Thursday, April 9, 2020
முகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை !

பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை !

தமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார்.

நண்பர்களே….

பொ. வேல்சாமி
பொ.வேல்சாமி
19-ம் நூற்றாண்டில் தமிழ்ச் சாதிகளால் புறக்கணிக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நிலையில் பல இடங்களில் குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் பெண் சிசுக்களைப் போல அனாதைகள் ஆக்கப்பட்டு பரண்களில் முடங்கிக்கிடந்தன. அத்தகைய காலக்கட்டத்தில் தமிழ்மொழியின் அழகையும் சிறப்பையும் புரிந்துகொண்டதோடு அல்லாமல் உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் அதனைப் பெருமையோடு அறிவித்தவர்கள் ஐரோப்பிய கிறிஸ்துவப் பாதிரிமார்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார். இவருடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி தெளிவான குறிப்புகள் ஏதும் தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் வந்துள்ள எந்த நூலிலும் குறிக்கப்படவில்லை. பவர்துரையைப் பற்றி இலங்கையில் இருந்து வெளியிடப்பட்ட ”கிறிஸ்துவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு” சபாபதி குலேந்திரன் சில முக்கியமான தகவல்களைத் தருகின்றார்.

ஹென்றி பவர்

சென்னை சிந்தாரிப்பேட்டையில் வசித்துவந்த பிரெஞ்சுகாரரான பிரான்கோயிஸ் பூவியர் இவருடைய தந்தையார். இவர் பிரெஞ்சு நாட்டு படைவீரராக இருந்தவர். ஆங்கிலேயர்களால் கைதியாக்கப்பட்டமையால் சொந்த நாட்டுக்கு செல்லாமல் சென்னையிலே வசித்து வந்தவர். இங்கேயே திருமணமும் செய்து கொண்டவர். அவர் யாரைத் திருமணம் செய்துக் கொண்டார் என்ற தகவல் தெரியவில்லை. அவருடைய மகனாக 1813 ஜனவரி 13 இல் பவர்துரை பிறந்தார். (டிசம்பர் 18 அவர் பிறந்தநாள் என்ற குறிப்பும் உள்ளது) பவர்துரை இங்கிலாந்து சென்று படித்தவர். தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த பைபிள் மொழிபெயர்ப்பில் முக்கியமானவராகப் பணியாற்றி வந்தவர். இவர் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்துஸ்தானி முதலிய மொழிகளை அறிந்தவர்.

பகவத்கீதையையும் நன்னூலையும் மொழிபெயர்த்தவர். 1868-ல் தமிழ்க் காப்பியமாகிய சீவகசிந்தாமணியில் உள்ள ”நாமகள் இலம்பகத்தை” நச்சினார்கினியர் உரையுடனும் ஜைன மத தத்துவங்களைப் பற்றி சிறப்பாக எழுதப்பட்ட தன்னுடைய முன்னுரையுடனும் வெளியிட்டார். இந்நூல் அந்தக் காலத்தில் B.A பயின்ற மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நூலைக் கல்லூரியில் படித்த ”சேலம் இராமசாமி முதலியார்”(இவர் நீதிபதியாகப் பணியாற்றியவர்) இந்நூலின் சுவையில் ஈடுபட்டு இதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளம் தமிழாசிரியராக பணியாற்றிய உ.வே.சாமிநாத அய்யரிடம் (1880 ) முழுமையான சீவகசிந்தாமணி ஏட்டுப்பிரதியும் கொடுத்து (இன்றைய விலையில் சுமார் ரூ.5000 க்கு மேல்) தனக்கு இந்நூலை முழுமையாக படித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றார்.

அவரிடம் இருந்து பழந்தமிழ் நூல்களைப் பற்றிய பல்வேறு விவரங்களைக் கேட்டுக்கொண்டு இதனை செயல்படுத்தத் தொடங்கிய சாமிநாத அய்யர்தான் பிற்காலத்தில் மிகச்சிறந்த முறையில் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்து பெருமையடைகின்றார். பவர்துரை வழியாக சேலம் இராமசாமி முதலியாரை அடைந்த சீவக சிந்தாமணி, உ.வே.சாமிநாத அய்யரை “தமிழ்த்தாத்தா” ஆக்கியது. இத்தகையவர்களின் வழியாக தமிழ் நூல்கள் மறு உயிர்ப்பு பெற்று 20-ம் நூற்றாண்டின் தமிழ் மக்களின் கைகளில் தவழ்ந்தன.

குறிப்பு :
ரெவ.பவர்துரை 1868-ல் பதிப்பித்த சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் நூலின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க