லைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் மீது உச்சநீதிமன்றப் பெண் ஊழியர் கொடுத்த புகார் தொடர்பான பிரச்சினை தற்போது மறக்கப்பட்டு வருகிறது.தேர்தல் முடிவுகள், அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்று வரும் நாட்கள் நகரும்போது, நாமும் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்குத் தாவி விடுவோம். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டும், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுமந்து கொண்டிருக்கும். கைகள், கால்களில் விலங்கிடப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டு, துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டது, கொடுங்கனவாக அவர்களைத் துரத்தும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம், கயர்லாஞ்சியில் துண்டு நிலம் வாங்கி, குழந்தைகளைப் படிக்க வைத்த குற்றத்திற்காக, சுரேகா போட்மாங்கே என்ற தலித் அம்மாவும், மகளும், மனநிலை பாதிக்கப்பட்ட மகனும் நிர்வாணப்படுத்தப்பட்டு, வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார்கள். தன் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தடுக்கமுடியாமல், மறைந்திருந்து பார்த்துவிட்டு தப்பித்து ஓடிய, பையலால் போட்மாங்கேவிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.கடந்த 2002-ல், குஜராத்தில் கும்பல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, தங்கள் குடும்பத்தினர்  கண்முன்னே கொல்லப்பட்டதைப் பார்த்து, மனநிலை பாதித்து, இன்றுவரை முகாம்களில் தங்கியுள்ள இசுலாமியப் பெண்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு, கடந்த 70 ஆண்டுகளில் சாதி, மதம், இலாப வெறிக்காக இழைக்கப்பட்ட அநீதிகளின் கதையை எளிதில் விவரித்துவிட இயலாது.

படிக்க :
♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தைரியமாகப் புகார் செய்த பெண்ணுக்கும் நிச்சயம் நீதி கிட்டாது. நீதி அல்ல, சரியான விசாரணை கூட நடக்காது.

எதிர்காலத்தில் தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளோர் மீது பாலியல் புகார்கள் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு விவாதத்திற்காவது இப்பிரச்சினை வரவேண்டும். அதற்காவது மூத்த வழக்கறிஞர்கள்,வழக்கறிஞர் சங்கங்கள்,சமூக அக்கறை கொண்டோர் குரல் எழுப்புவது மிகவும் அவசியம். தமிழகத்தில் எந்த மூத்த வழக்கறிஞரும் தலைமை நீதிபதி விசயத்தில் பேசாதது மிகவும் வருத்தத்திற்குரியது.

தலைமை நீதிபதி பிரச்சினையில், முறையான விசாரணை நடத்தப்படுவதைத்  தடுப்பது எது? பிரச்சினை எங்குள்ளது?

வழக்கமாக பாலியல் புகார் காவல்துறையில் அளிக்கப்பட்டால் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது பாலியல் புகார் வந்தால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த தெளிவான சட்டமோ, விதிகளோ இல்லை. தலைமை நீதிபதி மீதே புகார் வந்தால், புகார் சட்டப்படியே குப்பைக் கூடைக்குத்தான் போகும். 1947-லிருந்து இன்றுவரை ஏராளமான உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது பாலியல், லஞ்ச, ஊழல் புகார்கள் வந்துள்ளது. ஒரு நீதிபதி மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. உள்ளக விசாரணை முறை (In house enquiry) நடைமுறைகள் பொதுவெளியில் தெரியாது. உள்ளக விசாரணையில் எந்த வழக்கறிஞரும் பங்கேற்றதே கிடையாது. ஒருவேளை உள்ளக விசாரணைக் குழு தலைமை நீதிபதி குற்றம் இழைத்துள்ளார் என அறிக்கை அளித்தாலும், அவ்வறிக்கை தலைமை நீதிபதியிடம்தான் செல்லும். அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? ஆகக் குற்றம் இழைத்தால், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைதான், நீதிபதிகள் தைரியமாக குற்றங்கள் இழைப்பதற்கான அடிப்படை.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

மேலும், நீதிபதிகள் மீதான புகார்கள், விமர்சனங்களை பொதுவெளியில் சொன்னால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாயும், அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அவற்றை விவாதிக்க முடியாது.

