அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 8

குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு அம்சத்தையும் பேணிக் காத்தல்

திடீரென கதவு பெரும் சத்தத்துடன் திறக்கிறது. “அதிகாரத் தோரணையை உடைய” அம்மா, பகட்டான ஆடையணிந்த ஒரு சிறுவனை உள்ளுக்குள் தள்ளி, கையில் பையைத் திணித்து, என்னால் புரிந்து கொள்ள இயலா ஒரு அச்சுறுத்தல் குரலில் தொனிக்க, என்னைப் பார்த்து சத்தமிட்டுச் சொல்கிறாள்:

“என் மகனுக்கு வகுப்பில் இடம் கண்டுபிடித்துத் தாருங்கள்! அமைச்சரகத்திலிருந்து உங்களுக்கு போன் வரும்!…”

அப்பெண்மணி அதே சத்தத்துடன் கதவை இழுத்து மூடி, சிறுவனை வகுப்பில் விட்டுச் செல்கிறாள். அவளுடைய காலணி ஓசையிலிருந்து, அவள் இடைவழியில் எப்படி விரைவாக நடந்து செல்கிறாள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

நான் என்ன செய்வது? அந்தத் தாயின் பின் ஓடிச் சென்று, குழந்தையைத் திருப்பி அழைத்துச் சொல்லும்படி கட்டாயப்படுத்துவதா? சிறுவனை வகுப்பை விட்டு வெளியேற்றி இடைவழியில் நிறுத்துவதா? வகுப்பறையில் குழந்தைகளின் எண்ணிக்கை 39 ஆகும். இன்னுமொரு பெஞ்சு தேவைப்படும். அதை எங்கே போடுவது? விஷயம் இதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. மிக முக்கியமானது என்னவெனில் வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மிக அவசியமான எனது கவனம், அன்பு, அக்கறை, உதவியில் இன்னுமொரு பங்கு குறையும். உங்கள் குழந்தைக்கும் மற்ற குழந்தைகளுக்கும் நீங்கள் என்ன கேடிழைக்கின்றீர்கள் என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், தாயே.

வகுப்பில் எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் ஒரே விதமான பயனைத் தரவல்ல முறையியலோ, ஆசிரியரோ கிடையாது. அளவிற்கதிகமான பயணிகளையுடைய விமானத்திற்குப் பறக்க அனுமதி தருவது பெரிதும் ஆபத்தானது. விமானிகளைக் கேளுங்கள், இப்படிப்பட்ட பயணம் எப்படிப்பட்டது என்று கூறுவார்கள். “ஒருவர் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால்தான் என்ன?” இல்லை, இதற்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. நன்றாகவோ மோசமாகவோ வளர்க்கப்பட்ட ஒருவர் இருப்பதற்கு எவ்வித விளைவும் இருக்காதா என்ன! ஆயிரக்கணக்கான எனது சக ஆசிரியர்களைப் போன்றே நானும் ஒவ்வொரு குழந்தையையும் தனி நபராக வளர்க்கப் பாடுபடுகிறேன்.

ஆறு வயதுக் குழந்தைகளைக் கொண்ட ஒரு வகுப்பு என்பது ஒரே மாதிரியான கல்வியறிவையும் வளர்ப்பையும் கொண்ட குழந்தைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பிரிவல்ல. இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும். சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அணுவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும். 17-ம் நூற்றாண்டிலிருந்த யான் அமோஸ் கமேன்ஸ்கிதான் ஒரே சமயம் ஒரு வகுப்பில் 300 மாணவர்களுக்கு கல்வி போதிக்கலாம் என்று கருதினார். அந்த மேதையின் தவறுக்கு அவரை மன்னிப்போமாக. 21-ம் நூற்றாண்டு பிறக்கப் போகும் இத்தருணத்தில் “மொத்தமான வளர்ப்பு” எனும் முறை சரிப்பட்டு வருமா?

ஒரே ஒரு குழந்தை வகுப்பில் ஆசிரியருடன் இருப்பதும் சரியல்ல. ஏனெனில் அக்குழந்தைக்கு விரைவிலேயே சலிப்பேற்படும். அருகே தான் செய்யும் அதே காரியத்தில் ஈடுபடும் தன்னையொத்த சிறு குழந்தைகள் இல்லாவிடில் ஆர்வம் மிக்க விஷயங்கள் கூட அக்குழந்தைக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகிதான் வாழவும் அறியவும் விரும்புகிறான். அவன் அவர்கள் மத்தியில்தான் ஒரு தனி நபராக உருவெடுக்க வேண்டும். அவன் மட்டும் தனியாக இருக்கும் ஒரு வகுப்பிலோ, அளவிற்கு அதிகமான மாணவர்கள் உள்ள வகுப்பிலோ (இங்கே மாணவர்கள் எறும்புப் புற்றில் உள்ள எறும்புகளைப் போலிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் காரியமே சரியாக இருக்கும். அவர்களுக்குப் பொது இலட்சியங்கள், நோக்கங்கள், மகிழ்ச்சிகள், கவலைகளே இருக்காது) அவன் இவ்வாறு ஆக முடியாது.

