பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 3

டோக்ளியாட்டி

முன்னுரை

ங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள சொற்பொழிவுகள் பால்மிரோ – டோக்ளியாட்டி “எதிரிகள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக் கொண்ட உரையின் பிரதான பகுதியாகும். இது, 1935-ம் ஆண்டில் மாஸ்கோவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் நிகழ்த்தப்பட்டது. எட்டு உரைகளது மூலப் பிரதிகளின் நிழற்படப் பிரதிகளை மாஸ்கோவிலுள்ள மார்க்சிய – லெனினியக் கழகம் எர்னெஸ்டோ ரகியோனேரியிடம் அளித்தது. அவர்தான் தற்பொழுது டோக்ளியாட்டியின் தொகுப்பு நூல்களை எடிடோரி ரியூனிட்டிக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். இது 1970-ம் ஆண்டில் முதன் முறையாக புத்தக வடிவில் தோன்றியது.

அதற்குப் பின் மேலும் மூன்று உரைகள் – பாசிசம் குறித்து ஒன்றும், இத்தாலிய கம்யூனிஸ்டுகளின் இதர “எதிரிகள்” (சோசலிஸ்டுகள் மற்றும் குடியரசுவாதிகள், அராஜகவாதிகள்) – குறித்து இரண்டும் கிடைக்கப்பெற்று இத்தாலியில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தற்பொழுதைய தொகுப்பானது பாசிசம் குறித்தும், பாசிச அரசாங்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துமான சொற்பொழிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்தப் பொருள் குறித்து கம்யூனிஸ்டு அகிலத்தின் தத்துவார்த்த இதழுக்காக 1934-ம் ஆண்டில் டோக்ளியாட்டி எழுதிய ஒரு கட்டுரையும் பின் இணைப்பாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து உரைகளையும் விரிவாகக் குறிப்பெடுத்த மாணவரான கியுசெப்பே காடியின் குறிப்புகளிலிருந்து இந்த உரை தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் காடி, டோக்ளியாட்டியின் முதல் உரை குறித்த குறிப்பை அவருடைய ஒப்புதலைப் பெறுவதற்காக அவரிடம் அளித்தார். இந்தச் சொற்பொழிவுகள் அந்தப் பள்ளியில் பெரும் ஆர்வத்தைக் கிளர்த்தியதால் பள்ளியைச் சேர்ந்த இதர நாட்டு கட்சிகளின் ஆசிரியர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொண்டதாக மற்றொரு இத்தாலிய கம்யூனிஸ்டான ஸ்டீஃபனோ சியாப்பரெல்லி கூறுகிறார். தெள்ளத் தெளிவாக போதிக்கும் பாணியில் இந்த உரைகள் அமைந்திருக்கின்றன என்றால் இத்தாலிய மாணவர்களின் பின்னணியே அதற்குக் காரணம். கியுசெப்பே காடி கூறுவது போல “கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் தொழிலாளி – வர்க்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள், பாசிச சிறைகளிலிருந்து வெளி வந்தவர்கள், போதிய படிப்பு அனுபவம் இல்லாதவர்கள். இதனாலேயே எளிமையாகவும், சாத்தியமான அளவுக்கு அடி ஆரம்பத்திலிருந்தும் விளக்குவதற்கு டோக்ளியாட்டி தொடர்ந்து முயற்சித்தார். அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் விளங்கும் முறையிலும், மெதுவாகவும் வகுப்புகளை நடத்தினார். இது என்னுடைய குறிப்பெடுக்கும் பணிக்கு மிகவும் உதவியாயிருந்தது.

இத்தாலிய பதிப்பில் தட்டச்சு தவறுகள், குறியீடுகள், இலக்கண முறைப்படி சில திருத்தங்கள் செய்தல் என்றளவுக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டது. கோடிட்ட பகுதிகள் மூலக்குறிப்பில் அடிக்கோடிடப்பட்டுள்ளன. சொற்பொழிவுகளின் தலைப்புகளை இத்தாலியப் பதிப்பின் ஆசிரியர் எர்னெஸ்டோ ரகியோனேரி செய்துள்ளார். எண்ணிடப்பட்ட குறிப்புகள் யாவும் மொழியாக்கம் செய்தவரால் தரப்பட்டவையாகும்.”