இப்படி சட்டப்படி ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க இயலாது, காவல்துறையில் புகார் அளிக்க முடியாது என்ற சூழலில்தான் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் புகார் அனுப்புகிறார். புகாரை வாங்கி, அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்றால், முடியாது. சட்டத்தில் தலைமை நீதிபதியை விசாரிக்கும் நடைமுறை இதுவரை இல்லை.

இணையதள ஊடகங்களில் செய்தி வெளியாகி பல வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தியதால்தான் செய்தியாவது வெளியில் தெரிந்தது. இத்தனை நடந்த பின்னும் நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் புகாருக்கு உள்ளானவர் தலைமை நீதிபதி என்பதால் கள்ள மவுனம் காக்கின்றன. பாஜக நேரடியாக தலைமை நீதிபதியை ஆதரிக்கிறது. முக்கியமாக மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாஜக-காங்கிரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்றால், ஆட்சி அமைப்பது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வரும். அவ்வழக்கை  எந்த நீதிபதிகள் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் தீர்மானிப்பார். மே 11 முதல் ஜீன் மாதம்வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை. வழக்கமாக இளம் நீதிபதிகள்தான் கோடைகால நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த ஆண்டு, தலைமை நீதிபதியே கோடைகால நீதிபதியாக அமர்கிறார். பாஜக தலைமை நீதிபதியை ஆதரிப்பதன் ரகசியம் புரிகிறதா?

வழக்கறிஞர் சமூகத்தை தலைகுனியச் செய்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

பிரச்சினை துவங்கும் முதல் நாளில், விடுமுறை நாளில் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு, தன் மீதான வழக்கைத் தானே விசாரிக்கிறார் தலைமை நீதிபதி. இந்த விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னணி வழக்கறிஞருமான திரு.கே.கே.வேணுகோபாலும் பங்கேற்றுப் பேசுகிறார். கே.கே.வேணுகோபால் அவர்களுக்கும், சக நீதிபதிகளுக்கும், தலைமை நீதிபதி அவ்வழக்கை விசாரிப்பது தவறு எனத் தெரியாதா? தெரிந்தே தலைமை நீதிபதியின் தவறுக்குத் துணை போகிறார்கள். தலைமை நீதிபதியை விமர்சிக்கும் அனைவரும் தலைமை நீதிபதி பாலியல் ரீதியாக குற்றம் இழைத்துவிட்டார் எனச் சொல்லவில்லை.மாறாக, தலைமை நீதிபதி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அளவில் நம்பகத் தன்மை கொண்ட புகார், உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. அதை ஏன் விசாரிக்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இத்தனை குளறுபடிகள் செய்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். தலைமை நீதிபதியின் பதட்டமும், விசாரணை நடந்த முறையும்தான் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கே.கே. வேணுகோபால்

குறிப்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி பாப்டே குழு, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் முதலில் சமரசம் பேசுகிறது. அவர் மறுத்தவுடன், இறுக்கமான விசாரணை நடக்கிறது. சில நாட்களில் தலைமை நீதிபதி மீது தவறில்லை என அறிக்கையில் உள்ளதாகச் செய்தி வருகிறது. இந்த விசாரணை உள்ளக விசாரணை கூட அல்ல என்கிறது விசாரணைக்குழு. விசாரணைக் குழுவின் சட்ட ரீதியான நிலை என்ன? எனத் தெரியவில்லை. பொதுவெளியில் விசாரணை அறிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ, மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கோ வழங்கப்படவில்லை. இதைவிட கேலிக் கூத்தான விசாரணை முறை உலகில் எங்கும் இருக்காது.

 பாலியல் குற்றச்சாட்டு தவிர இதர குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படவேண்டும்!