வகுப்பில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால் அவன் யாருமேயில்லை, அவனுக்கு வாழ்வில் சலிப்பேற்படும். அவன் 25 குழந்தைகளின் மத்தியிலிருந்தால் மற்றவர்களைப் போன்றே அவனும் மற்றவர்களுக்கு அவசியமானவன் ஆவான். அவன் ஒரு தனி நபராகத் திகழுவான். அவனுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும். அவன் வகுப்பில் 45 குழந்தைகள் இருந்தால், அவன் மற்றவர்களைப் போன்று வெறும் குழந்தை மட்டுமே. மற்றவர்களுக்கு இவனைப் பற்றி அதிகம் தெரியாது, இவனுக்கும் மற்றவர்களைப் பற்றி குறைவாகவே தெரியும். இவனுக்கு சலிப்பேற்படும், ஆர்வம் குறையும். இவனை மற்றவர்கள் அறிய, மதிக்க, இவன் தன்னாலியன்றவரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பல வழிகளை நாடுகிறான்.

படிக்க:
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். ஒரு குழந்தை சாதாரணமாக வீட்டில் பெரியவர்களுக்கு அதிகம் இடையூறு விளைவிக்காமல் இருக்கும், குழந்தையை எளிதாக சமாதானப்படுத்தலாம். ஆனால், 3-4 குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் (மற்றவர்கள் விருந்தினர்களாக வந்தார்கள் என்று வைத்துக் கொள்வோமே), அவர்களை சரிவர கவனிக்காவிடில் “பூகம்பமே” ஏற்பட்டு விடும். 40-50 குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் (இவர்கள் புத்திசாலியான, அமைதியான, சாந்தமான குழந்தைகளாக இருந்தாலும்) பெரும் ரகளையும் கூச்சலும் ஏற்படும், வீட்டில் “மிகக் கடும் பூகம்பமே” ஏற்படும். சாதாரண குழந்தைக் குறும்பு பன்முக நடவடிக்கையின் மிகச் சிறந்த வடிவங்களாக மாறாது, அதற்குப் பதில் முரட்டுத்தனம், கவனமின்மை, அவசியப் பொருட்களை வீணாக்குதல் போன்ற மோசமான நடவடிக்கைகளாக மாறும்.

இதோ போன்தோ தன் காலணிகளைக் கழற்றி மேசை மீது வைத்து ரசிக்கிறான். அவனை அமைதியாக அணுகி, பாடவேளையின் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று விளக்க வேண்டும்.

ருசிக்கோ திடீரென எழுந்து கதவை நோக்கிச் செல்கிறாள். “ருசிக்கோ , நீ எங்கே போகிறாய்?”

அவள் பதில் சொல்லவில்லை. கதவைத் திறந்து வெளியில் பார்க்கிறாள். அங்கு தன் தாய் இல்லாததைக் கண்டதும் அழத் துவங்குகிறாள். அவளை சமாதானப்படுத்த வேண்டும்.

அடடா, இச்சிறுமிக்கு என்ன ஆயிற்று?

“குழந்தைகளே, விரைவாகத் தலையைத் தொங்கப் போடுங்கள்! கண்களை மூடுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த சிரிப்பு நிகழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள்!”

வகுப்பிலேயே மிகச் சிறிய அப்பெண்ணைக் கரங்களில் ஏந்தி வகுப்பறைக்கு வெளியே வருகிறேன்.

“தயவு செய்து உதவி செய்யுங்கள், சிறுமிக்கு உடல் நிலை சரியில்லை” என்று வெளியில் நிற்கும் அம்மாமார்களைப் பார்த்துச் சொல்கிறேன்.

யாரோ ஒருவர் மருத்துவரைக் கூப்பிட ஓடுகிறார். இன்னொருவர் சிறு மேசை மீதுள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு என் கைகளிலிருந்து சிறுமியை வாங்கி மேசை மீது படுக்க வைக்கிறார். மயக்கம் விரைவிலேயே தெளிகிறது. மருத்துவர் வந்து சிறுமியைத் தன்னறைக்குக் கூட்டிச் செல்கின்றார்.

இச்சிறுமியின் தாய் எங்கே? ஏன் அவள் இங்கு இல்லை? தன் மகளின் நோயைப் பற்றி அவள் ஏன் என்னை எச்சரிக்கவில்லை?

நடந்ததிலிருந்து இன்னமும் முற்றிலும் மீளாத ஒரு நிலையில் வகுப்பறைக்குள் திரும்புகிறேன். குழந்தைகள் அனைவரும் அதே போல் தலைகளைத் தொங்கப் போட்டு, கண்களை மூடியபடி உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே சிரித்துக் கொண்டிருந்தனர். “எங்கே, தலையைத் தூக்குங்கள்!”

அவர்கள் எதையாவது பார்த்தார்களா? இல்லை. ருசிக்கோ மட்டுமே எதையாவது பார்த்திருக்கக்கூடும், ஆனால், அவள் அழுதபடி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்கவில்லை; இந்தப் புதுச் சிறுவன் ஒருவேளை பார்த்திருக்கலாம். நான் அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கி விட்டு நடுவரிசையில் மூன்றாவது இடத்தில் உட்கார வைக்கிறேன். ருசிக்கோவை சமாதானப்படுத்துகிறேன் (“வா, இருவரும் சேர்ந்து வகுப்பறையைச் சுற்றி வருவோம்”). போன்தோ விரைவாகக் காலணிகளை அணிய உதவுகிறேன்.

(“ஒரு குழந்தை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகிவிடும்!”)

“உங்களுடைய சிரிப்புச் சம்பவங்களை இடைவேளையின் போது சொல்லுங்கள்!” என்றபடியே கரும்பலகையில் உள்ள இரண்டாம் பகுதியைத் திறக்கிறேன். “இங்கே (வட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்) எட்டு வட்டங்கள் உள்ளன என்று நினைக்கிறேன்!” என்று ஏதோ இன்னொரு முறை சரிபார்ப்பது போல் பாவனை செய்கிறேன். “நான் சொன்னது சரியா?”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க