– டேனியல் டிச்டர்.

உள்ளடக்கம்

விரிவுரை 1 : பாசிஸ்டு சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்கள்
விரிவுரை 2 : பூர்ஷ்வாக்களின் புதுமாதிரியான கட்சி
விரிவுரை 3 : தேசிய பாசிஸ்டுக் கட்சி
விரிவுரை 4 : பாசிசத்தின் ராணுவ மற்றும் பிரச்சார அமைப்புகள்
விரிவுரை 5 : பாசிஸ்டுத் தொழிற்சங்கங்கள்
விரிவுரை 6 : டொபோலவோரோ
விரிவுரை 7 : கார்ப்பரேட்டிவிசம்
விரிவுரை 7 (தொடர்ச்சி) : கார்ப்பரேஷன்களின்பால் நமது கொள்கை
விரிவுரை  8 : கிராமப்புறங்களில் பாசிசத்தின் கொள்கை
பின் இணைப்பு
குறிப்புகள்

****

விரிவுரை 1 :

பாசிஸ்டு சர்வாதிகாரத்தின் அடிப்படை அம்சங்கள்

மது பாடத்தை துவக்குவதற்கு முன்னர் “பகைவர்கள்” என்ற பதத்தைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பதத்துக்கு உங்களில் சிலர் தவறான விளக்கத்தை அளிக்கக் கூடாதென்பதற்காக இதைச் சொல்கிறேன்; தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

“பகைவர்கள்” என்று பேசும்பொழுது பாசிச, சமூக-ஜனநாயக மற்றும் கத்தோலிக்க அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுஜனங்களை நாம் சிந்தையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச, சமூக-ஜனநாயகம் மற்றும் கத்தோலிக்க அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுஜனங்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்.

இனி நமது விஷயத்திற்கு வருவோம். பாசிசம். பாசிசம் என்றால் என்ன? அது குறித்துக் கொடுக்கப்பட்டுள்ள மிக முழுமையான விளக்கம் என்ன?

பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கமானது கம்யூனிஸ்டு அகிலத்தின் விரிவான நிர்வாகக் குழுவின் 13-வது கூட்டத்தில் கொடுக்கப்பட்டது. அது பின்வருமாறு:

“பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

பாசிசம் என்பது எப்பொழுதும் இந்த வழியில் விளக்கப்படுவதில்லை. மாறாக, வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு காலங்களில் பெரும்பாலும் தவறான விளக்கங்களே கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பாசிசம் குறித்து நாம் தந்துள்ள மாறுபட்ட விளக்கங்களை ஆராய்வது சுவையாக இருக்கும். (இந்தப் பணியை நீங்களும் மேற்கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு ஆலோசனை தருகிறேன்).

போர்டிகா. (amadeo bordiga)

உதாரணத்திற்கு, நான்காவது உலக காங்கிரசில் பாசிசம் குறித்து கிளாரா ஜெட்கின் ஒரு உரை நிகழ்த்தினார். அது முற்றிலும் பாசிசத்தின் குட்டி பூர்ஷுவா குணாம்சத்தை சுட்டிக்காட்டுவதையே இலக்காகக் கொண்டிருந்தது. போர்டிகா1 உரையாற்றும் பொழுது பூர்ஷுவா ஜனநாயகத்திற்கும் பாசிச சர்வாதிகாரத்திற்குமிடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது என்று வலியுறுத்தினார்; அரசாங்கத்தின் இவ்விருவகைப்பட்ட வடிவங்களுக்கிடையே ஒரு வகையான மாறி மாறிவரும் சுழற்சி இருப்பதாகக் கூறி அவை இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்.