பாதிக்கப்பட்ட உச்சநீதிமன்றப் பணியாளர்  தெரிவித்த குற்றச்சாட்டில் முக்கியமானது, அவரது மற்றும் குடும்பத்தினரது பணிநீக்கம் தொடர்பானது. சர்வீஸ் சட்டங்களில் ஓரிரு ஆண்டுகள் அனுபவம் உள்ள எந்த வழக்கறிஞரும் சொல்லிவிடுவார், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை(நிரந்தரப் பணிநீக்கம்) மிக, மிக அதிகப்படியானது என்று. அப்பெண் உச்சநீதிமன்றப் பணியாளராக இல்லாமல், வேறு துறையில் பணிபுரிந்து, இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால், இதே நீதிமன்றங்கள் உடனே தண்டனையை ரத்து செய்து விடும். உண்மையில் தன் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ளும் நிறுவனம்தான் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெறும். நீதித்துறை எப்போதும் இதற்கு விதிவிலக்குதான். நீதித்துறை ஊழியர்களுக்கு, மற்ற அரசு ஊழியர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எப்போதும் இல்லை.

இதுதவிர, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரை ராஜஸ்தான்வரை விரட்டிச் சென்று கைது செய்தது, கைவிலங்கிட்டது உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஸ்குமார் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது. மேலும், டெல்லி திலக் மார்க் காவல்நிலையத்திலிருந்து, தலைமை நீதிபதியின் வீட்டுக்கு புகார் அளித்த பணியாளர் அழைத்துச் செல்லப்பட்டு, தலைமை நீதிபதியின் மனைவி காலில் விழ வைக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், திலக் மார்க் காவல்துறை அதிகாரிகளை விசாரணைக் குழு விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். எனவே சரியான விசாரணை முறையை வரையறுக்கத்தான் முதலில் நாம்  போராட வேண்டியுள்ளது.

குறைந்தபட்சக் கோரிக்கை – தீர்வு என்ன?  

உச்சநீதிமன்றப் பணியாளரின் புகார் சரியான முறையில் விசாரிக்கப்பட இருமாத காலம் தலைமை நீதிபதி பணிவிடுப்பில் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து தலைமை நீதிபதி மீதான புகாரை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரனையில், புகாரில் சொல்லப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணும், தலைமை நீதிபதியும், வழக்கறிஞர் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். விசாரணை முழுவதும் வெளிப்படையாக மக்கள் முன்பு திறந்த அரங்கில் நடத்தப்பட வேண்டும். விசாரணைக் குழு முடிவுகள் இரு தரப்புக்கும் வழங்கப்பட்டு, பதில் கேட்டு, உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் முன்பு வைக்கப்படவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் உச்சநீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க(பணிநீக்கம்) வலியுறுத்த வேண்டும். பணிநீக்கம் செய்தபின் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் பொய்யெனத் தெரிய வந்தால், சம்மந்தப்பட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

படிக்க:
♦ ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

இவை நிலவும் நீதி-நிர்வாக அமைப்பு முறை இதுவரை சொல்லிவந்த நடைமுறைகள்தான். இவையெதுவும் நிச்சயம் நடக்காது. எனினும், இந்த நீதித்துறைத்தான் நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பில், மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. கடைசி நம்பிக்கையும் உள்ளுக்குள் சரிந்து நொறுங்கியிருக்கிறது என்பது நீதித்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும். தலைமை நீதிபதிக்கும் தெரியும். ஏனென்றால் ஜனவரி 12,2018 அன்று, “ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று முன்னாள் தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ராவிற்கு எதிராக கலகக் குரல் எழுப்பி, உச்சநீதிமன்ற நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மை கோரியவர் தற்போதைய தலைமை நீதிபதிதான். தற்போது அதைத் தடுத்துக் கொண்டிருப்பவரும் அவர்தான்.

இவண்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 94434 71003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க