செய்தி :   “உஸ்ஸ்… யாரும் அழப்படாது. நம்பளையெல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா, ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்.”
– பாஜக மத்திய அமைச்சரவையில், அதிமுகவிற்கு அமைச்சர் பதவி இல்லை என்பது குறித்து துக்ளக் பத்திரிகையில் குருமூர்த்தி வெளியிட்டுள்ள கார்ட்டூன்.

நீதி : அதிமுக அரசை பாஜகவின் பினாமி அரசு என்கிறோம் நாம். இல்லையில்லை பாஜக-விடம் பிச்சை எடுக்கும் பிச்சைக்கார அரசு என்கிறார் குருமூர்த்தி.

♠ ♦ ♣

செய்தி :

ரிதுஸ்ரீ.

நீட் தேர்வு முடிவில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பத்தாம் வகுப்பில் 500-க்கு 461 மதிப்பெண்களும், பிளஸ் டூவில் 600-க்கு 490 மதிப்பெண்களும் எடுத்திருந்தார். இதே போல தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா என்ற மாணவியும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீதி : மோடி அரசு திணித்த நீட் தேர்வின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் 2019-ம் ஆண்டின் அனிதாக்கள்!

♠ ♦ ♣

செய்தி : 

வைஸ்யா

நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சிக்க வேண்டுமே தவிர தற்கொலை தீர்வு ஆகாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி : கொலைகாரர்களின் கருணை!

♠ ♦ ♣

செய்தி : அமெரிக்காதான் உலகிலேயே தூய்மையான நாடு. இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளில் மாசுபாடு, சுகாதாரம் பற்றிய அக்கறையே இல்லை.
– அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

நீதி : அமெரிக்காவில் சராசரியாக ஒரு நபர் ஒரு நாளில் 2  கிலோ குப்பைகளை உருவாக்குகிறார். இப்படி குப்பைகளைக் கழிக்கும் அமெரிக்காவிற்கான பொருளை மலிவாக தயாரிக்கும் சீனாவும் இந்தியாவும் சுகாதாரமற்ற நாடுகளாம். வால்மார்ட்டில் விற்கப்படும் டீ-ஷர்ட்டிற்காக திருப்பூரின் நொய்யல் நதி மாசடைந்தது என்றால் மூலக் காரணம் இந்தியாவா, அமெரிக்காவா?

♠ ♦ ♣

டொனால்டு டிரம்ப்.

செய்தி :   பிரிட்டன் பயணத்தின் போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச் சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்த்தையை ஒட்டி அளித்த நேர்காணலில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

நீதி : 2014-ம் ஆண்டு கணக்கீட்டின் படி அமெரிக்கா ஒரு நாளில் 8,920 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணையையும், சீனா 2,615 ஆயீரம் பீப்பாய்களையும், ரசியா 853 ஆயிரம் பீப்பாய்களையும், இந்தியா 446 ஆயிரம் பீப்பாய்களையும் பயன்படுத்துகின்றன. இப்போது சொல்லுங்கள் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு காரணம் பெரியண்ணன் அமெரிக்காவா இல்லை இந்தியா, ரசியா, சீனாவா?

♠ ♦ ♣

செய்தி :   நேபாள இராணுவத்துடன் இணைந்து சுகாதாரக் குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளையும், நான்கு உடல்களையும் மீட்டுள்ளனர்.

நீதி : மலையேற்ற சாகசம் இப்போது மலையின்ப சுற்றுலாவாக மாறி சீரழிந்துள்ளதைக் காட்டுகிறது இந்த 11,000 கிலோ குப்பைகள்!

♠ ♦ ♣

செய்தி : அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை எந்த நாடும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளாக பயன்படும் யுரேனியம் பயன்பாட்டுக்குப் பிறகு, புளுட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. இதை எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே சேமிக்க முடியும். இந்தக் கழிவு அணுஉலைக்கு வெளியே கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்கு Away From Reactor என்று பெயர். ஆனால், அணுக்கழிவை Deep Geological Repository எனும் முறையில் நிரந்தரமாகச் சேமிப்பதற்கு பதில் தற்காலிகமாக சேமிப்பதில் ஆபத்து அதிகம். அதைத்தான் செர்னோபில், புகுஷிமா அணு உலை விபத்தில் பார்த்தோம். கூடங்குளத்தில் அணுக்கழிவை சேமிக்கும் அபாயம் குறித்து மத்திய மாநில அரசுகள் துளியும் கண்டு கொள்ளவில்லை.

நீதி : போபாலில் பத்தாயிரக்கணக்கான மக்களை கொன்றும் கண்டு கொள்ளாத அரசை, ஸ்டெர்லைட்டில் பதினைந்து பேரைக் கொன்று போட்ட அரசை கண்டுகொள்ள வைக்க மக்கள்தான் போராட வேண்டும்.

♠ ♦ ♣

செய்தி : 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் மகாகவி பாரதியார் தலைப்பாகைக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது.

நீதி : தமிழகத்திற்கே காவி வண்ணம் பூசுவதற்கு பாஜக உத்தரவுடன் எடப்பாடி அரசு மேற்கொள்ளும் கன்னி முயற்சி இது!

♠ ♦ ♣

செய்தி : கடந்த 2018-19 நிதி ஆண்டில் ஏறக்குறைய 6,800 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. ரூ. 71,500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடிகள் நடந்துள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நீதி : ஊழலற்ற , வளர்ச்சியே இலக்காகக் கொண்ட பரிசுத்தவான் திருவாளர் மோடி அரசின் சாதனை இது! யாரங்கே? மல்லையாவை கூப்பிடுங்கள், கிங்பிஃஷர் பீருடன் கொண்டாடுங்கள்!

♠ ♦ ♣

செய்தி : கடற்படையின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள கரம்பிர் சிங், அதிகாரிகளுக்குள் வி.ஐ.பி. கலாச்சாரம், தேவையற்ற ஆடம்பரம், உணவு பரிமாறுவதில் பாகுபாடு போன்றவற்றை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

நீதி : ஒக்கி புயலிலேயே கடற்படையின் ’தீரத்’தையும், ’தியாக’த்தையும் பார்த்து விட்டோம். சரக்கடிக்கும் போது சமத்துவம் வந்து என்ன பயன்?

♠ ♦ ♣

கிரிஜா வைத்தியநாதன்.

செய்தி :   தமிழக அரசின் தலைமைச் செயலர் உட்பட மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இம்மாதம் ஓய்வு பெற உள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கலை மற்றும் கலாசார துறை ஆணையர் ராமலிங்கம் ஆகியோர் இம்மாதம் ஓய்வு பெறுகின்றனர். இவர்களில் தலைமைச் செயலருக்கு, பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

நீதி : அதானே, மோடிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் மயிலாப்பூர் மாமிக்கு மட்டும் பதவி நீட்டிப்பு இல்லாமலா போகும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க