இந்த உரைகள் இரண்டு அம்சங்களை இணைத்து, அவற்றினிடையே தொடர்பேற்படுத்தத் தவறிவிடுகின்றன. பூர்ஷுவா வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் குட்டி-பூர்ஷுவா வெகுஜன இயக்கம் என்பவையே அந்த இரண்டு அம்சங்கள்.

கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தில் காணும் பொழுது இவ்விரு அம்சங்களுக்கிடையிலான இணைப்பை முற்றிலும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த இணைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சத்தை காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், பாசிசத்தின் வரலாற்றுப்பூர்வ வளர்ச்சியின் பிரதான வழியையும், அதனுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் அவர் காண இயலாது என்பதோடு அதைக் காணத் தவறியும் விடுவார். இரண்டாவது அம்சத்தைக் காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால் அதனுடைய விளைவுகளை அவர் காணத் தவறிவிடுவார்.

சமூக ஜனநாயகம் செய்த தவறு இதுதான். சிறிது காலம் முன்னர் வரை, சமூக ஜனநாயகமானது பாசிசம் குறித்து நாம் கூறிய அனைத்தையும் மறுத்து, அதை மத்தியகால வடிவம் என்றும், முதலாளித்துவ சமூகத்தின் சீரழிவு என்றுமே கருதி வந்தது. உண்மையில் பாசிசம் கொண்டிருந்த குட்டி பூர்ஷுவா வெகுஜன தன்மையை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டே சமூக ஜனநாயகம் இத்தகைய நிர்ணயிப்புகளை மேற்கொண்டது.

ஆனால், வெகுஜன இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்வாதிகாரம் என்பதுகூட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால்தான், சுலபமாக செய்யக்கூடிய ஒரு தவறு குறித்து நான் உங்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டும். இத்தாலிக்கு எது பொருந்துமோ அது இதர ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் என்றோ, பொருந்த வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். வெவ்வேறு நாடுகளின் வெகுஜனப் பகுதியினர் வெவ்வேறு வடிவங்களிலான அமைப்பைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எந்தக் கால கட்டத்தைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பதையும் நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாசிசமானது ஒரே நாட்டில் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நோக்குளை, கோணங்களை மேற்கொள்கிறது. எனவே, இரண்டு அம்சங்களை நாம் ஆராய வேண்டும். நாம் ஏற்கனவே பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கத்தைக் கண்டோம்: “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்தியவாதிகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்.”

படிக்க:
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

இதன் பொருள் என்ன? இந்தக் கணத்தில், வரலாற்று வளர்ச்சியின் இந்த காலகட்டத்தில் நாம் ஏன் இந்த வடிவத்துடன் மோத நேரிடுகிறது? அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட பகுதிகளின் ஒளிவு மறைவற்ற சர்வாதிகாரத்துடன் ஏன் மோத நேரிடுகிறது?

ஒவ்வொருவரும் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவாக இல்லாததால் இது பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய விளக்கங்களால் மண்டை முழுவதும் நிரம்பியிருந்த ஒரு தோழரை நான் எதிர்கொள்ள நேரிட்டது; கிராம்ஷியின் கட்டுரைகளில் ஒன்றில் ஒவ்வொரு அரசும் ஒரு சர்வாதிகாரம்தான் என்று கூறப்பட்டிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தாராம்.

தெளிவாகக் கூறுவதென்றால் பூர்ஷுவா ஜனநாயகமும், சர்வாதிகாரமும் எதிரெதிரான நிலைகளில் நிறுத்தப்படக்கூடாது. ஒவ்வொரு ஜனநாயகமும் ஒரு சர்வாதிகாரம்தான்.

