செவ்வணக்கம் ராமாராவ் அண்ணா !

ஹைதராபாத்,
17.05.2019

“ஒரு கண்ணில் நீர் – சோகம் ததும்ப,
ஒரு கண்ணில் செங்கொடி – லட்சியம் மின்ன
தோழர் ராமாராவின் வழிநடப்போம்”

– மறைந்த ஆந்திர புரட்சிப் பாடகர் ராமாராவின் துணைவியார் அருணா அவர்கள் தமது அஞ்சலி உரையை இவ்வாறு தொடங்கினார். எளிய தலித் குடும்ப இளைஞராக, ஒடுக்குமுறைகளுக்கிடையே வளர்ந்து பின்னர் தனது பாடகர் வாழ்வைத் தொடங்கினார் தோழர் ராமா ராவ். அவர் சார்ந்த ‘அருணோதயம்’ அமைப்பில் சேர்ந்து நக்சல்பாரி வழியில் அவரோடு தான் பயணப்பட்டதை தனது உரையில் விவரித்தார் தோழர் அருணா. அவர் விவரித்தபோது, சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் அரங்கில் திரண்டிருந்த கூட்டத்தினர், பல்வேறு கட்டங்களில், மக்களுக்காக அவரால் அணிதிரட்டப்பட்டு, அவரோடு சேர்ந்து போராடியதை நினைவுகூர்ந்தனர்.

தோழர் ராமா ராவ்

ஆந்திர நாட்டுப்புற பாரம்பரிய (பு)உர்ர கதா, ஜம்முகுல கதா நடத்துவதில் சிறந்த ஆற்றல்மிக்க ராமாராவ், திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் – விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர். அயராத புரட்சிகரப் பணியில் ஈடுபட்டுவந்த தோழர் ராமாராவ், சமீபத்தில் மறைந்தார். தோழரின் நினைவைப் போற்றும் வகையில் ஹைதராபாத் நகரில் புரட்சிகர அமைப்புகள்  நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தோழர் கோவனின் பாடல் இசையையும், அரசியலையும் இணைத்து அகத்தூண்டுதல் அளித்தது என்று மொத்த அரங்கமும் வரவேற்றது. மேலும் ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய புதிய கானா முறை ஆடல் – பாடல், இளமை எழுச்சியூட்டியது எனவும் வரவேற்றனர்.

அருணோதயம் – 1, 2 குழுக்களின் ஆந்திரம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார் கிளைகள் மற்றும் பிரஜா கலா மண்டலியின் தோழர்கள் புரட்சிப் பாடல்களை ஆடிப்பாடினர். ராமாராவின் ஐந்து வயது பேரன் ‘எழுந்துவா தோழா !’ என்று பாடியபோது அரங்கு நிறைய செவ்வணக்கம் (லால் சலாம்) என்ற முழக்கம் அதிர்ந்தது.

செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க