ணதிர முழக்கமிட்டுக்கொண்டு  அமைதியாக  மாவட்ட ஆட்சியரை சந்தித்து  மனுகொடுக்க சென்றார்கள் மக்கள்.

ஆனால்  கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசும், அடிமை எடப்பாடி அரசும், போலீசும் கூட்டுச் சேர்ந்துகொண்டு  துப்பாக்கிச்சூடு நடத்தி  15 அப்பாவி உயிர்களை  படுகொலை செய்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி ஓராண்டு கடந்த பின்பும் இன்றுவரையில் விசாரணை ஆணையம், நீதிமன்ற வழக்கு என நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !
♦ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

சொந்த மண்ணில் எது வேண்டும், எது வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை கூட நமக்கில்லை என்பதைத்தான்  நமது சொந்தங்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச்சூடு நமக்கு உணர்த்துகிறது.  15 உயிர்களைப் பறிகொடுத்த துயரம் நம் கண்ணிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்குள்ளாகவே வேதாந்தாவின் கோரப்பசிக்கு  மோடியும், அடிமை எடப்பாடி அரசும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நமது தமிழன்னையை கூறுபோட்டு விற்றுவிட்டார்கள்.

தமிழகமே! “இலட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று துணிச்சலோடு துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்ட  மாணவி ஸ்னோலின் குரல் கேட்கவில்லையா? அக்குரல் இன்று மட்டுமல்ல, கொலைகாரச் ஸ்டெர்லைட்டை இம்மண்ணிலிருந்து விரட்டும் வரை என்றைக்கும் ஒலிக்கும். அடக்குமுறையாலும், அச்சுறுத்தல்களாலும் தூத்துக்குடியை முடக்கப்பார்க்கிறார்கள்.  தூக்கில் போட்டாலும் அடிபணிய மாட்டேன் என்று துணிவோடு நின்றான் கட்டபொம்மன். கட்டபொம்மனின் வாரிசுகள் நாம் வேதாந்தாவை இனியும் நம் மண்ணில் இயங்க விடக்கூடாது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் !
அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற மே-22 ல் உறுதியேற்போம்!”

இழந்த உயிர்களுக்கு நீதி வேண்டாமா? அவர்களின் இலட்சியம் நிறைவேற வேண்டாமா? அதற்கான பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்கள்  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள். அவற்றை நிறைவேற்றுவதே நம் அனைவரின் முழுமுதல் கடமை.

படிக்க :
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
♦ மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட்டை விரட்டுவது மட்டுமல்ல,  இரத்தவெறி பிடித்த வேதாந்தா குழுமத்தை இந்தியாவிலிருந்தே விரட்டுவதுதான், ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

மாணவர்களே, இளைஞர்களே, பொதுமக்களே !

  • ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவுகூரும் வகையில், மே 22 அன்று பொது இடங்கள், பூங்காக்களில் தியாகிகளின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்!
  • கருஞ்சட்டை அணிந்து அந்நாளை கருப்பு தினமாக அனுசரிப்போம்!
  • ஜல்லிக்கட்டில் செய்தது போல மே-22 அன்று இரவு ஒவ்வொரு வீட்டு மாடியிலும்  செல்போன் டார்ச் மூலம் தியாகிகளை ஒளிரச்செய்வோம்!
  • மாணவர்கள், இளைஞர்கள் தியாகிகளின் நினைவாக இரத்த தானம் செய்வோம்!
  • தியாகிகளின் நினைவாக மரக்கன்றுகள் நடுவோம்!
  • துப்பாக்கிச்சூடு நடத்தி 15 உயிர்களைப் படுகொலை செய்த காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம் !
  • சிறப்புச்சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றவும், தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்கவும் தமிழக அரசை வலியுறுத்துவோம்!

இப்படிக்கு,
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு (ACSF),
தூத்துக்குடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க