அடிக்குறிப்புகள் :

1. அமாடியோ போர்டிகா (1889-1971) பார்லிமெண்டரி முறைக்கு ஒரேயடியாக அவர் எதிர்ப்புத் தெரிவித்ததையும் தேர்தல்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அவர் வாதத்தையும், இடதுசாரி கம்யூனிஸம், ஒரு சிறுபிள்ளைக் கோளாறு என்ற நூலில் லெனின் கடுமையாக விமர்சித்தார். இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியில் இருந்த கம்யூனிஸ்டுப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர். அந்தப் பிரிவை சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியில் கொண்டு வந்து 1921 ஜனவரியில் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியை  ஸ்தாபித்தார். இத்தாலிய சோஷலிசத்தின் மிகவும் மோசமான பாரம்பரியத்திலிருந்து ஆரோக்கியமான முறையில் மாறி, உறுதியான கட்சிக் கட்டுப்பாடு,  ஸ்தாபனம் என்ற லெனினிய கோட்பாட்டை அவர் தலைமையில் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி வலியுறுத்தியது. இது விஷயங்களில் இத்தாலியக் கம்யூனிஸ்டுகளின் அக்கறை சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக இருந்ததால், இறுதியில் அவர்களது ஸ்தூலமான அரசியல் செயல்பாடு பாதிக்கப்பட்டது. மேலும், போர்டிகாவின் இடதுசாரிப் போக்கும் யாந்திரிகமாக கொச்சைப்படுத்தும் போக்கும், பாசிசம் பற்றியும் ரோம் படையெடுப்பை  அடுத்து ஏற்பட்ட கணிசமான மாற்றத்தையும் ஆழமான பரிசீலனை செய்வதிலிருந்து கட்சியைத் தடுத்தன. 1922 நவம்பரில், கம்யூனிஸ்டு அகிலத்தின் நாலாவது உலகக் காங்கிரஸில், ரோம் படையெடுப்பு  நிகழ்ந்த சில வாரங்களுக்குள்ளேயே, பூர்ஷுவா பிற்போக்கின் வரலாற்றில் பாசிசம் ஒரு குணாம்சரீதியான வளர்ச்சியல்ல என்றும், பாசிசம் அதிகாரத்தை கைப்பற்றியது பாட்டாளி வர்க்கத்தின் கடமையை சுலபமாக்குகிறது என்றும் உறுதிபடக் கூறினார். 1923 பிப்ரவரியில் போர்டிகா இத்தாலியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது அரசியலில் அதிருப்தி அடைந்து வந்த அகிலம் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு புதிய நிர்வாகக் குழுவை நியமித்தது. அதே ஆண்டு சிறையிலிருந்து குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டதும் இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புதிய “மைய”த் தலைமையில் சேர்த்துக் கொள்வது என்ற அகிலத்தின் திட்டத்தினை போர்டிகா ஏற்க மறுத்தார். அதுவரையிலும் பின்னணியில் இருந்தவரும் அநேகமாகப் போர்டிகாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவருமான அண்டோனியோ கிராம்ஷி, படிப்படியாக கம்யூனிஸ்டுக் கட்சியின் புதிய தலைவர்களது உள்வட்ட மையத்தை 1924 மத்தியில் அமைத்தார். முடிவில் 1930-ல் கட்சியிலிருந்து போர்டிகா வெளியேற்றப்பட்டார். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தோற்றம், போர்டிகாவிலிருந்து கிராம்ஷிக்கு மாற்றம், போர்டிகா, கிராம்ஷி டோக்ளியாட்டியும் மற்றவர்களும் முதலாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து தீர்மானமான ஆண்டுகளில் எடுத்த நிலை ஆகியவை  குறித்தும் வரலாற்று ரீதியான சம்பவங்கள் பற்றியும் சிறையிலிருந்து அன்டோனியோ கிராம்ஷி எழுதிய குறிப்புப் புத்தகங்களிலிருந்து சில பகுதிகள் என்ற நூலுக்கான முன்னுரையில் காணலாம். இதை மொழிபெயர்த்து வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் குவின்டின் கோயரும் ஜியோப்ரே நோவல் சுமித்தும் ஆவர் (இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ், நியூயார்க், 1971).

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

1 மறுமொழி

  1. தற்கால உலக நாடுகளிடையே பாசிசதின் நடைமுறை பற்றி குறிப்பிட இயலுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க